
இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) என்ற இயக்கம் தன்னை ஒரு இடதுசாரி அமைப்பாக காட்டிக் கொண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் JVP கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான 21 கட்சிக் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கும் அதிகமாக 141 இடங்களில் வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி அணி 35 இடங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி 7 இடங்களிலும் வென்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 141 (68, 63,186 வாக்குகள்) ஐக்கிய மக்கள் சக்தி 35 (19, 68,716 வாக்குகள்) இலங்கை தமிழரசு கட்சி 7 (2,57,813 வாக்குகள்) புதிய ஜனநாயக முன்னணி 3 (5,00,835 வாக்குகள்) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 (3,50,429 வாக்குகள்) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 (87,038 வாக்குகள்) ஐக்கிய தேசியக் கட்சி 1 (66,234 வாக்குகள்) ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1 (65,382 வாக்குகள்) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 (39,894வாக்குகள்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 (33,911வாக்குகள்) சுயேட்சை குழு (17) 1 (27,855வாக்குகள்) இலங்கை தொழிலாளர் கட்சி 1 (17,710வாக்குகள்) என்ற வகையில் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இந்த தேர்தல் வெற்றியை முன்வைத்து இந்தியாவில் உள்ள திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள், குட்டி முதலாளித்துவ அறிஞர்கள், ஆளும் வர்க்க ஊடகங்கள் முதல் டிராஸ்கிய ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற எம்.ஆர் ஆன்லைன் போன்ற ஊடகங்கள் வரை இலங்கையில் இடதுசாரி ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், அது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க போவதாகவும் கதையளக்க துவங்கியுள்ளனர்.
உண்மையில் JVP ஒரு இடது சாரி இயக்கமா என்றால் அதுதான் இல்லை. இது பற்றி இலங்கை இடதுசாரி செயற்பாட்டாளர் தோழர் இரயாகரன் தனது தமிழரங்கம் இணையத்தில் JVP பற்றி பின் வருமாறு முன் வைத்துள்ளார்.
”இலங்கையில் தேர்தல் மூலம் அதிகாரத்தை தீர்மானித்த இனவாதம், மதவாதம் .. நிலவிய காலத்தில் அரசியல்ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் எதிர் செயற்பாட்டை முன்வைக்காத ஜே.வி.பி., இனவாதத்துடன் சமரசத்தை கொண்டு செயற்பட்டதன் மூலம் அதிகாரத்திலிருந்த இனவாத ஆட்சியாளர்களுடன் சமரசத்தைக் கொண்டிருந்தனர்.
இந்தச் சமரசவாத அரசியலானது 2004 இல் இனவாத அரசியலில் ஒரு அங்கமாக மாறியதுடன், பல்வேறு இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அரசின் இனவாதத்தை முன்வைக்கும் முன்னணிப் பேச்சாளாராக வீரவன்ச மாறியதுடன், இனவாத அரசின் படைகளுக்கும் ஆட்களைத் திரட்டிக் கொடுக்கும் கூலிப்படையாக மாறியது.
படிக்க: புதிய ஜனாதிபதியும் பழைய இலங்கையும்
இதன் விளைவாக ஜே.வி.பி.யின் அக முரண்பாடுகள் கூர்மையடைந்ததுடன், வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து கட்சியில் ஏற்பட்ட விவாதம் மூன்று அணிகளை உருவாக்கியது.
1.வீரவன்ச தலைமையிலான இனவாத அணி. விமல் வீரவன்ச 2008 மார்ச் 21 இல் ஜே.வி.பி. கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்த, 2008 மே 14 இல் தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை வீரவன்ச ஆரம்பித்தார்.
2.குமார் குணரட்ணம் தலைமையிலான வர்க்கப் போராட்டத்தை முன்வைத்த அணியானது ஜே.வி.பியில் இருந்து லிலகி, முன்னிலை சோசலிசக் கட்சி என்ற அமைப்பை 2012 ஏப்ரல் 9ம் திகதி தொடங்கினர்.
3.சோமவன்ச தமையிலான ஜே.வி.பி. இனவாதம் மற்றும் முதலாளித்துவ சமரசவாதத்தை முன்வைத்தது. 2014 இல் சோமவன்சவை வெளியேற்றிய ஜே.வி.பி.யானது, அநுர குமார தலைமையில் முதலாளித்துவத்தை ஏற்றுக்கொள்ளும் கட்சியாக தன்னை மாற்றியது. சோமவன்ச புதிய கட்சியை உருவாக்கியதுடன், அவரின் மரணத்துடன் அது முடிவுற்றது. அநுர குமார தலைமையில் முதலாளித்துமானது, ஏகாதிபத்திய உலக ஒழுங்கை அங்கீகரித்துக் கொண்டதன் மூலம், ஆளும் வர்க்கக் கட்சியாக மாறியிருக்கின்றது.” என்று முன் வைத்திருப்பது மார்க்சிய லெனினிய அரசியல் பார்வையில் சரியானது என்றே கருதுகிறோம்.
இலங்கையில் நடந்த இந்த தேர்தலில் மதவாதத்தின் அடிப்படையிலும், இனவாதத்தின் அடிப்படையில் ஓட்டு பெறுவதற்கு எண்ணிய கட்சிகள் மக்கள் மத்தியில் இருந்து துடைத்தெறியப்பட்டுள்ளன என்பது உண்மைதான் என்ற போதிலும், அதற்கு மாற்றாக பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ள ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) சாதி, மத, இனவாதத்திற்கு எதிரான ஜனநாயக சக்தி என்று மதிப்பீடு செய்ய முடியாது.
படிக்க: இலங்கை: இருப்பதையும் சூறையாடப்போகும் நிதி மூலதனம்!
ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போன்ற எந்த அடிப்படையும் இல்லாமல் வெட்டி சவடால்களின் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பதாக ஜனதா விமுக்தி பெரமுனா தலைமையிலான கூட்டணி முன் வைத்துள்ளது போகப்போக அம்பலமாகும் என்றாலும், அது அடிப்படையில் அது ஒரு இடதுசாரி அமைப்பு அல்ல என்பதையும் இலங்கையில் சிங்கள பேரினவாதத்தை முன்வைத்து செயல்படுகின்ற ஜாதிக ஹெலவங்க உருமய போன்ற இனவெறி அமைப்புகளை போன்ற மற்றும் ஒரு அமைப்பு தான்.
இலங்கையில் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் திட்டமிட்டு நடத்திய மறுகாலனியாக்கத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதற்கு எதிராக தனது வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் வராதா என்ற எதிர்பார்ப்பிலும், ஊழல், கிரிமினல்மயமான ராஜபக்சே ஆட்சிக்கு எதிராகவும் வாக்க ளித்துள்ளனர் என்பது தான் நிலவரம்.
இப்படி ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்ததை வைத்துக் கொண்டு மாற்று அரசியலுக்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மதிப்பீடு செய்வதோ அல்லது இலங்கையில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்து செங்கொடி பூத்துக் குலுங்குவதாக பெருமைப்பட்டுக் கொள்வதோ இலங்கையில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கும் எந்த வகையிலும் பயன் அளிக்காது.
- கணேசன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி