
”கல் ஒன்றை தூக்கி முட்டாள்தனமாக தனது காலில் போட்டுக் கொள்வார்கள்” என்று ஏகாதிபத்தியத்தை பற்றி வரையறுத்து முன் வைத்தார் தோழர் மாசேதுங்.
தமிழகத்தில் பெரியாரை அம்பலப்படுத்தினால் தனது கட்சி வளர்ந்து விடும் என்று ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலும், அது கொடுத்த அசைன்மென்ட் ஒன்றை தலையில் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகத் திரிந்து வரும் தமிழ் பாசிச கும்பலில் ஒருவரான சீமான் செய்த செயல் அது போன்றுதான் உள்ளது.
2025 ஜனவரிக்குள் ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யமாக இந்தியாவை மாற்றுவதற்கு பொருத்தமாக, ’ஒரே நாடு ஒரே தேர்தல்; ஒரே நாடு ஒரே மொழி; ஒரே நாடு ஒரே வரி; ஒரே நாடு ஒரே அரசு’ என்று படிப்படியாக அனைத்தையும் மையப்படுத்துகின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக இந்தியா என்ற நாடு எப்போதும் ஒன்றாக இருந்ததில்லை என்பதையும். 1947 இல் இந்தியாவிற்கு கிடைத்தது உண்மையான சுதந்திரம் அல்ல என்பதையும். இந்திய தேசியம் என்பதே பார்ப்பன கும்பலில் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது தான் என்பதையும் முன்வைத்து இந்தியாவிலேயே தமிழகத்தை தனது போராட்டக் களமாக்கி. கடந்த ஒரு நூற்றாண்டாக ஆரிய பார்ப்பன கும்பலுக்கு மிகப்பெரும் சவாலாகவும், சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்துவரும் பெரியாரின் மீது கை வைத்துள்ளனர் பார்ப்பன பாசிஸ்டுகள்.
ஈழத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து தான் போர் பயிற்சி எடுத்ததாகவும், தானே பிரபாகரனுக்கு சில ஆலோசனைகளை வழங்கியதாகவும், அப்பட்டமான பித்தலாட்டங்களை புரிந்து வந்த தமிழ் பாசிச கும்பலில் மிகவும் பிரபலமான தலைவனான சீமான் பாசிச பாஜகவின் பினாமி கும்பல் தான் என்பதையும், பார்ப்பனியத்தை கட்டி காப்பதே அவரது நோக்கம் என்பதையும் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் கடந்த 15 ஆண்டுகளாக அம்பலப்படுத்தி வருகிறது. அதே போல ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளும் துவக்கம் முதலிலேயே சீமானை அம்பலப்படுத்தி வருகின்றனர்.
அரசியல் ரீதியாக அம்பலப்பட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஆசியுடன் தமிழகத்தில் தனக்கென்று ஒரு செல்வாக்கை உருவாக்கிக் கொண்டு தமிழகத்தில் ஒரு கட்சியாக உருவாகியுள்ள சீமான் தற்போது முன் வைத்துள்ள நிகழ்ச்சி நிரலான பெரியாரை அம்பலப்படுத்தல் அல்லது திராவிட இயக்கத்திற்கு எதிராக போராடுவது, திராவிட இயக்கத்தை ஒழித்துக் கட்டுவது போன்ற பேச்சுகள், சவடால்கள் அனைத்தும் சீமான் யார்? எங்கிருந்து ஏவப்படுகிறார்? என்பதையும் அவருக்கு பின்னணியில் இருக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும்< தமிழகம் முழுவதும் விவாதப் பொருளாக மாற்றியுள்ளது என்ற அளவில் இது மிகச் சிறப்பான தருணம் என்றே கருதுகிறோம்.
