ன்றிய அரசின் கனரக தொழில்துறை அமைச்சக செயலாளராக இருந்த அருண் கோயல் 2022-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே அவசர அவசரமாக தேர்தல் ஆணையராக இந்திய ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்டார். தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரான ராஜீவ்குமாரின் பதவிக்காலம் 2025 பிப்ரவரியில் முடிவடைவதால் அவருக்கு அடுத்து தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்கும் வகையில் அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை எதிர்த்துப் பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

1947 அதிகார மாற்றத்திற்குப் பிறகு, வெள்ளைக்காரன் ஆண்டதால் தான் நாட்டு மக்களுக்கு கொடுமை நிகழ்ந்தது. ‘சுதந்திர இந்தியாவில்’ தேர்தல்கள் மூலம் மக்களாட்சி நிறுவப்படும். தேர்தல் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ‘நம்மவர்களால் நாடு இனி ஒரு சொர்க்கபுரியாக மாறிவிடும், பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று நாட்டு மக்களை நம்பவைக்க 1950-ல் அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின்படி தோற்றுவிக்கப்பட்டதுதான் தேர்தல் ஆணையம். அப்போது மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியை தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற ஒற்றை நியமன உறுப்பினரைக்கொண்டு உருவாக்கப்பட்டது. இதுவே இந்திய குடியரசுத் தலைவர், துணைக்கூடியரசு தலைவர், மக்களவை, மாநிலங்களை மற்றும் மாநில சட்டமன்ற, மேல்சபைக்கான தேர்தல்களை நடத்திவருகிறது.

அந்தக்காலத்தில் பழைய மன்னர்களும், பண்ணையார்களும், மிட்டா மிராசுகளும் ஆதிக்கம் செலுத்திய தேர்தல்களையும், இன்றைய திடீர் அரசியல் பணக்கார ரவுடிகள் பங்கேற்கும் தேர்தல்களையும் நடத்தி வரும் தேர்தல் ஆணையம், தேர்தல்களில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளையும், ஒட்டுக்குப் பணம் என்று மக்களையும் ஊழல்படுத்தும் அரசியல் கட்சிகளையும், பிரச்சாரங்களில் சாதி, மத, இன  வெறுப்புப் பேச்சுகளையும் கண்டும் காணாததுபோல் நடந்துகொள்ளும் தேர்தல் ஆணையத்தை மக்கள் முழுதாக நம்பாவிடினும் வேறுமாற்று இல்லாததால் தேர்தல்களை நம்பிக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் கட்டுமான சீரழிவுகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு போய் விட்டது. மக்களுக்கு நம்பிக்கைக்குரிய மாற்று ஒன்று தெரியாத நிலையில் தேர்தல் பாதையில் பயணிக்கின்றனர்.

பல்லில்லாத பாம்பாக
தேர்தல் ஆணையம்!

1950-க்குப் பிறகு இந்தியாவில் தேர்தல்கள் நடந்துவந்தாலும், தேர்தல்களில் பெரும் பணம்படைத்தவர்கள்தான் போட்டியிடமுடியும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாகப் பல்வேறு பொய்வாக்குறுதி தந்து தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் பணத்தில் மஞ்சள் குளித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகளைக் கண்டு சலித்துப்போன மக்கள் புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக செவிசாய்க்கத்  தொடங்கினர். தேர்தல்களில் ஒட்டு சதவீதம் குறைந்துவருவதைக் கண்ட ஆளும்வர்க்கம் அதன் ஆபத்தை உணர்ந்து உடனே தேர்தல் முறையில் சில சீர்திருத்தங்களை கொண்டுவந்தது.

ஒற்றை அதிகாரியின் கீழ் இயங்கிவந்த தேர்தல் ஆணையத்தை மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்து மூன்று நபர் கொண்ட தனி அமைப்பாக மாற்றியமைத்தது. அத்துடன் T.N. சேஷன் போன்ற அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் ஒரு “கறாரான” அமைப்பு, சுயேச்சையாக செயல்படும் அமைப்பு என்று மக்களிடம் பொய்பிம்பத்தைக் கட்டியமைத்து மீண்டும் தேர்தல்கள் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச்செய்தது.

இந்திய தேர்தல் ஆணையம் 1950-ல் தோற்றுவிக்கப்பட்டாலும் அரசியல் சாசனப்படி இயங்கினாலும் இதன் ஆணையர்கள் எவ்வாறு தேர்தெடுக்கப்படவேண்டும், எவ்வாறு பதவி நீக்கப்படவேண்டுமென்றோ எந்தவொரு குறிப்பான விதிகள் உருவாக்கப்படவில்லை. இதுகுறித்து பரிந்துரைகளைக் கொடுக்க நியமிக்கப்பட்ட நீதிபதி தார்குண்டே கமிட்டி-1975, தினேஷ் கோஸ்வாமி கமிட்டி-1990, சட்ட கமிஷன்-2015 போன்றவற்றின் பரிந்துரைகளும் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தன. அடுத்தடுத்து ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த அரசுகளும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

இந்த ஓட்டையை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பாசிச பாஜக தற்போது தமக்கு தோதானவர்களை ஆர்எஸ்எஸ் ஆட்களை, தேர்தல் ஆணையர்களாக நியமித்து வருகிறது. அந்த வகையில்தான் அருண் கோயலின் நியமனமும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறது.

என்றாலும் கூட தேர்தல் மூலமாக உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடு என்று காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு உள்ளது. நிலையான ஆட்சி, அடிக்கடி கவிழாத ஆட்சி போன்றவை ஏகாதிபத்தியங்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் தனது மூலதனத்தை பாதுகாக்க அவசியமாக உள்ளது. உலக வங்கி கடன் தருவதற்கே இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. இதற்கும் இந்தியாவில் கார்ப்பரேட்-காவி பாசிச ஆட்சியின் கீழ் நீடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்  முறைக்கும் நெருக்கமான உறவு உள்ளது.

தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த
உச்சநீதிமன்ற தீர்ப்பு

அருண் கோயல் நியமனம் குறித்தான வழக்குகளை கடந்த மார்ச் மாதத்தில் விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, “அரசாங்கத்திற்குக் கடமைப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒருவரால் சுதந்திரமான மனநிலையில் செயல்பட முடியாது” “தேர்தல் ஆணையம் சுதந்திரமான நியாயமான முறையில் செயல்படக் கடமைப்பட்டிருக்கிறது, அது அரசியல் சாசனத்தின் கட்டமைப்புக்குள்ளும் விதிகளுக்குட்பட்டும் செயல்பட வேண்டும்.” “அரசியல் சாசன சட்டத்தை வகுத்தவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் வகுக்க வேண்டும் என்று கூறி அப்பொறுப்பினைக் கொடுத்துச் சென்றனர். ஆனால் அந்த அமைப்புகள் அந்நம்பிக்கையை உடைத்துவிட்டன. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளாக இச்சட்டம் உருவாக்கப்படவில்லை” என்று கூறி, “நாடாளுமன்றம் இதற்கான தனிச்சட்டத்தைக் கொண்டு வரும் வரையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்” என்று தீர்ப்பளித்தது.

உடனே தடாலடியாக காரியத்தில் இறங்கிய பாஜக உடனடியாக தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் தேர்வுக்குழு உறுப்பினர்களாக பிரதமர், மக்களவை எதிர்கட்சித் தலைவர், மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதில் பிரதமரால் நியமிக்கப்படும் ஒன்றிய கேபினெட் அமைச்சர் இருப்பர் என்று திருத்தம் செய்துள்ளது. இதன்மூலம் தனக்கு சாதகமானவர்களை, ஆர்.எஸ்.எஸ். முன்மொழிபவர்களை தேர்தல் ஆணையர்களாக வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.

தேர்தல் ஆணையத்தையும்
விட்டுவைக்காத பாசிஸ்டுகள்!

பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு குழு, தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற தன்னாட்சியுள்ள அமைப்புகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அந்தவரிசையில் தற்போது தேர்தல் ஆணையத்தையும் கைப்பாவையாக்கி மக்களின் குறைந்தபட்ச நம்பிக்கையாக சித்தரிக்கப்படும், நேர்மையான தேர்தல் என்பதையும் சிதைத்துள்ளது. இந்திய மக்கள் தமது அதிகபட்ச அரசியல் நடவடிக்கையாகவும், ஜனநாயகம் எனவும் நம்பும் தேர்தலில் ஓட்டுபோடுவதை பாசிச பாஜக தற்போது கேலிக்கூத்தாக்கியுள்ளது.

ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளா கியிருக்கும் சூழ்நிலையில், உலகின் முன்னேறிய நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டுக்கு தடைவிதித்திருக்கும் நிலையில், பாஜகவின் இத்தகைய நடவடிக்கை ஆட்சி மாற்றம் குறித்தான மக்களின் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பையும் பொய்க்கச் செய்வதாக உள்ளது. நாட்டு மக்கள் தமக்கு எதிராகத் திரும்புவதைப் பற்றியும், எதிர்க்கட்சிகள், இடதுசாரி இயக்கங்கள், தலித் அமைப்புகள் தமக்கு எதிராக ஒன்றிணைவதைக் கண்டு பதறும் பாசிஸ்டுகள் தனது தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள இறுதியாக தேர்தல் ஆணையத்தையும் விழுங்கப்பார்க்கிறது.

இதையும் படியுங்கள்:

  ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் முன்னே! ஒரே கட்சி ஒரே அதிபர் வரும் பின்னே!
  தொழிலாளர்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

ஆட்டம்காணும்
பாசிஸ்டுகளின் இருப்பு!

தொடர்ந்து அம்பலமாகிவரும் அதிரவைக்கும் மெகா ஊழல்களாலும்,  பார்ப்பன மதவெறி பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது, மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலாலும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வருகிறது. மணிப்பூர், ஹரியானா கலவரங்களிலாலும், அதிகரித்திருக்கும் வேலையின்மை, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்படும் கடன்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வின்மூலம் நாள்தோறும் நடக்கும் பல்லாயிரம் கோடி சுரண்டல் என்று தனது மக்கள் விரோதப் போக்குகளால் மக்களின் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. மோடி தலைமையிலான கும்பல் வரும் 2024 -ஆம் (?) ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் என்னசெய்தாவது, நாடுதழுவிய கலவரம், அல்லது 9 ஆண்டுகளாக விலையேற்றி கொள்ளையடித்துள்ள சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்தோ, எப்பாடுபட்டாவது வெற்றிபெற்றேயாக வேண்டும் என்று கடும் முனைப்பில் உள்ளது.

மோடியின் இந்த குறளிவித்தைகளுக்கு மயங்கி மீண்டும் பதவியில் அமர்த்திவைத்துவிட்டால் பின்னர் இந்த தேர்தல் ஆணையம், ஆணையர்களின் தேவையே இருக்கப்போவதில்லை. ஆம், இனி தேர்தல்கள் நடந்தால்தானே!

நாட்டின் சுதந்திரமான அமைப்புகளாக இதுநாள்வரைக்கும் நம்பவைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு நிறுவனத்தையும் அரித்துத்தின்று ஏப்பமிட்டுக்கொண்டிருக்கும் பாசிச பாஜக-வின் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்!. பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியையும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியையும் கட்டியமைத்து ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை முற்றாக அரசியலில் இருந்தே விரட்டியடிப்போம்! அடுத்து அமையும் ஜனநாயக கூட்டரசில் பாஜக-வின் ஏவல்துறைகளாக மாற்றப்பட்டுள்ள தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளை சுயேச்சையாக இயங்குகின்றவைகளாக மறுநிர்மாணம் செய்வோம்.

  • மதியழகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here