தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதும் மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டதால் தான் வாக்குப்பதிவு எந்திரத்தில் தேர்தல் நடத்தப்படக் கூடாது; மீண்டும் பழைய முறை, அதாவது பேலட் பேப்பரில் முத்திரை குத்தி வாக்குப்பெட்டியில் வாக்குகளை போடும் முறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று மிகப் பரவலாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் விவி பேட்-ல் அச்சாகி உள்ள காகித வாக்குகளையும் எண்ணி ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால் இத்தகைய சந்தேகங்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் விவி பேட்-ல் பதிவான வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டிய அவசியம் இல்லை; ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவி பேடுகளை எண்ணினால் போதும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதத்தில் தீர்ப்பளித்து விட்டது. அதாவது தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு நாட்டு மக்களுக்கு உச்ச நீதிமன்றம் உபதேசம் செய்தது.
இப்பொழுது வெடித்து நாறிக் கொண்டிருக்கிறது வாக்குப்பதிவு இயந்திரத்தின் யோகியதை. நாட்டில் மொத்தம் 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 140 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகளில் பெருமளவு வித்தியாசங்கள் இருந்துள்ளன.
140 க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தேர்தலில் பதிவான வாக்குகளை விட அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இந்த வாக்கு வித்தியாசம் 2 முதல் 3,811 வாக்குகள் வரை அதிகமாக இருந்துள்ளன.
அதேசமயம் சில தொகுதிகளில் தேர்தலில் பதிவான வாக்குகளை விட குறைவான வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. இப்படி குறைந்த வாக்குகளின் எண்ணிக்கை சில தொகுதிகளில் 16,791 வாக்குகள் ; 10,760 வாக்குகள் ; 9,427 வாக்குகள் என்ற அளவிற்கு இருந்துள்ளன.
தேர்தல் நடத்தப்பட்ட 543 தொகுதிகளில் 140 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதாவது 25 % தொகுதிகளில் குளறுபடி நடந்துள்ளது தற்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது.
மக்கள் அளித்த வாக்குகளின் எண்ணிக்கை இந்த அளவிற்கு கூடவோ குறையவோ முடியும் எனில் மக்கள் அளித்த வாக்குகள், மக்களின் விருப்பத்திற்கு மாறாக, கட்சி மாறி பதிவாகியிருக்க வாய்ப்பு இல்லை என்று நேர்மையானவர்கள் யாரும் கூற மாட்டார்கள்.
தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையிலான வித்தியாசங்கள் என்பது கடந்த தேர்தல்களிலும் இருந்துள்ளன. இந்தத் தேர்தலிலும் அதுவே தொடர்கதையாக உள்ளன. இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலமாக தேர்தல் நடத்துவது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்பதுதான் வெளிப்படையாகத் தெரியும் உண்மை. பிஜேபியின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் இப்படி வெளிப்படையாகவும் அயோக்கியத்தனமாகவும் செயல்படுவதற்கு இனிமேலும் தயங்கப் போவதில்லை.
தேர்தல் நடைமுறைகளின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது தற்பொழுது நகைப்பிற்குறியதாக மாறிவிட்டது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து, நீதியை நிலைநாட்ட வேண்டும். உச்சநீதிமன்றம் அதைச் செய்யப் போவது இல்லை. எனவேதான் உச்ச நீதிமன்றம் என்பது தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்துள்ளது என்ற விமர்சனம் மக்களால் வைக்கப்படுகிறது.
படிக்க:
♦ ‘ஜனநாயக’த்தை மறுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் !
♦ பாசிச பாஜகவின் தேர்தல் வெற்றியும், நமது வேலைகளும்!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது குறித்து ஆதாரப்பூர்வமாக செய்திகள் இப்பொழுது வெளி வந்துவிட்டன. ஆனால் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து எதுவும் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை.
பிஜேபி வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது; இனி தேர்தலே நடக்காது; பாசிசம் வந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் மக்களிடையே பிரச்சாரம் செய்ததெல்லாம் எதற்காக? நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவா? அல்லது பிஜேபியை தோற்கடித்து தாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக மட்டுமா?
இந்திய நாட்டில் பெயரளவிலான ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் இந்தத் தேர்தல் மோசடிக்கு எதிராக போராட வேண்டும். முதல் கட்டமாக, இனி வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்பதை உத்தரவாதம் செய்யவேண்டும். இதை எதிர்க்கட்சிகள் தானாக முன்வந்து செய்யப் போவது இல்லை. உச்ச நீதிமன்றமும் நீதியை நிலைநாட்ட எதுவும் செய்யப் போவது இல்லை.
எதிர்க்கட்சிகளையோ, உச்ச நீதிமன்றத்தையோ நம்பிப் பயனில்லை. ஜனநாயகத்தைக் காக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதை தவிர வேறு வழி எதுவும் இல்லை.
— குமரன்
கட்டுரை இறுதியில்,
…”பிஜேபி வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது; “…
…”இந்திய நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் இந்தத் தேர்தல் மோசடிக்கு எதிராக போராட வேண்டும். “..
“பெயரளவிலான ஜனநாயகம்” என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். வெறுமனே ஜனநாயகம் எழுதுவது சரிதானா?
கட்டுரை இறுதியில்,
…”பிஜேபி வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது; “…
…”இந்திய நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் இந்தத் தேர்தல் மோசடிக்கு எதிராக போராட வேண்டும். “..
“பெயரளவிலான ஜனநாயகம்” என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். வெறுமனே ஜனநாயகம் என்று எழுதுவது சரிதானா?
உங்களின் கேள்வி சரியானதே பிழைகளை திருத்தாமல் பதிவிட்டது தவறு என ஏற்கிறோம். சரி செய்கிறோம்.