கல்வியை கார்ப்பரேட்-காவிமயமாக்கும், மாநில உரிமைகளை பறிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு விதிகளைத் திரும்ப பெறு!
பாசிச மோடி அரசு தேசிய கல்விக் கொள்கை 2020 யை நாடாளுமன்றத்தில் வைத்து நிறைவேற்றாமலே, பல்வேறு மாநில அரசுகள், கல்வியாளர்கள், ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து அமுல்படுத்தி வருகின்றது. அதனை அமுல்படுத்தாத மாநிலங்களுக்குக் கல்வி நிதியை தரமறுப்பது, ஆளுநர்கள் மூலம் தொடர்ந்து மாநில அரசுக்கு இடையூறு ஏற்ப்படுத்துவது என்ற முறையில் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக தற்போது பல்கலைகழக மானியக் குழு வெளியிட்டுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான வரைவு விதிகள் 2025” வெளியிட்டுள்ளது. இந்த வரைவு விதிகள் பற்றி கருத்து தெரிவிக்க பிப்ரவரி 5ந்தேதிக்குள் கருத்து தெரிவிக்க கூறியுள்ளது.
மாநில பல்கலைக்கழகங்கள் என்பவை அந்தந்த மாநில அரசுகளின் சட்டத்தால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், மாநில அரசுகளின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஜனநாயக விரோதமாக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கான புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது மோடி அரசு.
அடிப்படையிலேயே ஏற்க முடியாத அந்த வரைவு விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கும் விதமாகவும், கல்வி கட்டமைப்பையும் கார்ப்பரேட்-காவிமயமாக்கும் விதமாகவும் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
- துணை வேந்தராகத் தேர்வு செய்யப்படும் நபர் பேராசிரியராகத்தான் பணி செய்திருக்க வேண்டும் என்பதல்ல. ஆராய்ச்சி அல்லது அகாடமி கல்வி நிர்வாக அமைப்புகளில் பதவியில் இருப்பவர்களாகவும் இருக்கலாம், தொழில், பொது நிர்வாகம், பொதுக் கொள்கை அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அதாவது தொழில் அதிபராகவும் இருக்கலாம், அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்று தகுதி விரிவாக்கம் செய்யப்படுகின்றது.
ஏற்கனவே ஒன்றிய இணை செயலாளர்களாக கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளை நியமித்து அரசு கட்டமைப்பை கார்ப்பரேட்மயமாக்கியது போலவே கல்வி நிலையங்களை இந்த புதிய விதிகள் கார்ப்பரேட்மயமாக்கும். அதே போல், கல்வித் துறைக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத நபர்களை நியமிக்கலாம் என்று விதியை திருத்துவதன் மூலம் அர்ஜுன் சம்பத் போன்ற முட்டாள் சங்கிகள் கூட துணை வேந்தராக நியமிக்கப்படலாம்
- துணை வேந்தருக்கானத் தேடுதல் குழுவில் இது வரை பல்கலைக் கழக செனட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பிரதிநிதியும், ஆட்சிக் குழு எனப்படும் சிண்டிகேட்டிலிருந்து தேர்வு செய்யப்படும் பிரதிநிதி ஒருவரும், மேலும் ஆளுநர் சார்பாக ஒரு பிரதிநிதியும் இருந்தனர். ஆனால் தற்போது செனட் மற்றும் சிண்டிகேட்டில் ஏதேனும் ஒன்றிலிருந்து மட்டும் ஒரு பிரதிநிதி தேர்வு செய்ய்யப்படலாம் என்று மாற்றப்பட உள்ளது. கூடுதலாக யு.ஜி.சியின் பிரதிநிதி ஒருவர் தேடுதல் குழுவில் இடம்பெறுவார் என்றும் உள்ளது. இதை தமிழ் நாடு அரசும் பல கல்வியாளர்களும் எதிர்த்து வரும் விஷயமாகும். தமிழ் நாட்டில் தகுதி வாய்ந்த ஒரு கல்வியாளரை தீர்மானிப்பதில் யு.ஜி.சி பிரதிநிதியும் இருப்பார், இது தவிர ஆளுநர் பிரதிநிதி ஒருவரும் இருப்பார், எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுநர் யார் துணைவேந்தராவது என்பதைத் தீர்மானிப்பார் என்பது துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கோ, ஆசிரியர்களுகோ எந்த வகையிலும் பங்காற்ற அதிகாரம் இல்லை என்றாக்குகின்றது
- பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளைப் பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்களின் பட்டம் வழங்கும் அதிகாரமும் அவற்றின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. ஏற்கனவே நீட், மருத்துவ கவுன்சில் விதிகள் மூலம் மாநில அரசு மருத்துவ கல்லூரிகளை அபகரித்து போலவே அந்தந்த மாநில மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கி வரும் மாநில பல்கலைக்கழகங்களை இந்த புதிய விதிகள் அபகரிக்க பார்க்கிறது ஒன்றிய மோடி அரசு.
- ஒப்பந்த பேராசிரியர் நியமனங்களை அதிகரிக்கும் வகையிலும் விதிகளை திருத்தம் செய்ய முன்வைத்துள்ளதன் மூலம் பேராசிரியர்களின் பணி பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
மொத்தத்தில், ஒன்றிய மோடி அரசின் UGC முன்வைத்துள்ள இந்த புதிய வரைவு விதிகள் முழுக்க இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலனுக்கு எதிரானது. இந்த வரைவு விதிகள் ஒட்டுமொத்த இந்திய கல்விப் பரப்பிற்கும் சாதாரண உழைக்கும் மக்கள் பின்புலத்தில் இருந்து மாணவர்கள் உயர்கல்வி கனவை பறிக்கக்கூடியது. . ஏற்கனவே ஆளுநர் ஆர்.என். ரவியின் அடாவடித்தனத்தால் தமிழ்நாட்டில் ஆறு மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமிக்கப்படாமல் தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி சிதைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்க ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு இருக்கக் கூடாது என பல மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளது.
எனவே UGC யின் இந்த வரைவு விதிகளை எதிர்த்து பெரும்பான்மை மக்களின் கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வரவும் மாணவர்களின் கல்வியை பறிக்கும் தேசிய கல்விக்கொள்கை 2020 யை தூக்கியெறியவும் போராட்டங்களைக் கட்டியமைப்போம் என எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அறைகூவி அழைக்கின்றது.
மாணவர்களே, பேராசிரியர்களே,
- கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப் போராடுவோம்!
- கல்வியை கார்ப்பரேட்-காவிமயமாக்கும் பாசிச மோடி அரசின் சதித்தனத்தை முறியடிப்போம்!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு – புதுவை