இனி அரசு ஊழியர்களும் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என பாசிச மோடி அரசு அறிவித்துள்ளது. 1966 இல் விதிக்கப்பட்ட 58 ஆண்டு கால தடையை பாஜக நீக்கி உள்ளது.
ஜூலை 9 2024 அன்று அரசு பிறப்பித்த உத்தரவில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு தொடர்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 30 1966, ஜூலை 25 1970 மற்றும் அக்டோபர் 28 1980 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட அரசு ஆணைகளில் இருந்து ஆர்எஸ்எஸ் பெயரை நீக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவை பிஜேபி ஐடி செல் தலைவர் அமித் மாளவியாவும் உறுதி செய்துள்ளார். “அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட 1966 ஆம் ஆண்டு அதாவது 58 ஆண்டுகளுக்கு முன் அரசியல் சட்டத்திற்கு முரணான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை மோடி அரசு திரும்ப பெற்றுள்ளது. முதலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கக் கூடாது” என தனது எக்ஸ் பதிவில் எழுதியுள்ளார்.
அதாவது 2014இல் ஆட்சி பொறுப்பேற்ற மோடி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த உண்மையை கண்டுபிடித்தது போல அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ‘மகாத்மா’ என்று அழைக்கப்பட்ட காந்தியை சுட்டுக் கொன்ற, இந்தியாவை மத அடிப்படையில் பிளவுபடுத்த, குஜராத், பாபர் மசூதி கலவரங்களையும், கொலைகளையும் செய்துள்ள இரத்த கறை படிந்த ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்திருக்கக் கூடாது என்று அமித் மாளவியா கூறியுள்ளார்.
காந்தி ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்துத்துவ மிதவாதியான சர்தார் பட்டேல் 1948 பிப்ரவரியில் ஆர் எஸ் எஸ் தடை செய்தார். நன்னடத்தை எனக்கூறி பின்னர் இந்த தடை நீக்கப்பட்டது. பின்னர் 1966 இல் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை 1977-இல் ஜனதா கட்சி ஆட்சி அமைந்த போது தடை நீக்கப்பட்டது. பின்னர் 1980 இல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பழைய உத்தரவுகள் மீண்டும் அமலுக்கு வந்தன. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கூட இந்த தடையை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ்-ல் இல்லாதது போலவும் புதிதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போலவும் செய்தியை படிப்பவர்கள் புரிந்து கொள்ளக்கூடும் ஆனால் அது உண்மை அல்ல.
2014 இல் ஆர் எஸ் எஸ் அரசியல் பிரிவான பாஜக அதிகாரத்தை கைப்பற்றும் முன்னரே, அதிகார மையங்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பலர் இருந்தனர். ஆர்.எஸ்.எஸ் கொலைகார அமைப்பு என்பதால் அதன் உறுப்பினர்கள் என வெளியில் சொல்ல முடியாத நிலை அவர்களுக்கு. ஆட்சிப் பொறுப்பில் பாஜக அமர்ந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ்-ஐ மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைப்பு என்பது போன்ற சித்திரத்தை உருவாக்க ஆளும் பாசிச கும்பல் முயன்றது. ஆர் எஸ் எஸ் கூட்டங்கள் நடத்துவதற்கும், பேரணிகள் நடத்துவதற்கும் அதிகார மையங்களை பயன்படுத்தி அனுமதி வழங்கியது.
ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புறங்கள் வரை வேறூன்றி உள்ளதை நாம் மறுக்க இயலாது. தேசிய வெறியையும் மதவெறியையும் ஆயுதமாக பயன்படுத்தி இது வளர்ந்ததுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிகார மையங்களில் ஆர்எஸ்எஸ் நபர்களை திட்டமிட்டு அமர்த்தியது பாசிச பாஜக. இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், இராணுவம், நீதித்துறை என பல துறைகளிலும் ஆர்எஸ்எஸ் கும்பல் நுழைந்துள்ளது. இது மிகப்பெரிய அபாயம் என்பதை ஜனநாயக சக்திகளும், இடதுசாரிகளும் பலமுறை எச்சரித்துள்ளார்கள்.
படிக்க: அயோத்தி ராமரை பூத் ஏஜென்டாக்கப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்- பாஜக!
2024 நாடாளுமன்றத் தேர்தல் பெரும்பான்மை இழந்த பாஜக என்று வேண்டுமானாலும் ஆட்சியில் இருந்து இறக்கப்படலாம் ஆனால் அதிகாரத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ் கொம்பளின் மூலம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றும்.
அதனாலேயே அரசுத்துறைகளில் உள்ளவர்களை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என தடை உத்தரவை நீக்கி அறிவித்துள்ளது இதன் மூலம் rss-ன் கரங்களை வலுப்படுத்த முயற்சிக்கிறார் பாசிசம் மோடி மேலும் மோடிக்கும் rss-க்கும் இடையிலான விரிசலை விரிசலை சரி செய்யவும் பார்க்கிறார்.
இந்து மதவெறி பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் 2025 செப்டம்பருடன் தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது. அதற்குள் தனது இந்துராஷ்டிர கனவை நிறைவேற்ற அரசு எந்திரத்தை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் தடை நீக்கத்தை பார்க்க வேண்டும். மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி, மனுஸ்மிருதியின் அடிப்படையில் அவர்களை உரிமையற்றவர்களாக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஐ நிரந்தரமாக தடை செய்ய மக்களை அணித்திரட்டுவோம்.
- நந்தன்