
இந்துராஷ்ட்டிரம் அமைக்க வேண்டும் என்ற வெறியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக, கல்வியை காவிமயமாக்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வேலையில் பாசிச பாஜக இப்பொழுது ஒரு பாய்ச்சலை காட்டி இருக்கிறது.
கடந்த ஜூலை மாதத்தில் பாசிச பாஜக அரசு “சேதுபந்த வித்வான் யோஜனா” என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வழக்கமான பள்ளிகளில் படிக்காத, வழக்கமான கல்லூரிகளில் படித்து பட்டம் எதுவும் பெறாதவர்கள் கூட குருகுலங்களில் ஐந்து ஆண்டு குருகுலக் கல்வி பெற்று இருந்தால் அந்த மாணவர்கள் ஐஐடி- ல் சேர்ந்து படிக்கலாம் என்று இந்தத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி சேர்ந்து முதுகலை (PG) படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.40,000 சம்பளமும் அவர்கள் படிப்பிற்கான செலவுக்காக ஆண்டுக்கு ரூ.1,00,000 மும் மத்திய அரசு கொடுக்கும் என்றும் மேலும் குருகுல கல்வி படித்த மாணவர்கள்
ஆராய்ச்சி படிப்பில் ( Phd) சேர்ந்து படிக்கும் பொழுது மாதம் ரூ.60,000 சம்பளமும் அவர்களின் ஆராய்ச்சி படிப்பு செலவுக்காக ஆண்டுக்கு ரூ 2,00,000 மும் மத்திய அரசு கொடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி அறிவித்துள்ளதன் மூலம், காவி சித்தாந்தத்தில் புடம் போடப்பட்டவர்கள் அதாவது காவி மதவெறி சிந்தனை உடையவர்கள் இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் நாட்டு மக்களை நான்கு வர்ணங்களாகவும் 4000 சாதிகளாகவும் பிரித்து வைத்து சுரண்டும் இந்துராஸ்டிரத்தை அமைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஐஐடியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டுள்ளது பாசிச பாஜக அரசு.
இப்படி சேரும் மாணவர்களுக்கு நவீன அறிவியல், சமூக அறிவியல் போன்ற வேறு எந்தவித அறிவோ திறமையோ தேவையில்லை; அவர்கள் ஐந்து ஆண்டுகள் குருகுல கல்வி பெற்று இருந்தால் மட்டும் போதும் என்று பாஜக அரசின் “சேதுபந்த வித்வான் யோஜனா” திட்டம் கூறுகிறது.
இந்திய உயர் கல்வி நிறுவனமான ஐஐடி ல் இளங்கலை (UG) படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் தங்களது பள்ளிக் கல்வியில் மிகமிகச் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். மேலும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு என்று நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பல லட்சக்கணக்கான மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும்.
2024 ஆம் ஆண்டில் சுமார் 14 லட்சம் பேர் ஜேஇஇ (JEE) நுழைவுத் தேர்வு எழுதியுள்ளனர். இதில் சுமார் 48 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஐஐடி இளங்கலை படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பதை காணும் எவரும் இது எவ்வளவு கடினமான நுழைவுத்தேர்வு என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அப்படி புரிந்து கொள்ள முடியாதவர்கள் “கமலி ஃப்ரம் நடுக்காவேரி” என்ற தமிழ் திரைப்படத்தை பார்த்ததன் மூலம் ஓரளவு இதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். அந்த திரைப்படத்தில் இந்த நுழைவுத் தேர்வை குறித்தும் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு நுண்ணறிவு மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்தும் சிறப்பாக காட்டியிருப்பார்கள்.
இப்படிப்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் ஐஐடியில் குருகுல கல்வியில் பயின்ற மாணவர்கள் சமஸ்கிருதம், ஆயுர்வேதம், தத்துவம், கணிதம் அல்லது பாரம்பரிய கலைகள் ஆகியவற்றை படித்திருந்தால் போதுமானது என்று இந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் கூட முறையான தேர்வு – தேர்ச்சி என்பதெல்லாம் ஒரு வெங்காயமும் இருக்கப்போவதில்லை. ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிஸ்டுகளால் விரும்பப்படும் எவரையும் தேர்ச்சி அடைந்ததாக கூறி ஐஐடிக்குள் அனுப்புவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. இன்னும் தெளிவாக கூறுவதானால் அப்படி அனுப்புவதற்கான ஏற்பாடாக தான் இந்தத் திட்டமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
படிக்க:
♦ டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி!
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தத்துவம் மற்றும் அறிவாற்றல் அறிவியல் (அன்விக்ஷிகி வித்யா); கணிதம்; இயற்பியல், வானியல் (கணித-பூத்-ஜோதிஷ் வித்யா); ஆயுர்வேதம் மற்றும் சுகாதார அறிவியல் (பைஷஜ்ய வித்யா) ; சமஸ்கிருத இலக்கணம்; இசை, அரசியல் கோட்பாடு ஆகிய துறைகளில் ஆராய்ச்சி படிப்புகள் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட படிப்புகள் அனைத்தும் சனாதனத்தை இந்திய மண்ணில் செழித்து வளர வைக்கும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது உறுதி. இதன் மூலம் அரசின் பணத்திலிருந்து மாதம் ரூ.40,000 முதல் 65,000 வரை சம்பளம் கொடுத்து சனாதன தர்மத்தை – மனுதர்மத்தை கற்றுக் கொடுத்து வெளிப்பார்வைக்கு சாதுக்களாக, கல்வியாளர்களாக மக்கள் முன் தோன்றும் வகையில் ஐஐடியில் பட்டம் பெற்றவர்கள் என்ற பெயரில் பார்ப்பன மதவெறி பாசிஸ்டுகளை உருவாக்கப் போகிறார்கள்.
2000 ஆவது ஆண்டில் பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது வாரணாசியில் உள்ள “பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்” போன்ற பல்வேறு இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் சோதிடத்தை ஒரு பட்டப்படிப்பாக சேர்த்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க துவங்கினார்கள்.
அப்பொழுதே புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இதற்கு எதிராக போராடி முறியடிக்காததன் விளைவாக இப்பொழுது பாசிச பாஜக அரசு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலேயே தங்களது காவி கல்வியை புகுத்த துவங்கி உள்ளது.
இப்பொழுதேனும் புரட்சிகர முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு இதனை முறியடிக்காவிட்டால், காவி பாசிஸ்டுகள் மொத்த இந்திய கல்வித் துறையே காவிமயமாக்குவதற்கு மிகுந்த உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் வேலைகளைக் கொண்டு செல்வார்கள். பாசிசத்தை முறியடிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இதற்கு எதிராக மக்களை திரட்டும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
—குமரன்







பாசிச கும்பல் கல்வியை காவிமயமாக மாற்றுவதில் தீவிரம் காட்டுகிறது.
அறிவியலை தனக்கு தகுந்தவாறு சனாதன கருத்துகளை ஊக்குவிக்கிறது.
ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுத லட்சக்கணக்கில் செலவு செய்து கல்வி நிலையத்தை அடையும் சூழலில் எவ்வித தடையும் இல்லாமால் பார்பனன் என்ற தகுதியை வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் ஆக்கிரமிக்க போகிறார்கள்.
இதனை தீவிரமாக தடுத்தே ஆக வேண்டும்.