
நேற்று (பிப்ரவரி 15) இரவு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள புது டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளா சென்று விட்டு இந்த ரயில் நிலையத்திற்குள் வந்திருந்த மக்கள் பெரும் தொகையினராக இருந்த நிலையில், கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக ரயில் நிலையத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் நுழைந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் 13, 14 எண் நடைமேடைகளில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிர் இழந்து விட்டனர் அதில் 10 பெண்கள் இரண்டு குழந்தைகள் அடங்குவர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட ரயில் நிலையம் மற்றும் நடைமேடைகளில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்த விட்ட நிலையில் உடனடியாக இரண்டு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு இயல்பு நிலை கொண்டு வரப்பட்டுள்ளது என்பதிலிருந்து மக்கள் பலியாவதை முன்பே தடுத்து இருக்க முடியும் என்பது ரயில்வே துறை அமைச்சரின் எக்ஸ் பதிவில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக நேற்று(சனிக்கிழமை) இரவு 1,500 பேர் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர். 1,500 டிக்கெட் கும்பமேளாவிற்காக கொடுக்கப்பட்டுள்ளது எனும் பொழுதே ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை அடைந்து தேவையான ஏற்பாடுகளை துரித கதியில் செய்திருந்தால் இந்தத் துயரத்தை தவிர்த்து இருக்க முடியும்.
ஆனால் மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற பாஜக அரசின் கையில் உள்ள ரயில்வே துறை இதற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போடவில்லை.
அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக கோடிக்கணக்கான மக்களை குவித்து பிரம்மாண்டமாக நடத்தப்படும் கும்பமேளாவில் ஏற்கனவே கடந்த 29 ஆம் தேதி பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் பலியாகினர். Newslaundry ஊடகம் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 79 என்றும், உண்மையான விவரங்கள் பாஜக அரசாலும் கார்ப்பரேட் ஊடகங்களாலும் மறைக்கப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. அப்பாவி பக்தர்கள் பலியான சோகம் மறைவதற்குள் டெல்லி ரயில் நிலையத்தில் மேலும் 18 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து விட்ட நிலையில் இப்பொழுது மீண்டும் மனித உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ன.
கும்பமேளாவிற்கு பொதுமக்களை வரவழைப்பதற்காக பொய்களை பரப்பி மக்களின் கவனத்தை கவர வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஊடகங்களுக்கு, அறிவியலுக்கு புறம்பான அயோக்கியத்தனமான அறிக்கைகளை அனுப்பி பெரும் கூட்டத்தைக் கூட்ட பல வேலைகளை செய்து கொண்டிருந்தது. (இது குறித்து நமது தளத்தில் ஏற்கனவே ஒரு கட்டுரை “மகா கும்பமேளா: மக்கள் பணத்தில் மூடத்தனத்தை வளர்க்கும் பாஜக அரசு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது)
இந்தக் கும்பமேளா ஏற்பாடுகளுக்காக 5,400 கோடி ரூபாய்க்கு மேலாக மத்திய மாநில பாஜக அரசுகளால் செலவிடப்பட்டிருக்கிறது. கும்பமேளா நடக்கும் ஆற்றங்கரை ஓரங்களில், சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் 2,200 சொகுசு கூடாரங்கள் உட்பட ஒரு லட்சத்து 60 ஆயிரம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சொகுசு கூடாரங்களில் தங்குவதற்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகின்றன.
கும்பமேளா நடக்கும் பிரியாக்ராஜ் நகரில் 218 ஹோட்டல்கள், 204 விருந்தினர் மாளிகைகள், 90 தர்மசாலைகள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வளவும் எதற்காக செய்யப்படுகின்றன? ஒருபுறம் மக்கள் மத்தியில் இந்து மத வெறியை வளர்ப்பதற்காகவும் மறுபுறம் இந்த கும்பமேளாவை பயன்படுத்தி கல்லா கட்டுவதற்காகவும் தான் இவ்வளவு தடபுடல்கள் செய்யப்படுகின்றன.
சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவில் மாநில பொருளாதரத்தில் கும்பமேளா தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது மக்களின் பக்தியை பயன்படுத்தி கொளுத்த லாபம் சம்பாதிப்பதற்கான ஒரு ஏற்பாடாகவும் பார்க்கப்படுகிறது.
படிக்க:
♦ பார்ப்பன மதத்தின் மூடநம்பிக்கையின் விளைவே கும்பமேளா உயிர் பலி!
♦ மகாகும்பமேளா: சனாதனத்தின் அழுக்குகளைக் எதைக்கொண்டு கழுவுவது?
இதைத்தான் ஒரு பேட்டியில் “இந்த கும்பமேளாவின் மூலம் ரூ.25,000 கோடி வருவாய் கிடைக்கும். பூஜை பொருட்கள் மூலம் ரூ.5,000 கோடி, பால் பொருட்கள் மூலம் ரூ.4,000 கோடி, பூக்கள் மூலம் ரூ.800 கோடி வருவாய் கிடைக்கும். ஹோட்டல்கள் மூலம் ரூ.6,000 கோடி வருவாய் ஈட்டமுடியும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் உத்தரப்பிரதேச பிரிவின் தலைவரான மகேந்திர குமார் கோயல் கூறியுள்ளார்.
ஆக, கும்பமேளா என்பது அப்பாவி இந்துக்களுக்கு பக்தி. ஆர்எஸ்எஸ் பாஜகவினருக்கோ அது அரசியல், வியாபாரம்.
அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வரும் போது நமது நாட்டில் உள்ள ஏழைகளை பார்க்க நேர்ந்தால் அவரது மனம் நொந்து விடும் என்பதற்காக சாலைகளின் ஓரங்களில் உள்ள ஏழை மக்களின் குடிசைகளை திரையிட்டு மறைத்த இந்த பாசிச பாஜகவினர் ஏழைகளின் நலனை பற்றி, உயிரைப் பற்றி கூந்தல் அளவிற்கு கூட கவலைப்பட மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
- குமரன்
இன்னும் எத்தனை எத்தனை சாவுகள் மறைக்கப்பட்டனவோ புரியவில்லை. பாசிசக் காவிக் கூட்டத்தின் ஆட்சியில் இன்னும் எத்தனை எத்தனை அக்கிரமங்களை நாடு சந்திக்கப் போகிறதோ? கட்டுரையாளர் நன்கு அம்பலப்படுத்தியுள்ளார். பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!