திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை இடிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தை மதக்கலவரங்களின் பூமியாக மாற்றத் துடிக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படை முருகனை தனது துணையாக கொண்டு செயல்படுகிறது.
”கடப்பாறைகளுடன், செங்கல்லுடன் அயோத்தியில் திரள்வோம், 400 ஆண்டு கால அவமானத்தை துடைத்தெறிவோம்!’ என்று முழங்கிய ஆர்எஸ்எஸ் பாஜக தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து பார்ப்பன (இந்து) மத வெறியை மக்கள் மத்தியில் ஊட்டியது.
நாடு முழுவதும் இருந்த புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இதனை எதிர்த்து போராடுவதற்கு ஒன்றிணைந்த பார்வையில் பார்ப்பன (இந்து) மதத்திற்கு எதிரான போர் தொடுக்கின்ற கண்ணோட்டத்தில் போராட தயங்கியதாலும், தவிர்த்ததாலும் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதை போலவே திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை இடிப்பதற்கு பிரச்சாரம் செய்கிறார்கள் பார்ப்பனப் பாசிச பயங்கரவாதிகள்.
இதனை எதிர்த்து முறியடிப்பதற்கு பார்ப்பன (இந்து) மதத்தை எதிர்த்துப் போராடுவதும் வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து, வர்க்கப் போராட்டத்தின் நலனுக்கு இசைந்த வகையில் போராட்டங்களை கட்டியமைப்பது மட்டும்தான் இத்தகைய அபாயத்தை தடுத்து நிறுத்த முடியும்.
மத நல்லிணக்கம் வேண்டும் என்ற பிரச்சாரத்தின் மூலமாக பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராக நமது போரை துவங்குவோம். இந்த நல்லிணக்கம் என்பது ஏற்கனவே சமூகத்தில் பல மதங்களை பின்பற்றும் மக்களிடையே இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை புதிதாக உருவாக்க வேண்டியது இல்லை என்றாலும். அதை திட்டமிட்டு பார்ப்பன பாசிஸ்டுகள் உடைக்கிறார்கள். எனவே அவர்களை எதிர்த்து முறியடிப்பதன் மூலம் தான் நல்லிணக்கத்தை பாதுகாக்க முடியும் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.
பார்ப்பன பாசிசம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துக் கொண்டு அடியோடு வீழ்த்தப் போராட வேண்டும். இதை சாதிப்பதற்கு பார்ப்பன மதத்திற்கும், பிற மதங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை தெளிவாக வரையறுத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
”மதத்திற்கு எதிரான கல்வி புகட்டும் நூல்கள் கேடு விளைவிக்கக் கூடியவை அல்லது தேவையற்றவை என்ற அர்த்தமா? இல்லை அப்படி ஒன்றும் இல்லை இதன் அர்த்தம் என்னவென்றால் சமூக ஜனநாயகத்தின் நாத்திகப் பிரச்சாரம் அதன் அடிப்படை கடமைக்கு அதாவது சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிரான சுரண்டப்படும் மக்கள் திரளின் வர்க்க போராட்டத்திற்கு வளர்க்கும் கடமைக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும்” என்று ஆசான் லெனின் போதிக்கின்றார்.
அது மட்டுமல்ல! ”முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான நாசகரமான சக்திகளின் தயவில் உள்ள மக்களுடைய உள்ளங்களில் இருந்து மதத்தை வெறும் கல்வி புகட்டும் புத்தகங்களின் மூலமாக மட்டுமே நீக்கிவிட முடியாது. இந்த மக்களே எழுச்சியுற்று மதத்தின் மூல வேர்களை எதிர்த்துப் போராட கற்றுக் கொள்ளும்போது தான், ஒன்றுபட்ட அமைப்பு ரீதியாக திட்டமிட்ட உணர்வு பூர்வமான வழியில் முதலாளித்துவ ஆட்சியின் சகல வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு கற்றுக் கொள்ளும் போது தான் மக்களுடைய உள்ளங்களில் இருந்து மதத்தை துடைத்தெறிய முடியும்” என்றும் முன் வைக்கிறார். இதுதான் அறிவியல் பூர்வமான கண்ணோட்டமும் வழிமுறையுமாகும்.
90-களில் இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் இந்திய சமூக அமைப்பில் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையின் மீது கொடூரமான தாக்குதல்களை தொடுத்துள்ளது; வாழ்வை நெருக்கடியாக்கி இருக்கிறது; உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை, படிக்க கல்வி, போதிய சுகாதாரம் உள்ளிட்ட பொருளாதாய வாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது; வேலை நேரத்தை 8 மணியிலிருந்து குறைந்தபட்சம் 12 மணி நேரமாக மாற்றியுள்ளது; குடும்பத்தில் இருந்து பாச உறவுகளை, உணர்ச்சிகளை பிரித்து வைத்துவிட்டது; இயல்பான மனித உணர்ச்சிகள் அனைத்தையும் படிப்படியாக ஒழித்துக் கட்டி, தன்னலம் மிக்க வாழ்க்கையில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கின் காரணமாக பாசிசத்தை ஆதரிக்கும் மனோபாவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இத்தகைய சூழலில் பார்ப்பன (இந்து) மதம் புதிய அவதாரத்தை மேற்கொள்கிறது. பார்ப்பன மதம் இப்போது பயங்கரவாதமாகவும், பார்ப்பன பாசிசமாகவும் உருவெடுத்துள்ளது. இந்த பார்ப்பன (இந்து) மதம் பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த அடிப்படையில் அப்படியே இருக்கிறது என்று புரிந்துக் கொண்டால் பாட்டாளி வர்க்கம் தோற்றுப் போகும்.
படிக்க:
🔰 திருப்பரங்குன்றத்தை கலவர குன்றாக்க முயலும் காவிகள்!
🔰 மத நல்லிணக்கத்திற்கு துணை நிற்போம்! பார்ப்பன மதவெறி க்கு கொள்ளி வைப்போம்!
பார்ப்பன மதம் இயல்பிலேயே நல்லிணக்கத்திற்கு எதிரானது. சாதிய ரீதியாக மக்களை பிளவுபடுத்தி சாதிய அடக்குமுறைகளை ஏவுவது மட்டுமின்றி மண்ணின் பூர்வ குடி மக்களை தீண்டத்தகாதவர்கள் என்றும், இழிவானவர்கள் என்றும் ஒடுக்குமுறையை ஏவுகிறது. மத நூல்களும், மதப்பிரசங்கிகளும் இதனை நியாயப்படுத்துகின்றனர்.
இதனால் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் வேண்டும் என்பதை முன் வைத்து நமது பிரச்சாரத்தை முடித்துவிடக் கூடாது. ஏனென்றால் நல்லிணக்கம் கோரி பேசுபவர்கள் இந்துக்கள்- இசுலாமியர்கள் இருவருமே தவறு புரிகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பிரச்சாரங்களை மேற்கொள்வதால் அது பார்ப்பன மதத்தின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கே உதவுமே தவிர அதனை முற்றாக வீழ்த்துவதற்கு உதவாது என்பதையும் புரிந்துக் கொள்வோம்.
மத கடவுள் நம்பிக்கைகளுக்கு மூலவேராக உள்ள பொருள் உற்பத்தி முறை அதன் அரசியல் தந்திரம் ஆகியவற்றை எதிர்த்து வர்க்கப் போராட்ட நடைமுறையில் மக்களை தலைமை தாங்கி நடத்துவதும், அதோடு இணைந்து வர்க்க ஒற்றுமைக்கு ஊறு ஏற்படாத வகையில் நாத்திகப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில் பார்ப்பனியத்தை வீழ்த்துவதுவதற்கு சமூக நீதிக்கான போராட்டத்தையும், தேசிய இன விடுதலைப் போராட்டத்தையும் மதத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.
”மதத்தைப் பொறுத்தவரை மேற்கட்டுமானத்தில் ஒரு கூறாக உள்ள எல்லா மதங்களையும் எதிர்த்த நமது போராட்டத்தில் இந்த மார்க்சிய வரையறையின்படியே செயல்படுகிறோம். ஆனால் பார்ப்பன (இந்து) மதம் மேற்கட்டுமானத்தின் ஒரு கூறாக மட்டுமல்ல அதை விட தலையாயமாக உற்பத்தி உறவுகளாக, அடித்தளமாக பொருளுற்பத்தி முறையாக இருக்கின்றது. எனவே பார்ப்பன (இந்து) மதத்திற்கு எதிரான நமது போராட்டம் அரசியல், பொருளாதாரப் போராட்டங்களோடு இணைந்த வர்க்கப் போராட்டமாகவும் உள்ளது.
இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தை-சாதிய அடுக்கு முறை மற்றும் ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து நமது போராட்டம் இருக்கும்.
எனவே பார்ப்பன (இந்து) மதத்திற்கு எதிராக பகிரங்கமான போர் தொடுப்பது (பொதுவாக மதத்திற்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்வது அராஜகம் என்பது மார்க்சிய நிலைப்பாடு) நமது கடமை என்று பிரகடனம் செய்கிறோம்; (வேறு எந்த மதத்திற்கு எதிராகவும் இவ்வாறு போர் பிரகடனம் செய்ய மாட்டோம்.)
பார்ப்பனியத்தை சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தை வர்க்க போராட்டத்திற்கு இணையாகவும் துணையாகவும் நாம் நடத்துவோம்; அக மணமுறையை ஒழித்து கலப்புத் திருமணங்கள் செய்வது, தனிக் குடியிருப்பை ஒழிப்பது, தீண்டாமையை ஒழிப்பது, வெட்டிமைத் தொழிலை ஒழிப்பது போன்ற போராட்டங்களை திட்டமிட்டு உருவாக்கி நடத்துவோம். சாதிய வர்ண ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் வேதங்களை, புராணங்களை, தெய்வங்களை உருவப்படங்களை பகிரங்கமாக தீயிட்டு கொளுத்துவோம்.
ஏற்கனவே பார்ப்பனமயமாகியுள்ளவற்றை, இதோடு சேர்த்து சமஸ்கிருதமயமாகியுள்ள வற்றை ஒழித்து தேசிய இன மரபை நிலைநாட்டுவோம். புதிய பார்ப்பனிய பழக்க வழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றை எதிர்த்து போராடுவோம். வானொலி, வானொளி உட்பட அரசு நிறுவனங்களில் உள்ள பார்ப்பனிய பழக்க வழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவோம்.
இவ்வாறு செய்வதால் சிலரது மனம் புண்படுவது கூட நடக்கலாம். ஆனால் இது தவிர்க்க முடியாது. பருண்மையாக மார்க்சியத்தை பிரயோகித்தால் மேற்சொன்னவாறு செய்வது தவிர்க்க முடியாததாகும்”. என்று பார்ப்பன (இந்து) மதத்தின் மீதான போராட்ட அணுகு முறையை பற்றி கால் நூற்றாண்டு காலமாக புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகிறது.
2003 ஆம் ஆண்டிலேயே மதம் ஒரு மார்க்சிய பார்வை என்ற நூலின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் பார்ப்பன மத எதிர்ப்பு ஏன் அவசியம் என்பதை பற்றி வலியுறுத்தி இந்திய பொருள் முதல்வாத வரலாறு என்பது நாத்திக மரபையும் உள்ளடக்கியது என்பதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது.
திருப்பரங்குன்றத்தை காப்பது என்பது தமிழகத்தின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக் கும், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு மரபு ஆகியவற்றை பாதுகாப்பதுடன் தொடர்புடையது, மற்றொரு வகையில் நாட்டை மறுகாலனியாக்க முயல்கின்ற கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிப்பதுடன் தொடர்புடையது என்பதால் திருப்பரங்குன்றத்தை பார்ப்பன மத வெறியர்களிடமிருந்து பாதுகாப்பது முக்கியத்துவமானது என்றே கருதுகிறோம்.
திருப்பரங்குன்றத்தை பாதுகாப்பது என்பது வர்க்க போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். பார்ப்பன மதம் இயல்பிலேயே வர்க்க போராட்டத்திற்கும், சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதால் அதில் சீர்திருத்தம் கோருவதோ, அத்தகைய போராட்டங்களை ஊக்குவிப்பதோ, நாட்டார் தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தி பார்ப்பன மதத்தை முறியடிக்க முயற்சிப்பதோ, பார்ப்பன பாசிஸ்டுகளை வீழ்த்த அறைகூவதற்கு பதிலாக நல்லிணக்கம் வேண்டும் என்பதை முதன்மைப்படுத்துவதோ கேடான எதிர் விளைவுகளை உருவாக்கும்.
பார்ப்பன மதத்தை கூர்மையான முழக்கங்களை முன் வைத்து முறியடிக்க போராடாவிட்டால் பார்ப்பன பாசிஸ்டுகள் அரசு கட்டமைப்பையும், அரசு இயந்திரத்தில் உள்ள பார்ப்பன பாசிச சக்திகளையும் பயன்படுத்திக் கொண்டு நமது பிரச்சாரத்தை முடக்குவார்கள்; படிப்படியாக மக்கள் மத்தியில் பார்ப்பன மதவெறி கருத்துகளை பரப்பி தனது நோக்கத்தை சாதிப்பதற்கு முயற்சிப்பார்கள் என்பதை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிரச்சாரமாக கொண்டு செல்வோம். இத்தகைய பிரச்சாரத்தை படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி தமிழகத்தை பார்ப்பன எதிர்ப்பு கோட்டையாக,மாற்றுவோம். கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு தமிழகத்தை தளப்பிரதேசமாக்குவோம்.
இந்த கண்ணோட்ட்த்திலிருந்து ”:குன்றம் காப்போம், மதவெறி தவிர்ப்போம்’ என்ற போராட்டத்தை முன்னேடுப்போம். மாநாடு, அதன் பின்னர் மக்கள் ஒற்றுமையை பறை சாற்றும் பல கட்ட முயற்சிகளுடன் பார்ப்பன பாசிஸ்டுகளை விரட்டியடிக்கும் வகையிலான களப் போராட்டங்களுக்கு மக்களை திரட்டுவோம்.
- கரட்டுப்பட்டியான்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி