உ.பி.யில் மீண்டும் புல்டோசர்: கழிப்பறை காகிதம் ஆகிவிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு !

சாலை விரிவாக்கத்திற்கு இஸ்லாமியர்களின் வீடுகள் வழிபாட்டு தலங்கள் மட்டும்தான் தடையாக இருக்குமா? இந்துக் கோயில்கள் இருக்காதா? என்றெல்லாம் கேள்வி கேட்டால் அவர்கள் ஆன்ட்டி இந்தியன்கள்.

1
180 ஆண்டுகள் பழமையான நூரி ஜமா மசூதி காவி கும்பலால் இடிக்கப்படுகிறது

சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு குற்றவாளிகளை தண்டிக்க அதிகாரிகளே குடியிருப்புகளை இடிப்பது ‘சட்டவிரோதமானது. ஒருவேளை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனில் சட்டபூர்வமாக அணுக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்படும் ‘புல்டோசர் நீதி’ என்பது குறித்து பேசவில்லை என்பதை மக்கள் அதிகாரம் ஊடகம் விமர்சித்திருந்தது‌.

அந்த நீதிமன்ற உத்தரவின் வழிகாட்டுதல்களைக்கூட  கழிப்பறை காகிதமாகவே ‘மதிக்கிறது’ யோகி அரசு என்பதை உத்தரபிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள 180 ஆண்டுகள் பழமையான நூரி ஜமா மஸ்ஜித் மீது புல்டோசர் நடவடிக்கை அதை நிரூபித்துள்ளது.

நூரி ஜமா மஸ்ஜித்தின் பெரும்பகுதி செவ்வாய்கிழமையன்று மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டது.

சாலை விரிவாக்கமா இஸ்லாமிய வெறுப்பா?

பண்டா சாகர் சாலையில், லாலௌலி நகரில் அமைந்துள்ள இந்த மசூதியின்  புதிய ஆக்கிரமிப்பை சுட்டிக்காட்டி இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அகற்றாததால் இடிக்கப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இடிக்கப்பட்ட பகுதி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பண்டா பஹ்ரைச் சாலையில் மசூதியை விரிவுபடுத்துவதற்காக கட்டப்பட்டது, இது சாலையின் விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்தது. மசூதியை இடிக்க பொதுப்பணித்துறை ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் கொடுத்தது என்கிறது NDTVயின் பதிவு. அதற்கெதிராக அந்த பகுதி முஸ்லிம் மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, தனது  முந்தைய ஆட்சியைக் காட்டிலும் மூர்க்கமாக புல்டோசர்களை ஏவி வருகிறார்.

அதுவும் குறிப்பாக  இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள்தான் யோகியால்   குறிவைக்கப்படுகின்றன. சில இடங்களில்  தாழ்த்தப்பட்டவர்களும் தாக்குதல் இலக்காகின்றனர்.

அயோத்தியில் ஏற்கனவே சட்ட விரோதமாக பாபர் மசூதியை இடித்து, சட்டப்படியே ஆக்கிரமித்துக் கொள்ளும் உரிமையை நீதிமன்றத்தின் மூலமும் வாங்கி, ராமர் கோயிலையும் அவசர அவசரமாக கட்டி திறப்பு விழாவையும் நடத்தி விட்டனர் காவி பாசிஸ்டுகள் .


படிக்க: பாபர் மசூதி இடிப்பு கடப்பாரையுடன் தொடங்கவில்லை!


இதன் தொடர்ச்சியாகவே புல்டோசர் தாக்குதல்களை பார்க்க வேண்டி உள்ளது. லக்னோவில் உள்ள அக்பர் நகரில் மட்டும் 1800 வீடுகளை இடித்துத் தள்ளி சுமார் 35 ஆயிரம் மக்களை வீடற்றவர்களாக நடுத்தெருவில் நிறுத்தியது யோகி அரசு. ஆசியாவிலேயே இங்குதான் அதிக வீடுகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரால் இடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காவிப் பாசிஸ்ட்டுகள் சட்டங்களையோ நீதிமன்ற உத்தரவுகளையோ மதிக்க தயார் இல்லை என்பதையும், சட்டப்படியான வழிமுறைகளை பயன்படுத்தி தேர்தல் மூலம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டே, நடைமுறையில் சட்ட விரோதமாக பாசிச சர்வாதிகாரத்தை திணித்து வருவதையும் காண்கிறோம்.

இனி இஸ்லாமியர்களின் வீடுகளோ, கடைகளோ, பெட்ரோல் பங்குகளோ, வழிபாட்டுத்தளங்களோ இவை எதுவாக இருந்தாலும்  காவிகளுக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காகவே தரைமட்டமாக போகிறது. இந்தப் பட்டியலில் நாளை காவிப் பாசிஸ்டுகளை எதிர்த்து கேள்வி கேட்கும், விமர்சிக்கும் அனைவருமே சேர்க்கப்படுவார்கள். அனைவரின் வீடுமே தரைமட்டமாக்கப்படும்.

சாலை விரிவாக்கத்திற்கு இஸ்லாமியர்களின் வீடுகள் வழிபாட்டு தலங்கள் மட்டும்தான் தடையாக இருக்குமா? இந்துக் கோயில்கள் இருக்காதா? என்றெல்லாம் கேள்வி கேட்டால் அவர்கள் ஆன்ட்டி இந்தியன்கள்.

அவர்களின் கூற்றுப்படியே நாம் அனைவரும் “ஆன்ட்டி இந்தியன்களாகவும், அர்பன் நக்சல்களாகவும், அந்நிய கைக்கூலிகளாகவும்” மாறுவோம். நாடு தழுவிய அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் எதிர்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் காவிக் கும்பலின் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான ஒன்றிணைவை கட்டியமைப்போம். காவிப் பாசிஸ்டுகளின் புல்டோசர் நடவடிக்கைகள் நேரடியாக களத்தில் எதிர்கொண்டு முறியடிப்போம்.

வாழ்விட உரிமை, வழிப்பாட்டு தல உரிமை, மத உரிமை  உள்ளிட்டவற்றைக் கொண்ட குறைந்தபட்ச ஜனநாயகத்தை நிலைநாட்ட  கார்ப்பரேட்  – காவிப்  பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைந்துப் போராடுவோம்.  காவிக்கும்பலை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிவோம்.

  • இளமாறன்

1 COMMENT

  1. ஆக்கிரமிப்பு என்ற பெயரால், திட்டமிட்டு இஸ்லாமியர்களின் கடைகள் வீடு, மசூதி இடிக்கப்படுகிறது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பை கூந்தல் அளவு கூட மதிக்கவில்லை யோகி அரசு.

    இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு வகையில் மக்களும் காரணமாக இருக்கிறார்கள். மதம், மொழி, சாதி, இனம் வாரியாக பிரிந்துக் இருப்பது தான். இவற்றைக் கடந்து ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் போது பகுதியில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here