1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் எனும் இந்து மதவெறி அமைப்பானது, அடுத்த ஆண்டில் அதன் நூற்றாண்டை கொண்டாட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைப்பு துவங்கப்பட்ட நாளன்று அதன் தலைவர்கள் ஆற்றும் உரை அந்த ஆண்டுக்கான அவர்களது செயல் திட்டமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதன் தலைவர் மோகன் பகவத் பேசியது வெறுப்பை விதைக்கும் வகையிலும், மதவெறியை தூண்டும் விதமாகவும், முற்போக்கு அமைப்புகளை சாடுவதாகவும் அமைந்திருந்தது. “இன்று நாட்டின் வடமேற்கு எல்லையில் உள்ள பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், லடாக் பிரதேசங்களும், கடல் எல்லையில் உள்ள தமிழ்நாடு மற்றும் கேரளமும், பீகார் முதல் மணிப்பூர் வரையிலான முழு பூர்வாஞ்சல் பகுதிகளும் அமைதி இழந்து கலக்கமடைந்து உள்ளன” என்று பேசியுள்ளார்.
மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை உடைத்ததும், மூன்று வேளாண்மை சட்டங்களைப் புகுத்தி பஞ்சாப் விவசாயிகளை வெகுண்டெழச் செய்ததும், மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திட்டமிட்டு மோதல்களை உருவாக்கியதும் பாசிச பாஜக ஆட்சியின் விளைவுதானே. மேலும் நாட்டிலேயே அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை சாதித்துள்ள தமிழ்நாடும், கேரளமும் இவர்களது கண்ணை எப்போதும் உறுத்திக் கொண்டுதான் உள்ளன. அந்த காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் இத்தகைய பேச்சுக்கு காரணமாக உள்ளது.
அடுத்து, நாட்டில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சுயநலமிகள் என்றும், அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று எதேச்சதிகாரமாக மாற்ற முயலும் இந்தப் பாசிஸ்டுகளைத்தானே மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இந்து மதத்தை பின்பற்றும் மக்களுக்கோ, அவர்களது வழிபாட்டுக்கோ சிறு இடையூறு வந்தாலும் நியாயத்தை நிலை நாட்டுங்கள் என்றும், இதற்காக அரசை நாடுவதோ, சட்ட நடைமுறைகளை பின்பற்றுவதோ அவசியமில்லை என்றும் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசி உள்ளார். மதவெறியைத் தூண்டி ஆதாயம் அடைவது இவர்களது வாடிக்கைதானே. இப்போது ஆட்சியும் இவர்கள் கையில் இருப்பதால் எந்த எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டனர்.
கொலைகார ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! தடையை நீக்கிய பாசிச கும்பல்!
அடுத்து “சில புறநிலை சக்திகள் மற்றும் குழுக்கள் மூலம் பங்களாதேஷில் சமீபத்தில் நிகழ்ந்ததைப் போன்ற அழிவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல் இந்தியாவிலும் நடக்கும்” எனப் பேசி உள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதாகக் கூறிய அவர், எந்த ஒரு நாட்டிலும் அடிப்படைவாதிகள் ஆட்சி புரிந்தால் சிறுபான்மையினர் தாக்கப்படவே செய்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இந்தக் கூற்று பாஜக அரசாங்கத்துக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது.
மோடி – அமித்ஷாவை விமர்சித்தாரா மோகன் பகவத்?
மோகன் பகவத் தனது உரையில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆட்சி புரிவதை விமர்சிக்கும் விதமாக, பெரும் அளவிலான வஞ்சகத்தாலும், வாய்ஜாலங்களாலும் ஆன தப்புக்கோடுகளால் இந்த சமூகம் பாதிப்படைந்துள்ளதாக பேசி உள்ளார். மேலும், மோடியின் மேற்கத்திய நண்பர்கள் மேற்குலகில் நடந்ததைப் போன்ற “அரபு வசந்தம்” வகையிலான நடவடிக்கைகளை இந்தியாவைச் சுற்றிலும், குறிப்பாக எல்லை மற்றும் பழங்குடி பகுதிகளில் மேற்கொள்ள முயற்சிப்பதாக மோடியை மறைமுகமாக பகவத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் மோடியும், அமித்ஷாவும், தனது பணபலத்தின் மூலமும், அதிகார பலத்தின் மூலமும் நிகழ்த்தும் ஒழுக்கக் கேடான, பேரழிவு அரசியலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட மோகன் பகவத் கண்டிக்கவில்லை. மட்டுமல்லாமல் மோடி அரசாங்கத்தின் மூலம் தேசியப் பொருளாதாரத்தில் அதானி எனும் முதலாளி பெற்றிருக்கும் செல்வாக்கு பற்றியும் பகவத் மௌனம் காப்பதில் ஆச்சரியம் இல்லைதான்.
ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு! உழைக்கும் மக்களுக்கு யார் பாதுகாப்பு?
பாஜகவின் தேர்தல் மற்றும் அரசியல் நடைமுறைகள் கடந்த 10 ஆண்டுகளில் சாதிகளுக்கு இடையே வேறுபாடுகளை உருவாக்கி, பின்னர் அவற்றை வலுப்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறது. பாஜகவைப் போல வேறு எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நோக்கங்களுக்காக சாதிகளில் துணைப் பிரிவுகளை உருவாக்கவில்லை.
உ.பியில் உள்ள தலித்துகளில் ஜாதவ் மற்றும் ஜாதவ் அல்லாதவர்கள் என்றும், ஹரியானாவில் ஜாட்டுகள் மற்றும் ஜாட் அல்லாதவர்கள், பீகார் மற்றும் உ.பியில் யாதவர்கள் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர், இது தவிர மணிப்பூரில் பிஜேபியால் ஊக்குவிக்கப்பட்ட வெளிப்படையான மற்றும் ஆபத்தான அரசியல் போன்றவற்றைப் பற்றி பேசாமல் இருப்பதும், பிஜேபியின் அப்பட்டமான மற்றும் நியாயமற்ற சாதிய கணக்கீடுகளை விமர்சிக்கத் தவறுவதும் பகவத் யார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
முந்தைய காங்கிரஸ் அரசை வீழ்த்தி பாஜகவை அரியணையில் ஏற்றுவதற்காக, ஊழல் ஒழிப்பு எனும் பெயரில் அண்ணா ஹசாரே என்னும் அரைவேக்காட்டை இறக்கிவிட்ட நாக்பூர் தலைமை, மோடியின் ஆட்சியில் நடக்கும் இமாலய ஊழல்களைப் பற்றி வாய் திறக்காதது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள், கும்பல் படுகொலைகள், பட்டியலின மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள், வழிபாட்டுத் தலங்களை இடிப்பது, சிறுபான்மை மக்களின் வீடுகளை புல்டோசர் விட்டு இடித்துத் தள்ளுவது போன்ற அராஜகங்கள், ஜனநாயகப் படுகொலைகள் தொடர்கதையாக உள்ளன.
இதைப் பற்றி எல்லாம் பேசாத பகவத், மோடி அரசு மீது மென்மையான குற்றச்சாட்டை வைத்த உடனே ஆர்எஸ்எஸ் – பாஜக இடையே மோதல் என்பதாக ஊடகங்கள் சித்தரிப்பதை ஏற்க முடியாது. இந்து சமூகத்தை ஒன்றிணைப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களாக 1925 – ல் இருந்து செயல்பட்டு வந்த அவரது அனைத்து முன்னோடிகளையும் போலவே இவரும் இந்துத்துவ அஜெண்டாவை நிறைவேற்றத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
மதவெறி அரசியலை முன்னிறுத்தி, அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றும் ஆர்எஸ்எஸ் – ன் முயற்சி அந்த அமைப்பின் முதல் நூற்றாண்டில் பலிக்கவில்லை. அது அடுத்த நூற்றாண்டிலும் தொடரப் போகிறது. அதற்கிடையே ஆர்எஸ்எஸ் இயக்கத்தையே நாட்டிலிருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டியது இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது.
- குரு
RSS – பற்றிய சிறப்பான அம்பலப்படுத்தும் கட்டுரை இது. கொலைகார பார்ப்பனிய இந்துத்துவ மதவெறி அமைப்பான ஆர்எஸ்எஸ்-க்கு 1925 விஜயதசமி நூற்றாண்டு தான்! கோல்வால்கர்-சாவர்க்கர் முதல் இன்றைய மோகன் பகவத் வரை அவர்களது எண்ணங்களும் கோட்பாடுகளும் பார்ப்பனிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதலிலும், நால்வர்ணம் 4000 சாதி என்ற பாகுபாட்டினை தொடர்ந்து நிலைநாட்டுவதிலும் முன்னிலும் வேகமாகவே நடைபோடுகின்றன! ஆனால் வெளிப்பகட்டுக்கு ‘இந்துக்கள் ஒற்றுமை ஓங்கட்டும்’ என்ற போலி முழக்கத்தை அனைத்து சங்கிகளும் அதன் சூத்திர அடிவருடிகளும் எழுப்பி ஏமாற்றி வருகின்றன. ஆர் எஸ் எஸ்- இன் அடியாட்களாக -கொலைகாரக் கூட்டமாக -பாஜக – இந்துத்துவ சங்கிகள், மோடி -அமித்ஷா – ராஜ்நாத்சிங்…இன்ன பிற சங்கிகள் பாசிச வெறியாட்டம் போட்டு நாட்டையே ஒற்றை சர்வாதிகாரத்தின் கீழ் -ஒற்றை மதத்தின் கீழ் – ஒற்றை மொழியின் கீழ் – ஒற்றை இனத்தின் கீழ் நிலை நிறுத்தி, சிறுபான்மையினரை இல்லாதொழித்து
நாட்டையே இந்து நாடாக – பார்ப்பன நாடாக மாற்றுவதற்கு செயல்திட்டம் வகுத்து கடுமையாக உழைக்கின்றனர்! இவர்களுக்கு வேட்டு வைப்பது என்பது – வேரோடும் வேரடி மண்ணோடும் குழி தோண்டி புதைக்க வேண்டிய பொறுப்பு என்பது கட்டுரையாளர் பதிவு செய்திருப்பதை போல புரட்சிகர மற்றும் இடதுசாரிகள் தலைமையிலான அமைப்புகளின் கரங்களிலே குவிந்து கிடக்கிறது என்பதை உணர்வோம்! அந்த வழியில் களம் காண்போம் !!வெற்றியடைவோம்!!!