- மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் உள்ளிட்ட முன்னணித் தோழர்கள் படுகொலை! தியாகத் தோழர்களுக்கு எமது சிவப்பு அஞ்சலி!
- நக்சல் ஒழிப்பு வேட்டையில் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கனவு பலிக்காது!
கடந்த 2024 ஜனவரியில் துவக்கப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கு எதிரான, ’ஆப்ரேஷன் காகர்’ என்ற பெயரிலான அழித்தொழிப்பு நடவடிக்கைகள் கடந்த மே 21ஆம் தேதி உச்சக்கட்டத்தை அடைந்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர், பிஜப்பூர், தண்டோவாடா மாவட்டங்களின் அருகில் உள்ள அபுஜ்மத்-காரேகுட்டா மலைப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவம் மற்றும் உள்ளூர் போலீஸ், அரசு உளவுப்படை, அமைப்பிலிருந்து வெளியேறி துரோகிகளான உளவாளிகள் ஆகியவற்றினால் சுற்றி வளைக்கப்பட்ட மாவோயிஸ்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் மற்றும் மக்கள் விடுதலை கொரில்லா இராணுவத்தின் (PLGA) முன்னணித் தோழர்கள் 35 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மார்க்சிய லெனினிய குழுக்களில் ஆயுதமேந்தி போராடுகின்ற மாவோயிஸ்டு அமைப்பின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலானது, இந்தியப் புரட்சிகர அரசியலின் மீதும், நக்சல்பாரி புரட்சியாளர்கள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் ஆகும்.
இந்தியாவில் நிலவி வருகின்ற அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பிற்கு எதிராக புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் சோசலிசத்தை நோக்கி முன்னேறுகின்ற மகத்தான புரட்சிப் போரில் மாவோயிஸ்டுகள் முன்வைக்கின்ற ஆயுதப் போராட்ட வழிமுறையின் மீது புதிய ஜனநாயகத்திற்கு விமர்சனங்கள் உள்ள போதிலும், அந்த தோழர்களின் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்கள், இராணுவத்தின் மூலம் நடத்தப்படும் படுகொலைகள் ஆகியவற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது; சகித்துக் கொள்ள முடியாது.
“சீன மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்றுவது நமது கடமையாகும். நமது போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கு போராட்டம் இருக்கிறதோ அங்கு தியாகமும் இருக்கும். இறப்பு என்பது பொதுவான நிகழ்ச்சியாகும். ஆனால் மக்களுடைய நலன்களையும் மிகப் பெரும்பான்மையானவர்களுடைய துன்பங்களையும் இதயத்தில் வைத்திருக்கின்றோம்.
நாம் மக்களுக்காக சாகும் பொழுது அது போற்றத்தக்க சாவாகிறது. எனினும் தேவையற்ற தியாகங்களை தவிர்ப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். நமது ஊழியர்கள், ஒவ்வொரு படை வீரர்களுக்கும் அக்கறையை காட்ட வேண்டும். புரட்சிகர அணிவரிசைகளில் உள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும், ஒருவருக்கு ஒருவர் உதவவும், ஒருவரோடு ஒருவர் அக்கறை செலுத்தவும் வேண்டும்.
இப்பொழுதிலிருந்து நமது அணி வரிசைகளில் உள்ள எவரொருவரும் ஓரளவுக்கு பயனுள்ள பணியை செய்துவிட்டு இறக்கும் பொழுது அவர் படைவீரராக அல்லது சமையல்காரராக இருக்கட்டும். அவரை கௌரவிக்கும் வகையில் ஈமச்சடங்கையும், நினைவுக் கூட்டத்தையும் நடத்த வேண்டும். இது விதியாக மாற வேண்டும். மக்களிடையேயும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். யாராவது ஒருவர் கிராமத்தில் இறக்கும் பொழுது நினைவுக் கூட்டம் நடத்தவும், இறந்தோருக்கு இவ்வழியில் நமது துக்கத்தை தெரிவித்து, அனைத்து மக்களையும் ஒன்று படுத்துகிறோம்” என்று, ”மக்களுக்குத் தொண்டு செய்க” என்று கம்யூனிஸ்டுகளுக்கு அறைகூவல் விடுக்கிறார் தோழர் மாவோ. இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சிப் போரில் சமரசமின்றி போராடி உயிர்துறக்கும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் முதல் பழங்குடி மக்கள் வரை இந்த கண்ணோட்டத்திலேயே அணுகி அஞ்சலி செலுத்துவோம்.
படிக்க:
🔰 மாவோயிஸ்டுகள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்: உண்மை நோக்கம் என்ன?
🔰 மாவோயிஸ்டுகள்- பழங்குடிகள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! ஜூன் 5 பொதுக்கூட்டம்
வாழ்க்கைப் போராட்டத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் கம்யூனிஸ்டுகளை பற்றி புரிந்து வைத்திருப்பது என்ன? அவர்கள் சுயநலன் பாராது, பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்ற உன்னதமான, ’அதிசய மனிதர்கள்’ என்பதுதான்.
இத்தகைய ’அதிசய மனிதர்கள்’ தங்களுடைய நலனை இரண்டாம் பச்சமாகவும் மக்களுடைய நலனை முதல் கடமையாகவும் கொண்டு செயல்படுகின்றனர் என்பதினால்தான் இழப்பு, தியாகங்களுக்கு அவர்கள் ஒருபோதும் அஞ்சுவதில்லை.
மே 21 கொல்லப்பட்ட தோழர் நம்பல கேசவராவ் என்று அழைக்கப்படும் தோழர் பசவராஜ் வீட்டிலிருந்து வெளியேறி 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனை, ’தலைமறைவு வாழ்க்கை’ என்று ஆளும் வர்க்கங்களும், அரசியல் ஆய்வாளர்களும் முன்வைக்கின்றார்கள்.
கம்யூனிஸ்டுகள் தனது குடும்பத்தில் இருந்தும், தான் வாழ்ந்து வந்த இடம் மற்றும் நகரத்திலிருந்து இடம்பெயர்கிறார்களே தவிர மக்களிடமிருந்து அவர்கள் எப்போதும் விலகிச் செல்வதில்லை. மக்களுக்கு ’தலைமறைவாக’ வாழ்வதில்லை. நான்கு நாட்கள் குடும்பத்தை விட்டு பிரிவதற்கே தயார் இல்லாத இன்றைய இந்திய சமூக அமைப்பில் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்று, மக்களின் விடுதலைக்காக போராடி உயிரையே தியாகம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாய்களால் தேடுதல் வேட்டைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட தோழர்களின் பிணங்களைக் கூட அவர்களது உறவினர்களுக்கு கொடுப்பதற்கு அஞ்சுகிறது ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசாங்கமும், அவர்களின் கொலைகார படைகளான இராணுவமும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மக்களுக்காக நின்று பிரிட்டன் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய பகத்சிங்கை தூக்கிலிட்ட பிறகு ரகசியமாக கொண்டு சென்று ஈமச்சடங்கை நடத்தி முடித்ததை போலவே தோழர் பசவராஜின் ஈமச்சடங்கையும் நடத்தி முடித்து இருக்கிறார்கள்.
இந்த இடத்தில் தான் இருக்கிறார் என்பதை அந்தக் கட்சியிலேயே இருந்த ரிக்கி என்ற துரோகியின் மூலமாக காட்டிக் கொடுக்கப்பட்டதாக மாவோயிஸ்டுகளின் பத்திரிக்கைச் செய்தி வெளியாகி உள்ளது. வரலாற்றில் துரோகிகள் எப்போதும் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது தான் இந்த சம்பவத்திலிருந்து நாம் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய வீரபாண்டிய கட்டபொம்பனை காட்டிக் கொடுத்த எட்டப்பனும், சிறிது காலத்திற்கு சலுகைகளை பெற்று வாழ்ந்து வந்த போதிலும், மக்களால் இழிவாக கருதப்பட்டான். இன்று வரை துரோகத்தனத்தின் அடையாளமாகவும் சித்தரிக்கப்படுகிறான்.
அதேபோல சமகாலத்தில் ஈழத்தில் நடந்த சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் களத்தில் நின்று போராடிய விடுதலைப் புலிகளின் தலைமையை காட்டிக்கொடுத்த கருணா போன்ற துரோகிகளின் வாழ்வு தற்போதைக்கு இனித்துக் கொண்டிருந்தாலும் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் துரோகிகள் என்றால் கருணா போன்றவர்கள் என்பதை ஒருபோதும் மறுக்கவே முடியாது.
துரோகத்தினால் தற்காலிக இழப்புகள் ஏற்படலாம். ஆனால் புரட்சிகர போராட்டத்தையும் மக்களின் மீது புரட்சியாளர்கள் வைத்திருக்கின்ற மாறாத அன்பையும், காதலையும் ஒருபோதும் துரோகம் தடுத்துவிட முடியாது.
இந்தியா முழுவதும் உள்ள கனிம வளங்களையும், காட்டுவளங்களையும் இன்ன பிற மக்களின் சொத்துக்களையும், அம்பானி, அதானி, அகர்வால், மிட்டல், ஜிந்தால் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி கொடுப்பதில் தடையாக உள்ள அனைத்து போராளிகளையும், மாவோயிஸ்டுகள், நகர்ப்புற நக்சல்கள் என்று பெயரிட்டு, முத்திரைக் குத்துவதன் மூலம் அவர்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கிறது இந்திய ஆளும் வர்க்க கும்பல், சட்டப்பூர்வமான வாய்ப்புகளை பயன்படுத்தி சிறையில் அடைப்பது அல்லது சட்டவிரோதமான வழிமுறைகளில் படுகொலை செய்வது என்பதையே ஒரு கீழ்த்தரமான வழிமுறையாக கையாண்டு வருகிறது பாசிச ஆர்எஸ்எஸ்- பாஜக அரசு.
அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் வேட்டைக்காடாகவும், தங்கு தடையின்றி இந்தியாவின் செல்வங்களையும், இந்தியாவில் உள்ள உழைப்பு சக்தியையும் கைப்பற்றிக் கொள்வதற்கு எந்த தடையும் இல்லாமல் மாற்றியுள்ளது ஆர்எஸ்எஸ்-பாஜக. அதுமட்டுமின்றி உலகின் மிகப்பெரும் வாங்கும் சக்தி கொண்ட, ’ஒரே நாடு, ஒரே சந்தையை’ உருவாக்குவது என்பதையும் தனது குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் புரட்சிகர அமைப்புகளும், புரட்சியாளர்களும் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.
இந்த தருணத்தில் மற்றொரு அம்சத்தையும் முன் வைக்கிறோம். இந்தியப் புரட்சிகர விடுதலைப் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் முன்வைக்கின்ற ஆயுத சாகச வழிமுறையானது பல்வேறு பின்னடைவுகளையும், எதிர்ப்புரட்சி சக்திகளை வளர விடுவதிலும்தான் கொண்டு முடியும் என்பதை 70-களில் இறுதியில் இருந்தே முன்வைத்துக் கொண்டிருந்தாலும், அதனை சிறிதும் செவிமடுக்காமல் செயல்படுகின்ற மாவோயிஸ்டுகளின் வழிமுறையும் இத்தகைய பலிகளுக்கு காரணமாக உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
மாவோயிசம் என்ற பெயரில் மக்கள் செம்படையை கட்டுவதற்கு பதிலாக ஆயுத மோகம் கொண்ட இளைஞர்களை ஒன்று திரட்டி சாகச வழிமுறையை முன்வைத்து, சீனாவின் லின்பியோ மற்றும் தென் அமெரிக்கா கண்டத்தின் சேகுவாரா, பூக்கோ முன்வைத்த நகர்ப்புற கொரில்லா வாதம் என்ற வழிமுறையை காடுகளிலும், மலைகளிலும் நீடித்ததன் காரணமாக எண்ணற்ற தோழர்கள் சரணடைவதும், சிலர் துரோகிகளாக மாறுவதும், காலனுக்கஞ்சாத நெஞ்சுரத்துடன் தோழர்கள் பலியாவதும் என்ற ஒரு சோகமான முடிவை மாவோயிஸ்டு இயக்கம் அடைந்துள்ளது.
மாவோயிஸ்ட் அமைப்பானது தனது பொதுச்செயலாளர் பசவராஜ் உள்ளிட்ட தோழர்களின் மரணத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பாரிய அனுபவங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு தனது செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம். அரசியல் போராட்டம் என்பதை முன் நிபந்தனையாகக் கொண்டு, அரசியல் போராட்டத்தின் நீட்சியாக ஆயுதப் போராட்டத்தை கட்டமைப்பதுதான், மக்கள் திரள் பாதையில் செந்தளப் பிரதேசத்தைக் கட்டமைப்பதை நோக்கி முன்னேறுவதுதான் இந்தியா போன்ற ஜனநாயகம் வளராத அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ நாடுகளுக்கான அரசியல், இராணுவப்பாதை என்பதை மீண்டும் முன் வைக்கின்றோம்.
கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதிகள், தரகு முதலாளிகள், தேசங்கடந்த தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தினராலும், அவர்களின் ஏவல் நாய்களான இராணுவம் மற்றும் போலீஸ், உளவுப்படை, இயக்கத்தில் உருவான துரோகிகள் கூட்டமைப்பிலான கொலைகாரப் படையினரால் கொல்லப்பட்ட தோழர் நம்பல கேசவராவ் என்கிற தோழர் பசவராஜ் உள்ளிட்ட தோழர்களுக்கும், அவர்களோடு அரணாக நின்று ஆளும் வர்க்கத்திற்கு எதிராக சமர்புரிந்த பழங்குடி மக்களுக்கும் உலகம் முழுவதுமுள்ள கம்யூனிச புரட்சியாளர்களும், துருக்கி, வங்கதேசம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட கம்யூனிச கட்சிகளும் தனது வீர வணக்கத்தையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர், அவர்களுடன் இணைந்து புதிய ஜனநாயகம் எமது சிவப்பு அஞ்சலியை செலுத்துகிறது.
(புதிய ஜனநாயகம் ஜூன் 2025)
◾ஜூன் மாத தலையங்கம்
தோழர் பசவராஜ் தியாகம் மலையைவிட கனமானது கார்ப்பரேட் கைகூலிகள் மற்றும் தூரோகிகளால் 35 தோழர்கள் பலியானது உண்மையில் கருப்பு தினம் தான்
தோழர் பகத்சிங் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததால் உடல் யாருக்கும் தராமல் தீ வைக்கப்பட்டார்.
தோழர் பசவராஜ் உள்ளிட்டோர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற சொல்லக் கூடிய நாட்டில் கொடூரமாக ராணுவத்தால் தீ வைக்கப்பட்டுள்ளார் என்பது நாம் அனைவருக்ககுமான பிரச்சினை இதற்கு நாம் மக்கள் போராட்டங்கள் மூலம் அஞ்சலி செலுத்துவோம்.