ஒன்றரை ஆண்டு சிறைவாசம்: சமூக செயற்பாட்டாளர் உமர் காலித்துக்கு பிணை மனு நிராகரிப்பு!


டந்த வெள்ளிக்கிழமை (26/03/2022) அன்று தில்லி நீதிமன்றத்தில் உமர் காலித்துக்கு பிணை கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. உமர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ”இந்த வழக்கு சித்திரிக்கப்பட்ட கற்பனையான வழக்கு” என்று வாதிட்டார். வாட்சப் ”ஆதாரம்” இருப்பதாக அரசு தரப்பு கூறியது. அரசு சொன்ன ”ஆதாரத்தை” நீதிமன்றம் நம்பி, பிணை வழக்கை மீண்டும் தள்ளுபடி செய்தது.

சிஏஏ சட்டத் திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியில் கடந்த 2020-ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவிப்படை குண்டர்கள் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து கலவரத்தை உண்டாக்கினார்கள். வாகனங்களை கொளுத்தினார்கள். கடைகளை சூறையாடினார்கள். மசூதியை உடைத்தார்கள். சாட்சிகள் இருக்ககூடாதென சிசிடிவிக்களை காவல்துறையினரே அடித்து நொறுக்கினார்கள். மக்கள் எதிர்த்து போராடினார்கள். அந்த சம்பவத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

டெல்லியில் நடந்த வன்முறையில் கொல்லப்பட்டவரின் மகன் அழும் காட்சி!

இந்த கலவரத்துக்கு முன்பு, பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டத்தை காவல்துறை மூன்று நாட்களில் அகற்றவேண்டும் என வெளிப்படையாக பேசினார். இவரைப் போலவே நாடு முழுவதும் அமைதியான முறையில் போராடி வரும் மக்களை ஒடுக்கவேண்டும் என அதிகாரத்தில் இருக்கும் பாஜக ஆட்கள் தொடர்ந்து வெறியூட்டி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

உண்மை நிலவரம் இப்படியிருக்க, கலவரம் செய்த காவிப்படைகளை விட்டுவிட்டு, கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டார்கள் என பொய் குற்றம்சாட்டி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரும் சமூக செயற்பாட்டாளர் உமர் காலித் உட்பட பலர் மீது ஊபா (Unlawful Activities (Prevention Act – UAPA) ஆள்தூக்கி கருப்புச் சட்டம் உட்பட பல பிரிவுகளில் வழக்கு தொடுத்து சிறையில் வைத்துள்ளார்கள். கொரானா காலத்தில் கொத்து கொத்தாய் மக்கள் செத்த பொழுது, சிறையிலும் கொரானாவால் பலரும் பாதிக்கப்பட்டார்கள். இறந்தார்கள். அப்பொழுது கூட பிணை வழங்கவில்லை. சிறையிலேயே செத்தால் கூட பரவாயில்லை என்று தான் அரசு நினைத்தது.

இப்படித்தான் எல்கர் பர்ஷித் வழக்கில் கைதாகி, உடல்நிலை மோசமான நிலையில் சமூக செயற்பாட்டாளர் ஸ்டான்சாமிக்கு 84 வயதிலும், பிணை தராமல் இழுத்தடித்தது. மனித உரிமை ஆணையம் உரிய மருத்துவ சிகிச்சை குறித்து பேசிய பொழுது, அவர் சிறையிலேயே செத்தே போனார். உலகமே காறித்துப்பினாலும் அரசு வெட்கமே இல்லாமல் துடைத்துக்கொண்டது.

படிக்க:

ஃபாதர் ஸ்டேன் சாமியின் மரண சாசனம்!

சிறைக் கம்பிகளுக்குள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், அனுபவம்.

2018ல் பீமா கோரேகானில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை ஒட்டி, இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும், அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து குரல் கொடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர்கள் வரவரராவ், பேராசிரியர் சாய்பாபா, சுதா பரத்வாஜ், ஆனந்த் தெல்தும்டே என பலரையும் சதி வழக்கில் கைது செய்தனர். ஆண்டுகள் கடந்தும் இன்னும் பலர் சிறையில் வாடுகிறார்கள். சிறையில் கிட்டத்தட்ட இறந்துவிடுவார் என எல்லோரும் பயந்துகொண்டிருந்த நிலையில் தோழர் வரவரராவை தற்காலிகமாக சிறையில் இருந்து மீட்டனர்.

சிறையிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள்

நடப்பது காவி கார்ப்பரேட்டுகள் ஆட்சி! அவர்கள் கொண்டு வருகிற எந்த நாசகர திட்டத்தையும் மக்களோடும் இணைந்து அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களை ஏதாவது ஒரு சதி வழக்கில் சிறைப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். 2016ல் காலித் சொன்னது நினைவுக்கு வருகிறது. ”சிறையில் இருப்பதற்காக வெட்கப்படவில்லை. சிறையில் இருக்கவேண்டியவர்கள் எல்லாம் அதிகாரத்தில் இருந்தால்,, அந்த ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் எல்லாம் சிறையில் தான் இருப்பார்கள்”. (”I am not ashamed that I was in jail. Criminals are those who are in power, those in jail are the ones who raise their voice”) இந்தியாவில் அது தான் நடந்துகொண்டிருக்கிறது.

பெரும்பாலான மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை சிறையில் வைத்தால், போராட்டங்கள் குறைந்துவிடும் என பாசிஸ்டுகள் நினைக்கிறார்கள். இதோ நாடு முழுவதும் இரண்டு நாள் பந்த் நடக்கிறது. தொழிலாளர்களும், விவசாயிகளும், மாணவர்களும் வேலையை செய்ய மறுத்து, தெருவில் இறங்கி போராடுகிறார்கள். பாசிஸ்டுகளால் என்ன செய்துவிட முடியும்? எல்லோரையும் சிறையில் வைத்துவிடமுடியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here