தவெக எனும் தற்குறி அரசியல் ‘வானரக் கும்பல்’ தொங்கு சட்டமன்ற ஆட்சி அதிகாரத்தை பல்வேறு குறுக்கு வழிகளில் கைப்பற்றிய பின் கடந்த 2026 ஜூன் 18-ஆம் நாளன்று ஆர் வி அர்லேகர் தமது முதல் ஆளுநர் உரையை நிகழ்த்தியதை கண்டோம்.
அதில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒருமுறையும், தேசிய கீதம் இரு முறையும் மரபுக்கு மாறாக பாடப்பட்டன. சு.வெ. எம்பி உட்பட, ‘மெத்தப் படித்த’ – சில ‘முற்போக்காளர்கள்’ கூட தேசிய கீதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாம்; அதில் ஒன்றும் தவறில்லை… என ‘வியாக்கியானம்’ செய்தார்கள்.
ஆளுநர் உரையிலும் கூட உப்புசப்புக்கு இடமில்லாத வகையில் அரசினைப் புகழ்ந்து உரைக்கக் கூடிய எந்தஒரு திட்டமுமின்றி பூஜ்ஜிய உரை என்று சொல்லும் அளவிற்கு சட்டமன்றத்தில் அரங்கேறியது. பாஜகவின் ‘செல்லப்பிள்ளை’ தவெக என்பதால் அமைச்சரவை தயாரித்தளித்த அறிக்கையில் ஒரு எழுத்தைக் கூட மாற்றாமல் ஆளுநர் தமது சுமார் அரை மணி நேர உரையை படித்து முடித்தார். அரசையும் வானளாவப் புகழ்ந்து உரைத்தார். வானரக் கும்பலும் பதிலுக்கு ஆளுநருடன் கூடிக் குளாவுகிறார்கள்.
அதன் பின் சட்டமன்றத்தின் தொடர் நடவடிக்கைகளாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் தொடர்ந்தன. அதில் எதிர்க்கட்சிகள் என்னென்ன குறைபாடுகளைச் சுட்டிக் காண்பிக்கின்றார்களோ அவை யாவற்றையும் உள்வாங்கி இறுதியாக முதலமைச்சர் அனைத்திற்கும் பதில் அளித்து நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது ஒரு சம்பிரதாய மரபாக நீடிக்கிறது. எதிர்க் கட்சியினருக்கு மாறுபாடுகள் இருந்தால் வாக்கெடுப்புக்கு கூட விடலாம்.
நாயைக் குளிப்பாட்டி நடு மனையில் வைத்தாலும்…
எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தம் கருத்துக்களை எடுத்து விளக்கி இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் எத்தனை பாலியல் வன்புணர்வுகள் – குறிப்பாக சிறுமிகள், பெண்கள், மூதாட்டிகள் மீது படுகேவலமாக அரங்கேறியுள்ளன; அதில் ஆளுங்கட்சியினரே எத்தனை பேர் அந்த அருவருக்கத் தகுந்த ஆபாச நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர்; கொலைகள், கொள்ளைகள், குற்றச்சம்பவங்கள் எத்தனை எத்தனை நடந்தேறி உள்ளன; தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எவையும் ஏன் நிறைவேற்றப்படவில்லை; மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படாதது; விவசாயிகள் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; நீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்; தொடரும் மாணவ – மாணவியர் தற்கொலைகள்… எனப் பற்பல குற்றச் சாட்டுகளை ஆளும் அரசுக்கு எதிராக அடுக்கினர். மேலும் கட்சிக்கு ஆள் பிடிக்கும் குதிரை பேர வேலைகளில் மட்டுமே இந்த அரசு மும்முரம் காட்டுகிறது…என்பது உட்பட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. ‘குதிரை பேரம்’ என்று சொன்னவுடன் மட்டும் சபாநாயகர் பிரபாகருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் நோக்கி சீறிப் பாய்ந்தார்.
