நலம் என்பது தனிப்பட்டு ஒவ்வொரு நபருக்கும் இன்றியமையாதது. ஒரு தனிநபரின் நலம் என்பது சுற்றுச்சூழல், பொருளாதாரம், அரசுக்கொள்கைகள், கல்வி, வாழ்க்கைமுறை ஆகியவற்றோடு நெருக்கமான தொடர்புடையதாகும்.

உலக நல அமைப்பின் (WHO) பார்வையில், நலம் என்பது நோயின்றி இருப்பது மட்டுமல்ல; உடல், மன, சமூகப்படியான முழுமையான நலமே ஆகும். மனநலம் என்பது ஒவ்வொரு தனிநபரும் தன் ஆற்றலை உணர்ந்துகொண்டு, வாழ்க்கையின் இயல்பான அழுத்தங்களைச் சமாளித்து – ஆக்கபூர்வமாகவும் இதமாகவும் பணியாற்றி – தன் சமூகத்துக்குப் பங்களிக்கக்கூடிய ஒரு நிலை என வரையறுக்கப்பட்டுள்ளது.

“ ஒரு மனிதனின் மனநலத்தை, அவரின் உடல், உளவியல் அமைப்பைத் தவிர, அவர் வாழும் சுற்றுச்சூழலும் சமூக பொருளாதாரச் சூழ்நிலைகளும் சேர்ந்தே தீர்மானிக்கின்றன” என்கிறது, உலக நல அமைப்பு (WHO).

சுகாதார வசதி, வாழ்க்கைச் சூழல், சமூகப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பணி, பாலினப்பங்கீடு, நலத்திட்டங்கள், நலத்தின் சமூகக் காரணிகளுக்கான அரசு நிதி ஒதுக்கீடு ஆகியவை மனிதரின் நலத்தைத் தீர்மானிக்கும் சமூகக் காரணிகள் ஆகும்.

ஆனால், அரசு பொதுவாக இவற்றைச் சீர்செய்வதன் மூலம் மக்களின் உடல், மன நலத்தைப் பேணிக்காப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. உலக அளவில், அரசுகள் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, நவீன தாராளமயமாக்கல் கொள்கையின்பால், வணிகம், முதலீடு, தொழில்வளர்ச்சி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி, மனிதரின் உடல், மனநலத்தைத் தீர்மானிக்கும் – சுற்றுச்சூழல், சமூக, பொருளாதாரக் கொள்கைகளில் மிகக் குறைவாகவே கவனம்செலுத்துகின்றன. இது தவறான அணுகுமுறை என பல்வேறு ஆய்வுகள் அழுத்தமாகக் கூறுகின்றன.

மேற்கூறியவற்றில் உள்ள, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பல மனநலச் சிக்கல்கள், மனநோய்களை ஏற்படுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. “ஒரு மனிதரின் உடல், மன நலத்தை உருக்குலைக்கும் இந்த சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இயற்கையானவை அல்ல; மாறாக மோசமான சமூகக் கொள்கைகள், திறமற்ற ஆட்சி, நியாயமற்ற பொருளாதார வசதிவாய்ப்புகள், அநீதியான ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட செயற்கையான விளைவேயாகும்” என்கிறது, உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று. * WHO Commission on SDOH in 2008

