கடந்த 06.10.2024 அன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானபடை விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வை ஒட்டி ஊடகங்களில் விரிவான செய்திகள் வெளியிடப்பட்டு பொதுமக்களிடையே பரவலாக கொண்டு செல்லப்பட்டது. பள்ளி விடுமுறை மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் பெருவாரியான பொது மக்கள் விமான சாகச நிகழ்வை காண்பதற்கு ஆர்வமுடன் வந்திருந்தனர். இந்நிகழ்விற்கு விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 6 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தற்போது ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் இது சம்பந்தமான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வை அரசும், ஆளும் வர்க்கமும் எவ்வாறு அலட்சிய போக்குடன் நடத்தியுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
- போதிய அளவில் குடிதண்ணீர் வசதிகள் செய்து தரப்படவில்லை, வெயிலின் தாக்கத்தால் மக்கள் குடி தண்ணீருக்காக தாகத்தில் அலைவதை பார்க்கமுடிந்தது. குடிநீர் போதுமான அளவில் எங்கு கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் மெரினா கடற்கரையில் பராமரிக்கப்படும் செடிகளுக்கு வழங்கப்படும் அசுத்தமான தண்ணீரை வேறு வழியின்றி பொது மக்கள் குடிப்பதை பார்க்கமுடிந்தது. இந்த சூழலில் அரசு சார்பில் போதுமான குடிநீர் வசதிகள் செய்துதரப்பட்டது என்று கூறுவது தவறான செய்தியாகும். இவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று தெரிந்தும் போதுமான குடிதண்ணீர் வசதி செய்து தராத திமுக அரசின் அரசின் அலட்சியம் கண்டனத்திற்குரியது.
- நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் பொதுமக்களுக்கு முறையான வழிகாட்டுதல் அறிவிப்புகள் வைக்கப்படவில்லை. சென்னையின் வடக்கு, தெற்கு, மத்திய, புறநகர் பகுதிகளில் இருந்து வரும் மக்களை முறையாக பிரித்து பங்கேற்க வைப்பது, அதற்கேற்ப வெளியேறும் பாதைகள் முறையாக அமைக்கபடாததால், மக்கள் வெளியேறும் பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வெயிலில் நெடுநேரம் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக பொதுமக்களில் சிலர் மயக்கம் அடைந்தனர். கடற்கரை சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்தில் ஏற்படும் அசௌகரியம் குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ளபடாததால் தென் மற்றும் மத்திய சென்னை பகுதிகளுக்கு செல்லும் மக்கள் கடும் நெரிசலில் அவதியுறும் நிலை ஏற்பட்டது.
- போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டிய காவல்துறையினர் முறையாக பாதுகாப்பு பணிகளில் பங்கேற்காமல் சாலை ஒர நிழல்களில் நின்றுகொண்டிருந்தனர், மேலும் சில காவல்துறை அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை தங்களது குடும்பத்தினருக்காக சிறப்பு பாஸ் பெற்றுக்கொண்டு தங்களது குடும்ப உறுப்பினர்களளுடன் விருந்தினர்களுக்கான பந்தலில் அமர்ந்து செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதனால் முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட வேண்டியிருந்தது. காவல்துறை வாகன நிறுத்தங்களுக்கான முறையான திட்டமிடவில்லை, நிகழ்வு முடிந்து மக்கள் வெளியே வரும் பாதையில் கடற்கரை சாலையின் குறுக்காக வாகனங்களை நிறுத்த அனுமதித்த செயல் கடும் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியது, இது ஒரு அசம்பாவிதம் ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியது, அவ்வாறு ஏற்பட்டால் மிகப்பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். மேலும் இந்த கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்ல முடியவில்லை.
