
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கை அடைந்துள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கலைஞர் ஆட்சியின் சாதனையை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எட்டியுள்ளார். இப்படி எல்லாம் இன்று (வியாழன்) வெளிவந்துள்ள தினகரன் நாளிதழின் முதல் பக்க செய்தி விவரிக்கிறது.
இதற்குக் காரணமாக கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டை விட இரண்டு லட்சம் கோடி ரூபாய் அதிகம் என்ற விவரமும் விளக்கப்பட்டுள்ளது.
அனைவரும் கொண்டாட கூடியதா இவ்வளர்ச்சி?
இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் மக்களும் மகிழ்ச்சியாக தானே இருக்க வேண்டும். பீகார் உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடும்போது வேண்டுமானால் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
ஆனால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது, தமிழ்நாட்டின் ஜிடிபி யின் அளவுடன் ஒப்பிடும்போது, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் இதற்கு ஏற்பு உயரவில்லை. சாமானிய உழைக்கும் மக்கள் இதில் மகிழ்வதற்கு எதுவும் இல்லை.
இந்தியாவின் டெட்ராய்ட் என்று தமிழகத்தை நாம் கொண்டாடுவது இருக்கட்டும், சென்னை சுற்றியுள்ள மோட்டார் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் கள எதார்த்தம் எப்படி உள்ளது என்பதை பரிசீலிப்போம் .
ஹூண்டாயில், ஹூண்டாய்க்கு மெட்டீரியல் சப்ளை செய்யும் முருகப்பா செட்டியாரின் TI போன்ற துணை நிறுவனங்களில் டர்ன்ஓவர் அதிகரிக்கிறது என்றால், நிறுவனத்தின் ஆண்டு லாபம் அதிகரிக்கிறது என்றால், அதைக் கண்டு அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மகிழ எதுவும் இல்லை.
ஆண்டு இறுதியில் அதிகரித்துள்ள உற்பத்தியின், லாபத்தின் அடிப்படையில் போனஸ் கிடைக்கும் என்று அதில் பணிபுரியும் அனைவரும் தம் நிறுவனத்தின் வளர்ச்சியை கொண்டாட தானே வேண்டும். எதார்த்தத்தில் அப்படி யாரும் கொண்டாடுவதில்லை, அதிகரிக்கும் உற்பத்தியின், பெருகும் லாபத்தின் பலன் எதுவும் தொழிலாளர்களுக்கு போய் சேர்வதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
உற்பத்தியை பெருக்குபவர்களின் அவலம்!
ஒரு ஆலையில் ஊழியர்கள் பெரும்பாலும் நிர்வாக தரப்பாகவே இருக்கிறார்கள். இவர்கள் நிர்வாகம் தருவதை வாங்கிக் கொண்டு, முணுமுணுக்காமல் தொண்டூழியம் செய்து வருபவர்களாக இருக்கின்றனர்.
நிறுவனத்திற்குள், உற்பத்தி பிரிவில் உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களில் 10 முதல் 20% பேர் மட்டுமே நிரந்தரமாக்கப்பட்டு, சட்டப்படியான சலுகைகளைப் பெற்று, நிர்வாகத்தின் செல்லப் பிள்ளைகளாகவும் மாற்றப்படுகிறார்கள். இவர்களும் நிர்வாகத்தை எதிர்த்து உரிமைகளுக்காக குரல் அல்ல; சிற்றொலி எழுப்பக்கூட கூட தயாராக இல்லை. விதிவிலக்காகத்தான் நிரந்தர தொழிலாளர்கள் போராடுவதை சாம்சங் போன்ற நிறுவனங்களில் நாம் பார்த்துள்ளோம்.
பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களில் நிர்வாகத்துடன் இறங்கிப் போய்விட்ட நிரந்தர தொழிலாளர்களை விலக்கினால் எஞ்சும் தொழிலாளர்களில், அதாவது எண்பது சதவீதம் தொழிலாளர்களில் கணிசமானவர் காண்ட்ராக்ட் கூலிகளாகவும், ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் பயிற்சி பெறுபவர்களாகவும் மட்டுமே உள்ளனர்.
மொத்த உற்பத்தியில் பெரும் பங்கை வகிக்கக்கூடிய இந்த எண்பது சதவீதம் பேருக்கும் நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி குறித்து துளிகூட அக்கறை இருப்பதில்லை. அதிகரிக்கும் நிறுவனத்தின் விற்று முதலில் (Turnover) இருந்து ஒரு பைசா கூட போனஸ் ஆகவோ ஊக்கத்தொகையாகவோ இவர்களுக்கு தரப்படுவதில்லை. இவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை எதற்காக கொண்டாட வேண்டும்?
கார்ப்பரேட் நிறுவனத்தின் உற்பத்திக்கு முதுகெலும்பாக இருந்து உழைத்தவர்கள் அந்நிறுவனத்தின் விற்பனையின், லாபத்தின் வளர்ச்சியை அந்நியமானதாக பார்த்து, உணர்ச்சியின்றி கடந்து செல்பவர்களைப் போலத்தான் மாநிலத்தின் ஜிடிபி வளர்ச்சியை கணிசமானோர் பார்த்து உணர்ச்சியற்று நிற்கின்றனர்.
உற்பத்தித் துறையில் மட்டுமல்ல; சேவைத்துறையில் பணிபுரிபவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது.
சென்னை நகரம் மேலும் மேலும் விரிவடைகிறது; பொலிவுடன் மினுமினுக்கிறது. மாநகராட்சிக்கு வரி வருவாயும் அதிகரித்தே செல்கிறது. ஆனால், தலைநகரை தூய்மையாக பராமரிக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் மாநகராட்சியால் ஒதுக்கப்பட்டவர்களாக, சலனமே இல்லாமல் ஒளிரும் நகரை வெறுமையாக பார்த்து கடந்து செல்வது தான் நடக்கிறது.
படிக்க:
♦ தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொண்டுவரும் முதலீடுகள் தொழிலாளர் உரிமைகளை மதிக்குமா?
உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் போது அவர்களின் தேர்வில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. அந்த அளவிற்கு தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டதாகவும் அமைந்துள்ளது. ஒரு ஆலைக்குத் தேவையான அனைத்து தரத்திலான மேன்பவர் சப்ளைக்கும் தயார் நிலையில் தமிழகம் உள்ளது. கார்ப்பரேட்டுகள் விரும்பும் அரசாங்கமாகத்தான் திமுக அரசும் செயல்பட்டு வருகிறது.
கார்ப்பரேட் நலனா? – மக்கள் நலனா?
திமுக அரசுக்கு எதிராக அங்கங்கே போராட்டங்கள் வெடிக்கின்றன; எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தும் போராட்டங்களை நாம் ஒதுக்கி விடலாம். ஆனால், பரந்தூர் விமான நிலைய திட்டம் போன்று கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களுக்கு எதிராக பாதிக்கப்படும் மக்களின் தரப்பில் இருந்து கண்டன குரல்களும் எழத்தான் செய்கின்றன.
தமிழகத்தில் திமுகவின் ஆட்சியை, மு க ஸ்டாலின் சாதனைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது; குறையே சொல்லக்கூடாது என்றெல்லாம் சிலர் வாதிடுகின்றனர்.
“ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனைகள் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் டெட்ராய்டாக தமிழகம் விளங்கி வருகிறது” இது போன்று பல வாதங்களை கழக உடன்பிறப்புக்கள் அடுக்கக்கூடும். இதை நாமும் மறுப்பதற்கு இல்லை.
நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கு பொசிகிறதா?
தேசிய சராசரியை விட இரண்டு மடங்காக முன்னேறியுள்ளது தமிழகத்தின் வளர்ச்சி விகிதம். 2 இலக்க GDP சாதனை உள்ளிட்டு தமிழகத்தில் இவ்வளவு சாதனைகள் நிகழ்த்திய பிறகும், இங்கு அம்மா உணவகங்களில் மக்கள் சாப்பிடுகிறார்களே அது ஏன்? ரேஷன் அரிசியை சிலர் கிலோவுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து மொத்தமாக வாங்கி செல்கிறார்களே அது ஏன்? ரத்தக் கொதிப்பு சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு கால் கடுக்க அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருந்துகளை வாங்க வரிசையில் காத்து கிடக்கிறார்களே அது ஏன்?
