மே 5 தோழர் சீனிவாசன் 11 ஆண்டு நினைவுநாள்


பாட்டாளி வர்க்க ஆசான் பிறந்தநாளும் தோழர் சீனிவாசன் நினைவுநாளும் ஒரே நாளில் இருப்பது எதிர்பாராதது. மார்க்ஸ் தத்துவ மேதையை நினைவுகூறும் அதே வேளையில் எனது சமகாலத்தில் வாழ்ந்த உன்னத தோழன் ஒருவனை நினைவுகூர்வது அவசியமானது. உணர்வை புதுப்பித்துக்கொள்ளும் மகிழ்ச்சிகரமானது.

தோழர் சீனிவாசராவை பார்த்தில்லை. அவரது ஊக்கமான செயல்பாட்டை படித்து கேட்டு உணர்வு பெற்றிருக்கிறேன். ஆனால் நடைமுறை பணிகளில் என் மனதில் குடியிருப்பவர் தோழர் சீனிவாசன். அவரது வசிப்பிடமும் குடும்பமும் சென்னையில் இருந்தாலும் சென்னை தோழர்களை விட தஞ்சை தோழர்களுக்கு அவர் அதிகம் பரிச்சயமானவர்.

தோழர் சீனிவாசன் வேலை செய்ய ஆரம்பித்த காலங்களில் அமைப்பில் ஒரு சிலர் தான் இருந்தார்கள். 1980-களுக்கு முன்னால் தொடக்க காலங்களில் கடுமையான அடக்குமுறை நிலவியது. அடக்குமுறைகள் உச்சமாக இருந்த காலத்தில் புரட்சிகர அரசியலை ஏற்ற தோழர் சீனிவாசன் தொடர்ந்து சுமார் 35 ஆண்டுகாலம் புரட்சிகர பணியாற்றியவர். அவரது இறுதி ஊர்வலக் காட்சிகள் உழைப்பை போற்றும் வகையில் அமைந்திருந்தது.

ஒரு கம்யூனிஸ்ட் வாழ்க்கை என்பதற்கு இலக்கணம் கம்யூனிஸ்ட் அமைப்பை மதிப்பது, எளிமையாக வாழ்வது, கடினமான பணிகளை இன்முகத்துடன் ஏற்பது, துணிச்சல் மிக்க செயல்பாடு…..என்று நீள்கிறது.
கோட்பாட்டளவில் இவற்றை ஏற்றுக் கொள்வது எளிது. ஓரிரு ஆண்டுகள் நடைமுறைபடுத்திவிட்டு அமைப்பைவிட்டு ஒதுங்கியவர்கள் பலர். வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் தோழர் சீனிவாசன்.

தொடக்ககால புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி செயல்பாட்டில் தோழர் சீனிவாசனின் பங்கு முக்கியமானது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை ஒன்று சேர்த்து அமைப்பாக்கியதில் அவரது பங்களிப்பு குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று. தனது ஒரு செயல் மூலம் போராட்டத்தின் மொத்த சூழலையே மாற்றி விமர்சனத்திற்கும் ஆளாகிவிடுவார். சென்னை உயர்நீதிமன்ற போராட்டங்களின் முன்னோடி நாயகர்களில் சீனிவாசனும் ஒருவர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

1980-களில் விவசாயிகள் விடுதலை முன்னணி தொடங்கப்பட்டபோது விவசாயிகள் மத்தியில் தோழர்கள் தங்கி அரசியல் பிரச்சாரம் செய்துவந்தனர். தஞ்சையில் நடைபெற்ற காவிரி நீர் தமிழக உரிமைக்கான மாநில மாநாட்டு வேலைகளில் தான் தோழர் சீனிவாசன் தஞ்சைக்கு அறிமுகமானார். 1985 -1986-ல் விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டார மாநாடுகள் நடத்தப்பட்டது. எல்லா மாநாடுகளிலும் அவரை சந்திக்க முடிந்தது. கடும் வெயிலில் வேலை செய்ய வேண்டியிருக்கும், போக்குவரத்து வசதி இல்லாத ஊர்களுக்கு நீண்ட தூரம் நடந்து போக வேண்டியிருக்கும். அவற்றை எல்லாம் மன உறுதியுடன் சமாளிப்பது எப்படி என்பதை தோழர் சீனிவாசனிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்தது.

தொழிலாளர், விவசாயிகள், அரசு ஊழியர்கள், பெண்கள், மாணவர், இளம் தோழர்கள் என்று அனைத்து மக்களிடம் ஐக்கியப்பட்டு வாழ்ந்தவர். மின்வாரியத்தில் வேலை செய்து வந்த சீனிவாசன் 1992-ல் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டார் அமைப்பு பணிகளில் ஈடுபட்டார்.

அவர் சென்னையில சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து மக்களிடம் ஐக்கியமானவர். சேத்துப்பட்டின் மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதியில்தான் ஆர்.எஸ்.எஸ்-ன் மாநில தலைமை அலுவலகம் இருக்கிறது. அதே சேத்துப்பட்டில் உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதியில் ம.க.இ.க வின் மாநில தலைமை அலுவலகமாக அவரது வீடு இயங்கியது.

1991 கருவறை நுழைவு போராட்டம் தொடங்கி, திருவையாறு கருவறை நுழைவு போராட்டம், இறால் பண்ணை அழிப்பு போராட்டம், விநோதகன் மருத்துவமனை கைப்பற்றும் போராட்டம், கோக்கோ கோலா போராட்டம், ஆண்டு தோறும் நடைபெற்ற தமிழ் மக்கள் இசைவிழா என்று அவருடைய இயக்க ஒருங்கிணைப்பு பணிகளை பட்டியலிடலாம். அந்த பணிகளில் தோழர் சீனிவாசனை சந்திக்கும் வாய்ப்பும் பல நேரங்களில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. மகஇக மாநில பொருளாளராக அடிக்கடி என்னோடு தொடர்பு கொண்டிருக்கிறார்.

மக்களிடம் அரசியல் அடிப்படையில் ஐக்கியப்படுவதில் எனக்கிருந்த தயக்கத்தை உடைத்ததில் தோழரின் பங்களிப்பு முக்கியமானது.

தோழர் சீனிவாசன் மாற்றுக் கருத்து உடையவர்களையும் நட்புடன் அணுகி தனது அரசியலுக்கு வென்றெடுத்தவர். தோழர்களின் குடும்பத்தினருடன் கூச்சம், சங்கோஜம் இன்றி குடும்ப உறுபினரைப்போல அணுகி ஐக்கியத்தை உருவாக்கிக்கொண்டவர். தோழர்களை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் கூறி தவறாமல் விசாரிப்பது சீனிவாசனின் தனிச்சிறப்பு இயல்பு.

இதையும் படியுங்கள்: கம்யூனிச தோழர்கள் எப்படி இருக்க வேண்டும்!

அரிதான கணைய புற்று நோய் வந்து இன்னும் 2-3 மாதங்கள்தான் உயிரோடு இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கெடு வைத்த பிறகும் அவரிடம் இருந்த மனஉறுதி அசாத்தியமானது. அதுவே 1 ஆண்டு காலம் அவரது ஆயுளை நீடிக்கச்செய்தது. தோழர் அசாத்தியமான தைரியசாலி என்று பழகிய தோழர்கள் கூறுவது உண்டு. நெஞ்சுறுதியுடன் மரணத்தை எதிர் கொண்டதிலும் அதை வெளிபடுத்தினார். போராட்டத்தை மகிழ்ச்சியுடன் எதிர் கொள்வது எப்படி என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்தது. எளிய கம்பீரமான கம்யூனிச வாழ்க்கை முறைக்கு சொந்தக்காரர் தோழர் சீனிவாசன். அவர் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தபோது அவரை பார்க்க போயிருந்தேன். தோழர் நோயால் மெலிந்து தளர்ந்திருந்தபோதும் அவரிடம் இருந்த கம்பீரம் இன்றும் மனக்கண்ணில் நின்று ஊக்கமளிக்கிறது.

சீனிவாசன் அமைப்பு பணிகளை சுமையாக கருதாமல் எந்த சுணக்கமும் இல்லாமல், எந்த நேரத்திலும் செய்பவர். எந்த வேலையையும் முன் நின்று செய்வதில் முன்னோடியானவர். தன் வாழ்நாளை மக்கள் பணிக்காக அர்ப்பணித்து மறைந்த தோழர் சீனிவாசனின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் நினைவு கூர்ந்து ஊக்கம்பெருவதே இன்றைய தேவையாக உணர்கிறேன்.

இதுவே அவருக்குச் செலுத்தும் அஞ்சலி.

தஞ்சை இராவணன்
05-05-2023

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை பிரிவில் உள்ளேன். இன்னொரு படுக்கையில் முன்னாள் ஓய்வு பெற்ற கலெக்டர் ஒருவர் உள்ளார். அவரை பார்த்துக் கொள்ள யாரும் வரவில்லை. அவரை ஐசியு அழைத்து சென்று வருவதற்கு காசு கொடுத்து ஆள் கூப்பிட வேண்டியிருந்தது. அதிகாரத்தில் இருந்த போது தன்னைச் சூழ்ந்து நின்றவர்கள் இன்று இல்லாமல் போய் விட்டதை நினைத்து அவர் கண்ணீர் வடிக்கிறார்.

அதுதான் ஆளும் வர்க்க அதிகார அமைப்புக்கு வேலை செய்தவர்களின் நிலை.

கம்யூனிஸ்டாக வாழ்ந்த எனக்கு தோழர்கள் உறுதுணையாக உள்ளார்கள். உழைக்கும் மக்களுக்கு சேவை செய்தால் ஆடம்பரம் இல்லை, ஆனால் ஆதரவு உண்டு. ஆட்சி அதிகாரத்தில் கொடி கட்டிப் பறந்த கலெக்டர் என்ன நிலையில் இருக்கிறார். அரசு உத்தியோகத்தை உதறி எறிந்தது உன்னதமானது என்று முழுமையாக உணர்கிறேன்.
—-தோழர் சினிவாசனின் எழுதிய இறுதிகால குறிப்பு. (அவர் மகள் வழக்கறிஞர் பொற்கொடி நினைவுநாள் கூட்டத்தில் வாசித்து.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here