அவ்வாறு, செயற்கையாக உருவாக்கப்பட்ட- மனிதரின் உடல், மன நலத்தை பாதிக்கக்கூடிய கொள்கை முடிவுகளில் ஒன்று இடப்பெயர்வு- மீள்குடியமர்த்தல் ஆகும். இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள், இந்தியாவில் அரசால் இடம்பெயர்க்கப்பட்டு, மீள்குடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் உள்நாட்டு குழுச் சண்டைகளாலும் நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களாலும் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்படுகின்றது. மக்கள் தாங்கள் வாழும் இடத்திலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்படுவதால், தங்கள் நிலத்தை இழந்து, வேலையை இழந்து, வீடுகளை இழந்து, ஒடுக்குமுறைக்கு ஆளாகி, உறவுகளைவிட்டுப் பிரிந்து, மருத்துவமனைகள், போக்குவரத்து ஆகியவற்றிலிருந்து அந்நியப்பட்டு, உடல், மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், மற்ற மக்கள் பிரிவினரைவிட, பல்வேறு மனநலச் சிக்கல்களுக்கும் மனநோய்களுக்கும் ஆளாகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவிலோ, போர், உள்நாட்டுச் சண்டைகள் போன்றவற்றைவிட, புதிய தாராளமயமாக்கல் கொள்கையின் பொருட்டு, வளர்ச்சியையும் (அணைகள், பாசனச்திட்டங்கள், நெடுஞ்சாலைகள், நகர்புற வளர்ச்சியும் நகரமயமாக்கமும், வனத்தைப் பாதுகாத்தல், சுரங்கம் அமைத்தல் என) பல்வேறு திட்டங்களையும் காரணம்காட்டி, அரசால் மேற்கொள்ளப்படும் இடம்பெயர்த்தலே அதிகம். மீள்குடியமர்த்தலானது தெளிவான கொள்கை முடிவுகளோடு, குறிப்பிட்ட மக்கள் பாதிக்கப்படாதவாறு, அம்மக்களையும் கலந்தாலோசித்து, அவர்களின் ஒப்புதலோடு அவர்களுக்கான உரிய இழப்பீட்டை உறுதிசெய்தபின்னர், மீள்குடியமர்த்தப்பட்ட இடத்தில் அவர்களின் வாழ்வாதாரம் சீராக இருக்கும்படியாக இருக்கவேண்டும் என தேசிய இடப்பெயர்வு, மீள்குடியமர்த்தல் கொள்கை தெளிவுபடுத்துகிறது. ஆனால், பொதுவாக இவை யாவும் பின்பற்றப்படுவதில்லை என்பதற்கு ஆய்வறிக்கைகளே ஆவண சாட்சியங்களாக இருக்கின்றன.

நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் காரணம்காட்டி, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களில் 75 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. வளர்ச்சியைக் காரணம்காட்டி மீள்குடியமர்த்துதல் என்பது மக்களைக் கட்டாயப்படுத்தி இடம்பெயரச் செய்வதே என ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. மேலும், இந்த வளர்ச்சித் திட்டங்கள் யாவும், மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு நேரடியாகப் பயன்தராது எனவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வளர்ச்சியைக் காரணம்காட்டி மீள்குடியமர்த்தப்பட்ட மக்களிடம், மனநல மருத்துவரால் நடத்தப்பட்ட ஆய்வின் தொகுப்புதான் இக்கட்டுரை.

இந்த ஆய்வு, சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து இடம்பெயர்க்கப்பட்டு கண்ணகி நகரில் அரசால் மீள்குடியமர்த்தப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்வர்களிடம் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டதாகும்.

Thoraipakkam - Kannagi Nagar | camicase | Flickr
கண்ணகி நகர்

சென்னை நகரில் இருக்கும் குடிசைப் பகுதிகளிலிருந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களில் பெரும்பாலானோர், கண்ணகி நகரில் அரசால் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு குறைந்தபட்சம் 76 ஆயிரம் பேர் இருக்கின்றனர். அவர்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 7 சதவீதம் பேர்.

முதல் கட்டமாக, மீள்குடியமர்த்தப்பட்டதால் உண்டான பல்வேறு பாதிப்புகளை, மக்களிடம் கலந்துரையாடல் மூலம் கேட்டறியப்பட்டது. இராயபுரம், சைதாப்பேட்டை, பாலவாக்கம், க.க.நகர், திருவான்மியூர், இராயப்பேட்டை, பெரம்பூர், தரமணி, காஞ்சிபுரம், அடையார், நீலாங்கரை, தேனாம்பேட்டை, கொட்டிவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலிருந்தே இந்த மக்கள் குடியேற்றப்பட்டு இருந்தனர். இவர்களில் கணிசமானவர்கள் கட்டாயமாக மீள்குடியமர்த்தம் செய்யப்பட்டிருந்தனர். மீள்குடியமர்த்தலின்போது இவர்களிடம் எந்த ஒரு தெளிவான கலந்துரையாடலும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. இவர்களுக்கு போதிய இழப்பீடு, குறைந்தபட்சஅளவில்கூட கிடைக்காமல் இருந்ததும் அறியப்பட்டது.

குறைவான வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதிகள், அதிகமான போக்குவரத்து செலவு, வேலையிடம், மருத்துவமனை ஆகியவற்றுக்குச் செல்ல அதிகமான பயண நேரமும் செலவும், அருகில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் அதிகரித்துள்ள மருத்துவச் செலவு, பிரிந்த குடும்ப உறவுகள், குறைந்த குடும்ப வருமானம், மீள்குடியமர்த்தலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, பண இழப்பு, சொத்து இழப்பு, சுற்றுச்சூழல், மின்சாரம், குடிநீர் வசதி போன்றவற்றில் ஏற்பட்ட சிரமங்கள், அருகில் அரசு அலுவலகங்கள் இல்லாமை, அதிகரித்திருந்த மாதாந்திர செலவுகள் போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

பிறகு, மக்களிடம் பலதரப்பட்ட விவரங்களைச் சேகரித்து, அவர்களுக்கு மனநல சிக்கல்கள், மனநோய்கள் ஏற்பட்டுள்ளனவா என நேரடி பரிசோதனை மூலமும் கண்டறியப்பட்டது.

அவர்களில் பெரும்பாலோனோர், அதாவது 56 சதவீதம் பேர், மீள்குடியமர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. இது, மீள்குடியமர்த்தப்பட்டவுடன் ஏற்படும் மனநல, உடல்நலச் சிக்கல்களை தாண்டி, அவ்விடத்தில் நீண்ட நாள் வாழ்ந்து சந்தித்துவரும் பிரச்னைகள் பற்றிய தெளிவான பார்வையை அளிக்க உதவியது.

பெரும்பாலானோர் 60 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களை ஒத்த வயதுடைய மற்ற மக்கள் பிரிவினரைவிட அதிகமானவர்கள் இன்னும் உழைத்து வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தார்கள். ஆதலால் குறைந்த வேலைவாய்ப்பும் குறைந்த மாதவருமானமும் அவர்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது. 13 சதவீதம் பேர் மீள்குடியமர்வுக்குப் பிறகு வேலைவாய்ப்பை இழந்திருந்தார்கள். 10 சதவீதம் பேர் சொத்துக்களை இழந்திருந்தார்கள், 62 சதவீதம் பேர் பண இழப்பைச் சந்தித்திருந்தார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஈட்டிய பொருளையும் சொத்துக்களையும் இழந்தது, அவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருந்தது. 20 சதவீதம் பேர், தங்கள் வாழ்வாதாரத்துக்கு மீள்குடியமர்த்தப்படுவதற்கு முன்னர் குடும்ப உறுப்பினர்களையே சார்ந்திருந்தார்கள். மீள்குடியமர்த்தப் பட்டதால் 19 சதவீதம் பேர் குடும்ப உறவுகளைப் பிரிய நேரிட்டிருந்தது. இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்தது. அத்துடன், மனநலச் சிக்கல்களையும் உண்டாக்கி இருந்தது.

இடப்பெயர்க்கப்பட்டவர்கள் முன்னர் வாழ்ந்துவந்த பகுதிகள்

1

இராயபுரம்

10%

2

சைதாபேட்டை

 12%

3

பாலவாக்கம்

23%

4

க.க.நகர்

 6.5%

5

திருவான்மியூர்

4.5%

6

இராயப்பேட்டை

 9.5%

7

பெரம்பூர்

5 %

8

தரமணி

15%

9

காஞ்சிபுரம்

 3.5%

10

அடையார்

3 %

11

நீலாங்கரை

 3.5%

12

தேனாம்பேட்டை

7 %

13

கொட்டிவாக்கம்

 4.5%


மீள்குடியமர்த்தப்பட்ட 60 வயதிற்கும் மேற்பட்டவர்களில், அதே வயதுடைய மற்ற மக்கள் பிரிவினரைவிடக் கூடுதலாக, அதீத ரத்த அழுத்தத்தாலும், சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் கண்ணகி நகரில் மருத்துவ வசதிகள் மிகக் குறைவாகவே இருந்தன. இதனால் அவர்கள் உடல்நலத்தை சரிவர பார்த்துக்கொள்ள முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தனர்.அது மட்டுமில்லாமல் உடல்நலத்துக்காகச் செய்யும் செலவும் அதிகரித்திருந்தது.

