உலகம் முழுவதும் பருவநிலை மாறியுள்ள சூழலில் மழைக்காலம் என்றாலே மிகப் பெரும் அச்சுறுத்தலாகவும் பொருட்கள், வீடுகள், சொத்துகள் மற்றும் உயிர் சேதம் ஆகியவை தவிர்க்க முடியாத மனிதப் பேரழிவாக, அவலமாக மாறி உள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் போது சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை பொழிய துவங்கி உள்ளது.
அதிலும் குறிப்பாக இன்று காலை முதல் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகின்ற மழை வழக்கமான பணிகளை தடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளுக்குள் நீர் தேங்கி நிற்பது என்பது ஒரு சாபக்கேடாகவே மாறிவிட்டது.
சென்னை போன்ற பெரு நகரங்களை உருவாக்கும் போது பொருத்தமான நீர் வடிகால் வசதிகளை கொண்ட தன்மையுடன் உருவாக்கப்படவில்லை என்பதை பல்வேறு நீரியல் நிபுணர்களும், ஆய்வாளர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அது எப்படி உருவாகி இருந்தாலும் அதன் பாதிப்புகளை பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தான் சுமந்து அவதி வருகின்றனர்.
இது போன்ற நேரங்களில் குடியிருக்க இருப்பிடமும், உண்ண உணவு, உடுத்த உடை, குடிக்க தண்ணீர் என்ற அடிப்படை வசதிகள் இன்றி நிராதரவாக நிற்கின்றனர். பல மாதங்கள் உழைத்து சேர்த்து வைத்த அரைகுறை உடமைகளையும் இழந்து வீதியில் தவிக்கின்றனர்.
சென்னை: வடிய மறுக்கும் வெள்ளம்!
சென்னை போன்ற நகரங்கள் ஏன் இந்த அளவிற்கு கடுமையாக பாதிப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கடந்த 50, 100 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாவட்டங்களின் நிலைமைகளை பற்றி புரிந்து கொண்டால் தான் அது எந்த அளவிற்கு மாறியுள்ளது? யாரால் மாற்றப்பட்டுள்ளது என்பதை எல்லாம் உணர முடியும்.
ஏறக்குறைய சில நூற்றாண்டுக்கு முன்னர் சென்னை கிராமம், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஓர் அங்கமாகவே இருந்தது.. செங்கல்பட்டு மாவட்டத்தில் காவிரி, தாமிரபரணி, வைகை ஆறுகளைப் போல் ஜீவ நதிகள் எதுவும் இல்லை. எனவே செயற்கையாக நீர் நிலைகளை உருவாக்க வேண்டி இருந்தது.
இந்த மாவட்டத்தின் பகுதிகள் அனைத்தும் மழை நீர் வடிகாலா கவே உள்ளது. சென்னையில் ஓடுகின்ற ஆறுகள். மலையில் இருந்து புறப்படுபவை அல்ல. அதனால் இங்கே ஏரிகள் அதிகமாகவே உருவாக்கப்பட்டன.. மதுராந்தகம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, வியாசர்பாடி ஏரி, பொன்னேரி போன்ற பெரிய ஏரிகள் என்று சென்னையைச் சுற்றி உள்ளன. அது தவிர ஒவ்வொரு ஊருக்கும் ஒன்றிரண்டு சிறிய ஏரிகள் உள்ளன.. செங்கல்பட்டுக்கு ஏரி மாவட்டம் என்று ஒரு பெயரும் உண்டு.
சென்னையில் நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசர்பாடி ஏரி, முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி, ஆவடி ஏரி, கொளத்தூர் ஏரி இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரி, பெருங்களத்தூர், கல்லு குட்டை ஏரி, வில்லிவாக்கம் ஏரி, பாடிய நல்லூர் ஏரி, வேம்பாக்கம் ஏரி, பிச்சாட்டூர் ஏரி, திருநின்றவூர் ஏரி, பாக்கம் ஏரி, விச்சூர் ஏரி, முடிச்சூர் ஏரி, சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் – ஸ்பர்டாங்க் ரோடு), செம்பாக்கம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி என்று பெரிய ஏரிகளின் பட்டியலே முப்பதை நெருங்கும். சிற்சில சிறிய எரிகளும், குளங்களும், குட்டைகளும் நீர் ஆதாரங்களாக இருந்தன.
ஏரி ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் !நாட்டை ஆக்ரமிப்பவர்களுக்கு எதிராக தொடரட்டும்!
தற்போது நாம் பார்க்கும் சென்னை பெருநகரத்திற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த சென்னை கிராமத்திற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுமார் 925 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவற்றில் 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில் சுமார் 14,842 நீர்நிலை ஆக்கிரமிப்புகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளில் 2122 நீர்நிலை ஆக்கிரமிப்புகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளில் சுமார் 4500 நீர் நிலை ஆக்கிரமிப்புகளும், அடையாறில் 34 இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், குறிப்பாக அடையாறு நதி கடந்து செல்லும் நீர்வழி பாதையில் மட்டும் சுமார் 17,168 நீர் நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
இவை அனைத்தையும் படிப்படியாக ஒழித்துக் கட்டி குடியிருப்புகளாகவும், அபார்ட்மெண்ட்களாகவும், பெரிய வணிக வளாகங்களாகவும், கல்வி நிறுவனங்களாகவும், கார்ப்பரேட் மருத்துவமனைகளாகவும், பெரும் பெரும் தொழிற்சாலைகளாகவும் கட்டப்பட்டுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் மழையை கடலுக்குள் தள்ளுகின்ற அளவிற்கு நில அமைப்பு இல்லை. இவை அனைத்தும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக குறிப்பிட்ட சில தனிநபர்கள், சில கார்ப்பரேட்டுகள் கொழுப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என்பதுதான் அடிப்படை உண்மையாகும்.
மற்றொருபுறம் இயற்கையாகவே சென்னையானது கடல் மட்டத்தில் இருந்து 6–10 மீட்டர் உயரத்தில் உள்ளது. சென்னையின் நிலப்படுகையானது நீரை குறைவாக உறிஞ்சும் தன்மை கொண்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் உயரமான நிலப்பரப்பு இல்லாத சமவெளி தன்மை கொண்ட சென்னை போன்ற நகரங்களை காப்பாற்றுவது கடுமையான போராட்டம் தான் என்பதை உணர்வோம்.
இத்தகைய சூழலில் மழை பொழிந்தவுடன் உண்மையிலேயே மக்களுக்கு பாதிப்பு என்ற கண்ணோட்டத்தில் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்ற சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளனர்.
அதே சமயத்தில் எப்போது மழை பொழியும் என்று இலவு காத்த கிளி போல காத்திருக்கின்ற கேடுகெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை சமீப காலத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் நமக்கு நிரூபிக்கின்றன.
எடுத்துக்காட்டாக கடைந்தெடுத்த அக்ரகாரத்து கழுதையான சுமன் ஸ்ரீ ராமன், ஸ்ரீராம் சேஷாத்திரி போன்ற தெனாவெடுத்த பார்ப்பனர்கள், “மழை பொழியட்டும் திமுக எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்” என்று கொக்கரிக்கின்றனர்.
எது எப்படி போனாலும் அரசு பணிகளை செய்ய வேண்டியது தான் என்றும், தண்ணீர் தேங்கி நிற்காமல், நீர் நிலைகளை சரி செய்வதற்கும், வடிகால் வசதிகளை செய்வதற்கும் ஒதுக்கப்பட்ட தொகையை சுருட்டியுள்ளனர் என்று மொத்தம் பொதுவாக பேசுவது வாடிக்கையாகிவிட்டது.
தற்போதைய சூழலில் சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களை காப்பாற்றுவது மிகப் பெரும் பாடாகவே உள்ளது என்பது மட்டுமின்றி பருவநிலை மாற்றங்களினால் கடற்கரையோர நகரங்கள் அழிவதற்கு சாத்தியம் உள்ளது என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீண்டு வருவதற்கு பொருத்தமான உரிய உதவிகளை செய்வோம். அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை கண்காணித்து மெத்தனமாக செயல்பட்டால் எதிர்த்து போராடுவோம். இயற்கையை நாசமாக்குகின்ற கார்ப்பரேட்டுகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையிலான மக்கள் விரோத கூட்டத்திற்கு பொருத்தமான பதிலடி கொடுப்பதை பற்றி யோசிப்போம்.
- சுகுணா பாபு.