அக்டோபர்-16, பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி தூக்குக் கயிற்றில் தொங்கிய மாவீரன் கட்டபொம்மன் நினைவு தினம் இன்று.
’சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்’ என்று பெருமையடித்துக்கொண்ட பிரிட்டன் இந்தியாவிற்குள் நுழைந்த போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் தனது வணிக காலனியாக இந்தியாவை மாற்றியது. பிரிட்டனின் முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக அது உருவாக்கிய பண்டங்களை விற்பனை செய்கின்ற சந்தையாக காலனியாக இரண்டாவது கட்டத்தில் கையாண்டது. படிப்படியாக பிரிட்டனின் நிதி மூலதனம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் நிதி மூலதன ஏற்றுமதியை இந்தியாவிற்கு கொண்டு வந்து ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தின் கீழ் சுரண்டி வந்தது.
இத்தகைய கொடூரமான சுரண்டல் தன்மை கொண்ட காலனியாதிக்கத்தின் துவக்க காலகட்டத்திலேயே எதிர்த்துப் போராடிய வீரம் செறிந்த மரபு தென்னிந்தியர்கள் மரபு. காலனி ஆட்சியாளர்களை குலை நடுங்க வைத்த கான்சாகிப் மருதநாயகம் முதல் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், தீரன் சின்னமலை, ராணி வேலு நாச்சியார், கோபால் நாயக்கர், வீரன் அழகுமுத்துக்கோன் போன்றவர்கள் மட்டுமின்றி சிறந்த தளபதிகளாக விளங்கிய ஒண்டிவீரன், வென்னி காலாடி, வீரன் சுந்தரலிங்கம், போன்ற வீரர்களை பெற்றெடுத்த மண் தமிழகம்.
கேரளத்தில் கேரள வர்மா பழசி ராஜா, கர்நாடகத்தில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள், குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் போன்ற அனைவரும் காலனியாதிக்கத்தின் அடிமைத்தனத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தமானவர்களாகவும், பல ஊர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பணக்காரர்களாகவும் வாழ்ந்து வந்த போதிலும் நாட்டுப்பற்றுடன் காலனியாதிக்க அடிமைத்தனத்தை எதிர்த்து போராடியது தான் கட்டபொம்மன் போன்ற மாவீரர்களின் வாழ்க்கை.
தந்தைக்கு கட்டபொம்மு இறந்த பிறகு தனது முப்பதாவது வயதில், 1790 ஆண்டு பிப்ரவரி 2 – ம் தேதி, 47- வது, பாளையக்காரராக பொறுப்பேற்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். இவரின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்களின் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கினர். இந்த கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக்கொள்ள பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்ற, ஆங்கிலேயர்கள் ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இந்த கலெக்டர்கள் தான் இப்போது மாவட்ட ஆட்சியர் ஆகிவிட்டார் என்பது தனிக்கதை.
கட்டபொம்மன் ஆண்டபோது நெல்லை மாவட்டத்தில் வரி வசூலிக்கும் பொறுப்பை ‘மாக்ஸ்வெல்’ என்ற தளபதி பெற்றிருந்தார். ஆனால் அவரால் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் இருந்து வரியை வரி வசூலிக்க முடியவில்லை. பாளையக்காரராக முதன்முதலில் கப்பம் கட்ட மறுத்தது, வீரபாண்டிய கட்டபொம்மன் தான். இவரின் வீரம் சுற்றியிருந்த அனைத்து மன்னர்களுக்கும் தெரியவர, ஆங்கிலேயரை எதிர்க்கும் நம்பிக்கையை அளித்தது.
கி.பி 1797 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆங்கிலேய தளபதி ஆலந்துரை பெரும்படையுடன் பாஞ்சாலங்குறிச்சியை கைப்பற்ற வந்தனர். இந்தப் போரில் வீரபாண்டியனிடம் தோற்று ஆலன் துரை ஓடினார். இந்த முதல் போருக்குப் பிறகு மாவட்டக் கலெக்டரான ஜாக்சன் துரை கட்டபொம்மனை சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே பல்வேறு இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். கடைசியாக 1798 இல் இராமநாதபுரத்தில் செப்டம்பர் 10-ஆம் தேதி இருவரும் சந்தித்தனர். அப்போது சூழ்ச்சி செய்து வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய நினைத்தார், ஜாக்சன் துரை. ஆனால் கட்டபொம்மன் அந்த தந்திரவலையை முறியடித்து, அங்கிருந்து தப்பி பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். இறுதியில் விஜயரகுநாத தொண்டைமான் ஆட்சியின் கீழ் தலைமறைவாக இருந்தபோது, துரோகி எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கயத்தாறு என்னும் இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் இந்தியாவின் அரசியல், பொருளாதார, பண்பாட்டை அழித்து ஒழித்து வருகிறது. ஆர்எஸ்எஸ்- பாஜக தலைமையிலான கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம் நாட்டை மீண்டும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்தியங்களில் அடிமைத்தனத்தின் கீழ் மாற்றுவதற்கு நூறு கால் பாய்ச்சலில் வேகமாக ஓடுகிறது.
இத்தகைய அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வர்க்க உணர்வு என்பது மட்டுமின்றி நாட்டுப்பற்று மிகவும் அவசியமானதாகும். அத்தகைய நாட்டுப்பற்றை கட்டபொம்மனின் வீரம் செறிந்த வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வோம்.
கட்டபொம்மன், ஊமைத்துரை, சின்னமருது மகஇக பாடல்
விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக நின்று சமர்புரிந்த கட்டபொம்மனை நாயக்கர் சாதியினர் ’எங்காளு’ என்று உரிமை பாராட்டுவது, அதுபோல விடுதலைப் போராட்டத்தில் போராடிய பல்வேறு தியாகிகளின் சாதியை தோண்டியெடுத்து சாதி சங்கங்கள் சுயசாதிப் பெருமை பாராட்டுவது, அதையே ஆதிக்கம் புரிய கிடைத்த உரிமையாக எடுத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்ற இழிவான நடைமுறைகள் அனைத்தையும் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும்.
சாதி, மத பேதமின்றி காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய மரபுதான் நமது மரபு கம்யூனிஸ்ட்களின் மரபும் அதுதான்.
- மருது பாண்டியன்.