ந்திய அரசியலில் ஊழல் எதிர்ப்பு முழக்கமிட்டு, உத்தமர் வேடமணிந்த மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய போது, உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609 ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி, 2022 இறுதியில் 3 – ஆம் இடத்திற்கு முன்னேறி இருந்தார்.

2014 – ல் அவரது சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடி. அடுத்த எட்டு ஆண்டுகளுக்குள் அது 12 லட்சம் கோடிகளாக உயர்ந்தது. உலகில் எங்கும் நடந்திராத அதிசயம் மற்றும் ஆச்சரியத்திற்குப் பின்னே ஒளிந்திருக்கும் நபர்தான் மோடி. ஆம், ஊழலுக்கு எதிராக முழங்கி ஆட்சியைப் பிடித்த இந்துத்துவ காவி மோடியின் ஊழல் சாம்ராஜ்யத்தில் உருவான கார்ப்பரேட் முதலாளிதான் அதானி.

மோடியின் ஆசியால் அதானி குழுமம் ஆக்டோபஸ் போல தனது கரங்களை அனைத்து துறைகளிலும் விரித்து ஆக்கிரமிப்பை நடத்தியது. ஆனாலும் குறுகிய காலத்தில் இந்த அதீத வளர்ச்சிக்கு அது மட்டுமே காரணம் அல்ல.  அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் துணையோடு பல்வேறு வகைகளில் நடத்திய மாபெரும் மோசடிகளின் விளைவுதான் அவரை உலகின் மூன்றாம் பணக்காரராக உருவெடுக்க வைத்தது. இந்த மோசடிகள் எப்படி அரங்கேற்றப்பட்டன என்பதைத்தான் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அதானி குழுமத்திற்கு வந்த ‘ சோதனை’!

ஜனவரி 24 அன்று அமெரிக்காவின் வால் வீதியில் இயங்கும் பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமமானது கார்ப்பரேட் பொருளாதார வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத மாபெரும் மோசடியை செய்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது. எந்தெந்த வகைகளில் எப்படி எப்படி எல்லாம் இந்த மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்கள் என அந்த அறிக்கை விவரித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தாலும், பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட அச்சத்தை அதனால் தடுக்க முடியவில்லை. எனவே அதன் நிறுவனப் பங்குகளின் மதிப்பு மாபெரும் சரிவை கண்டது. சுமார் 140 பில்லியன் டாலர் (சுமார் பத்து லட்சம் கோடிக்கு மேல்) இழப்பை அதானி குழுமம் சந்தித்தது.

இத்தகைய நெருக்கடியானது, அதானி குழுமத்தின் வணிகத் திட்டங்களை பெருமளவு பாதித்ததோடு, சில கடன்களை முன்கூட்டியே செலுத்தவும், கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள சிலவற்றை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்குள்ளும் தள்ளியுள்ளது.

இதையும் படியுங்கள்: அதானியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில்).

அதானி குழுமத்திற்கு நெருக்கடி ஆழமாகி வரும் நிலையில், அதன் நிறுவனரான கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி மீது இப்போது ஊடகங்கள் கவனத்தை திருப்பி உள்ளன. இதற்கு காரணம், ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி குழும நிறுவனங்கள், தங்களது நிதி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் வகையில் பங்குகளை நிலை நிறுத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம், பங்குச்சந்தையில் போலியாக பங்கு மதிப்பை உயர்த்துதல் போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளன. இவற்றை வெளிநாடுகளில் உள்ள போலியான நிறுவனங்கள் மூலமாக நடத்தியது வினோத் அதானிதான் என குற்றம் சாட்டியுள்ளது.

அறியப்படாத வினோத் அதானின் பின்புலம் என்ன?

