ஆர்.வி.அர்லேகர் - ஆர்.என்.ரவி

நாமும் சரி; ஏன், முதலாளித்துவ கட்சிகளில் பலரும் சரி; – மாநிலங்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசாங்கங்கள் செயல்படுகின்ற போது அலங்காரப்பொம்மைகளான ‘ஆளுநர்’ பதவிகள் தேவையே இல்லை என்று பற்பல தருணங்களில் எழுத்து வடிவங்களிலும், உரை வீச்சுகள் அடிப்படையில் – காட்சி ஊடகங்களிலும் வெளிப்படுத்தியே வருகின்றோம். அதற்கான போராட்டங்களும் நடத்தி இருக்கிறோம்.

எப்படியோ பிரிட்டிஷ்- இந்தியா ஆட்சிக் காலத்தில், அவனது சுரண்டும் மனப்போக்கிற்கு இசைந்த அளவிற்கு, ஆட்சி அதிகாரம் தங்கு தடை இன்றி நடைபெற இந்த ஆளுநர் பதவியை உருவாக்கித் தொலைத்தான். ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே… ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று…’ என்ற போலிச் சுதந்திரத்தைப் பெற்ற பின்பும் அந்தப் பொம்மை ஆளுநர் பதவிகளை ஆளும் வர்க்கமும், அரசாங்கமும் கைவிடாமல், சுயநல நோக்கில் வாரி அணைத்துக் கொண்டு விட்டன.

மேலும் படிக்க:  புதிய ஆளுநர்கள்: புதிய கங்காணிகள்!

‘அதுகள்’ அரசியலமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டிருக்கக்கூடிய அதிகார வரம்பினுள் நின்று செயல்படுவதற்குப் பதிலாக தன்னிச்சையாக – வரம்பு மீறிய அளவில் செயல் படுகின்ற அவலம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக பாஜக ஒன்றிய அளவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் பக்கா ஆர்எஸ்எஸ்-காரர்களைத் தேர்வு செய்து நியமனம் செய்கிறார்கள். அவர்களோ தறி கெட்ட தனமாக ஆட்டம் போடுகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசாங்கங்களுக்கு எல்லை மீறிய தொல்லைகளைக் கொடுப்பதும், ஆர் எஸ் எஸ் கொள்கைகளைப் பரப்புவதில் இறக்கை கட்டி ஆட்டம் போடுவதும் தொடர்கதையாக உள்ளது.

‘இந்தியா பன்முக கலாச்சார தேசம் அல்ல’ – முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் ஆளுநர்…!

அண்மைக்காலம் வரை தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி கிண்டி ஆளுநர் மாளிகையையே பாஜக-RSS மாநிலத் தலைமை அலுவலகமாக மாற்றி வைத்துக் கொண்டிருந்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களில் தமிழ்நாட்டின் இலட்சனைக்குப் பதிலாக ஒன்றிய அரசின் இலட்சணையை அச்சேற்றுவது, திருவள்ளுவருக்கு காவி உடை தரித்து நெற்றியிலும் கரங்களிலும் விபூதி பட்டைகளை அடித்து பூணூலையும் மாட்டி விடுவது; வள்ளலார் கூறாததை எல்லாம் கூறியதாகப் பரப்பி அவரை இந்து மதத்தின் முன்னோடி எனப் பொய்யாக பறைசாற்றியது; தமிழ்நாட்டின் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு அது அரசு சார்ந்த நிகழ்ச்சியோ அல்லது பொது நிகழ்ச்சியோ எதுவாயினும் அங்கே ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தை மேற்கொள்வதுமாக இருந்தார். சட்டமன்றத்திலோ, பலமுறை தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சிகளில் தனது முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து தேசிய கீதம் ஒலிக்கும் பொழுதே சபையை விட்டு ஓடினார். தமிழ்நாடு அமைச்சரவை தயாரித்த ளித்த ஆளுநர் உரைக்கு மாற்றாக சிலவற்றை நீக்கியும் சிலவற்றை சேர்த்தும் படிக்கலானார். அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஆர் என் ரவியின் அப்படிப்பட்ட செய்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் படிக்க: ஆர்.என்.ரவி வழியில் திருவள்ளுவரைக் காவிமயமாக்கும் சங்கி ஆளுநர் அர்லேகர்!

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் அனைத்தையும் தனது ஆசனத்திற்கு கீழே போட்டு வைத்துக்கொண்டு கையெழுத்துப் போட மறுத்தார்; ஒவ்வொன்றிற்கும் தமிழ்நாடு அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திற்குப் படையெடுக்க வேண்டி இருந்தது. இத்தகு நிலை தான் கேரளா, மேற்கு வங்கம் போன்ற பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்களது செயற்பாடுகளாக தொடர்ந்தது. ஒரு வழியாக ‘தமிழ்நாட்டில் குடைச்சல் கொடுத்தது போதும்; அதைவிட மும்மடங்கு மேற்கு வங்கத்தில் அப்பணியைச் செய்யுங்கள்’ என்று ஒன்றிய அரசு அங்கு அவரை அனுப்பி வைத்துள்ளது. அப்பணியை அவ்வாறே அங்கு துவங்கி விட்டார். தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் சற்று இதமான மூச்சு வாங்க முயன்ற பொழுது, தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநராக கேரளத்தின் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் கூடுதல் பொறுப்பிற்கு வந்து சேர்ந்தார். தற்போது அவர் திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அமைச்சரவை பொறுப்பேற்பிலும் வந்தே மாதரம் பாடலை முதலில் பாடச் செய்தார். பலராலும் கண்டிக்கப்பட்டது. அவர் இதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ் சேவையைத் தொடங்கிவிட்டார்.

