உழைக்கும் மக்களின் வாழ்வை அழிக்கும் கனமழை – பெருவெள்ளம்: நிரந்தர தீர்வு என்ன?

முதலாளித்துவ அரசுக்கு மாற்றான சோசலிசக் கட்டமைப்பை நிறுவும் போது மட்டுமே புவி வெப்பமயமாதலைத் தடுக்கவும், இயற்கையையும், மனித குலத்தையும் காப்பாற்றவும் முடியும்

0
63

உழைக்கும் மக்களின் வாழ்வை அழிக்கும்

கனமழை – பெருவெள்ளம்: நிரந்தர தீர்வு என்ன?


மீபத்தில் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றை வாட்ஸ் அப் வீடியோவில் பார்க்க நேர்ந்தது. அதில் தினமும் உடற்பயிற்சி செய்தால் தான் அன்றைய பொழுதே விடிகிறது என்பது போல தன் நண்பன் பேசுவதாகவும், உடற்பயிற்சிக்கு அவ்வளவு மெனக்கெட வேண்டாமே? காட்டில் சிங்கம், புலி எல்லாம் தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டா இருக்கிறது? அவைகள் எல்லாம் ஆரோக்கியமாகத் தானே இருக்கிறது? என்று ஒரு பெண் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த அந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர், புலியோ, சிங்கமோ தன் தண்ணீர்த் தேவைக்கும், உணவுத் தேவைக்கும் பல மைல்கள் நடக்கிறது. தனது எல்லாத் தேவைகளுக்கும் இயற்கையோடு ஒன்றி, வாழ்கிறது. அதன் இயல்பான வாழ்க்கைச் சூழலே உடல் ஆரோக்கியத்திற்கு வழி செய்கிறது. அதனால், அவை தனியாக உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை. மனிதனும், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வரையில் ஆரோக்கியமாகவே இருந்தான். இயற்கைக்கு மீறிய வாழ்க்கை தான் மனிதனின் உடல் பிரச்சினைகள் உள்ளிட்ட இன்றைய அத்தனை இடர்ப்பாடுகளுக்கும் காரணமாகும் என்றார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது ஒவ்வொரு தனி மனிதனின் பழக்க வழக்கம், வாழ்க்கை முறை சம்மந்தப்பட்ட பிரச்சினை என்பது போல நாம் உணரலாம்.  ஆனால், இயற்கைக்கு எதிரான பல்வேறு செயல்பாடுகள், சமூக ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டு, நாடுகளின் அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

நாம் அன்றாடம் பேசும் மணற்கொள்ளை முதல் மலைகளையே இல்லாமல் செய்யும் கனிமவளக் கொள்ளை வரை, அரசின் தயவோடுதான் நடத்தப்படுகிறது. அதற்காக நதிகள் சூறையாடப்படுகிறது; காடுகள் அழிக்கப்படுகிறது. அன்றாடம் இயற்கை அழிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.


இதையும் படியுங்கள்: சென்னை மழை வெள்ளம் யார் குற்றவாளி?


மேலும், ஏரி, குளம், ஆறு, காடுகளை அழிப்பது, அபாயகரமான இரசாயனங்களையும், வேதிப்பொருட்களையும் தயாரிப்பது, அதன் கழிவுகளை எவ்வித சுத்திகரிப்பும் இன்றி, காற்றிலும், பூமிக்கடியிலும், ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளிலும் கலக்க விடுவது, வாகன உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே வருவது மற்றும் வாகனப் பயன்பாடுகள் மூலம் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளால், தினம் தினம் இயற்கை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த செயல்பாடுகள், இன்றைய பருவ நிலை சிதைவுகளுக்கும், புவி வெப்பமயமாதலுக்கும் இட்டுச் சென்றுள்ளது. உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்தப் பேராபத்துக்கள் அனைத்திற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறியும், அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ அடிவருடிகளின் ஆட்சி அதிகாரமும் தான்.

சில நூறு முதலாளிகளின் லாபவெறிக்காக செய்யப்படும் இந்த நடவடிக்கைகளால், பருவம் தவறி மழை, கனமழை, பேய் மழை, அடுத்தடுத்த புயல்கள், சூறைக்காற்று, நிலச்சரிவு, பெருவெள்ளம் என இயற்கைச் சீற்றங்களுக்கு உலகின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். முதலாளிகளின் கொள்ளைக்காக பலியாகின்றனர். இயற்கைக்கு மீறிய இந்த செயலை தனிமனிதனின் பழக்க வழக்கம் என்று நாம் சொல்ல முடியுமா?

