
தேர்தல்களில் என்னென்ன வகைகளான தில்லுமுல்லுகளை பாஜக செய்கிறது? இதனை எப்படித் தான் முறியடிப்பது?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறிப்பாக மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் உறுதியாக பாஜக தோல்வியை தழுவும் என்ற கருத்தினை அகில இந்திய அளவிலும் குறிப்பாக அந்தந்த மாநில மக்கள் மத்தியிலும் அழுத்தம் திருத்தமான நம்பிக்கை இருந்தது. ஏனெனில் அந்த அளவிற்கு அம் மாநில மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு அலங்கோலமான சர்வாதிகார ஆட்சி நிர்வாகம் நிகழ்ந்ததை மக்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தனர் அப்படி இருந்தும் இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றியை பெற்றது. அரியானாவில் பல தில்லுமுல்லுகள் நடந்திருந்ததை ஆதாரபூர்வமாக
தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் முறையீடுகள் செய்தன. ஆனால் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் காங்கிரசுக்கு இப்படி குறை சொல்வதே வாடிக்கையாகி போய்விட்டது என்று ஒரு கட்சி நிலைபாட்டில் இருந்து கருத்துத் தெரிவித்தார். அவரது பதில் அகில இந்திய அளவில் கண்டனங்களுக்கு உள்ளாகின.
பிரச்சனைகள் உச்சநீதி மன்றம் வரை சென்று கூட ஒட்டடையைப் போல ஒதுக்கித் தள்ளப்பட்டது. அந்த அளவிற்கு அனைத்து நிறுவனங்களும் காவிமயமாகிவிட்டன.
வாக்குச் சாவடிகளில் நிகழ்பவைதான் என்ன?
இது பற்றி நாம் மட்டுமல்ல பாசிச பாஜகவை வீழ்த்த நினைக்கும் அனைத்து திமுக சார்ந்த கூட்டணியும், ஜனநாயக சக்திகளும், அறிவு ஜீவிகளும், கட்சி முன்னணி செயல்வீரர்களும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர் (Proceeding Officer) ஒருவர், போலிங் ஆபிஸர்கள் (Polling Officers 1, 2… என பணியில் இருப்பர். வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அமர வைக்கப்பட்டு இருப்பர்.
வாக்குச்சாவடியில் இந்த மின்னணு இயந்திரம் அதாவது EVM என்று அழைக்கப்படும் Electronics Voting Machineஎன்பது மூன்று இயந்திரங்களை உள்ளடக்கியதாகும். 1) CU என்று அழைக்கப்படும்Control Unit…இது போலிங் ஆபிசர் எண்.3-ன் பொறுப்பில் இருக்கும். 2) BU அதாவது Ballot Unit என்பதாகும். 3) VVPAT என்ற இயந்திரமாகும். இந்த 2 மற்றும் 3 ஆகியன தான் மறைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
போலிங் ஆபிசர் எண்.1 வரிசையில் வரும் வாக்காளர்களின் பெயர் மற்றும் வரிசை எண்ணை சரி பார்த்து டிக்கடிப்பார். வாக்குச்சாவடி முகவர்கள் காதில் படும்படியும் சற்றே உரத்த குரலில் அறிவிக்கவும் செய்வார். பின்பு வாக்காளருக்கு போலிங் ஆபிசர் – 2 விரலில் மை வைத்து அனுப்புவார். அதன் பிறகு போலிங் ஆபிஸர் -3, மேலே கூறிய CU என்ற Control Unit botton-ஐ அழுத்தி வாக்காளரை மறைவிடத்திற்குச் சென்று வாக்களிக்க வழி காட்டுவார்.
வாக்காளர் வாக்களிக்க வேண்டிய மறை விடத்தில் உள்ள BU எனப்படும் Ballot Unit-ல் சிவப்பு லைட் எரிகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, தான் விரும்பும் சின்னத்தை அழுத்தி தமது வாக்கினைச் செலுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தி உடனேயே வாக்காளர் அவ்விடத்தை விட்டு நகரக் கூடாது; தான் அளித்த வாக்கு குறிப்பிட்ட சின்னத்திற்கே அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதனை அருகில் உள்ள VVPAT ஸ்கிரீனில் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின் நீங்கள் அளித்த வாக்கு அந்த இயந்திரத்திற்குள் சென்று விழுந்து விடும். இதனைத் தான் ஒப்புகை சீட்டு இயந்திரம் (VVPAT )என்றும் கூறுவார்கள்.
