தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் பாசிச பாஜக நம்மை என்ன செய்துவிட முடியும் என்று ஏளனமாக இந்த விஷயத்தை கையாளுகிறது.

140 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் பாஜகவின் ஐடி செல் பரப்பும் பொய்களையே உண்மை என்று பெரும்பான்மை மக்கள் நம்பி வாழ்கிறார்கள். தேர்தல் பத்திரங்கள் பற்றியோ பிஎம் கேர் ஃபண்டு பற்றியோ தகவல்கள் கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு போய் சேர்ந்திருக்குமா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஏனென்றால் அவர்கள் பெரிய பிரச்சனையான வறுமையுடனும், வேலை வாய்ப்பின்மையுடனும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மத்தியில் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அவர்களின் வறுமைக்கும் வேலை வாய்ப்பின்மைக்கும் காரணம் கார்ப்பரேட் – காவிகளின் சுரண்டலும் என்பதை உணர்த்த வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. பாஜகவை ஒப்பிடும்போது அவர்கள் பொய்யை சேர்ப்பது போல் நாம் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதில் பின்தங்கியே உள்ளோம்.

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜகவின் வளர்ச்சி அபாரமானது என்று கூற வேண்டும். அதற்கு தமிழ்நாடு சிறந்த உதாரணம். ஒரு காலத்தில் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லாத நிலை இருந்தது. நேரடியாக பாஜக என்றல்லாமல் இந்து முன்னணி விஸ்வ ஹிந்து பரிசத் என்ற பெயரில் கிளைகளை பரப்பி செயல்பட்டு வந்த சங்பரிவார் கும்பல், இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கிளைகள் அமைத்து செயல்பட்டு வருகிறது. கட்சிக்கு வருபவர்களுக்கு பதவி, பணம். அதனாலயே கொள்கை  என்னவென்று எல்லாம் கேட்காமல் பணத்திற்காக பாஜகவில் சேர்ந்தவர்களை அதிகம்.

முக்கியமாக பாசிச பாஜக இந்தியா முழுவதும் வளர்வதற்கு பணமே அடிப்படையாக உள்ளது. கட்சியில் சேர்ந்த பின்னரே இந்து மத வெறியை ஊட்டி வளர்க்கிறார்கள். இதற்கு உறுதுணையாக இருந்தது பாஜக 10 ஆண்டுகளில் நடத்திய இரண்டு வகையான ரெய்டுகளும் தேசம் கடந்த தரகு முதலாளிகளின் பொருளாதார உதவியுமே.

முதல் வகை: இந்த வகை ரெய்டுகளில் இவர்களுக்கு பொருளாதார லாபம் இல்லை என்றாலும், மாநிலங்களில் கட்சி வளர்வதற்கும் ஆட்சியை கொல்லைபுறமாக கைப்பற்றியதற்கும் உதவியுள்ளது எனலாம். அரசியல் கட்சித் தலைவர்களின் வீட்டில் ரெய்டு அவர்கள் கட்சி எம்எல்ஏக்களின் வீட்டில் ரெய்டு இதன் மூலம் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் உதவியுள்ளது. ரெய்டுகள் நடத்தி ஊழல் செய்துள்ளார்கள் என்று பரப்புவது, கைது பயத்தை அதிகப்படுத்தி அவர்களை மிரட்டி பாஜக கட்சியில் இணைத்து அவர்கள் மீது போட்ட கேசை ஒன்றும் இல்லாமல் செய்வது.

இதையும் படியுங்கள்: ஒற்றை சர்வாதிகார பாசிச ஆட்சி! பறிபோகும் மாநில உரிமைகள்!

இதற்கு உதாரணமாக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரை எடுத்துக் கொள்ளலாம். தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவாரின் சகோதரன் மகனான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸின் 53  எம்எல்ஏக்களில் 41 பேரை பிரித்துச் சென்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு துணை முதல்வர் பதவியும் தரப்பட்டது. இதன் பின்னணியை பார்த்தால்  அஜித் பவாரின் உறவினர் வீட்டில் கடந்த 2022 மார்ச்சில் வருமானவரித்துறையால் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் சர்க்கரை ஆலையில் ஊழல் தொடர்பான வழக்குகளில் அமலாக்கத்துறை அஜித் பவார் மீதான பிடியை இருக்கிறது. இதன் விளைவாக வழக்குகளில் இருந்து தப்பிக்க, சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் இணைந்தார்.

இதன் பின்பு மாநில கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக அஜித் பவார் மற்றும் சுனைத்ரா பவாருடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் அஜித் பவார் பெயர் இடம் பெறவில்லை.

அஜித் பவார் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதினால் அவர் மீதான வழக்குகள் இதுவரை விசாரிக்கப்படவில்லை. பாஜகவின் நோக்கமும் நிறைவேறிவிட்டது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜகவின் டம்மி அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது.

அஜித் பவார் மட்டுமல்ல, 2015ல் சாரதா சிட் ஃபண்ட் மோசடியின் மூலம் காங்கிரசின் ஹிமந்த் விஸ்வா சர்மாவையும்(இவர் தற்போது அசாம் மாநில முதல்வர்), 2021 இல் நாரதா ஸ்டிங் என்று அழைக்கப்பட்ட லஞ்ச வழக்கில் திரிணாமுல் காங்கிரசின் சுவேத்து அதிகாரியும் பாஜகவில் தஞ்சம் அடைந்தனர். அதன் பின்னர் அவர்கள் மீதான வழக்குகளும் விசாரிக்கப்படவில்லை. இதுபோல இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது ரெய்டும், கைதும், பாஜக இணைப்பும் நடந்து கொண்டுதான் உள்ளது.

கட்சி மாறுபவர்களிடம் பலநூறு கோடி பேரம் பேசப்படுகிறது. இதற்கான பணம் அனைத்தும் இரண்டாம் வகை ரெய்டின்  மூலமும் கார்ப்பரேட்டுகள் கொடுக்கும் கள்ளப்பணம் மூலமும் சாத்தியமாகிறது அதனை பார்ப்போம்.

இரண்டாம் வகை ரெய்டு: இந்த வகை ரெய்டின் மூலமே பாஜக  இந்தியா முழுவதும் வேரூன்ற தேவையான நிதியை பெற்றிருக்கிறது.  இதில் சட்டபூர்வமாக்கப்பட்ட நிதி ஒன்று என்றால், மறைமுகமாக வாங்கப்படும் லஞ்சம் வேறு.

சட்டபூர்வ நிதியான தேர்தல் பத்திரம்

இந்திய ஒன்றிய அரசு 2017-ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. திட்டம் 29 ஜனவரி, 2018 முதல் அரசாங்கத்தால் சட்டபூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கான நிதி கொடுப்பதற்கான பத்திரங்களை பாரத் ஸ்டேட் வங்கி SBI வெளியிடும். இதன்மூலம் நிதி அளிக்கும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் எந்த கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டது என்ற தகவல்களையும் வெளியிட வேண்டும்.

இதையும் படியுங்கள்: தேர்தல் ‌ பத்திரம்: பாஜக வெட்டிய தங்கச் சுரங்கத்திலிருந்து வெளிவரத் துவங்கி இருக்கும் பூதம்!

இது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் கட்சிக்கும் பிரச்சினையாக உள்ளதை உணர்ந்து பாசிஸ்ட் மோடி தேர்தல் நிதி பத்திரத் திட்டம் 2018 மூலம் COMPANY’S ACT  2018-ல்  7.5 சதவீதம் வரம்புடன் நிதி வழங்கும் முறை நீக்கப்பட்டது. இதன் மூலம் அரசியல் கட்சிகளின் பெயர்களை வெளியிட வேண்டியது இல்லை. நன்கொடை அளிப்பவர்களின் பெயர் SBI வங்கிக்கு மட்டுமே தெரியும்.  இது பாஜகவுக்கு பெரும் சாதகமாக அமைந்தது.

இந்நிலையில்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெரும் நிதியை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 15ஆம் தேதி என்று நிறுத்தியது. மேலும் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி வழங்கியவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கும்படி SBI வங்கிக்கு உத்தரவிட்டது.

பாஜகவை காப்பாற்ற நினைத்து  வசமாக சிக்கிக் கொண்ட SBI வேறு வழியில்லாமல் மார்ச் 14 தேர்தல் ஆணையத்திடம் தகவல்களை ஒப்படைத்தது.

இதில் தான் பல உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளன. குறிப்பாக ED ரெய்டும், அதனைத் தொடர்ந்து தேர்தல் நிதியும் பாஜகவுக்கு பல்லாயிரம் கோடி கைமாறி உள்ளதன் ரகசியத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.

தேர்தல் நிதி பத்திரங்களின் மூலம் 11,000 கோடிக்கு மேல் பாஜக பெற்றுள்ளது. 1378 கோடியை தேர்தல் பத்திரமாக லாட்டரி அதிபர் மார்ட்டின் கொடுத்துள்ளார். இவ்வளவு நிதி கொடுக்க வேண்டிய அவசியம் லாட்டரி மார்ட்டினுக்கு வந்ததன் காரணம் என்ன?

இதையும் படியுங்கள்: தேர்தல் பத்திரங்கள்: நிதி குறித்து கேட்க மக்களுக்கு உரிமை இல்லை – பாஜக!

பாஜகவுக்கு வந்த நிதியிலேயே அதிகபட்சமான நிதி லாட்டரி மார்ட்டின் கொடுத்ததாக தான் இருக்க முடியும். பண மோசடி வழக்கில் மார்ட்டின் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இந்த ரெய்டு நடந்த சில நாட்களிலேயே தேர்தல் நிதிகளை லாட்டரி மார்ட்டின் வாரி வழங்கியுள்ளார்.

டிசம்பர் 23, 2021 இல் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. அடுத்த 12 நாட்களில் அதாவது ஜனவரி 5, 2022-ல் சுமார் 300 கோடிக்கு மேல் மார்ட்டின் தேர்தல் நிதி பத்திரம் வாங்கியுள்ளார்.

இவரது நிறுவனமான பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் உட்பட பல நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனையையும், வருமான வரித்துறை சோதனையும் நடத்தப்பட்டு அந்நிறுவனங்களில் இருந்து பல ஆயிரம் கோடி தேர்தல் நிதியாக பாஜக பெற்றுள்ளது.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ உள்ளிட்ட அரசின் அமைப்புகளை பாஜக நிதி வசூலிக்க தன் வீட்டு ஏவல் நாயாக பயன்படுத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.

சட்டபூர்வமான கொள்ளையை நடத்தியுள்ள பாஜக பல்லாயிரம் கோடி நிதியை திரட்டியுள்ள அதே சமயம், அந்த லிஸ்டில் மோடியின் நண்பனும் 2014ல் தேர்தலில் பிரச்சாரத்திற்கு விமானம் கொடுத்து உதவிய அதானியை காணோமே என்கிறார்கள். அம்பானியையும் தேடுகிறார்கள்.

மோடியை பயன்படுத்திக் கொண்டதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை கண்ட அதானி பாஜகவுக்கு நிதி கொடுக்காமல் இருப்பாரா என்ன. பாஜக அதானியின் சொந்த கட்சியை போன்றது. அதில் அவரது நிதி பங்கு இல்லாமல் இருக்காது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களையும், சொத்துக்களையும் அதானிக்கு எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மோடி. விமான நிலையங்கள் பராமரிப்பு, ரயில் நிலையங்கள், ரயில்கள் என அதானிடம் சென்று கொண்டிருக்கிறது.

ஆகையால் அதானி கொடுக்கும் பணம் எல்லாம் தேர்தல் பத்திரங்களின் முன்னே நிற்க முடியாது எவ்வளவு நிதி சென்றுள்ளது என யாருக்கும் தெரியாது 2014 முதல் 2023 வரை 9 ஆண்டுகளில் ரூபாய் 14,56,000 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் 90% பெரு நிறுவனங்களுக்கும்  முதலாளிகளுக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இத்தனை லட்சம் கோடி மோடி வாராக்கடன் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இதில் பாஜகவுக்கு பணம் வந்திருக்காது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? இவை அல்லாமல் டெண்டர் எந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறதோ அந்த நிறுவனங்களும் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்களின் மூலம் நிதி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இப்படியாக பல வழிகளில் நிதிகளை திரட்டி பாசிச பாஜக இந்தியாவில் மிருகத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

பாஜக மட்டும் தேர்தலை பத்திரங்கள் மூலம் நிதிகள் வாங்க வாங்கவில்லை. காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ், பிஆர்எஸ் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் வாங்கி இருக்கின்றன.

ஆனால் பாஜக இந்த கட்சிகளிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் நிதியிலிருந்து தான் இந்திராஷ்டிர  திட்டத்திற்கான தயாரிப்புகளை செய்து வருகிறது பாஜக.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டவும் மணிப்பூர் உள்ளிட்ட இடங்களில் பழங்குடியின மக்கள் மீதான கலவரத்தை நடத்தவும், இந்த பணத்தை தான் பயன்படுத்திக் கொள்கிறது. அதனால் தான் இதனை பேராபத்தாக உணர்கிறோம்.

ரெய்டுகளின் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தை பயன்படுத்தியே பாசிசம் மூர்க்கமாக வளர்ந்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400  இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்வதன் பின்னணியிலும் இந்த ‘கொள்ளை பொருளாதாரமே’ அடங்கியுள்ளது.

ஆனால் பாசிச பாஜகவை வீழ்த்த இப்போதைய பிரச்சாரங்கள் போதாதது என்பதை நாம் உணர வேண்டும். தேர்தல் பத்திர விவகாரத்தை எதிர்கட்சிகள் கண்டுகொள்ளாமல் அமைதிகாப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். கார்ப்பரேட் கும்பலுக்காக முதலாளிகளிடம் பல ஆயிரம் கோடி பணத்தை வாங்கிக் கொண்டு மக்களுக்கு எதிராக வேலை செய்யும் பாசிஸ்டுகளை,  நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்று  அம்பலப்படுத்தாமல்  அவ்வளவு எளிதில் பாஜகவை தேர்தலில் வீழ்த்த முடியாது.

ரெய்டுகளின் மூலமும் கார்ப்பரேட்டுகளின் வசூலிக்கும் பணம் மூலமும் மதவெறியை தூண்டி அசுரபலம் கொண்டு வளரந்து நிற்கும் பாசிச கும்பலை தேர்தலிலும், தெருவிலும் போராடி வீழ்த்துவோம்.

நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here