தமிழகத்தில் பிரபலமான நபர் என்று தனக்குத்தானே கருதிக் கொள்ளும் திருவாளர் பழ..கருப்பையா சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் சிபிஎம் எம்பியான சு.வெங்கடேசனுக்கு மறுப்பு தெரிவிக்கின்றேன் என்ற போர்வையில், சீனாவின் மக்கள் தலைவரான, பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரான தோழர் மாவோ மீது சில அவதூறுகளை அள்ளி விட்டுள்ளார்.
தோழர் மாவோ வாழ்ந்த காலத்தில், “பாலியல் ரீதியாக சபல புத்தி கொண்டவரைப் போலவும், பல பெண்களுடன் உறவு கொண்டிருந்தார் என்பதைப் போலவும், அவர் முறையாக திருமணம் செய்து கொண்ட நான்கு மனைவிகளையும் ஒரே நேரத்தில் வைத்து அனுபவித்ததை போலவும்” இழிவுபடுத்திப் பேசியுள்ளார்.
தோழர் மாவோ மட்டுமின்றி கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்படுகின்ற அனைவரின் வாழ்க்கையையும் சோதிப்பதற்கு அவர்கள் அங்கம் வகிக்கும் கமிட்டி உள்ளது. அவர்களின் சரி தவறுகளை சுட்டிக்காட்டி போராடுவதற்கு சக கமிட்டி தோழர்கள் இருக்கின்றார்கள்.
அவ்வாறு அவர்கள் செய்கின்ற தவறுகளை அவர்கள் உயிருடன் இருக்கும் போது சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக இறந்த பிறகு அவர்களின் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்ற கோழைகள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றார்கள்.
அதுபோன்ற ஒரு கோழையான மாவோவின் மருத்துவர் என்று கூறிக் கொள்ளும் லி என்பவர் மாவோ மறைந்த பிறகு பல ஆண்டுகள் கழித்து அவரது வாழ்க்கையை பற்றி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டுதான் திருவாளர் பழ. கருப்பையா இவ்வாறு உளறியுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி பின் தங்கிய விவசாய நாட்டில் அந்த மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு பொருத்தமான அரசியல் மற்றும் ராணுவ பாதைகளை தேர்வு செய்தது என்பது மட்டுமின்றி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் கடைபிடிக்கின்ற ஆயுதந் தாங்கிய பேரெழுச்சி பாதைக்கு மாற்றாக நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை என்ற பாதையை முன்வைத்து புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி முடித்தது.
சீனா பொதுவுடைமைக் கட்சி பிற நாடுகளைப் போல பல்வேறு பிரிவுகளாக இல்லாமல் ஒரே கட்சியாகவே நீடித்ததும், அந்த கட்சிக்குள் வலது, இடது போக்குகள் அவ்வப்போது தலை தூக்கி அதற்கு எதிரான போராட்டத்தில் சரியான திசைவிலகல்கள் இல்லாத பாதை ஒன்றை உருவாக்கியதில் தோழர் மாவோவிற்கு முக்கிய பங்கு இருக்கின்றது.
ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் காலனியாதிக்கத்திற்கு எதிரான சோசலிச புரட்சி பாதையை, புதிய ஜனநாயகம் என்ற இடைக்கட்டத்தின் மூலமாக கடப்பதற்கு கற்றுக் கொடுத்த மாவோவை பற்றி ஏகாதிபத்திய முதலாளித்துவம் குறிப்பாக அமெரிக்க மேல்நிலை வல்லரசு தொடர்ச்சியாக பல்வேறு அவதூறுகளை செய்து வருகிறது.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக காலனிய நாடுகளில் தோழர் மாவோ முன்வைத்த கொரில்லா யுத்த முறை என்பது மக்களை திரட்டிய மக்கள் யுத்தமாக, மக்கள் செம்படையாக முன்னேறுவதை விரும்பாத ஏகாதிபத்தியங்கள் மாவோவின் வாழ்க்கையை பற்றி அவதூறுகளை பரப்புவதன் மூலம் அவரை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த திட்டமிட்டு கொண்டிருந்தது.
இதே போன்ற அவதூறுகள் தோழர்கள் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் மீதும் உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது கம்யூனிஸ்டுகளுக்கு அந்தரங்க வாழ்க்கை, அதாவது சொந்த வாழ்க்கை என்று ஒன்று தனியாக இருப்பது போலவும், அதற்கும் அவர்களது அமைப்பு வாழ்க்கைக்கும் தொடர்பு இல்லை என்பதை போலவும் சித்தரிக்கின்ற கேடுகெட்ட செயலை தொடர்ந்து ஏகாதிபத்திய முதலாளித்துவம் செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாகவே தோழர் மாவோ மீதான அவதூறுகளை புரிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக மாவோவின் உடன் பணியாற்றிய சூடே சௌ,என் லாய் போன்ற சக தோழர்கள், அவர் இருந்த போதே அவருக்கு எதிராக பல்வேறு சதிகளையும், கலகங்களையும் செய்த டெங் போன்றவர்கள், அவரது மெய்க்காப்பாளர்கள் போன்றவர்கள் வெளியிடாத ஒரு உண்மையை அவரது மருத்துவர் என்ற போர்வையில் லீ ஷி சுய் வெளியிட்டுள்ளதாக ஏகாதிபத்திய பதிப்பகங்கள் வெளியிட்டு தனது இழிவான பண்பை வெளிப்படுத்திக் கொண்டது.
அதில் ஒன்றுதான் டாக்டர் லீ ஷி சுய் எழுதிய “தி பிரைவேட் லைஃப் ஆஃப் சேர்மன் மாவோ” என்ற நூலை அவ்வப்போது மீண்டும் மீண்டும் மறு பதிப்பு செய்து வெளியிடுவதைப் போல, 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மறு பதிப்பு ஒன்றில் அவரைப் பற்றிய அவதூறுகள் வண்டி வண்டியாக குவிக்கப்பட்டுள்ளது., (யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட், அக்டோபர் 10, 1994)
படிக்க: மக்களுக்கு தொண்டு செய்க! தோழர் மாவோ.
இந்த புத்தகத்தையும் அமெரிக்காவின் கைக்கூலி எழுத்தாளரான திருவாளர் ஜொனாதன் மிர்ஸ்கி எழுதிய, தி ஸ்பெக்டேட்டர், என்ற நூலையும் தான் பழ.கருப்பையா போன்ற ‘மெத்தப்படித்த மேதாவிகள்’ ஆதாரமாக காட்டுகிறார்கள்.
சமகாலத்தில் பாபர் மசூதி இடிப்பை நாம் கண்ணெதிரே கண்டுள்ளோம். . அந்த உண்மைகளை மறைத்து வரலாறு ஒன்று ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலால் எழுதப்படுகிறது இதை 50 ஆண்டுகள் கழித்து படிக்கும் ஒருவர் இதுதான் உண்மை என்று புரிந்து கொள்வதை போன்றது தான் லீ போன்ற அமெரிக்க கைக்கூலி எழுத்தாளர்களின் எழுத்துக்களை புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும்.
90களில் சோவியத் ரஷ்யா சிதறுண்ட காலத்தில் உலகம் முழுவதும் உருவான புதிய இடது களும், இந்தியாவில் உருவான பின் நவீனத்துவ கழிசடைகளும் மார்க்சிய ஆசான்களின் மீது தொடுத்த தாக்குதலை போன்றது தான் தற்போதைய பழ. கருப்பையாவின் தாக்குதலும் ஆகும்.
திரைப்பட தயாரிப்பாளர் வாழ்க்கை முதல் பல அரசியல் கட்சிகள் மாறி பச்சோந்தியை போல கடைசியாக தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தை கண்டுள்ள பழ. கருப்பையாவுக்கு தக்க பதிலடி கொடுப்பதன் மூலமே இத்தகைய அவதூறுகளை புறம் தள்ள முடியும்..
- முகம்மது அலி.
அரசியல் பச்சோந்தி, அப்பட்டமான பிழைப்புவாதி மார்க்சிய ஆசான்கள் குறித்து கிஞ்சிற்றும் வாய் திறக்கத் தகுதியற்ற பழ. கருப்பையாவுக்கு மக்கள் அதிகாரத்தின் செருப்படிப் பதிலை வரவேற்கிறேன்!
பாராட்டுகிறேன்!! வாழ்த்துகிறேன்!!!
நன்றி தோழரே…