முதல் பாகம் படிக்க: வரட்டு வாதம் குறித்து மா.லெ பார்வை!
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னரே படிப்பதில் நமது போக்கு எத்தகையத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவுபட விளக்கியுள்ளார் தோழர் கபிலன். ஆனால் இன்று வரை தன்னை மார்க்சிய லெனினியவாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் குட்டி முதலாளித்துவ பிரிவினைச் சார்ந்த சிலர் மேற்கோள்களை மட்டும் படித்துவிட்டு அதனை அப்படியே இந்திய மண்ணுக்கு பெயர்த்து அமல்படுத்த வேண்டும் என்று வகுப்பு நடத்துகின்றனர்.
மக்களுடன் சென்று பணிகளை செய்வதை தவிர்த்து விட்டு அறைக்குள் அமர்ந்து கொண்டு உலகத்தை பார்ப்பது; கூகுள் வழியாக உலகத்தை புரிந்துக் கொள்வது என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களைப் போன்றவர்கள், அன்றாடம் மக்களுடன் சென்று பணியாற்றிக் கொண்டிருக்கும் எண்ணற்ற தோழர்களுக்கு குறுக்கு வழியில் தலைவராவதற்கு முயற்சிக்கின்றனர். இத்தகையப் போக்குகள் எவ்வாறு தவறு என்பதை சென்ற கட்டுரையின் தொடர்ச்சி நமக்கு அறிவுறுத்துகிறது.
அப்பட்டமாக காப்பியடிக்கும் போக்கை எதிர்த்து
சர்வதேச பொதுவுடமைக் கட்சிகளின் அனுபவங்களை படிப்பது நமது புரட்சிக்கு துணை செய்பவை. நமது கட்சி உலகப் பாட்டாளி வர்க்க அமைப்பின் ஒரு பகுதியாகும். எனினும் ஒவ்வொரு நாடும் தன க்கே உரித்தான அரசியல், பொருளாதார, இராணுவ, கலாச்சார இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் புரட்சிப் போராட்ட அனுபவங்களைப் பற்றி படிக்கும் போது அப்போது இருந்த சர்வதேச சூழ்நிலை, அந்நாட்டு பொருளாதார, அரசியல், இராணுவ, கலாச்சார நிலைமைகளை புரிந்துக் கொண்டு அதை இன்றைய சர்வதேச சூழ்நிலை, நமது நாட்டுப் பொருளாதார, அரசியல், கலாச்சார சிறப்பியல்புகளுடன் ஒப்பீட்டு வகையில் படித்துப் புரிந்துக் கொள்ள வேண்டும். மாபெரும் சீனப் புரட்சியைப் பற்றி படிக்கும் போது மெய்மறந்து பலர் அதை இந்நாட்டுக்குள்ள இயல்புகளை புரிந்துக் கொள்ளாமல் அப்படியே பெயர்த்து செயல்பட விரும்புகின்றனர். இதனால் சுய முயற்சியும், நமது நாட்டுப் புரட்சி போராட்டத்தை நடத்துவதற்கான சுயதெளிவும் இன்றி குழப்பத்தில் ஆழ்கின்றனர்.
சுய அறிவாற்றலும், சுய செயலாற்றும் திறனும் இழந்து ஒட்டுக்கால் வைக்கும் நிலை ஏற்படுகிறது. இது மிகவும் தவறானதாகும். மார்க்சியத்தை யாந்திரீகவாதமாக்கும் போக்காகும். இந்த அப்பட்டமான காப்பியடித்தல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் ஆரம்பத்திலிருந்து வரும் ஒரு வியாதியாகும். இதனால் நமது கட்சி அடைந்தத் தோல்விகளை மனதில் கொண்டு ஒவ்வொரு தோழரும் இரு நாட்டுப் புரட்சிப் போராட்டக் காலங்களையும், அரசியல், பொருளாதார நிலைமைகளையும் ஒப்பீட்டு வகையில் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து செயல்பட வேண்டும்.
மேலும் பல தோழர்கள் சீன வரலாற்றைப் படிப்பதில் ஆர்வமாய் இருக்கின்றனர். அதே வேளையில் இந்திய வரலாற்றை ஆழமாக படிப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த மாதிரி போக்கு படிப்பாளிகளிடையே ஒரு நாகரீகமாகி வருகிறது. இவர்கள் ஸ்ரீகாகுளத்தை புரிந்துக் கொள்ள முயற்சிப்பதில்லை. சீனாவை புரிந்துக் கொள்ளவே முயற்சிக்கின்றனர்.. சீனப் புரட்சியை வழிநடத்துவதில் அவர்கள் வெற்றி கண்டது எங்ஙனம். அந்நாட்டைப் பற்றி வரலாற்று ரீதியான வர்க்க போராட்ட படிப்பறிவைக் கொண்டும், சீனப் பொருளாதார அரசு நிலைமைகளை பகுத்தாய்வதில் இருந்தும் புரட்சி பற்றிய இலக்கையும் அதற்கான திட்டங்களையும் தீர்மானிக்கின்றனர். தெளிவான வரலாற்று அறிவும், சமுதாயத்தைப் பற்றிய பகுப்பாய்வும் இல்லையேல் புரட்சியின் போக்குகள் தடுமாறும் என்பதை உணர்ந்து தோழர்கள் இந்த விடயம் பற்றி படிப்பதில் கவனம் செலுத்த வேண்டுகிறோம்.
மேலோட்டமாக படித்து மேலோட்டமாக விளக்குவதையும் எதிர்த்து
படிப்பதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று மார்க்சிய, லெனினிய, மாசேதுங் சித்தாந்தங்களை படிப்பது, மற்றொன்று இன்றைய சர்வதேச, தேசிய நிலைமைகளைப் பற்றி படிப்பது. முதலாவது வரலாற்றை மாற்றுவதற்கான திறவுகோல்; இரண்டாவது மாற்றப்பட வேண்டிய இன்றைய உலகைப் பற்றி. இவற்றை நாம் முறையாகவும், ஆழமாகவும் படிக்க வேண்டும். மார்க்சியத்தை படிப்பதிலும் ஒரு முறையோடு படிப்பது தெளிவிற்கு வழி வகுக்கும். மார்க்சியத் தத்துவம் சம்பந்தமான புத்தகங்கள், மார்க்சியப் பொருளாதாரம் சம்பந்தமான புத்தகங்கள், மார்க்சிய அரசியல் சம்பந்தமான புத்தகங்கள், இந்த முறையின்றியும் அடிப்படையான புத்தகங்களை படிக்காமல் மேலோட்டமாக மார்க்சியத்தை விளக்குவதும் தவறான வழிக்கு கொண்டு சென்று விடும்.
படிக்க:
♦ வரட்டுவாதம் குறித்து மா.லெ பார்வை!
இதற்கான முறையான வகுப்புகளோ, கலந்துரையாடல்களோ நடத்த தோழர்கள் முயற்சிக்க வேண்டும். அப்புத்தகங்களில் இருந்து பெற்ற அறிவை எளிமையாக்கி மக்களுக்கு கொடுக்க வேண்டும். படித்த புத்தகம் தான் மறுபடியும் படிக்க வேண்டியதில்லை என்று கருதாது தோழர்கள் மீண்டும் அவற்றைப் படிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரச்சினைகளை மனதில் நிலைநிறுத்தி படித்தல் மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளும் எளிய முறையாகும்.
அதேபோல் இன்றைய நிலைமைகளை படிப்பதும் அவசியம். புற நிலைமைகளைப் பருண்மையாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு துறையையும் அரசியல், இராணுவம், பொருளாதாரம், கலாச்சாரம் – முறையாகப் படிக்கத் துவங்க வேண்டும். படிப்பின் முக்கியத்து வத்தை கடந்த காலங்களில் நாம் மிகவும் புறக்கணித்துள்ளோம். அதனால் நாம் மேலோட்டமான முடிவுகளை எடுத்து தோல்விகளை சந்தித்து அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம்.
எனவே தோழர்கள் நமது நாட்டு, குறிப்பாக தமிழக பண்டைய வரலாற்றையும், காலனிய காலத்து வரலாற்றையும், 1947 க்கு பிந்தைய வரலாற்றையும், முறையாகவும், ஆழமாகவும் படிக்கத் துவங்க வேண்டும். ஒரு விடயத்தை மேலோட்டமாக படிப்பதன் மூலம் அவற்றை விளக்க முடியாமல் போகிறது. செயலுக்கான சிந்தனையோடு ஆழமாக அவற்றைப் படிக்க வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக மார்க்சிய வார்த்தைகளை உச்சரிப்பதற்காகவோ மேதாவிலாசத்திற்காகவோ படிப்பதன் மூலம் விடயங்களை புரிந்துக் கொள்ள முடியாது. இந்தியப் புரட்சியின் தேவைகளை ஒட்டி முறையாக ஆழமாக படிக்க வேண்டும்.
(தொடரும்…)
புதிய ஜனநாயகம் தினசரி







