டந்த பிப்ரவரி மாதம் 14ந்தேதி ‘APAAR: One Nation One Student ID Card தேசிய மாநாட்டை துவக்கி வைத்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 25 கோடி APAAR ஐடி உருவாக்கப்பட்டது பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை வெற்றியடைவதை காட்டுவதாக பேசினார். ஒன்றிய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அபார் அடையாள அட்டை (APAAR Identification Student Card), இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை திட்டத்தின் கீழ் சேர்க்கிறது.

APAAR ID மாணவர்களை கல்வி மதிப்பெண் வங்கியுடனும் (Academic Bank of Credits), டிஜிலாக்கருடனும்  இணைக்கிறது. இது மாணவர்களது கல்வி கற்றல், சான்றிதழ்கள், நற்சான்றிதழ்கள், பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாதித்த முறையான அல்லது முறைசாரா மதிப்பெண்கள், திறன் வரவுகள், கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி ஊக்குவிக்கும் தொகை, நன்கொடை, விளையாட்டு அல்லது சமூகப் பணி ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து கொள்கிறது.

இதன் மூலம் மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க முடியும், போலி சான்றிதழ்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும், ஒரு பகுதியில் படிப்பில் இருந்து இடைநின்ற மாணவர்கள் நாட்டின் வேறெந்த ஒரு பகுதியிலும் கல்வியை தொடர முடியும், வெவ்வேறு பாடங்களை இணைத்து புதிய வகை பட்டப்படிப்புகளை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்- இது சர்வதேச மாடல் என்கிறது ஒன்றிய மோடி அரசு.

ஆதார் கார்டை அனைத்து வகையான திட்டங்களுடனும் இணைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் அனைத்திலும் ஆதார் கட்டாயமாக்கி செயல்படுத்திவிட்டது ஒன்றிய மோடி அரசு. நாட்டு மக்களின் வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேசன் கார்டு, ஓட்டுநர் உரிமம், MNREGA கார்டு என அனைத்து தகவல்களும் AADHAAR உடன் இணைக்கப்பட்டது. அது போல மாணவர்களின் அனைத்து தகவல்களும் APAAR ID உடன் இணைக்க கட்டாயப்படுத்துப்படுகிறது. இந்த ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை என்பது மோடி அரசின் 2020 தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமாக உள்ளது.

இது பன்னாட்டு பல்கலைக்கழகங்களை புகுத்துவது, மாநில உரிமை பறிப்பு, ஏழை மாணவர்களின் முறையான கல்வியை தடுப்பது ஆகிய பாரதூரமான விளைவுகளை, மோடி அரசின் சதித்தனங்களை உள்ளடக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: விஸ்வகர்மா யோஜனா: ஒன்றிய அரசின் நவீன குலக்கல்வித் திட்டம்!

இந்த அபார் அட்டையுடன் தொடர்புடையதாக  கூறப்படும்  Academic Bank of Credits என்ற முறை ஏற்கனவே மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த ABC என்பது மாணவர்கள் பட்டப்படிப்புகளை முழுமையாக குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் முடிக்கத் தேவையில்லை என்கிறது. மாணவர்கள் தங்கள் படிப்பில் ஒவ்வொரு பாடத்தில் பெறும் மதிப்புகளையும் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஒரு மாணவர் மூன்று ஆண்டுகளில் கல்லூரி தொடர்ச்சியாக படித்து முடிக்க வேண்டிய படிப்பை வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் வசதிக்கேற்ப படித்து முடித்துக் கொள்ளலாம் என்கிறது.

இது ஏழை பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களை முறையான கல்வியில் இருந்து வெளியேற ஊக்குவிக்கும் சதித்தனமான திட்டமாகும். தங்கள் குடும்ப, பொருளாதார நிலைமைகள் காரணமாக பின்தங்கிய நிலையில் உள்ள இந்த மாணவர்கள் சில காலம் வேலைக்கு சென்றுவிட்டு படிக்கலாம் போன்ற வலைக்குள் மீண்டும் படிப்பையே தொடர முடியாமல் போகும். இது அந்த மாணவர்களின் உயர்கல்வியில் இருந்து வெளியேற்றும், சமூக முன்னேற்றத்தை பாதிக்கும்.

இன்னொருபுறம், ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி, பட்டப்படிப்பு ஆகியவற்றில் வெவ்வேறு வகையான, அந்த மாநில அரசின், மாநில மக்களின் நிலைமைகளுக்கேற்ப  பாடத்திட்டங்கள் உள்ளன. குறிப்பாக, பட்டப்படிப்புகளில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்குமே பாடத்திட்டங்கள் வேறுபாடு கொண்டதாக உள்ளது. இந்த நிலையில்,’ ஒரே நாடு; ஒரே மாணவர் அடையாள அட்டை” என்பதன் மூலம் மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் தனது படிப்பை தொடரலாம் என்று கூறவது மறைமுகமாக தனித்தனி மாநிலங்களும், தனித்தனி பல்கலைக்கழகங்களும் வெவ்வேறு பாடத்திட்டங்களையும் ஒருமுகப்படுத்தி ஒரே பாடத்திட்டமாக்கும் மாநில உரிமையை பறிக்கும், கல்வியில் பன்மைத்தன்மையை பறிப்பதை அடிப்படையாக கொண்டுள்ளதாகும். இதன் நோக்கம் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கூலியடிமைகளாக இருக்க போதுமான பாடம் படித்தால் போதும்,. வெவ்வேறு துறைகளில் பட்டப்படிப்பு தேவையில்லை என்பதே அதன் நோக்கமாகும்.

இதையும் படியுங்கள்: புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் தொடர் கட்டுரை!

மேலும், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்துடன் கூடிய பல்கலைக்கழகங்களை நடத்த உதவியாக இருக்கும். அவற்றை MOOCS போன்ற இணைய வழி கல்வியை புகுத்தும் என்பதும் அதன் ஓர் ஆபத்தான அம்சமாக உள்ளது.

இது மட்டுமல்லாமல், கல்வி என்பது இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலத்தில் மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. தற்போது மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020யின் பகுதியான ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை, Academic Bank of Credits போன்றவை மூலமாக ஒட்டுமொத்தமாக கல்வியை  ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக மாற்றி கார்ப்பரேட் கொள்ளைக்கு முழுமையாக திறந்துவிடுவதே மோடி அரசின் திட்டம். அதனை முறியடிக்க தேசிய கல்விக் கொள்கையின் APAAR போன்ற திட்டங்களை முறியடிப்பதுடன் தேசிய கல்விக் கொள்கை 2020 திரும்பப் பெறவும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரும் போராட்டத்தையும் நடத்த வேண்டியுள்ளது.

  • திருமுருகன்

செய்திகளின் லிங்கை உங்கள் மொபைலில் பெற whatsapp சேனலை பாலோவ் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here