எதிர்க்கட்சியினரின் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் எவற்றுக்கும் பதிலளிக்க வக்கற்ற ‘முதல்வர்’ என்ற போர்வையில் வீற்றிருக்கும் நடிகர் தமது இறுதி பதிலுரையில் ஆபாசமாக நடந்து கொண்ட நடிப்புக்கள், திமுக தலைவர் ஸ்டாலினை நையாண்டி செய்வது போன்று தமது கை விரல்களை கண்களுக்கு மேலே வைத்துக் கொண்டு ‘அப்பாவைக் காணோம்’..
‘அப்பாவைக் காணோம்..’என்று நாலா பக்கமும் தேடுகின்ற அகம்பாவதம் – இந்தக் கேடுகெட்ட செய்கையை மிகவும் போற்றி பாராட்டி ரசிக்கத் தகுந்தது என்ற பாணியில் விஜய்யின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நரிகள் ஊளையிடுவது போன்று வாயைப் பிளந்து சிரித்து அகமகிழ்கின்ற கேவலத்தை கண்கொண்டு பார்க்க சகிக்கவில்லை. (எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியது போல், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ‘கணவனைக் காணோம்’ என்று மனைவியும், ‘அப்பாவைக் காணோம்’ என்று மகனும் மகளும் தேடுகின்ற இழி நிலையை எல்லாம் இந்த ‘சர்க்கஸ் கூடாரவாதி’ விஜய் உணர மாட்டார் போலும்)
ஆர்எஸ்எஸ் – பாஜக – கைக்கூலி விஜய்க்கு இருக்கின்ற திமிரும்,ஆணவமும், கொழுப்பும் அளவிட முடியாதது. இக்கேவலங்களை ஒரு சராசரி அரசியல்வாதி கூட ஈவிரக்கமற்ற முறையில் கடுமையான விமர்சனங்களை விஜய் மீது கண்டனக் கணைகளாகத் தொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி ஏதும் தமிழகத்தில் நடக்க வில்லை. ஒரு சில Socalled ‘முற்போக்காளர்கள்’ கூட ‘நாங்களும் ஜனநாயக பூர்வமாகத்தான் நடந்து கொள்கிறோம்’ என்பதைக் காண்பித்துக் கொள்வதற்காக ஏனோ தானோ என்று கடனுக்காக ஒரு சில வார்த்தைகளை ‘விமர்சனங்கள்’ என்ற பெயரில் உதிர்த்ததோடு சரி! ‘நடிகரின் கட்சி தூய்மையானது; ஆர் எஸ் எஸ் – பாஜக எதிர்ப்புத் தன்மையில் உறுதி வாய்ந்தது; தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை அளிக்க வல்லது’ என்ற ‘அசைக்க முடியாத’ – ‘மூட மூடநம்பிக்கை’யை வைத்துக் கொண்டு, நடிகரின் ஆட்சியுடன் சுயநல காரிய வாதத்தோடு பின்னிப் பிணைந்து கிடப்போரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
‘நாயைக் குளிப்பாட்டி நடு மனையில் வைத்தாலும் அது தமது இழிந்த புத்தியைத் தான் காட்டும்’ – என்பது போல நடிகர் விஜய்யின் ஆட்சி நிர்வாகம் மிக மிக சீரழிந்த நிலையில் கிடப்பதைக் கண்ணுற முடிகிறது. கரூர் 41 பேர் படுகொலைக்கு காரணமான இவர் சட்டப்படி – நியாயப்படி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்க வேண்டியவர்! அன்றைய முதல்வர் ஸ்டாலின் இது விடயத்தில் பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொண்டார் என்பது முற்றிலும் உண்மை; விஜய் உட்பட அக்கும்பல் முழுமையையும் கரூரிலிருந்து தப்பிக்க விடாமல் முடக்கிக் கைது செய்து இருக்க வேண்டும்; சிறையினுள் தள்ளி இருக்க வேண்டும்; ஓட்டை விட்டு விட்டார் ஸ்டாலின்! ஆனாலும் கரூர் சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல், விஜய்க்கு பக்கபலமாக நின்றது – நிற்கிறது – நிற்கும் என்பது நிதர்சனம்.
கரூரில் 41 பேர் மரணம் அடைந்தவுடன் 2025 செப்டம்பர் 30 ஆம் நாள் அகில இந்திய பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் தமிழகம் வந்தது. பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அவர்களால் அமைக்கப்பட்ட இந்த எட்டு பேருக்கு கொண்ட விசாரணை குழுவுக்கு தலைவராக உத்தம புத்தர் ஹேமமாலினி தலைமை வகித்தார். அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா மற்றும் பிராஜ் லால் உட்பட 8 எட்டு பேர் குழு உறுப்பினர்களாக இருந்து விசாரணை நாடகம் நடத்தினர். இப்பிரச்சனையில் தனிப்பட்ட பாஜக கட்சி விசாரணை மேற்கொள்வதற்கு எந்த அரசியல் சட்டம் அல்லது விதிகள் இடம் அளித்திருக்கிறது? தாம் பெற்ற பிள்ளை விஜய் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு விடக் கூடாது என்பதற்காகவே அப்படிப்பட்ட இழி செயலில் பாஜக கும்பல் செயல்பட்டது. தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை குழுவையும்,
சி பி சி ஐ டி சார்பாக போலீசார் குழுவினர் கொண்ட ஒரு விசாரணைக் குழுவையும், சென்னை உயர் நீதிமன்றத்தால் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றையும் நியமனம் செய்யப்பட்டு – ஆக தமிழ்நாட்டு அளவில் மூன்று விசாரணை குழுக்கள் சரியான கண்ணோட்டத்தில் விசாரணையை மேற்கொண்ட தருணத்தில், குற்றவாளிகள் வழக்கை உச்ச நீதி மன்றத்திற்கு கொண்டு செல்ல, உச்சநீதிமன்றமோ தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்ட மூன்று விசாரணைக் குழுக்களையும் கலைத்துவிட்டு அந்த கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக் உட்படுத்தியது; பாஜகவின் செல்ல பிள்ளையான விஜய்க்கு அனுசரணையாக சிபிஐ வழக்கைக் கிடப்பில் போட்டு விட்டது. ‘கழகங்கள் இல்லாத தமிழகத்தை’அப்போது தானே உருவாக்க முடியும்! தவெக-வை உண்டு செறிக்கவும் முடியும்! இவைதான் கரூர் 41 பேர் மரணம் தொடர்பான பிரச்சனையில் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் சதி திட்டமாகும்.
நீதிமன்றத்தின் திமிர்வாதத்தனமும் கையாளாகாத அரசாங்கம்…!
சிறுமிகள் பெண்கள் மூதாட்டிகள் என நாள் தோறும் ஒன்று முதல் மூன்று பேர் வரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் கொடுமைகளை நாள்தோறும் தினசரிகள் மற்றும் காட்சி ஊடகங்கள் மூலமாக அனைவரும் அவதானிக்க முடிகிறதுதானே?
அதேபோல கொலைகள், கொள்ளைகள், குற்றச்சம்பவங்கள் கணக்கில் அடங்கா வகையில் நடந்த வண்ணம் உள்ளன. தற்போது கூட பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி குன்றத்தூர் மாங்காடு பகுதியில் மூவர் கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளார். ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். கபடி வீராங்கனை ஒருவரை இதே தமிழகத்தில் பயிற்சியாளரே பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடுமை அரங்கேறி உள்ளது. சட்டமன்றத்திலோ வெளியிலோ இது பற்றியெல்லாம் வாய் திறந்து பேச அருகதையற்றுக் கிடக்கிறார் நடிகர் விஜய். அருவருக்கத் தகுந்த வெற்று நடிப்புக்களுக்கும், உளறல்களுக்கும் மட்டும் குறைவில்லை.
