வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது .
இன்று 16.10.2024 இல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் பல்வேறு துறைகளும் தொழிலாளர்களும் சுறுசுறுப்பாக களத்தில் நிற்கின்றன. எமது மக்கள் அதிகாரமும் மக்களுடன் நிற்கின்றது.
நேற்றே திருவள்ளூர் மாவட்டத்தில் நெமிலிச்சேரியில் உள்ள நாகாத்தம்மன் நகர், ஈவெரா தெரு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது . சுமார் இரண்டடி உயரத்திற்கு நீர்மட்டம் உள்ளதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் சூழல் இருந்தது. எமது உறுப்பினர்கள் தகவல் தந்தனர். எமது திருவள்ளூர் மாவட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் ஏரிகளால் நிரம்பியவை. நெமிலிச்சேரி பகுதியிலும் பெரிய குளங்கள், ஏரிகள் உள்ளன . இவற்றை ஊடறுத்துக் கொண்டு வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை செல்கிறது.
மழைநீர் ஆனது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணித்தாக வேண்டும் . கூவம் ஆற்றில் கலப்பதன் மூலம் அது வங்காள விரிகுடாவை சென்றடையவும் வேண்டும் . ஆனால் சென்னையை சுற்றி எழுப்பப்பட்டுள்ள இந்த வெளிவட்டச் சாலை, வெள்ள நீரோட்டத்தை தடுத்து குடியிருப்புகளை மூழ்கடிக்கிறது.
நாகாத்தம்மன் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் ஆனது அருகிலுள்ள ஏரிக்கு செல்ல வேண்டும். மறுகால் பாய வேண்டும் . வெளிப்புற வட்டச்சாலையால் ஏரியே இரண்டாக துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே இணைப்பு இல்லாததால் மேற்கு புறத்தில் தேங்கும் நீரானது, கிழக்கு நோக்கி வடிய வாய்ப்பின்றி உள்ளது . கூவத்துக்கு செல்லவும் முடியாமல் நிற்கிறது .
நாகாத்தம்மன் நகரில் உடனடியாக மழை நீரை வெளியேற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தோம். இரவோடு இரவாக பொக்லைன் வைத்து மழை நீர் செல்லும் பாதையில் உள்ள தடைகளை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் தண்ணீர் வடிய தொடங்கி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். நமது தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர் . தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுவதை கண்காணித்த எமது தோழர்கள் நிரந்தர தீர்வு காண வேண்டியும் அரசுக்கு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் .
அதேபோல் பள்ளிக்கரணை காயிதேமில்லத் நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் அங்கு வாழக்கூடிய உழைக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகளை மூழ்கடித்து விடுகிறது.
அரசும் அதிகார வர்க்கமும் அந்த மக்களை காப்பாற்றாமல் புறக்கணிப்பதாக கூறுகிறார் அப்பகுதிவாசி. சென்ற ஆண்டு வெள்ளத்தில் ஒரு மூழ்கி இறந்துள்ளார். உடலை மீட்கவே 3 நாட்களானதாக கூறுகிறார்.
அங்கு சென்ற சென்னை மாவட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் அங்கு வசிக்கும் மக்களிடம் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு துணை நிற்பதாக தெரிவித்து வந்தார்கள்.