இடம்பெயர்க்கப்பட்டவர்களிடம் உடல்சார்ந்த நோய்கள்


மீள்குடியமர்த்தப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் (37%), அதே வயதுடைய மற்ற மக்கள்பிரிவினரை (20%)விட கூடுதலாக மன நோய்க்கு உள்ளாகி இருந்தனர் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியானது. மீள்குடியமர்த்தப்பட்டதற்குப் பிறகு, 13 சதவீதம் பெண்கள் மனச்சோர்வு நோய்க்கு உள்ளாகி இருந்தார்கள். புதிதாக 22 சதவீதம் அளவுக்கு ஆண்கள் குடிநோய்க்கு உள்ளாகியிருந்தனர். இந்த நோய்த்தாக்கம், பரவல், இதே வயதுடைய மற்ற மக்கள் பிரிவினரை ஒப்பிடுகையில் மிகமிக அதிகம்.


உடல்நலக் குறைவு, குறைந்த மாத வருமானம், அதிகரித்த மாதாந்திர செலவுகள், குறைந்த போக்குவரத்து வசதிகள், அதிகரித்த போக்குவரத்து செலவு, மீள்குடியமர்த்தப்பட்டதால் ஏற்பட்ட சொத்து மற்றும் பண இழப்பு, போன்றவை ஆண்களிடம் குடிநோய் அதிகமாக ஏற்படுவதற்கான- சமூக, பொருளாதாரக் காரணங்களாகக் காணப்பட்டன.

இடப்பெயர்வால் ஏற்பட்ட இழப்புகள்
உடைமை இழந்தோர் – 10%
நிதிவளம் இழந்தோர் – 61.8%
குடும்ப உறவுகளை இழந்தோர் – 19.5%
மற்றவர்களைச் சார்ந்திருப்பவர்கள் – 44.5%


குறைந்த வேலைவாய்ப்பு, வேலைக்குச் செல்ல பயணத்தொலைவு அதிகரிப்பு, குடும்ப உறவுகளின் பிரிவு, அதிகரித்த மருத்துவச்செலவு, குறைந்த மாத வருமானம், அதிகரித்த மாதாந்திர செலவு, போதிய பொதுவினியோக மையங்கள் இல்லாமை, மீள்குடியமர்த்தப்பட்டதால் ஏற்பட்ட பண இழப்பு போன்றவை பெண்களை கூடுதலான மனச்சோர்வு நோய்க்குத் தள்ளுவதற்கான காரணமாக இருந்தன.

சமூக, பொருளாதார காரணிகள், மனநலத்தை பாதித்து மன நோய்கள் உண்டாக காரணமாக உள்ளன என்பதை இந்த ஆய்வு தெளிவாக உணர்த்துகிறது. புதிய தாராளமயமாக்கல் கொள்கையால், வளர்ச்சியின் பெயரால், கட்டாயமாக, சரியான கொள்கைகளைப் பின்பற்றாமல் அரசுகளால் மேற்கொள்ளப்படும் இடப்பெயர்வு – மீள்குடியமர்த்தலானது, மக்களின் உடல்நலம், மனநலத்தை பாதித்து, ஏராளமானவர்களை மனரீதியான பாதிப்புகளுக்கு ஆளாக்குவது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகிறது.

பொதுக்கொள்கையாக, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே மனித குலத்தை வாழவைக்கும் வளரவைக்கும் என்பதும் இதன் மூலம் தீர்மானமாகிறது.

மரு.சிரீராம், மனநல மருத்துவர்

சிறப்பான ஆய்வு. உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வோம். ஆளும் வர்க்கச் சிந்தனைகளை புறந்தள்ளுவோம்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here