74 வயதாகும் வினோத் அதானி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இருந்து பணி புரிவதாக பரவலாக கூறப்படுகிறது. ஒழுங்கு முறை ஆவணங்கள் அவர் சைப்ரஸ் நாட்டைச் சார்ந்தவர் என காட்டினாலும், அவரது நிரந்தரக் குடியுரிமை சிங்கப்பூரில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மார்னிங் கன்டெக்ஸ்ட் எனும் இணையப் பத்திரிகை, வினோத் அதானி 1976 – ல் மும்பைக்கு அருகில் ஜவுளி ஆலை ஒன்றை நிறுவியதாகவும், 1986 -ல் சிங்கப்பூருக்கு சென்று, இறுதியில் 1994 – ல் துபாய்க்கு சென்ற அவர் சர்க்கரை, எண்ணெய் மற்றும் தாமிரப் பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் கூறுகிறது.

சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் பனாமா பேப்பர் கசிவில் ( Panama Leaks – 2016) அவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. பஹாமாசில் 1994 – ல் ஒரு நிறுவனத்தை தொடங்கிய அவர், இரண்டே மாதங்களில் நிறுவன ஆவணங்களில் தனது பெயரை வினோத் அதானி என்பதற்கு பதிலாக வினோத் ஷா என்று( அடையாளத்தை மறைத்து தில்லுமுல்லு செய்ய) மாற்றிக் கொண்டார் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி வினோத் அதானிக்கு அதானி குழுமத்தில் உள்ள பங்குகளின் காரணமாக அவரது சொத்து மதிப்பு 10,500 கோடியாகும் (1.3 பில்லியன் டாலர்). இதன் மூலம் அவர் 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெளிநாடு வாழ் இந்திய பணக்காரனாகிறார். ஹிண்டன்பர்க் அறிக்கையிலேயே அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகளில் வினோத் அதானின் பங்கு குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட அதானி குடும்ப நிறுவனங்களில் அவர் எந்த முறையான பதவியையும் வகிக்கவில்லை. எனினும் அவரது பெயர் 151 முறை குறிப்பிடப் பட்டுள்ளது.  ஒப்பிட்டுப் பார்க்கையில் கௌதம் அதானியின் பெயர் 54 முறை மட்டுமே உள்ளது.

இப்படியான செல்வாக்கு மிக்க மனிதனாக சர்வதேச சந்தையில் இருந்து நிதி திரட்டும் முக்கிய நபராக இருக்கும் வினோத் அதானி, பொதுமக்களுக்கு அறியப்படாத நபராகவே இருந்து வருகிறார். இவரைப் பற்றிய தகவல்கள் அதிகம் பொதுவெளியில் இல்லை.

வினோத் அதானி உருவாக்கிய ” உப்புமா” கம்பெனிகள்!

வினோத் வெளிநாடுகளில் உருவாக்கிய ஷெல் நிறுவனங்களின் (ஷெல் நிறுவனம் என்பது நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை போன்ற நோக்கங்களுக்காக போலியாக உருவாக்கப்படுபவை) வலைப்பின்னல் மூலமாக ஏராளமான தில்லுமுல்லுகளை செய்துள்ளார். சைப்ரஸ், சிங்கப்பூர், கரீபியன் தீவு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் உள்ள சிறு நிறுவனங்களுடன் சேர்ந்து மொரீஸியசில் மட்டும் டஜன் கணக்கான நிறுவனங்களை உருவாக்கியுள்ளார்.

 

வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் செய்த சந்தேகபூர்வமான பரிவர்த்தனைகள் குறித்து தங்கள் ஆய்வில் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக ஹிண்டன்பர்க் கூறியுள்ளது. அவை பெரும்பாலும் அதானி குழும நிறுவனங்களுக்கு உள்ளே வந்துள்ளதை அல்லது இங்கிருந்து வெளியே சென்றுள்ளதையே காட்டுகின்றன. இந்த ஷெல் நிறுவனங்கள் எத்தகைய வர்த்தகத்திலும் ஈடுபடுவதில்லை. ஆனால் பல கோடி டாலர்களை இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளன. இந்தப் பண பரிவர்த்தனைகளில் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மை என்பதே இருந்ததில்லை.

இதே போல அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் பிப்ரவரி 17 அன்று வெளியிட்ட தகவலில், வினோத் அதானியுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிதிகள் உரிய தகவல்கள் இன்றி அதானி குழுமத்துக்கு பயனளிக்கும் வகையில் நடந்துள்ளன என்பதை தெரிவித்துள்ளது. மேலும் பஹாமாஸ், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளிலும், கேமன் தீவுகளிலும் என கடல் கடந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களில் குறைந்த பட்சம் 60 நிறுவனங்களை வினோத் அதானி வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது.

வினோத் அதானியின் செல்வாக்கு!

ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில், அதானி குழுமமானது சிமெண்ட் நிறுவனங்களான அம்புஜா மற்றும் ஏசிசி  நிறுவனங்களை 2022 – ல் கையகப்படுத்தும் போது அதன் பங்குதாரர்களுக்கு 7 நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கான சலுகை அளிக்கப்பட்டது. அந்த ஏழு நிறுவனங்களும் வினோத் அதானி மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமாக இருந்தன. அவை பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளிலும், மொரீஷியஸிலும், துபாயிலும் பதிவு செய்யப்பட்டவை.

வினோத் அதானியும் அவரது மனைவி ரஞ்சன் பென்னும் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்கள் எதிலும் நிர்வாக பொறுப்புகளை வகிக்கவில்லை. எனினும் அதானி குழுமத்தின் செய்தி தொடர்பாளர் 2022ல் “தி மார்னிங் கன்டெக்ஸ்ட்” எனும் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “அவர்கள் அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்கள் என ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஹிண்டன்பர்க்கின் கூற்றுப்படி, 2009 வரை வினோத் அதானி குறைந்தது ஆறு குழும நிறுவனங்களின் இயக்குனராகவும், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்துள்ளார். 2011 வரை பல அதிகாரப்பூர்வ நிர்வாகப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மின் உற்பத்திக்கான அதிக விலை வைத்ததில் நடந்த ஊழல் முறைகேடு தொடர்பான புலன் விசாரணையின் ஒரு பகுதியாக, அதானி பவர் நிறுவனம் 2017ல் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திடம், வினோத் அதானி எந்த ஒரு குழும நிறுவனங்களுடனும் எந்த ஒரு தொடர்பும் கொண்டிருக்கவில்லை எனக் கூறியதையும் ஹிண்டன்பர்க் சுட்டிக் காட்டுகிறது.

அறிக்கை வெளியான பிறகும் ஜனவரி 30 – ல் அதானி குழுமம் வினோத் அதானியின் தொடர்பை மறுத்தது. வினோத் அதானி எந்த நிறுவனத்திலும் எந்த நிர்வாகப் பதவியையும் வகிக்கவில்லை. மேலும் அவற்றின் அன்றாட விவகாரங்களிலும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் வினோத் அதானியின் வணிக பரிவர்த்தனைகள் குறித்த உங்கள் குற்றச்சாட்டுகளுக்கும் நாங்கள் கருத்து தெரிவிக்கும் நிலையில் இல்லை என ஹிண்டன்பர்க்கின் அறிக்கைக்கு பதில் கூறியது அதானி குழுமம். ப்ளூம்பெர்க் எழுப்பிய கேள்விகளுக்கும் இதே பதிலைத்தான் அளித்தது. ஃபோர்ப்ஸ் அறிக்கைக்கு பதிலேதும் அளிக்கவில்லை.

“அதானி குழுமத்தில் எந்த பதவியும் இல்லாத நிலையிலும், அக்குழுமம் 2 சிமெண்ட் நிறுவனங்களை கையகப்படுத்தியதில் வினோத் அதானியின் பங்கு இருப்பதானது  அவரது பெரும் செல்வாக்கு குழுமத்தில் இருப்பதை  உறுதி செய்கிறது. இப்படியாக மாபெரும் செல்வாக்கு படைத்தவராக இருப்பினும் அவர் மர்மமான மனிதராகவே நீடிக்கிறார். ஒரு அடையாளம் தெரியாத ஆனால் குழுமத்தின் செயல்பாடுகளை நன்கறிந்த ஒரு நபர்தான் அவர்” என ப்ளூம்பெர்க் குறிப்பிடுகிறது.

ஒரு பத்திரிக்கையாளரும் “அதானியும் அவரது பேரரசும்” என்ற அதானியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான R.N. பாஸ்கர் ப்ளூம்பெர்க்கிடம் கூறுகையில், “அனைத்து வெளிநாட்டு பரிவர்த்தனைகளும் வினோத் அதானியால் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன” என்றார். அவரது புத்தகத்திலும் இதை குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் வினோத்தை பற்றி மிகவும் குறைவாகவே தான் அறிந்துள்ளதாக பாஸ்கர் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்: எச்சரிக்கை. ஊழல்  + மோசடி= கௌதம்  அதானி குழுமம்.

கௌதம் அதானிக்கு சொந்தமானதாக அறியப்பட்ட பல நிறுவனங்கள், உண்மையில் வினோத் அதானிக்கு சொந்தமானவை என்பதைக் கண்டறிந்த பிறகு ஃபோர்ப்ஸ் சமீபத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பை 50 பில்லியன் டாலர்கள் ( 4 லட்சம் கோடி) என குறைத்து அறிவித்துள்ளது.

இப்படியாக உலகளவில் அதிர்வை ஏற்படுத்தி, பேசுபொருளாக மாறியுள்ள இவ்விசயம் குறித்து வாய்திறக்க மறுக்கிறார் மோடி.  இப்படி ஒரு மாபெரும் மோசடி அம்பலமானவுடன் வழக்குப் பதிவு செய்து, அதானியை கைது செய்திருக்க வேண்டும். மாறாக, தனது நண்பனைக் காப்பதில் அதீத அக்கறை செலுத்தும் விதமாக, விசாரணைக் குழுவை தானே அமைப்பதாக கூறினார். இதை ஏற்காத உச்ச நீதிமன்றம் 5 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது சற்று ஆறுதலை அளிக்கிறது.

மக்களின் பணத்தை வங்கிகள் மூலம் வாரி வழங்கி, அதையும் வாராக்கடன் என தள்ளுபடி செய்கிறது மோடியின் அரசாங்கம். இதனால் பொதுத்துறை வங்கிகள் திவாலை நோக்கி செல்கின்றன. அப்படி நிகழும்போது கடும் பொருளாதார நெருக்கடியும், அதனூடாக பெருவாரியான மக்களும் பாதிக்கப்படக் கூடிய அபாயம் உருவாகும்.

அதானி இழைத்த முறைகேட்டால் பங்குச்சந்தையில் பங்கின் மதிப்பு வீழ்ந்ததால் அப்பாவி மக்களும் பெருத்த நட்டத்தை சந்தித்துள்ளனர்.
இதற்கெல்லாம் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டிய அரசு, இதை தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரிப்பதுதான் கொடுமை. கார்ப்பரேட் – காவி பாசிசம் வளர்ந்து வருவதைதான் இது காட்டுகிறது. இந்துத்துவ சிந்தனையில் ஊறிய, ஆர்எஸ்எஸ் – ஆல் பயிற்றுவிக்கப்பட்டவர்களே கவர்னர்களாக, நீதிபதிகளாக, அனைத்து நிர்வாக உயர் மட்டங்களிலும் அமர்த்தப்படுவதும் இதற்காகத்தான்.

எதிர்கட்சிகள் உள்ளிட்ட அரசை விமர்சிப்பவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை ஏவிவிடும் போக்கும் அரசு பாசிசமயமாகி வருவதை நமக்கு உணர்த்துகிறது. இந்த சூழலில், மாபெரும் குற்றமிழைத்த அதானி சகோதரர்களையும், துணை நின்ற மோடி அரசையும் தண்டிக்க வேண்டும் எனில் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியும், மக்கள் முன்னணியும் உடனடி அவசியமாகிறது.

செய்தி ஆதாரம்:

https://scroll.in/article/1044581/who-is-vinod-adani-the-mysterious-elder-brother-at-the-heart-of-the-adani-crisis

தமிழில் ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here