
ஒன்றிய மோடி அரசினை விமர்சித்து இணையதளங்கள், பத்திரிக்கைகள், சமூக வலைதளங்களில் கட்டுரைகளோ அல்லது கார்ட்டூன்களோ பதிவிடுவதை அனுமதிக்காமல் அவற்றை ஏதோ ஒரு வகையில் முடக்கும் வேலையை சமீப காலமாக செய்து வருகிறது பாசிச மோடி அரசு.
அந்த வகையில் தற்போதைய இலக்காக மாறி இருப்பது விகடன் இணையதளம். விகடன் தனது இணையதளம் முடக்கப்பட்டு இருப்பதை கருத்துரிமை பறிப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இதற்கு தமிழ்நாடு முழுவதும் முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினர் தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக பாசிஸ்டுகளின் தாக்குதல்களை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
2014 இல் ஆட்சி கட்டிலில் அமர்ந்த பாசிச மோடி அரசாங்கம் அதிலிருந்து இன்று வரை பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை அம்பலப்படுத்தி செய்தி வெளியிடுபவர்களை கைது செய்வது அல்லது அந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அமலாக்கத்துறை உள்ளிட்ட அதிகார மையங்களை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவுவது என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இதனை ஒரு வாடிக்கையாகவே செய்து வருகிறது.

நியூஸ் கிளிக் இணையதளம், தி வயர் இணையதளம், பிபிசி இணையதளம், மீடியா ஒன் என்ற மலையாள தொலைக்காட்சி நிறுவனம் உள்ளிட்டவற்றின் மீது நடத்திய தாக்குதல்கள் பொது வெளியில் பாசிஸ்டுகளின் கருத்துரிமை பறிப்பை பொதுவெளியில் அம்பலப்படுத்தின.
விகடன் இணையதளம் முடக்கம் ஏன்?
அமெரிக்காவில் ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் குடியுரிமையற்ற இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். வெளியேற்றப்படும் இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அடிமைகள் போல அமெரிக்காவின் போர் விமானத்தில் ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறார்கள்.
இதுகுறித்து இந்தியாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் “நாடுகடத்தப்பட்டவர்கள் விமானத்தில் எந்த வகையிலும் தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதே நேரத்தில், சட்டப்பூர்வ பயணிகளுக்கான விசாவை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, சட்டவிரோத இடம்பெயர்வுத் தொழிலுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்.
இருப்பினும் நாடு கடத்துவது புதிதல்ல, இது கடந்த காலத்திலும் நடந்துள்ளது” என மொன்னையான பதிலளித்ததின் மூலம் தனது அமெரிக்க விசுவாசத்தை காட்டினார்.
படிக்க:
♦ சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை! மோடி ஆட்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை!
♦ இந்தியாவில் பல்லிளிக்கும் பத்திரிக்கை சுதந்திரம்!
இந்தியர்கள் அமெரிக்காவினால் அவமானப்படுத்தப்பட்டதை சித்தரிக்கும் வகையில் அட்டை படத்தில் கார்ட்டூன் வெளியிட்டது விகடன் இதழ். டிரம்பின் அருகே மோடி கை கால்களில் விலங்கிட்டு அமர்ந்திருப்பது போலவும் அதை பார்த்து சிரிப்பது போலவும் அந்த கார்ட்டூன் அட்டைப்படம் அமைந்திருந்தது.
இந்தப் படத்தை பார்த்து பொங்கி எழுந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை “ திமுகவின் மவுத் பீஸ் ஆகவும் உண்மைக்கு புறம்பாகவும் பிரதமரை இழிவுபடுத்தும் வகையிலும்” விகடன் நிறுவனம் செயல்படுவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கும் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து தான் சட்ட அமலாக்க துறையால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது.
விகடன் மீதான தடையை மகிழ்ச்சியுடன் அறிவித்து தினமலர் செய்தி நிறுவனம் அண்ணாமலையின் கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. விகடன் இதழும் தினமலர் போன்றே இந்துத்துவ சார்பு பத்திரிக்கைதான் எனினும் நடுநிலையாக காட்டிக்கொள்ள அவ்வப்போது இது போன்ற கேலிச் சித்திரங்கள், தலையங்கம் எழுதுவது வழக்கம். அதைக் கூட இந்த பாசிச மோடி அரசால் ஏற்க இயலவில்லை. முழு சரணாகதியைக் கோருகிறது என்பதே விகடன் தளம் முடக்கப்பட்டது உணர்த்தும் செய்தி.
பத்திரிக்கை சுதந்திரம் அற்ற நாடுகளில் பாசிச மோடி ஆளும் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு ஊடகங்கள் மோடியின் ஊது குழலாக GODI மீடியாவாக மாறி உள்ள நிலையில் பெயரளவுக்கு விமர்சிக்கும் விகடன் போன்ற ஊடகங்கள் கூட முடக்கப்படுவது பாசிசத்தின் உச்சம் என மக்கள் அதிகாரம் இணையதளம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது.
இந்தியாவில் இயங்கும் நேர்மையான ஊடகங்களும் பத்திரிகைகளும் விகடன் மீதான தாக்குதலை சாதாரணமாக கடந்து போகாமல் எதிர்காலத்தில் பாசிஸ்டுகளின் தாக்குதலை எதிர்கொள்ள அனைத்து ஊடகங்களையும் உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஊடக முன்னணியின் தேவையை உணர வேண்டும் எனவும் மக்கள் அதிகாரம் ஊடகம் கேட்டுக்கொள்கிறது.
மக்கள் அதிகாரம் ஊடகம்
ஆசிரியர் குழு.