உதாரணமாக நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்த பின்னர் VVPAT ஸ்கிரீனில் உதயசூரியனுக்குப் பதிலாக தாமரைச் சின்னம் தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனடியாக வாக்குச்சாவடி அதிகாரியிடம் கண்டிப்பாக புகார் அளிக்க வேண்டும். ஆட்சேபனையைப் பதிவு செய்ய வேண்டும். உங்கள் வாக்குச்சாவடி முகவர்களிடமும் புகார் அளிக்க வேண்டும். வெளியில் நிற்கும் கட்சிக்காரரிடமும் இதனை பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வாக்குச்சாவடி அலுவலர் தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து அவர் உரிய வாக்குச்சாவடிக்கு வருகை தந்து சோதனைக்குப் பின் உண்மை புலப்பட்டு விட்டால் வாக்கு இயந்திரத்தை (புது EVM) மாற்றி வழங்குவார். அதன் பின் ஆரம்பம் முதல் தேர்தல் துவங்கப்படும். கால நீட்சியும் வழங்கப்படும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் பகுதி வாக்குச்சாவடியில் கூட இப்படிப்பட்ட தில்லுமுல்லுகள் நடைபெற்று வாக்கு இயந்திரம் தேர்தல் அதிகாரியால் மாற்றி அளிக்கப்பட்டது என்பதும் கண் கூடு. இப்படிப்பட்ட தில்லு முல்லு மற்றும் முறைகேடுகளை வட மாநிலங்களில் சர்வ சாதாரணமாக சங்கி கூட்டம் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் கையாள்வதை வாடிக்கையாகக் கொண்டே தொடர் வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள். வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல்; வாக்காளர்களை விரட்டி அடித்து வாக்குச்சாவடியை கைப்பற்றி சங்கிக் கூட்டம் தமது கட்சிக்கு வாக்குகளைப் போட்டு நிரப்புவது என்பதெல்லாம் அங்கே சர்வ சாதாரணம். சாதாரண ஏழை எளிய வாக்காளர் உழைக்கும் மக்கள், மாட்டு மூத்திரம் குடிக்கும் – மாட்டுச் சாணத்தினைத் தின்னும் காலி சங்கிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ஓடி ஒளிந்து விடுவார்கள். இதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும்.
படிக்க:
♠ தேர்தல் முடிவுகளும், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமைகளும்!
இதுவன்றி வாக்களிக்கும் நேரம் முடிந்தவுடன் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து அந்த வாக்குச்சாவடியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு? (உதாரணமாக 1000) வாக்களித்தோர் எண்ணிக்கை எவ்வளவு?(உதாரணமாக 750) போன்ற விவரங்களை எல்லாம் 17(A) என்ற படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து தமது கையொப்பம் உட்பட பல்வேறு கட்சிகளின் முகவர்களின் கையொப்பத்தையும் வாக்குச்சாவடி அதிகாரி பெற்றுக் கொள்வார். அதன் நகல்களை முகவர்களுக்கும் வழங்குவார். வழங்காவிடில் முகவர்கள் கேட்டுப் பெற வேண்டும். EVM உட்பட அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட வேண்டிய நகரின் கல்லூரி அல்லது பள்ளிகளில் ஒப்படைப்பதற்கான வகையில் மண்டல அலுவலர்கள் (Zonal Officers) வாக்குச்சாவடிகளுக்கு வந்து பெற்றுச்சென்று உரிய இடத்தில் உரிய அலுவலர்களின் பார்வையின் முன்பாக வைத்து விடுவர்.
பிறகு வாக்கு எண்ணிக்கை நிகழும் நாள் அன்று ஒவ்வொரு கட்சியின் முகவர்களும் வாக்குப்பதிவு நாளன்று பெறப்பட்ட 17(A) விண்ணப்பத்துடன் அமர்ந்து, சீலிடப்பட்ட EVM ஒழுங்கான முறையில் இருக்கிறதா? என்பதனையும் வாக்கு எண்ணுகின்ற பொழுது 17 (A) படிவத்தில் குறிப்பிடப் பட்டபடியான பதிவான வாக்குகள் மட்டும் உள்ளனவா? அல்லது கூடவோ குறையவோ உள்ளனவா என்பதை எல்லாம் முகவர்கள் சரிபார்த்து அதில் பிழை இருந்தால் வாக்கு எண்ணும் அலுவலரிடம் உடனடியாக முறையீடு செய்து, தேர்தல் நடத்தும் அதிகாரி (Returning Officer) கவனத்திற்கு கொண்டு செல்லச் செய்ய வேண்டும்.
வாக்குப் பெட்டிகள் சம்பந்தப்பட்ட கட்டிடங்களில் ஒப்படைக்கப்பட்ட பின் சில முறைகேடுகள் நடக்கின்றன என்பதாக உணர்ந்துதான் பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவான எண்ணிக்கையை விட பல்லாயிரக்கணக்கில் கூடுதலாக எண்ணப்படுவதும் பல்லாயிரக்கணக்கில் குறைவாக எண்ணப்படுவதும் நிகழ்கின்றன என்பது வடநாட்டு அனுபவமாக இருக்கிறது. இன்னும் சில இடங்களில் 500 முதல் 1000 வரை நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவினர் பல தொகுதிகளில் வென்றிருப்பதெல்லாம் இப்படிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதால் தான்.
ஆக பாசிச பாஜக கூட்டணியை வீழ்த்திட சபதம் எடுத்துக் கொண்டிருக்கக் கூடிய அனைத்து கட்சிகளும் முதலில் தமது தொண்டர்களுக்கு – களப் பணியாளர்களுக்கு மேற்கண்ட முழு விவரங்களையும் கற்பித்துக் கொடுக்க வேண்டும். போதிய பயிற்சி அளிக்க வேண்டும். அவர்கள் தத்தம் கிராமங்களில், வார்டுகளில், நகரங்களில் உள்ள மக்களிடம் வீடு வீடாகச் சென்று தெளிவுபடுத்திக் கூற வேண்டும். அப்பொழுது மட்டுமே இந்த ஏமாற்றுக்காரர்களான பாசிச பாஜக கும்பலை வீழ்த்த முடியும்.
படிக்க:
♠ தேர்தல் தில்லுமுல்லு! மின்னணு (EVM) வாக்கு இயந்திர மோசடியும்…. வாக்குச்சீட்டு முறைக்கான கோரிக்கையும்
♠ ரிமோட் கண்ட்ரோல் வாக்கு எந்திரம்! தேர்தல் ஜனநாயகத்தில் மற்றுமொரு மோசடி!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உட்பட 40-க்கு 40 திமுக கூட்டணி இதே EVM வாக்கு இயந்திரத்தைப்பயன்படுத்தி வெற்றி பெறவில்லையா? என்ற இறுமாப்பில் ஆளுங்கட்சியோ கூட்டணி கட்சிகளோ மிதப்பில் இருந்து விட முடியாது. பாசிஸ்டுகள் தமிழ்நாட்டு மக்களின் புத்திக் கூர்மையை ஓரளவு புரிந்தே வைத்துள்ளனர்.
எனினும் அவர்கள் எக்காலத்திலும் அப்படி மோசடிகளில் ஈடுபடவே கூடாது என்ற எண்ணத்தில் நீடித்து இருந்து விட மாட்டார்கள்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்து” – என முழங்குவோம்!
இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்த மேலை நாடுகளில் எல்லாம் கூட EVM வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும்; தில்லுமுல்லுகளைத திணிக்க முடியும் என்பதை உணர்ந்ததால் தான் அவர்கள் எல்லாம் கூட மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலில் வாக்களிக்கும் முறையை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் கூட ஓரிரு நாட்களுக்கு முன்பு EVM மோசடி குறித்து அம்பலப்படுத்தி நேர்காணலில் கருத்து பதிவிட்டிருந்தார். பலர் இதனை demonstration மூலமாகவும் நிரூபித்துக் காட்டிக் கொண்டுள்ளனர். ஓரிருவராக இருந்தாலும் மதுரை நந்தினி, ஆனந்தன், குணா போன்றோர் இதற்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
எனவே இந்திய நாட்டிலும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுப்பது சாலச் சிறந்தது!
அதையும் கூட தமிழ்நாட்டில் இருந்தே துவங்கலாம்!
மாநில தன்னாட்சிக்காகப் போராடுவோம்!
எப்படியாயினும் தமிழ்நாட்டில்வெற்றி பெற்றே தீர வேண்டும்; கால் பதித்தே ஆக வேண்டும் என்று வெறிகொண்டு முடிவாற்றிக் கொண்டு விட்டால், அவர்கள் சாம- பேத -தான- தண்டம் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அனைத்து மோசடிகளிலும் இறங்கி வெற்றிவாகை சூடுவார்கள்.
இவற்றை தமிழ்நாட்டு மக்கள் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கணக்கில் எடுத்துக்கொண்டு காரியம் ஆற்ற வேண்டும் என்பதே நமது பேரவா.
தமிழ்நாட்டு மக்களின் தன்னாட்சி உரிமை, இந்தித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, கல்விக்கு நிதி தர மறுப்பு, சமநிதி பங்கீகட்டிற்கு மறுப்பு, வக்ப் சட்ட திருத்த திணிப்பு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற ஒற்றைச் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முனைந்து நிற்பது… இப்படி எண்ணிலடங்கா உயிராதாரப் பிரச்சனைகளை ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு மக்கள் மீது தாங்க முடியாத தலைச்சுமையை ஏற்றிக் கொண்டிருக்கும் பொழுது, இவை எதுபற்றியும் கவலைப்படாமல் எடப்பாடி, செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், பாமக, கிருஷ்ணசாமி, சசிகலா, சீமான், விஜய்… இன்ன பிற அப்பட்டமான பிழைப்புவாத சுயநல சக்திகள் அனைத்தும் காவிக் கூட்டத்திடம் சரண்டர் ஆகிக் கிடைக்கின்ற பொழுது, தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிக் கூட்டத்தை வீழ்த்த நினைக்கும் அனைத்துவித ஜனநாயக சக்திகளும் தத்தம் வேறுபாடுகளை சற்றே ஓரம் கட்டி விட்டு ஒரே இலக்கோடு பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்தோடு ஓரணியில் திரள வேண்டிய தருணம் இது.
- எழில்மாறன்