BC, MBC, SC உள்ளிட்ட இந்து மதம் சார்ந்த நபர்கள் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து கொள்ளும் பொழுது அவர்களை 2024 மார்ச் 9-ல் G.O.31-ல் பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஆணையின்படி அவ்வகை மதம் மாறுபவர்களை BC முஸ்லிம் லெப்பை என்பதாக வகைப்படுத்தி ஆணையிடப்பட்டது.
அந்த ஆணையின்படி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்த 1993-ல் பிறந்த ஒரு BC வகுப்பைச் சேர்ந்த இளைஞன் 2015 ல் ஒரு முஸ்லிம் பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்கிறார். முஸ்லீமாகவும் மதம் மாறுகிறார். அரசாணை 31-ஐ காட்டி வட்டாட்சியரிடம் முஸ்லிம் லெப்பை (BC)என்ற சான்றினைத் தமக்கு வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால் வட்டாட்சியர் அரசு ஆணையை கருத்திற் கொள்ளாமல், அவரது கோரிக்கையை நிராகரித்த சூழலில் மனுதாரர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். 25-06-2026 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது அந்த அமர்வில், வில்லங்கத்திற்கு பேர் போன ‘திருப்பரங்குன்றம் புகழ்’ ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி நீதிபதிகள் அமர்வு அரசு ஆணை 31-ஐயே செல்லத்தக்கது அல்ல எனக்கூறி ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ள கொடுமை அரங்கேறி உள்ளது. இதற்கு நடிப்பு முதல்வர் விஜய்யும், ஐயூஎம்எல் கட்சித் தலைவர் காதர் மொய்தினும் அவரது கட்சியின் சிறுபான்மை யினர் நல அமைச்சருமான ஷாஜகானும்,
பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் செந்தில்குமாரும் என்ன பதில் கூறப் போகிறார்கள்? வேறு என்ன சாதித்து கிழிக்கப் போகிறார்கள்? இதே போன்றதொரு வழக்கு ஏற்கனவே இதே நீதிமன்றத்தில் 2025-ம் வருடம் இரு நீதிபதிகள் சக்திவேல் ரமேஷ் அமர்வு முன்பு வந்த பொழுது அரசாணை 31- ஐ சரியெனப் பகன்று ஒரு மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கியது. அது தவறெனில் மறுபடியும் இந்த அரசாணை குறித்து மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வுதான் விசாரணை செய்ய வேண்டுமே யொழிய ஜி. ஆர். சாமிநாதன் தலைமை யிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை க்கு ஏற்றுக் கொண்டதே தவறு. ஒரே நாளில் விசாரணையை முடித்து தீர்ப்பளித்ததும் தவறு. இவ்வித நீதி மன்றத்தின் அராஜகமான தீர்ப்புகளும், அரசாங்கத்தின் கையாளாகாத்தனமும் தொடர்ந்து நீடித்த வண்ணம் உள்ளன.
இப்படித்தான் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் பிரச்சனையில் பிரிட்டிஷ் – இந்திய உச்ச நீதிமன்றமான லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பிற்கு நேர் எதிர்மறையாக ஜி ஆர் சுவாமிநாதன் என்ற ஒற்றை நீதிபதி அடாவடித்தனமாக இஸ்லாமியர்களின் தர்காவிற்கு சொந்தமான இடத்தில் வழக்கத்திற்கு மாறாக கார்த்திகை தீபம் ஏற்றலாம் எனத் தீர்ப்பளித்தார். அதுவும் பல்வேறு மேல் முறையீடுகள், இழுத்தடிப்புகளுக்கிடையில் எதிர்வரும் கார்த்திகை அன்று திருப்பரங்குன்றம் என்ன பாடுபடப் போகிறதோ புரியவில்லை.
இதே போல பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் சூத்திர பஞ்சம மக்கள் உருள அனுமதி அளித்து தீர்ப்பளித்தார் இதே ஜி ஆர் எஸ். இன்னும் எண்ணற்ற கேலிக்கூத்தான GRS அளித்த தீர்ப்புகளை பட்டியலிட இடம் போதாது. அவர் ஓய்வு பெறும் முன் வரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி தீர்ப்பு வழங்காமல் மனுதர்ம சாஸ்திரத்தின் படியே தீர்ப்பு வழங்கப் போவதாக அறிவிப்பும் செய்துள்ளார். இவையெல்லாம் காலக் கொடுமையே!
ஆனால் இப்பிரச்சனைகள் அனைத்திலும் விஜய்யோ அவரது அரசாங்கமோ எள்ளின் முனை அளவும் அக்கறை செலுத்தவில்லை. சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறுபான்மையினர் நலன் காக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை. தமது அரசாங்கத்தின் அரசு வழக்கறிஞர்கள் விவரம் ஏதுமற்றவர்களாக இப்பிரச்சனையில் பாராமுகத்தினராய் கடந்து செல்கின்றனர்.
அறிவு நாணயம் ஏதுமற்ற வகையில் அரசுத் துறை நியமனங்கள் வழங்கும் விஜய்
ஏற்கனவே தமது ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவருக்கு முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Officer on Special Duty Political) (ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு இணையான பதவி) வழங்கி உத்தரவிட்டார் நடிகர் விஜய். பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டதாக நடிக்கும் இந்த நடிகர் இப்படி பெரியாரின் கொள்கைக்கு முரணான செயலை நடைமுறைப்படுத்தினார். பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பின் அதனை வாபஸ் பெற்றார்.
இப்போது என்னடாவெனில், விஜய் கதாநாயகனாக நடித்த ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளரும், பல்வேறு மொழி திரைப் படங்களின் பிரபல தயாரிப்பாளரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், ரியல் எஸ்டேட் அதிபரும், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் கே. வி. என். பிராப்பர்ட்டிஸ் நிறுவனருமான வெங்கட நாராயணா என்ற ஒரு தற்குறியை டெல்லியில் தமிழகத்தின் முகமாக இருந்து செயல்பட வேண்டிய “டெல்லி சிறப்பு பிரதிநிதி” பதவியை (கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானது) வழங்கி இந்த கூத்தாடி விஜய் அரசு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே கர்நாடகாவுக்கும் தமிழகத்திற்கும் காவிரிப் பிரச்சனை தீராத தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. டெல்லியில் தமிழகத்தின் சார்பாக ஒருவரை நியமனம் செய்யும் பொழுது இப்படிப்பட்ட பதவிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவரையே நியமனம் செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் நடிகர் முதல்வர் இவ்வித ஆணையைப் பிறப்பித்துள்ளார். ஆனால் தற்குறி முதல்வருக்கு இது குறித்து எல்லாம் எவ்விதக் கவலையும் இல்லை; தமது சுயநல காரியவாத நோக்கில், ‘தான் எது செய்தாலும் தட்டிக் கேட்க எவனும் இல்லை’ என்ற இறுமாப்பில் இப்படிப்பட்ட தரங்கெட்டத் தனமான நியமனங்களை வழங்கிய வண்ணம் இருக்கிறார்.
இப்படித்தான் ஒட்டுமொத்தத் தூய்மைப் பணியாளர்கள் நியமனங்களை கடந்த திமுக ஆட்சியில் தனியாருக்கு தாரை வார்க்க முயன்ற பொழுது தூய்மைப் பணியாளர்கள் வெகுண்டெழுந்து போராடியதையும், திமுக அரசு இரும்புக் கரம் கொண்டு அத்தொழி லாளர்களின் போராட்டத்தை ஒடுக்கியதையும் கண்டோம். அத்தருணத்தில் இதே விஜய் தூய்மைப் பணியாளர்களை தமது ‘பனையூர் பங்களா’விற்கு வரவழைத்து ஆறுதல் கூறி, தாம் ஆட்சிக்கு வந்து விட்டால் உங்கள் அனைவரையும் அரசுப் பணியில் நிரந்தரம் ஆக்குவேன் என்று ‘மாபெரும் வாக்குறுதி’ அளித்தார். இன்று என்னடாவெனில் திமுக அரசு மேற்கொண்ட அதே துரோகத்தை தூய்மைப் பணியாளர்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை 12 மாநகராட்சிகளில் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டார். மீண்டும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வெடித்த உடன் தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளார்.
சட்டமன்றத்தில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு என்ற தற்குறி எதிர்க்கட்சியினரை நோக்கி அடிக்கப் பாய்ந்து ஓடி வருகிறார். இவர்தான் தமது பிறந்தநாள் விழாவில் வீச்சரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டியவர். இந்த கும்பலே ‘சோலியை முடித்து விடுவேன்; கழுத்தை வெட்டிடுவேன்’ என்ற பாணியில் காட்டுமிராண்டிகளாய் சட்டமன்றத்தில் ஊளையிட்டு உலா வரும் கும்பல் உருவாகி இருப்பது தமிழ்நாட்டின் மிகப் பெரும் ‘சாபக் கேடு’!
இப்படிப்பட்ட கேடுகெட்ட தற்குறி அரசியல் தலைமை அதன் தவெக கட்சி இவற்றை நோக்கி ஏற்கனவே சில ‘முற்போக்காளர்கள்’ முட்டுக் கொடுத்துத் தாங்கி நிற்பது போதாது என்று அணி அணியாய் அதிமுக மதிமுக மற்ற பிற கட்சிகளில் இருந்து பனையூர் பங்களாவின் அகன்ற கேட்டுகளில் முட்டி மோதுகின்ற அசிங்க ஆபாசங்கள் தமிழ்நாட்டை தலைகுனியச் செய்துள்ளது.
உன் கூற்றுப்படி ‘தீயசக்தியாம் – ஊழல் சக்தியாம் – அரசியல் எதிரியாம்’ திமுக வீழ்த்தப்பட்டு விட்டது அல்லது ஒழிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருப்பது விஜய் தலைமையிலான தவெக.
நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது விஜய் அரசு. அதை விடுத்து இன்னும் திமுக மீதே பழிபோட்டுக் கொண்டிருப்பது அரசியல் பொறுப்பற்ற தனம் என்பது மட்டுமல்ல; ஏமாற்று மோசடியுமாகும். தமிழ்நாட்டின் உரிமைகள் பலவும் ஒன்றிய அரசால் முடக்கப்பட்டு கிடக்கின்றன. பல லட்சம் கோடிகள் நிதி ஒன்றிய அரசு விடுவிக்காமல் முடக்கி வைத்துள்ளது.
இது போல தமிழர் நலன் சார்ந்த எண்ணற்ற பிரச்சனைகளுக்கு மோடித் தலைமையிலான பாஜக அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது. ‘கொள்கை எதிரி’யான பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவதற்கு – தட்டிக் கேட்பதற்கு – உரிமைக்கு குரல் கொடுப்பதற்கு – வக்கற்ற, திராணியற்ற ஒரு தற்குறி தலைவன் எத்துனை காலத்திற்கு தமிழ்நாட்டு மக்களை ஏய்த்து ஆள முடிந்து விடும் என்பதைப் பார்க்கலாம். ஆர் எஸ் எஸ் – பாஜகவின் முழு கொத்தடிமையான விஜய்யின் உண்மை முகத்தை புரிந்து கொள்ளாமல் அவருக்கு லாலி பாடுகிறார்கள் கடந்தெடுத்த பிழைப்பு வாதிகளும், So called முற்போக்காளர்களும்!?
இந்த சாக்கடைப் பன்றித் தொழுவத்தில் புரளுகின்ற கும்பலிடமிருந்து தமிழ்நாட்டை மீட்பது என்பது அனைத்து உழைக்கும் மக்களின் பிரதான கடமையாக முன் நிற்கிறது. ஆர் எஸ் எஸ் பாஜக செல்ல பிள்ளையான பாசிச அடிவருடி விஜய் கும்பலையும், அத்துடன் சேர்த்து கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தையும் ஒரு சேர வீழ்த்த அணிவகுப்போம்! அணிசேர்வீர்!
எழில்மாறன்







