ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். நியமிக்கப்பட்டவர்களில் 6 பேர் புதியவர்கள். மீதம் 7 ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளர்.
இதில் தமிழகத்தில் இருந்து பாஜக தலைவர்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.பாஜகவினரால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட எச்.ராஜாவுக்கு பதவி கிடைக்காததால், சமூக வலைதளங்களில் ’நான் ஒரு ராசியில்ல ராஜா தான்’ என்று கிண்டலடிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவினரை பொறுத்தவரையில் கவர்னர் பதவி என்பது அவர்களுக்கு வழங்கப்படும் ப்ரமோஷன். ஏற்கனவே தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் தாமரை மலரும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் மலராது என்பதை புரிந்து கொண்டு கொடுக்கப்படும் ப்ரோமோஷன்களை கொண்டு தமிழிசை, இல.கணேசன் தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர் ஆகியுள்ளார்கள்
பாஜகவின் ஆளுநர் பதவி:
ஆளுநர் பதவி டம்மி பதவியாக கருதப்பட்டாலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பல மாநிலங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பெருமை பாஜகவினரையே சாரும். குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மாநில அரசை செயல்பட விடாமல் தடுக்கும் பொருட்டு பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பலை சார்ந்தவர்களை ஆளுநர்களாக நியமிக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதத்தினை விதைத்ததின் மூலம் 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு பாஜக மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்தது. இந்த நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. சரியான தருணத்திற்காக காத்திருந்த பாஜக சங்பரிவார் கும்பல் 2018-ல் கூட்டணியிலிருந்து விலகியது. இதனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
நிலைமையை தாமதமாக உணர்ந்த மெகபூபா முஃப்தி காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி இணைந்து ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயன்ற நிலையில் ஆளுநர் சத்யபால் மாலிக் பாஜகவின் அஜெண்டாவை நிறைவேற்றும் பொருட்டு மாநில சட்டசபையை கலைத்தார்.
சங்பரிவார் கும்பலுக்கு நீண்ட காலமாகவே ஜம்மு – காஷ்மீர் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்தது. அதனை ஆளுநர் சத்யபால் மாலிக் மூலம் நிறைவேற்றிக் கொண்டது பாஜக. அதன்பிறகு 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதும், இந்தியாவில் சிறை வைக்கப்பட்ட மாநிலமாக ஜம்மு காஷ்மீர் மாறியதும், ஜம்முவை காஷ்மீரை இரண்டாக பிரித்ததும் அனைவரும் அறிந்ததே. இவ்வளவு பிரச்சனைக்கு முக்கிய காரணியாக இருந்து செய்யப்பட்டது ஆளுநர் சத்யபால் மாலிக் தான். 2019 வரை ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் தான், ஜம்மு காஷ்மீரின் கடைசி ஆளுநர்.
பாஜகவின் சத்யபால் மாலிக், 2004 ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன்பிறகு 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 2017 ஆம் ஆண்டு பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மாநில உரிமையை பறிக்க பாஜக எடுத்த ஆயுதம் தான் ஆளுநர்!
காஷ்மீர் தொடக்கம் தான். அதன் பின் பல மாநிலங்களில் ஆட்சிக் கலைப்புகளை நடத்திய பாஜகவுக்கு கதாநாயகனே அவர்கள் நியமித்த ஆளுநர்கள் தான். இன்றுவரை இது தொடர்கிறது. புதுச்சேரியில் கிரண்பேடியும், தற்போது தமிழிசையும், கேரளாவில் ஆரிப் முகம்மது கான், தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி, இதேபோல் டெல்லி, மேற்கு வங்கத்திலும் குறிப்பிட்ட மாநில அரசுகளை செயல்பட விடாமல் முட்டுக்கட்டை போடுவதும், அதிகாரத்தை கேடாக பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலின் அஜெண்டாவை செயல்படுத்துவதும் நாம் அறிந்ததே!
மனுநீதிபடி தீர்ப்பு கொடு! கவர்னர் பதவி வாங்கு! ஆர்.எஸ்.எஸ் ஆஃபர்!
ஆளுநர் பதவி பெரும்பாலும் பாஜக மட்டுமல்லாமல், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் அவர்கள் சார்பானவர்களுக்கு வழங்கப்படுவது தான். ஆனால் பாஜக அதனை தனது பாசிச அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. 2002 குஜராத் படுகொலையில் தொடங்கி அதன் பிறகு நடந்த கொடூர செயல்களில் சங்பரிவார் கும்பலை காப்பாற்றும் கர சேவை செய்யும் நீதிபதிகளுக்கு கவர்னர் பதவிகள் வழங்கப்படுகிறது. சிலருக்கு பாஜகவின் ராஜ்யசபா எம்பி பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆந்திர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.அப்துல் நசீர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். நீதிபதி பதவியில் இருந்து கடந்த ஜனவரி 4 ஆம் தேதி தான் ஓய்வு பெற்றார். இவர் பல முக்கிய வழக்குகளில் பாஜக கும்பலுக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்:
♦ ஆளுநர் ரவி: அரசியலமைப்புச் சட்டம் பெற்றெடுத்த போக்கிரி குழந்தை!
♦ ஆளுநர் பதவி எனும் தேவையில்லாத ஆணி எதற்கு?
குறிப்பாக அயோத்தி-பாபர் மசூதி வழக்கில் சங்பரிவார் கும்பலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் இவரும் ஒருவர். பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்தார். முன்னாள் நீதிபதி அப்துல் நசீருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டதன் ரகசியம் இதுதான்.
கயவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அநாகரிகம்!
கடந்த ஒரு வருடமாக ஆர்.எஸ்.எஸ் -ன் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழகமே கிளர்த்தெழுந்து போராடிவரும் நிலையில், ஆளுநர் பதவி தேவையில்லாத ஆணி, ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லாத ஒன்று, என தமிழக முற்போக்கு அமைப்புகளும் சனாதனத்தை எதிர்க்கும் கட்சிகளும் பாசிச கும்பலுக்கு எதிராக சமர் புரிந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணியும் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு “அரசியல் அமைப்பு சட்டத்தை” பின்பற்ற சொல்லி அறிவுரை வழங்குவது கேலிக்கூத்து.
பாசிஸ்டுகள் அதிகாரத்தை கேடாக பயன்படுத்தி நீதிபதி நியமனம் தொடங்கி ஆளுநர் நியமனம் வரையிலும் அவர்களது இந்து ராஷ்டிர கொள்கைகளை நடைமுறைப்படுத்த அவர்களுக்கு ஆதரவான கும்பலை நியமித்து வருகிறார்கள். மாநில உரிமைகளை பறித்து ஒற்றை அதிகாரத்தை உருவாக்க முயலும் பாசிச கும்பலை அம்பலபடுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போமானால் அது அழிவுக்கு தான் கொண்டு செல்லும். இதனை ஆளும் வர்க்கம் செய்யும் என்று காத்திராமல் பாசிசத்திற்கு மக்களாகிய நாம் பாடம் கற்பிப்போம்!.
- நலன்