ஏப்ரல் 26, சென்னையில் ஸ்ரீ அகர்வால் சபாவின் 75 ஆம் ஆண்டு பவள விழா நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரை நிகழ்த்திய பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இப்படிப் பேசியுள்ளார்:

“நமது நாடு (இந்தியா) பன்முக கலாச்சார தேசம் அல்லது பல்வேறு கலாச்சார சமூகங்களைக் கொண்ட தேசம் எனக் குறிப்பிடுகிறோம்; இது மிகவும் தவறானது; நாம் வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் அல்ல; வட இந்தியா முதல் தென்னிந்தியா வரை அனைவருக்கும் ஒரே கலாச்சாரம் தான்…” என்று அப்பட்டமாகப் பொய் கூறி முழுப் பூசணியை சோற்றில் மறைத்துள்ளார்.

இவருக்கு ஆரம்பக் கல்வியே தெரியாது போலும். ஆங்கிலேயனின் கிழக்கிந்தியக் கம்பெனியாக இருந்தாலும் சரி; அதற்குப் பின் அவர்களது நேரடி ஆட்சி படர விடப்பட்ட பிரிட்டிஷ்- இந்தியாவிலும் சரி; அவர்களது வருகைக்கு முன் இந்தியா என்ற ஒரு நாடே இருந்ததில்லை! பல்வேறு சமஸ்தானங்களாக – பல்வேறு பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டில் – பல்வேறு மன்னர்களின் கட்டுப்பாட்டில் – பல்வேறு எல்கைகளுக்கு உட்பட்டு, பல்வேறு மொழிகள், பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நிலப்பரப்புக் களாகவே இருந்து வந்தன. பிரிட்டிஷ்- இந்தியாவில் தான், தனது சுரண்டலுக்கு ஏற்ற வகையில் தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு சமஸ்தானங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கினான். உண்மை நிலை இவ்வாறிருக்க, பொறுப்பு ஆளுநரோ
பொறுப்பின்றி ஆர் எஸ் எஸ் கொள்கைகளைப் பரப்ப முனைந்துள்ளார்.

ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே மொழி – என்ற ஆர்எஸ்எஸ் கொள்கையைப் பரப்புகிறார் ஆளுநர்!

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குகின்ற பொழுது அம்பேத்கர் எச்சரிக்கையாகவே முன்மொழிந்த “United States of India” – என்ற வார்த்தைகளிலேயே இந்தியா பன்முகக் கலாச்சாரத் தன்மை கொண்டது என்ற ஆழமான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு வழிவகை செய்தார். ஆம், பல்வேறு தேசிய இனங்களின் ஒருங்கிணைவே ‘இந்தியா’ என்பதனை வெளிப்படுத்தினார். அவர் வெளிப்படுத்தியதற்காக மட்டுமின்றி ஒவ்வொரு மொழிவாரி மாநிலங்கள் வாழும் மக்கள் அனைவருமே என்று கூற முடியாவிட்டாலும் ஓரளவு விவரம் புரிந்தவர்கள் – அறிவு ஜீவிகள் நடைமுறை எதார்த்தத்தில் அந்த உண்மையை உணர்ந்தே இருக்கிறார்கள். அதற்கான தேசிய இனப் போராட்டங்களையும் சில இயக்கத்தினர் தொடர்ந்து முன்னெடுக்கவும் செய்கிறார்கள்.

பாஜக-RSS கும்பல் பறைசாற்றும், ‘ஒரே நாடு (இந்து ராஷ்ட்ரா); ஒரே மதம்;
ஒரே மொழி; ஒரே கலாச்சாரம்…’ – போன்ற முழக்கங்களை, தான் சிறுவயதில் ஆர்எஸ்எஸ் வகுப்பில் கற்றுக்கொண்டதையே இப்போது ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு ‘வாந்தி’ எடுக்கிறார் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர். ஆம், ‘இந்தியா பன்முக கலாச்சார தேசம் அல்ல’ – என்ற புளுகுனித்தனத்தைக்
கட்டவிழ்த்து விடுகிறார்.

பாஜக – ஆர் எஸ் எஸ் கருத்தைத்தான் பிரச்சாரம் செய்வேன் என்று ஆர்.வி. அர்லேகர் அடம் பிடிப்பாரே யானால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு – ஆளுநர் மாளிகையைக் காலி செய்து விட்டு, கமலாலயத்திற்கோ, நாக்பூர்-க் கோ, அல்லது தான் ஆர்எஸ்எஸ் கல்வி கற்ற சொந்த மாநிலமான கோவா-விற்கோச் சென்று விடுவதே சாலச் சிறந்த முடிவாக அமையும்.

இவரது உரை மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும். உண்மையில் இந்தியாவில் நிலவும் பன்முகத்தன்மை, பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாட்டை, ‘வடக்கு முனையிலிருந்து தெற்கு முனைவரை ஒரே கலாச்சார வடிவத்தில் ஆனது’ – எனக் கூறுவதற்கு – அதுவும் தமிழ்நாட்டில் – இவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?

இவரது அவ்வுரை, இவர் பொறுப்பேற்கும் பொழுது ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு மாறான – இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான வார்த்தைப் பிரயோகங்கள் ஆகும். இவர் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்! தமிழ்நாட்டு மக்கள் – அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்! அவரது செய்கைக்காக போராட்டம் தொடுக்க வேண்டும்! ஆளுநர் என்ற அலங்கார – மக்கள் வரிப்பணத்தில் கூத்தடிக்கும் இப்பதவிகளை இல்லாது ஒழிக்கப் போராட வேண்டும்!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here