- மத்திய மாநில அரசின் போக்குவரத்து துறைகளான பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் போன்றவை போதுமான ஏற்பாடுகளை செய்யவில்லை. அரசின் சார்பில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவில்லை, இவ்வளவு மக்களை கையாள்வதற்கான போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடும் வெயிலில் ஏறக்குறைய 5 கிலோமீட்டர் தூரம் வெயிலில் நடந்து செல்ல வேண்டிய இன்னலை மக்கள் அனுபவித்தனர். சென்னை நகரத்தின் ஏறக்குறைய 10 சதவீத மக்கள் கூடுகிறார்கள் எனத்தெரிந்தும் பிற வழித்தடத்தில் செயல்படுகின்ற பேருந்துகளை இந்நிகழ்விற்காக திருப்பிவிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கி இருக்க வேண்டும் என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் போக்குவரத்து துறை செயல்பட்டது. இது போதாதென்று ஓலா உபேர் போன்ற தனியார் போக்குவரத்துக்கு செயலிகளும் முற்றிலும் செயல் இழந்தன, ஒரு அவசர காலத்தில் தனியார் போக்குவரத்து சேவை பயன்தராது என்பது நேரடி உதாரணமாக அமைந்தது.
- இவ்வளவு மக்கள் ஒரே இடத்தில கூடுவதால் அதற்கு ஏற்ப கூடுதல் அலைவரிசைகளுக்காக செல்போன் நிறுவனங்கள் தற்காலிக டவர்களை அமைக்காததால் சிக்னல் மற்றும் இணைய சேவை கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டது. இதனால் தகவல் தொடர்பில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு குழப்பமான சூழல் ஏற்பட்டது. இதற்காக மிகப்பெரும் அளவில் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் எந்த கார்ப்பரேட் நிறுவனமும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கடுமையான வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாமல் இருக்க கடற்கரை சாலையில் தற்காலிக பந்தல்களையும், தண்ணீர் தெளிப்பான்களையும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். மாநில ஆளுநர், முதல்வர் துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் குளு குளு ஏசியில் மன்னர் பரம்பரை போல் பந்தலில் அமர்ந்து பார்ப்பதும், பொதுமக்கள் வெயிலில் வாடுவதும் இந்த ஆளும் வர்க்கத்தின் அலட்சிய குணத்தை வெளிப்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் தங்களது மாநாடுகளுக்கு பிரமாண்ட தற்காலிக பந்தல் அமைக்கும் போது, இது போன்ற நிகழ்வுகளில் ஏன் பந்தல் அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பொதுமக்களுக்கு இவ்வளவு இன்னல்களை கொடுத்துவிட்டு திமுக ஆட்சியாளர்கள் உள்ளிட்ட ஆளும் வர்க்கம் சிறிதும் தனது தவறை உணராமல் மீண்டும் மீண்டும் சப்பைகட்டு கட்டுவது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது.
- பெரிய அளவில் மக்கள் கூடும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் அரசு தனது போதாமையை உணர்ந்து அதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்ப்பது நல்லது. மக்களின் பாதுகாப்பு பற்றி எவ்விதமான அக்கறையும் இல்லாமல் பெருமளவில் இது போன்று மக்கள் கூடும் நிகழ்ச்சிகள், மாநாடுகள், திருவிழாக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்கான நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த முடியாத நிகழ்ச்சிகளை அரசு ரத்து செய்ய வேண்டும்.
மெரினாவில் வான் சாகசம்! வீண் ஜம்பம் எதற்கு?
நடந்து முடிந்த விமான சாகசங்கள் இந்திய விமான படையின் திறனை வெளிப்படுத்துவதற்காக நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த திறன் யாருக்கு பயன்படப்போகிறது என்பதை பொதுமக்கள் பரிசீலிக்க வேண்டும். இந்திய மீனவர்கள் மீது இலங்கையில் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கோ, ஒக்கி புயலில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடும்போது மீட்பதற்கோ பயன்படவில்லை, வெறும் கடற்கரை வானில் குட்டிக்கரணம் அடிக்கும் திறனால் இந்திய மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக இந்திய ஆளும் வர்க்கத்தின் கூட்டாளி அமெரிக்காவின் ராணுவ தளம் அதானிக்கு தாரைவார்க்கப்பட்ட சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அருகில் அமைய இருக்கிறது, ஆக சென்னை நகரம் ஒரு போர் முக்கியத்துவம் கொண்ட கேந்திரமாக மாறப்போகிறது. இன்று உலகில் நடைபெறும் ரஷ்யா, உக்ரேன், இஸ்ரேல், பாலஸ்தீனம் காசா லெபனான் துருக்கி போன்ற பகுதிகளில் உலக ஏகாதிபத்தியங்கள் தங்களது நலன்களுக்காக நடத்தும் போர்களில் அப்பாவி பொதுமக்களே இறக்கின்றனர். ஆகவே இதுபோன்று சென்னை ஒரு ராணுவ கேந்திர மையமாக மாறுவது வருங்காலத்திற்கு நல்லதல்ல என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நடைபெற்ற இந்திய விமான படையின் சாகச திறன் அமெரிக்காவிற்கு அடியாள் வேலை பார்க்கவே பயன்பட போகிறது.
ஆளும் வர்க்கம் எப்பொழுதும் ஒரு போலியான மாயையில் ஆழ்த்தி முக்கிய பிரச்சினையில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்கான வேலைகளில் எப்போதும் திட்டமிட்டு ஈடுபடுகின்றன. இவ்விசயத்தில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி அரசு போலியான தேசபக்தி பிரச்சாரத்தில் கைதேர்ந்தது. தற்போது நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்கான ஆர்வத்தை தூண்டுவதற்காக நடத்தப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ராணுவத்தில் இருந்த வேலைவாய்ப்புகளை தற்போதைய பிஜேபி அரசாங்கம் அக்னிவீர் திட்டத்தின் மூலம் குறுகிய கால காண்ட்ராக்ட் பணியாக மாற்றியதில் மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளி போட்டுவிட்டு, இப்போது புதிதாக ராணுவத்தில் சேருவதற்கு இந்திய விமான படை அழைப்பது ஒரு ஏமாற்று வேலை என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
ஆளும் வர்க்கங்கள்,மாநில அரசு,மத்திய அரசு ஆகிய இந்த முதலாளித்துவ அரசின் வடிவங்கள் தனது இயல்பிலேயே பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு பொறுப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் ஒரு பொதுமக்களுக்கான நிகழ்வை ஒருங்கிணைப்பது இல்லை என்பதற்கு விமான சாகச நிகழ்ச்சியை அவர்கள் நிகழ்த்திய விதமே நேரடி உதாரணமாக நம் முன்னே தெரிகிறது.
அம்பானி வீட்டு திருமணத்திற்காக தற்காலிக விமான நிலையத்தை உருவாக்கி மேல்தட்டு வர்க்க கனவான்கள் சிறு அசௌகரியத்தையும் ஏற்படுத்தாமல் இந்திய அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததையும், பொது மக்கள் கலந்து கொள்ளும் விமான சாகச நிகழ்ச்சிகளுக்கு அரசு கட்டமைப்பு கொடுக்கும் அலட்சியமான ஏற்பாடுகளுக்கும் காரணம், இப்போது இருக்கும் அரசுகள் கார்பொரேட் முதலாளிகளின் நலன்களுக்கு உரிய வசதியை செய்து கொடுக்கும் ஒரு நிறுவனமே அன்றி பொது மக்களின் நலனுக்கான அரசு கட்டமைப்பு அல்ல. இந்த கார்ப்பரேட்- காவி பாசிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தை தூக்கி எரிந்துவிட்டு புதிதாக அமைக்கப்படும் ஜனநாயக குடியரசு ஆட்சியில் மட்டுமே பொதுமக்களின் நலன்களை உறுதி செய்ய முடியும்.
அதுவரை இது போல் நடைபெறும் விமான சாகசங்கள் பொதுமக்களின் உயிரை பணயமாக வைத்து நடைபெறும் சாகசமாகவே இருக்கும்.
- விவேக்