”பார்ப்பனியமே இந்து மதம், சாதியமே அதன் உயிர் நாடி” என்பதை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கும், அதனை அதன் உயிர் குலையில் தாக்கிய பெரியாரின் சிந்தனைகளை பரவலாக்குவதற்கும், தமிழகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறை இளைஞர்களை தூக்கத்திலிருந்து விழிப்படைய வைப்பதற்கும் சீமான் செய்த செயல் மிகவும் சாதகமான ஒரு களத்தை உருவாக்கியுள்ளது.
”இந்திய சமூக அமைப்பு வரலாற்று பொருள்முதல்வாத பார்வையில் படிப்படியாக வளர்ச்சியடைவதற்கு மிகப்பெரும் தடைக்கல்லாக இருப்பது பார்ப்பனியமும், அது உருவாக்கியுள்ள சாதிய அமைப்பு முறைகளும் தான்” என்பதை காரல் மார்க்ஸ் மேதமைத் தனத்துடன் முன் வைத்திருந்தார்.
பார்ப்பனியம், பார்ப்பன மேலாதிக்கதிற்கும் என்று பேசினாலே அது இன வரைவியல் என்று உளறுகின்ற ’அரைவேக்காட்டு கம்யூனிஸ்டுகள்’ முதல் அக்ரஹாரத்து பார்ப்பனர்கள் வரை அனைவரையும் குலை நடுங்க வைத்துக் கொண்டுள்ளது பெரியார் என்ற ஒற்றைச் சொல்.
பல நூற்றாண்டுகளாக இந்திய சமூக அமைப்பை பிடித்தாட்டுகின்ற கருத்து முதல்வாத சித்தாந்தத்தை முறியடிப்பதற்கு பெரியார் முன்வைத்த ஆரிய பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தம் வேறு வகையில் சொல்லப்போனால் திராவிடக் கருத்தியல் மிகப்பெரும் செயலாற்றியுள்ளது என்பதால் தான் தமிழகம் இந்தியாவிலேயே பார்ப்பன எதிர்ப்பு கோட்டையாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
பெரியாருக்கு பின்னால் திராவிட இயக்கங்களை வழி நடத்திய காரியவாத, பிழைப்புவாத, அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுக, அதிமுக போன்றவைகள் பெரியாரை நாடு முழுவதும் கொண்டு செல்வதை ஒரு இயக்கமாக மேற்கொள்ளவில்லை என்பதையும் விமர்சனமாகவே கருத வேண்டியுள்ளது. பெரியாருக்கு சிலை வைப்பது; பெரியார் பெயரில் பல்கலைக் கழகங்கள் துவங்குவது, நலத் திட்டங்கள், போக்குவரத்து, சாலைகள், சமத்துவபுரங்கள் போன்றவற்றுக்கு தந்தைப் பெரியாரின் பெயரை வைப்பதே பெரிய சாதனை என பெருமைப் பேசுவது மட்டுமே பெரியாருக்கு செய்த மரியாதையாகிவிடாது.
பார்ப்பனியத்தை எதிர்த்த நீண்ட நெடிய போராட்டத்தில் முன்னின்ற சாருவாகனர்கள், சித்தர்கள், முதல் பௌத்தம், சமணம் அதன் பிறகு வள்ளலார், அய்யா வைகுண்டர், அய்யங்காளி, நாராயணகுரு, பசவண்ணர் போன்ற பல்வேறு சீர்திருத்தவாதிகள் வரையிலான அவர்கள்தான் வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்டுகளின் முன்னோடிகள். இத்தகைய மகத்தான பொருள்முதல்வாத வரிசையில் தமிழகத்தில் பெரியாரின் பணி இந்தியாவிற்கே எடுத்துக்காட்டானது. அவர் ஆற்றிய பணியும், பார்ப்பன எதிர்ப்பு மரபும் பார்ப்பனியத்தை முற்றாக வீழ்த்தும் வரை கைக்கொள்ளத் தக்கது.
