தேசபக்தர்கள் சிறையில்! தேசத்துரோகிகள் வெளியில்! சுதந்திர தினக் கொண்டாட்ட வெட்கக்கேடு!

காலனி ஆதிக்க அரசினால் கைது செய்யப்பட்டபோது “தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடிய கும்பல்” தான் சாவர்க்கர் போன்ற 'வீரர்களின்' உண்மை முகம்.

ந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடப் போவதாக நாட்டை ஆளும் ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல் பெரும் அலப்பறையில் இறங்கி உள்ளது. பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் 300 ஆண்டுகளுக்கு மேல் அடிமைப்பட்டு கிடந்த இந்திய ஒன்றிய விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் வரலாற்றுஉண்மை. ‘கலந்து கொள்ளவில்லை’ என்பதை விட பிரிட்டன் காலனி ஆதிக்க அரசினால் கைது செய்யப்பட்டபோது “தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடிய கும்பல்” தான் சாவர்க்கர் போன்ற ‘வீரர்களின்’ உண்மை முகம்.

1925 ல் துவக்கப்பட்ட இந்து மகா சபா மற்றும் ஆர்எஸ்எஸ், பிரிட்டன் காலனி ஆதிக்கம் இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் வரை எந்த பெரிய போராட்டத்தையும் செய்யவில்லை. மாறாக பிரிட்டன் அரசாங்க பதவிகளில் அமர்வதற்கு, ஆர்எஸ்எஸ் இன் மூதாதையர்களான பார்ப்பனர்கள் துடித்துக் கொண்டிருந்தனர்.

நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் பிரிட்டன் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டு சிறை, சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, பதவிகளுக்காக வெள்ளை எஜமானர்களின் காலை நக்கிக் கொண்டிருந்தவர்கள் தான் ‘ஆர்எஸ்எஸ் தேசபக்தர்கள்.’


இதையும் படியுங்கள்: சுதந்திரம் வேணும் | மகஇக பாடல் | தோழர் கோவன்


 

அப்படிப்பட்ட கேடுகெட்ட கும்பல் தற்போது சுதந்திர தினத்தை கொண்டாட ச்சொல்லி மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. அது மட்டும் இன்றி மூவர்ணக் கொடியை 20 கோடி பேர் தமது வீடுகளில் ஏற்ற வேண்டும் என்று இலக்கு வைத்து ஊடகங்களின் வாயிலாக வாய் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. பிணத்தை தின்ற ஓநாயும், நரிகளும் ஊளையிடுவதைப் போல நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு காட்டிக் கொடுத்துவிட்டு, சுதந்திரம்! தேசபக்தி! என்று ஊளையிடுகின்றனர்!!.

ஆனால் ,’சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இந்தியா (ஒரு காலனி நாடாக) உண்மையான சுதந்திரம் இல்லாத அடிமை நாடாகவே நீடிக்கிறது’ என்பதை துணிச்சலுடன் பேசுகின்ற, எழுதுகின்ற தேசபக்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் இருந்த “மகர் படைப்பிரிவில்” முன்னணியாக செயல்பட்ட போராளிகளின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள ‘பீமா கோரகான் ‘நினைவு இடத்தில் 2017 ஆம் ஆண்டு நடந்த ‘எல்கர் பரிசத்’ மாநாட்டில் தலித்துகளின் எழுச்சியை பற்றி பேசிய முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரின் மீதும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதையும் படியுங்கள்: பீமா –கோரேகான் சிறைப்பட்டோருக்கான விடுதலைக் குழுவின் ஊடக அறிக்கை


சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் “ஸ்டேன் சாமி” வயது மூப்பு காரணமாகவும், சிறைக் கொடுமைகளினால், நோய்வாய்ப்பட்டும் சிறையிலேயே இறந்து போனார். ஆந்திரத்து “புரட்சி கவிஞர் வரவர ராவ்” தனது 83 வது வயதில் பல்வேறு உடல் நலக்குறைவு இருந்த போதிலும், பிணை மறுக்கப்பட்டு கடுமையான போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 10, 2022 அன்று மருத்துவப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைத்த டாக்டர் அம்பேத்கரின் உறவினரான “பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே” தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனந்த் தெல்தும்டே

இவர்கள் செய்த குற்றம் என்ன? நாட்டை ஏகாதிபத்திய, முதலாளித்துவ கார்ப்பரேட்டுகளின் பகற் கொள்ளைக்கு கூறு போட்டு விற்பதற்கு எதிராகவும், இந்தியாவில் உள்ள 3.75 கோடி பழங்குடி மக்களின் நிலங்கள் கார்ப்பரேட் கொள்ளையர்களின் லாப வேட்டைக்காக பறிக்கப்படுவதற்கு எதிராகவும், 19 கோடி தலித் மக்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதற்கு எதிராகவும், குரல் கொடுத்தார்கள் என்பது தான், அவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் உள்ள தொடர்பு என்பதாக ஆர்எஸ்எஸ், பிஜேபி கும்பலால் சித்தரிக்கப்படுகிறது.

ஆர் எஸ் எஸ் இன் அடியாள் படையாக செயல்படும் என்.அய்.ஏ என்ற அரசு பயங்கரவாத உளவுப்படை எல்கர் பரிசத் வழக்கு தொடர்பாக பத்தாயிரம் பக்கங்களில் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

இவை அனைத்தும் போலீசின் கிரிமினல் மூளையில் உருவானதுதான் என்பது உலகம் அறிந்த, நாடறிந்த உண்மை என்ற போதிலும், நாட்டின் நலனுக்காக! போராடுகின்ற மக்களின் நலனுக்காக! குரல் கொடுக்கின்ற சமூக செயல்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேல் வாடிக் கொண்டுள்ளனர்.!

‘இந்தியாவின் தந்தை’ என்று கூறப்படும் ‘காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் வாரிசுகள்’ இந்திய சுதந்திரத்தை கொண்டாடுவது கேலிக்கூத்து, என்பது மட்டுமல்ல வெட்கக்கேடு!

பாசிச அதிகாரம் கையில் இருக்கும் துணிச்சலில் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள் ஆர் எஸ் எஸ் குண்டர்கள். பாசிஸ்டுகளின் அதிகாரம் வீழ்த்தப்பட்டு அதிகாரம் மக்களிடம் மாறும் போது, சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பவர்களின் உருவமும் உடலும் மாறும்.

அப்படிப்பட்ட உண்மையான தேசபக்த விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கு, மாணவர்கள்! இளைஞர்கள்! கிளர்ந்தெழுவோம் என்பது தான் 75வது போலி சுதந்திர தினத்தின் செய்தியாக புரிந்து கொள்வோம்.

  • திருச்செங்கோடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here