படிக்க: பரந்தூர் விமான நிலையம்: மக்கள் வரிப்பணத்தில் கார்ப்பரேட் கும்பல் கொழுக்க!
இது போன்ற கேள்விகளுக்கு விமர்சனத்தை கண்டு ஆத்திரப்படும் திமுககாரர்களிடம், திமுகவின் அனுதாபிகள் உள்ளிட்ட அனைவரிடமும் பதில் உள்ளதா? பதில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
அதாவது மக்களின் வாழ்க்கைத் தரம், அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி, உத்தரவாதமான வேலை போன்றவை நாட்டின் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியிலும் கூட கைகூடவில்லை என்பதுதான் பதில். உழைப்பில் ஈடுபட்டு கூலி பெறுவதில் ஆணும் பெண்ணும் சமமில்லை; அதேபோல், தமிழகத் தொழிலாளியும் வட மாநில தொழிலாளியும் கூட சமமில்லை. சம வேலைக்கு சம ஊதியமும் நடைமுறையில் இல்லை.
தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒதுக்கி விட்டு சென்னையை மட்டும் எடுத்துக் கொள்வோம். அங்கு தற்போது ஆறு நாட்களாக – சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில், துப்புரவு தொழிலாளர்களின் தொடர் போராட்டம் நடந்து கொண்டுள்ளது.
நியாயம் கேட்கும் துப்புரவு தொழிலாளர்கள்!
ஐந்து வருடங்களாக, பத்து வருடங்களாக சென்னை மாநகரத்தை தூய்மைப்படுத்தும், அழகுப்படுத்தும், சிங்காரப்படுத்தும் பணியை செய்து வரும் துப்புரவு தொழிலாளர்களில் பலரும் இன்று போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.
பணி நிரந்தரம் கேட்டும் கூலி உயர்வு கேட்டும் பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் நடக்கும் இவர்களின் போராட்டம் பல ஆண்டுகளைக் கடந்தும், பல அரசாங்கங்கள் மாறியும் கூட முடிவதாக இல்லை. இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட முடியாத அளவிற்கு ஆனது அல்ல அடிப்படை உரிமைகளை கேட்டு தான் களத்தில் நிற்கின்றனர்.
17 லட்சம் கோடி ரூபாயை மாநில ஜிடிபி யாகக் கொண்டுள்ள தமிழகத்தில், துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, நியாயமான கூலியை தர ஏன் அரசால் முடியவில்லை? நம் ஊரை தூய்மையாக வைத்துக் கொள்ள, தனது உடல் நலத்தை பற்றி கூட கவலைப்படாமல் கழிவுகளை சுமக்கும் இவர்களுக்கு, தமிழக அரசால் ஏன் ஆதரவு தந்து துயர் துடைக்க முடியவில்லை?
கார்ப்பரேட்டுகள் குப்பை அள்ளுவதை கூட விட்டு வைக்காமல், அனைத்தையும் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். குப்பை அள்ளும் ஒப்பந்தத்தை எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தினக்கூலிகளாக அனுபவம் வாய்ந்த துப்புரவு பணியாளர்களை வேலைக்கு எடுத்து கசக்கிப் பிழிகின்றனர். மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை கார்ப்பரேட்டுகளிடம் காண்ட்ராக்டர்களிடம் தள்ளிவிட்டதே இந்த அரசுதான். தன் வீட்டுக்கு குப்பையை அள்ளி தனது தெருவை சுத்தப்படுத்தும் இவர்களுக்கு ஆதரவாக சென்னை நகரவாசிகளின் கூட களத்தில் இறங்குவதில்லை.
ஏனென்றால், உழைக்கும் மக்களிலேயே மிகவும் கடை நிலையில், தீண்டத்தகாதவர்களாகவும், சாதி பார்த்து ஒதுக்கப் படுபவர்களாகவும்தான் துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இன்று துப்புரவு பணிக்கு வருபவர்களில் சாதி வித்தியாசம் இல்லை என்பதை வசதியாக மறந்தும் விடுகின்றனர். எனவேதான் துப்புரவு தொழிலாளர்களின் போராட்டத்தை தம்மில் ஒருவர் நடத்தும் போராட்டமாக பார்த்து ஆதரவு தருவதில்லை.