படிக்க:
சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்த்துப் போராடுவது ஒருபுறமிருக்க சாதி ரீதியாக ஒடுக்கப்படுவதால் கிடைக்கின்ற சலுகைகள், இட ஒதுக்கீடு போன்ற ஏற்பாடுகளினால் சலுகை பெற்று ஆளும்வர்க்கத்தின் பல்லும் சில்லுமாக மாறியுள்ள பார்ப்பனரல்லாத சாதியினர் தற்போது திருவாளர் சீமானின் திராவிட எதிர்ப்பு நடவடிக்கைகளினால் பெரியார் இழிவுபடுத்தப் படுவதையும், பெரியார் பெயரைச் சொல்லி திராவிட இயக்கங்களை ஒழித்து கட்ட ஆரிய பார்ப்பனக் கும்பல் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதையும் கண்டும் காணாமலிருப்பது அம்பலமாகிக் கொண்டுள்ளது.
பெரியார் பற்றி சீமான் போன்ற தமிழ் பாசிச சக்திகள் பேசுவது எதிர்மறையில் கிடைத்த ஒரு உந்து சக்தி என்ற வகையில் பெரியாருக்கு எதிரான அம்பலப்படுத்தல்கள்; திராவிட இயக்கத்தை ஒழித்துக் கட்டுவேன் என்ற சபதங்கள் ஆகியவை அனைத்தும் ஆரிய பார்ப்பன கும்பலுக்கு எதிராகவே பூமாரங் போல திரும்பி உள்ளது.
படிக்க:
♦ நாராயணகுரு,வேலுநாச்சியார்,பிர்சாமுண்டாவை நிராகரித்த மோடி அரசு!
”தமிழர் விடுதலை; பட்டியலின மக்கள் முன்னேற்றம்; சாதி, மத மூடநம்பிக்கைகளை ஒழிப்பது; சமதர்ம சமுதாயம் காண்பது இவைதான் அவரது லட்சியம்- கொள்கை-குறிக்கோள்கள் என்றால் புரட்சிகர அமைப்புகள் மட்டுமே உண்மையில் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். உறுதியாக பற்றி நின்று போராடுகிறார்கள்; பொதுவுடமை புரட்சியே பிரிந்து போகும் அரசியல் உரிமையுடன் கூடிய தமிழர் விடுதலையை சாதிக்கும்; வர்க்க போராட்டமே பட்டியலின மக்களை முன்னேற்றி சமதர்ம சமுதாயம் காண ஒரே வழி; மார்க்சியம் லெனினிய மாவோ சிந்தனையே சாதி, மத மூடநம்பிக்கைகளை ஒழித்து அறிவியல் அடிப்படையிலான பகுத்தறிவை நிலைநாட்டுகின்ற வாழ்க்கைத் தத்துவம். இந்த வகையில் தந்தை பெரியாரின் லட்சியங்கள் கொள்கைகள் குறிக்கோள்களில் சரியானவற்றை பொதுவுடமை புரட்சியாளர்கள் மட்டுமே நிறைவேற்றிட முடியும்” என்று 1978 ஆம் ஆண்டு அவரது நூற்றாண்டு விழாவின் போது முன் வைத்திருந்தோம். தற்போது அது சரியானது என்பதை மீண்டும் ஆணித்தரமாக முன்வைக்கின்றோம்.
ஏகாதிபத்திய முட்டாள்களைப் போல பெரியார் எதிர்ப்பைத் தூக்கி காலில் போட்டுக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் அதன் பினாமிக் கும்பல்கள் உருவாக்கியுள்ள இந்த தருணத்தை பாட்டாளி வர்க்கத்தினராகிய நாம் சரியாக பயன்படுத்துவோம். தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் சிறு குறு தொழில் முனைவர்கள், அறிவுஜீவிகள் ஆகிய அனைவரையும் பார்ப்பன (இந்து) மதத்தின் பிடியிலிருந்து மீட்பதற்கும், இந்திய தேசியத்தின் மீதும் ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தின் மீதும் சொந்த முறையில் கோபம் கொள்வதற்கும் பெரியாரை ஏந்தி சுழற்றுவோம்.
புதிய ஜனநாயகம் (பிப்ரவரி 2025 இதழ்)
தலையங்கம்