காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலைக்கு காரணம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அதாவது ஆசாத் காஷ்மீரில் உள்ள தீவிரவாத குழுக்கள் தான் என்றும், அவற்றின் மீது ‘கற்பனைக்கு எட்டாத வகையில்’ தாக்குதல் தொடுக்கப்படும் என்று பீகார் தேர்தலின் முதல் கட்ட பிரச்சாரத்தில் பாசிச மோடி அறிவித்தார்.
அவரது அறிவிப்பை சர்வதேச ராணுவ நிபுணர்கள் அவதானித்து, இந்தியா ஆசாத் காஷ்மீரை கைப்பற்றுகின்ற வகையில் பாகிஸ்தானின் மீது தாக்குதல் தொடுக்கும் என்று முன்வைத்தனர். “மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் ரூடாகி நகரில் இந்திய விமானப் படையின் ரகசிய தளம் உள்ளது. அங்கு சுகோய் ரக போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த தளத்தில் இருந்து பாகிஸ்தானின் மேற்கு, வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம்”. என்றும் கூறினர்.
அதே காலகட்டத்தில் ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா தனது எதிரிக்கு மின்சார நாற்காலி தண்டனையை நிறைவேற்ற திட்டமிடவில்லை. மாறாக எதிரியின் கழுத்தை சுற்றி நீளமான கயிறால் இறுக்கி வருகிறது’ என்று கூறினார்.
இவையெல்லாம் விவாதிக்கப்பட்டு வந்த சூழலில் இந்தியா பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், பாகிஸ்தானின் ராணுவ கேந்திரங்களிலும் ஏழு இடங்களில் ஒரே நேரத்தில் துல்லிய தாக்குதல் நடத்தியது என்று அறிவித்தது.
அந்தத் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டில் தனது செல்வாக்கையும், அதிகார மிருக பலத்தையும் அதிகரித்துக் கொள்வதற்கு பாசிச ஆர் எஸ் எஸ் பாஜக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.
தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய ஏழு குழுக்களை உலகம் முழுவதும் அனுப்பி தாக்குதலுக்கான காரணம் அதன் நியாயம் ஆகியவற்றை எடுத்துரைத்து வருகிறது.
இந்த சூழலில்.டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “ஒன்றிய அரசு தன் உத்தி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான பதிலை மறுவடிவமைப்புடன் மறுவரை செய்துள்ளது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் நம்முடையவர்கள். அவர்களை நம் குடும்பத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறேன்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இந்தியாவுடன் ஆழமான தொடர்பை உணர்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இந்தியா எப்போதும் இதயங்களை இணைப்பது பற்றி மட்டுமே பேசுகிறது.
அன்பு, ஒற்றுமை, உண்மையின் பாதையில் நடப்பதன் மூலம் நம் சொந்த பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் திரும்பி வந்து, நான் இந்தியா, திரும்பி வந்து விட்டேன் என சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று ஆர்எஸ்எஸ் பாஜகவின் திட்டத்தை வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க ஏழு எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் சார்பில் 10 நாட்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ராஜ்நாத் சிங் சொன்னதை வேறு வார்த்தையில் முன் வைத்துள்ளார். “ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிற்கு திருப்பி அளிக்க வேண்டும்” என்று பேசியது மட்டுமின்றி பாஜகவின் தீவிர ரசிகராகவே மாறிவிட்டார்.
“370 வது சட்டப்பிரிவு காரணமாக காஷ்மீர் தனிப்பகுதி என்ற தவறான கருத்து நிலவி வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது இதன் மூலம் தவறான கண்ணோட்டத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் 65% மக்கள் வாக்களித்தனர். தற்போது காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
சுற்றுலா தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் காஷ்மீர் வேகமாக முன்னேறி வருகிறது. சாலை, ரயில் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரின் வளர்ச்சியை பிடிக்காத சிலர் 370 ஆவது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். இது மிகவும் துரோகஷ்டவசமானது.
இந்திய குடும்பத்தில் காஷ்மீரும் ஒரு அங்கம் இந்த குடும்பத்திலிருந்து காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது. காஷ்மீரில் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும். அந்த பகுதியை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கக்கூடாது உடனே நிறுத்த வேண்டும்” என்று சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இந்திய தேசிய ஒற்றுமை என்ற பெயரில் தேசிய வெறியூட்டுவதில் ஆளுங்கட்சியான ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு தாங்கள் ஒருபோதும் சளைத்தவர்கள் அல்ல என்று எதிர்க்கட்சிகளான காங்கிரசு, திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேசபக்தி பீறிட்டு ஒழுக பேசி வருகின்றனர்.
“காஷ்மீரில் உள்ள தேசிய இனமான காஷ்மீரி இனத்தின் விருப்பத்திற்கு இணங்க பொது வாக்கெடுப்பு நடத்தி அதில் வருகின்ற முடிவுகளின் அடிப்படையிலேயே இந்தியாவுடன் இணைப்பதோ அல்லது பாகிஸ்தானுடன் இணைப்பதோ அல்லது தனி நாடாக நீடிப்பதோ செய்யப்பட வேண்டும்” என்ற ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுகிறது.
காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்பது ஏதோ புதிதாக தற்போது உருவாகியுள்ளதைப் போல காங்கிரசு கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் மாறி மாறி பேசி வருவதன் மூலம் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு வழங்கிய உரிமைகளை பறித்தது சரியானது தான் என்ற கருத்தை உருவாக்குகின்றனர்.
படிக்க:
🔰 ”திரங்க யாத்ரா” தேசபக்தி பஜனையில் ஒன்றிணையும் எதிர்க் கட்சிகள்!
கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஆசிய நாடுகளில், குறிப்பாக பாகிஸ்தானில் பலூச்சி, இலங்கையில் ஈழம், இந்தியாவில் காஷ்மீர், நாகா போன்ற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய போராட்டமாக பரிணமித்த காரணத்தினால் அவை கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது. ஏகாதிபத்திய முதலாளித்துவ கார்ப்பரேட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் அகண்ட சந்தைக்காக ஒரே நாடாக மாற்றப்பட்டு வருகிறது.
ஆளும் வர்க்கங்கள் முன்னெடுத்துள்ள இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கண்ட நாடுகளில் உள்ள தேசிய இனங்களின் அடிப்படையில் வாழ்கின்ற மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தங்களது அடக்குமுறைகள் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளதைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் குதுகலித்து வருகின்றனர் .
இந்தியாவைப் பொறுத்தவரை ஆளும் வர்க்கங்களின் தொழில் துறை கூட்டமைப்பான ஃபிக்கி அமைப்பானது இந்தியா எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இப்போதே முன்வைக்க துவங்கி விட்டது..
காஷ்மீரிலும் சரி! மத்திய இந்தியாவில் பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்படுகின்ற ராணுவ தாக்குதல்களிலும் சரி! அதற்கு எதிராக ஏற்படப் போகின்ற எதிர்ப்புகள் மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047 ஆம் ஆண்டுக்குள் 5 மடங்காக அதிகரிக்கலாம் என்றும், அப்போது ராணுவத்துக்கு செலவு செய்வதில் உலகில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா மாறும் எனவும், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25 ஆம் ஆண்டில் 1.6 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047 ஆம் ஆண்டில் 8 புள்ளி 8 லட்சம் கோடியாக உயரும்.
இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி 30,000 கோடியாக உள்ளது. இது 2.8 லட்சம் கோடியாக உயரும் அப்போது ராணுவ தளவாடத்துறையில் உலகளாவிய விநியோகஸ்தராக இந்தியா இருக்கும்.
இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தற்போது 6.8 லட்சம் கோடியாக உள்ளது இது 2047 ஆம் ஆண்டுக்குள் 31.7 லட்சம் கோடியாக உயரும் ராணுவத்துக்கு செலவிடுவதில் தற்போது நாலாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, மூன்றாவது பெரிய நாடாக உருவெடுக்கும்.” என்று பட்டியலிட்டு விட்டு இதனை சாதிப்பதற்கு தனியார் மூலதனத்தை அதாவது இந்தியாவை கொள்ளையடிக்கின்ற கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தை ராணுவ தளவாட உற்பத்தியில் அனுமதிக்க வேண்டும் என்றும் ஆலோசனையாக உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் தனித்தனியானவை போன்று தோன்றினாலும், ஆர்எஸ்எஸ் பாஜக தீர்மானித்துள்ள அகண்ட பாரதம், இந்துராஷ்டிரம் என்ற, “ஒரே நாடு ஒரே அதிபர், ஒரே கட்சி” என்பதை நோக்கிய கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத ஆட்சியை நிரந்தரப்படுத்துகின்ற நோக்கமாகவே உள்ளது.
இதனை புரிந்து கொண்டு இந்தியாவின் பாட்டாளி வர்க்கம் ஒருங்கிணைந்த முறையில் எதிர்த்து முறியடிப்பதற்கும், வீழ்த்துவதர்க்கும் போராட வேண்டும்.
- மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி