
இந்தியாவில் பத்திரிக்கை செய்திகள் சிலரால் எழுதப்பட்டு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை பிரசுரிக்கும் லாபகரமான வியாபாரமாக மாறிவிட்டது. ஒரு சில பத்திரிக்கைகளே நேர்மையான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதில் சில யுடியூப் சேனல்களும் செய்கின்றன.
பஸ்தார் ஜங்ஷன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த முகேஷ், மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதல் என்ற பெயரில் அரசு நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்ட பஸ்தாரில் ஊழல், பழங்குடியினர் உரிமைகள் மற்றும் கிளர்ச்சி வன்முறைகள் குறித்து அடிக்கடி விசாரித்து அறிக்கை அளித்தார். அவரது யூடியூப் சேனல் 2.8 கோடி பார்வைகளையும், 1.5 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது
ஜனவரி 1ஆம் தேதி முகேஷ் சந்திரகர் காணாமல் போனதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் ஒரு தனியார் ஒப்பந்ததாரரை விசாரித்து, பஸ்தாரில் சாலை அமைக்கும் திட்டத்தில் ஊழலைக் கண்டுபிடித்ததாக DIGIPUB குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பிஜப்பூரில், சட்டன்பாரா பகுதியில் உள்ள அவரது தூரத்து உறவினரும், அரசு ஒப்பந்ததாரருமான சுரேஷ் சந்திரகருக்கு சொந்தமான இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஏசி நிறைந்த அறைகளில் அமர்ந்துக் கொண்டு கள நிலவரங்களை பற்றி துளியும் அறிவில்லாமல் அனைத்தும் அறிந்தவர் போல் மக்கள் பிரச்சினைகளை காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் களத்தில் மக்கள் பிரச்சினையில் தலையிட்டு அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்பட்ட முகேஷ் சந்திரகர் இன்று கொல்லப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சாலை அமைக்கும் திட்டத்தில் ஊழல் நடந்ததாக புகார் அளித்ததையடுத்து, மாநில அரசு விசாரணை நடத்தியது. நெல்சன்-கோடோலி-மிர்தூர்-கங்களூர் வழித்தடத்தில் 52.4 கிமீ திட்டம் ரூ.73 கோடியில் 2010-ல் தொடங்கப்பட்டதாகவும், ஆனால் 2021-ம் ஆண்டுக்குள் செலவு ரூ.189 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்தது.
சுரேஷ் 2015 ஆம் ஆண்டில் சாலையின் ஒரு பகுதியைக் கட்டும் பணியை மேற்கொண்டார். சுரேஷ் 2005 முதல் 2007 வரை சிறப்புக் காவல் அதிகாரியாகப் பணியாற்றியவர் என ஸ்க்ரோல் கூறுகிறது. இந்த கொலையில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகேஷ் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அவரது உறவினர்கள் ரித்தேஷ் சந்திரகர், தினேஷ் சந்திரகர் மற்றும் கட்டுமான மேற்பார்வையாளர் மகேந்திர ராம்தேகே.
ஜனவரி 1-ம் தேதி முகேஷ் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதாக சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பஸ்தர் ரேஞ்ச்) சுந்தர்ராஜ் பி தெரிவித்தார்.
“எங்கள் விசாரணையில் ரித்தேஷ் சந்திரகர் முகேஷ் சந்திரகரின் உறவினர் என்பதும், இருவரும் அடிக்கடி பழகியதும் தெரியவந்துள்ளது ” என்று சுந்தர்ராஜ் கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது “ஜனவரி 1ம் தேதி இரவு 8 மணிக்கு இருவரும் போனில் பேசிக்கொண்டனர், பின்னர் இருவரும் சாத்தன்பாறையில் உள்ள சுரேஷ் சந்திரகர் என்பவரது வளாகத்திற்கு இரவு உணவிற்குச் சென்றனர். முகேஷ் சந்திரகர் தங்கள் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக ரித்தேஷ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது.
படிக்க: உத்திரப் பிரதேசத்தில் வேட்டையாடப்படும் பத்திரிக்கையாளர்கள்!
சுந்தர்ராஜ் மேலும் கூறியதாவது: “ரித்தேஷ் மற்றும் ராம்தேகே இருவரும் இரும்பு கம்பியால் முகேஷை கொன்று, உடலை செப்டிக் டேங்கில் வைத்து மூடிவிட்டனர். பின்னர் ரித்தேஷ் ஜக்தல்பூரில் இருந்த தனது மூத்த சகோதரர் தினேஷ் மற்றும் சுரேஷ் சந்திரகர் மற்றும் பிற உறவினர்களை அழைத்தார். ரித்தேஷ், ராம்தேகே மற்றும் தினேஷ் ஆகியோர் போட்லியில் [பிஜாப்பூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில்] சந்தித்து ஆதாரங்களை அழிக்க சதி செய்தனர்” என்கிறார்.
முக்கிய கொலையாளியான ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் கடந்த டிசம்பரில் ஆளும் கட்சியில் சேர்ந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. “சுரேஷ் சந்திரகர் 10 நாட்களுக்கு முன்பு முதல்வர் மாளிகைக்கு வந்தார்,” என்று காங்கிரஸ் தலைவர் சுக்லா கூறினார். கடந்த 15 நாட்களாக முதல்வர் இல்லத்தின் சிசிடிவி காட்சிகள் மற்றும் பார்வையாளர்கள் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். முகேஷ் அம்பலப்படுத்திய சுரேஷ் சந்திரகரின் ஊழல் ஏன் விவாதிக்கப்படவில்லை? என்கிறார்.
ஆனால் இதில் இருந்து பாஜக தப்பிப்பதற்காக சுரேஷ் சந்திரகரின் கட்டுமான நிறுவன தளத்தை இடித்துள்ளனர். வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இது அனைத்தும் அவர் கொலை குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட பிறகு அவசர அவசரமாக நடத்தியுள்ளது சத்தீஸ்கரை ஆளும் பாஜக.
படிக்க: எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் ஐபோன்களை உளவு பார்க்கும் பாஜக அரசு!
இந்தியாவில் பாசிஸ்டுகளின் ஆட்சியின் கீழ் பத்திரிக்கையாளார்கள் சுதந்திரமாக செயல்படாத நிலையே நீடித்து வருகிறது. ஏற்கனவே 2023 ஆம் ஆண்டில் 5 பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்பட்டதால் கொல்லப்பட்டுள்ளனர். 226 பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக ப்ரஸ் ஃபிரீடத்தின் ஆண்டு அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் சுயாதீன பத்திரிக்கையாளார் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூரில் பத்திரிகையாளர்கள் சனிக்கிழமையன்று பத்திரிகைகளுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். “உண்மையை அம்பலப்படுத்தியதற்காக முகேஷ் இறுதி விலை கொடுத்தார்” என்று என்டிடிவியின் முன்னாள் சக ஊழியரான அனுராக் துவாரி கூறினார்.
இருந்தும் இந்த வழக்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பரபரப்பாக பேசப்படலாம் அதன் பின்னர் இது இந்த கொலை மறந்து நாம் வேறு பிரச்சினையில் கவனத்தை திருப்பியிருப்போம். ஆனால் பத்திரிக்கையாலார்கள் மீதான தாக்குதல்கள் பாசிச கும்பலின் ஆட்சியில் நிற்க போவதில்லை. கொலைகாரர்களையும் கொள்ளை கும்பலையும் கட்சியில் வைத்திருக்கும் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீழ்த்தப்படாத வரை முகேஷ் சந்திரகர் போன்றோர் கொல்லப்படும் கொடூரங்களை தடுப்பது கடினம்
- நலன்