கரைந்து வரும் வர்க்க உணர்வும், வர்க்க ஒற்றுமையும்!
ஒரு துறையில், ஒரு நிறுவனத்தில் தொழிலாளிகள் போராடினாலேயே அதே துறையில் உள்ள பிற நிறுவனங்களின் தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரித்து களத்திற்கு வருவதில்லை. நிலைமை இப்படி இருக்கும் பொழுது துப்புரவுத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக பிற பிரிவு தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வருவது அவ்வளவு எளிதாக நடக்காது தான்.
இன்றைய எதார்த்தத்தையும் மீறி ஆதரவு குரல் எழுப்ப வைக்க வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கத்திற்கு – தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும்.
ஒடுக்கப்படும் அனைவரிடமும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதையும், நம் அனைவரையுமே அச்சுறுத்தும் தனியார்மயம், தாராளமயம், உலக மயம், கார்ப்பரேட்மயம் உள்ளிட்ட இத்தகைய மயங்களை எதிர்த்து முறியடிக்க வேண்டியுள்ளது என்பதையும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் உணர்த்த வேண்டும். நீதியை பெறுவதற்கு ஒன்றுபட்ட போராட்டத்தை இணைந்து நடத்த வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் நமது உறுப்பினர்களுக்கு கற்பிக்க வேண்டி உள்ளது. அல்லது தொழிற்சங்க தலைமைகளுக்கு உழைக்கும் மக்களான நாம் கற்பிக்க வேண்டி உள்ளது.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அந்த மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரின் வளர்ச்சியாகவும் அமைய ஆட்சியாளர்கள் உழைக்க வேண்டும். ஆனால் எதார்த்தத்தில் நாம் காணும் அரசுகள் கார்ப்பரேட் நல அரசாக இருக்கும் நிலையில், அதிகார வர்க்கம் கார்ப்பரேட்டுகளின் சேவகர்களாக பணிவிடை செய்து வரும் நிலையில், நாம் எதிர்பார்க்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி உடனடி சாத்தியமானதாக இல்லை.
ஆளும் வர்க்கமான கார்ப்பரேட்டுகள், அதிகார வர்க்கத்தினர், ஆட்சியாளர்கள் உள்ளிட்ட முக்கூட்டு இயல்பானதாகவே உழைக்கும் மக்களுக்கு எதிரானதாக அமைகிறது. எனவே அடிப்படை உரிமைகளை பெற கூட நமக்கும் ஒரு கூட்டணி தேவைப்படுகிறது. தொழிற்பிரிவுகளைக் கடந்து உழைக்கும் வர்க்கமாக ஐக்கியப் படுகின்ற கூட்டணியின் தொடர் போராட்டத்தின் மூலமாகவே அரசாங்கங்களின், அதிகார வர்க்கங்களின், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கையை முறுக்கிதான் படிப்படியாக உரிமைகளை பெறவேண்டி உள்ளது. ஆளும் திமுக அரசின்GDP பற்றிய புள்ளி விவர அறிவிப்புகளை கண்டு மயங்காமல், களத்தில் நிற்கும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவு தருவோம். உலகத்தில் கால் பதித்துள்ள கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்து உழைக்கும் மக்களின் வளர்ச்சியையும் உத்தரவாதப்படுத்த திமுக அரசை நிர்பந்தித்து களமாடுவோம்.
- இளமாறன்







திமுகவின் சேவை கார்ப்பரேட்டுகளுக்கு தேவை என்ற போக்கு தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வருகிறது முதலாளி வளர்ச்சியால் மக்களுக்கோ தொழிலாளர்களுக்கும் எந்தவித பலனும் இல்லை என்பதை தான் இந்த கட்டுரை எனக்குஉணர்த்துகிறது. சிங்காரச் சென்னையாக மாற்றக்கூடிய தொழிலாளர்களை குறைந்தபட்சம் சம்பளம் கொடுத்து பணி நிரந்தரம் செய்வதற்கு துப்பில்லாத அரசாக திமுக உள்ளது.அதிமுக வும் விதிவிலக்கு அல்ல.