இயற்கையின் மீதான முதலாளிகளின் இந்த அத்துமீறல்கள் காரணமாக, காலநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன் விளைவினால் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை உயர்வது உலகெங்கிலும் நடைபெறுகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் புயல்களின் எண்ணிக்கையும் அதனால் மழையின் அளவும் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, 1970 முதல் 2019 வரையிலான 50 ஆண்டுகளில் 117 புயல்கள் உருவாகி உள்ளன என்கிறது, இந்திய புவி அறிவியல் அமைச்சகத் துறை. இந்தியக் கடல் பகுதிகளில் 2019-ல் மட்டும் 9 புயல்கள் உருவாகின. வழக்கமாக அரபிக்கடலில் ஆண்டுக்கு ஒரு புயல் என்ற நிலை மாறி விட்டது. 2020-ல் 5 புயல்களும், 2021-ல் 7 புயல்களும் உருவாகி சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. 1990 – 2010 இடைப்பட்ட 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு சராசரியாக 30 புயல்கள் என்பதை, 2020 வரையிலான அடுத்த 10 ஆண்டுகளில் 41 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

இப்படி புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மழையின் அளவும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டில் உருவாகும் புயலும், மழையும் ஏற்படுத்தும் பாதிப்பு, முன்னதை  விட அதிகமாகி வருகிறது. குறிப்பாக, 2005-ல் அடுத்தடுத்த 3 புயல்களால், வழக்கத்தை விட 79% அதிகம் மழைப் பொழிவு, 2008 நிஷா புயலால் 20 நாட்கள் தொடர்மழை என புதிய புதிய பாதிப்புக்களை மக்கள் சந்தித்தனர். அதே போல், ஒரே பகுதியில், ஒரே நாளில் அல்லது ஒரு சில மணி நேரங்களில் பேய்மழை பெய்வது என்ற புதிய பருவ மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக, டிசம்பர் 2021 மலேசியாவில் 100 ஆண்டுகள் காணாத வகையில் மழை பெய்துள்ளது. அதே ஆண்டு ஜூலையில், சீனா 1000 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவை பதிவு செய்தது. ஹூனான் மாகாணத்தின் ஜென்சோ பகுதியின் ஆண்டு சராசரி மழையின் அளவு 640.8 மி.மீ. ஆகும். ஆனால் ஒரு நாளில் மட்டுமே 457.5 மி.மீ மழையை சந்தித்தது அந்தப் பகுதி. அதிலும் குறிப்பாக, ஒரே மணி நேரத்தில் 201.9 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. அந்த ஆண்டு செப்டம்பர் 21 இடா புயலின் போது அமெரிக்காவின் மான்ஹாட்டன் பகுதியில் ஒரு மணி நேரத்தில், 80 மி.மீ மழை பதிவானது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன், பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகளில், 2021 ஜூலையில் பெய்த மழை கடந்த ஆண்டுகளை விட ஒன்பது மடங்கு அதிகமாகும் என்பதும், அது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், தெற்கு ஐரோப்பிய நாடான கிரீஸில், 2021 ஆகஸ்டில், வெப்ப அலைகளால் காடுகள் தீப்பற்றி எரிந்த செய்திகளும் வெளிவந்தன.

இந்தியாவில், 2021 ஜூனில் தொடங்கிய மழைப் பருவத்தில், கடந்த 46 வருடங்களில் இல்லாத அளவிற்கு 1100 மி.மீ. மழைப் பொழிவை தலைநகர் டெல்லி சந்தித்துள்ளது. 2022 மார்ச்சில் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டுமே 228% அதிகம் மழை பதிவாகி உள்ளது. ஜூனில், இமயமலையில் அமைந்துள்ள சிக்கிமில் 632.5 மி.மீ. மழை 16 நாட்கள் சில மணி நேர இடைவெளியில் தொடர்ந்து பெய்துள்ளது. அதே போல் ஜூலையில் குஜராத்தில், இந்த பருவ காலத்திற்கான மழையில் 51% இரு வாரங்களிலே பெய்து விட்டது. அதே மாதம் ஒரு ஆண்டின் சராசரி மழை அளவான 2000 மி.மீ.-ல் கிட்டத்தட்ட 45% மழை ஒரு சில மணி நேரங்களிலேயே மும்பை நகரின் மீது கொட்டித் தீர்த்தது. இது 2005-ல் நாள் முழுதும் பெய்த மழை அளவான 900 மி.மீ-ஐ விட அதிகமாகும்.

மேற்கூறிய தரவுகள் எல்லாமே உலக அளவில் பருவநிலைகளில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு சில உதாரணங்கள் மட்டுமே. இதே போல் உலகின் பல்வேறு நாடுகளில் அசாத்தியமான மழைப் பொழிவுகள் பதிவாகி உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி, இந்தியாவில், மாதத்திற்கு 15 மி.மீ. மழை என்பது குறைந்த அளவு மழை எனவும், 64.5 மி.மீ. மிதமானது, 115.5 மீ.மீ அளவு வரையிலான மழை கனமழை எனவும் வரையறுக்கப்படுகின்றன. இந்த அளவீடுகளின் அடிப்படையில், மேற்கண்ட புள்ளி விவரங்களை நாம் ஒப்பிட்டு மழையின் அதி தீவிரத் தன்மைகளை புரிந்து கொள்ளலாம்.


இதையும் படியுங்கள்:  மழைக்காலம் வந்துவிட்டது: தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்து!


இது போன்ற இயற்கைச் சீற்றங்களையும், அதனால் ஏற்படும் பேரழிவுகளையும் தடுக்க, ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் பருவநிலை மாநாடுகள் என்ற சடங்கை நடத்தி வருகின்றனர். அதில் புவி வெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இரண்டாம் முகாமில் உள்ள உலக நாடுகள் ஆற்ற வேண்டிய செயல்களை இந்த மாநாடு வரையறுக்கின்றது. உண்மையில், தனது பொருளாதார – இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் காலனிய நாடுகளின் வளங்களை கபளீகரம் செய்யும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்தான், உலகளவிலான இயற்கை சீற்றங்களுக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன.

எனினும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் உலகின் சராசரி ஆண்டு வெப்பநிலையானது 0.9 முதல் 1.8 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இதனால், பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரிக்கும். கடல்நீர் மட்டம் உயரும், வெப்ப அலைகள் அதிகரிக்கும். அதிதீவிர கால நிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கிறது. எனவே, 2030-க்குள் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், மனித குலம் கற்பனையே செய்ய முடியாத வகையில் பேரழிவுகளைச் சந்திக்க நேரிடும் என சாத்தான் வேதம் ஓதுகிறது.

முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள், மேல் நிலை வல்லரசுகள், பருவ நிலை மாநாடுகள் நடத்தி இரண்டாவது முகாமில் உள்ள காலனிய நாடுகள் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். சுற்றுச் சூழலுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும், கிரேட்டா துன்பர்க் என்ற 16 வயதான சிறுமியின் வார்த்தைகளில் சொல்வதானால், பருவநிலை மாநாடுகள் வெறும் கண் துடைப்பே. உலகத் தலைவர்கள் துரும்பைக் கூட அசைக்கமாட்டார்கள். மக்களாகிய நாம் தான் அதற்கான முன்னெடுப்புக்களை எடுக்க முடியும்; ஏகாதிபத்திய உலக முதலாளிகளைப் பணிய வைக்க முடியும் என்கிறார். அந்தச் சிறுமியின் கூற்றுப்படிக, அதற்கான கடமையும் பொறுப்பும் மக்களுக்கு உள்ளது.

ஏனெனில், புயல் மற்றும் மழையின் தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளாவது சாதாரண உழைக்கும் மக்கள் தான். புயல், மழையினால் ஏற்படும் வெள்ளத்தில் கோடிக்கணக்கான மக்கள் வீடிழந்து, உடைமைகளை இழந்து நடுத்தெருவிற்கு வருகின்றனர். அவர்களது வாழ்நாள் உழைப்பையும், சேமிப்பையும் ஒரே மழையில் காணாமல் போய் வாழ்வைத் தொலைக்கின்றனர்.

அது மட்டுமின்றி, அமெரிக்க மேல்நிலை வல்லரசு, உலக நாடுகள் மீது திணித்து வரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் புதிய பொருளாதார கொள்கைகள், நமது நாட்டின் விவசாயத்தை நட்டத்தில் தள்ளி அழித்து விட்டது. தொழில் வளர்ச்சிக்காகவும், ரியல் எஸ்டேட்டுகளுக்காகவும், விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. மறுபுறம், விவசாயத்திலிருந்து விரட்டப்பட்ட விவசாயிகள் நகரத்திற்கு படையெடுப்பது, அவர்கள் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கூலி அடிமைகளாக மாற்றப்படுவதன் காரணமாக நகரமயமாக்கம் வேகமாக நடந்து வருகிறது.

நகரங்கள் பெருத்து, மக்கள் குவிவதற்கு ஏற்ப கட்டமைப்புக்களை அரசுகள் உருவாக்கவில்லை. மக்களுக்கு உயிராதாரமான குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆனால், மழைக்காலங்களிலோ நீர் வழித்தடங்கள், வாய்க்கால்கள், நீர் வடிகால்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், முறையாக தூர் வாரப்படாததாலும், சாதாரண மழைக்கே வீடுகளில் வெள்ளம் புகுவது பருவம் தவறாமல் நடைபெறும் நிகழ்வுகளாக மாறி விட்டன.

2015 சென்னை பெருவெள்ளம் நம் கண் முன்னே கண்ட உதாரணமாகும். இந்த பாதிப்பிற்குப் பிறகு, 2017-லேயே சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு, கூவம் மற்றும் கொசஸ்தலை ஆகிய 4 முக்கிய நீர்வழித்தடங்கள், 30 கால்வாய்கள் மற்றும் 1894 கி.மீ.-க்கான மழைநீர் வடிகால் கட்டமைப்புக்களுக்காக 4226.54 கோடி என திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டாலும், அதை முறையாக செயல்படுத்துவதற்கான முயற்சிகள் அப்போதிருந்த அதிமுக அரசாலும், தற்போதுள்ள திமுக அரசாலும் மேற்கொள்ளப்படவில்லை. அவை காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன.

இயற்கையில் ஏற்பட்டு வரும் இந்த மாற்றங்களை அவதானித்து போர்க்கால அடிப்படையில் நீர் நிலைகளை மீட்டெடுத்து தூர்வாறி, மழைநீர் வடிகால் கட்டமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் சென்னை மீண்டுமொரு வெள்ளத்தில் மூழ்க வேண்டி வரும். ஆயினும், சில ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்வதன் மூலம் ஏற்படுத்தும் இப்படிப்பட்ட பராமரிப்பு மற்றும் மராமத்துப் பணிகள் தற்காலிகமானவையே. ஏனெனில், இயற்கையின் பேரழிவு நகரங்களையே மூழ்கடிப்பதாக வீரியம் பெற்று வருகிறது.

இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை, மறுசீரமைக்க அரசாங்கங்கள் பருவந்தோறும் நூற்றுக்கணக்கான கோடி பணத்தை செலவு செய்கின்றன. குறிப்பாக, 2018-வுடன் முடிந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதிலும், முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான். சீனா, ஜப்பானுக்கு அடுத்து 4-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இயற்கையின் பாதிப்பினால் வீடு, உடைமைகளை இழந்து நிற்கும் மக்களிடம் தான், இது போன்ற கூடுதல் பொருளாதார சிக்கல்களைச் சரிகட்ட, வரியாகவோ அல்லது வேறு வகையிலோ மக்களின் தலையிலேயே சுமத்துகின்றனர்.


இதையும் படியுங்கள்: மழைநீர் வடிகாலுக்காக எத்தனை கோடிகள்? என்ன தான் நடந்தன?


அதனால், மக்களை வரி போட்டுக் கொல்லும், முதலாளித்துவத்தைத் தாங்கிப் பிடிக்கும் இன்றைய அரசுகள் அவற்றை ஒரு போதும் செய்யாது. மக்களை நேசிக்கும் சோசலிச கட்டமைப்பைக் கொண்ட அரசால் தான் முடியும். இதற்கு பல வரலாற்று உதாரணங்கள் உண்டு. எனினும், மாவோ தலைமையிலான சீன மக்கள் குடியரசு செய்த சாதனையைச் சொன்னால் இந்த இடத்திற்கு மிகப் பொருத்தமாக அமையும்.

சீனாவின் குறுக்கும் நெடுக்குமாக 5400 கி.மீ-க்கும் மேல் பாய்ந்து 1500-க்கும் மேற்பட்ட தடவைகள் வெள்ளைப் பெருக்கை ஏற்படுத்தி, 26 முறைகள் தனது வழியின் போக்கையே மாற்றி, பல லட்சக்கணக்கான சீன மக்களை அழித்து, சீனாவின் துயரம் (CHINA’S SORROW) என்று பெயர் பெற்ற உலகின் 2-வது பெரிய ஆறான மஞ்சள் ஆறு என்ற காட்டாற்றின் போக்கை இடைமறித்து சீன மக்களைக் காப்பாற்றியது. ஆற்றின் வெள்ளைப் பெருக்கைக் கட்டுப்படுத்த 1952-ல் ஆற்றின் குறுக்கே சான்மென்சியா அணையைக் (SANMENXIA DAM) கட்டியது. இதன் மூலம், 1980-களிலேயே 6.6 மில்லியன் ஏக்கர் பரப்பளவிலான விவசாயமும், 2,50,000 கிலோவாட் மின்சார உற்பத்தியும் நடந்தது. சீனாவின் துயரத்தை சீனாவின் கொடையாக (CHINA’S JOY) மாற்றியது அன்றைய சீன சோசலிச குடியரசு. ஆனால், இன்று சீனா உலக வல்லரசுக்குப் போட்டிக்கு அமெரிக்காவுடன் மோதும் சமூக ஏகாதிபத்தியமாக மாறிப் போய்விட்டது என்பது தனிக்கதை.

எனவே, 2000 ஆண்டுகளுக்கு முன் நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்கை, நீரினால் அழியும் உலகு என 200 ஆண்டுகளிலேயே மாற்றி விட்டது முதலாளித்துவம். அதை மாவோ தலைமையிலான சோசலிச அரசாங்கம் மாற்றிக் காட்டியது. ஆகவே, முதலாளித்துவ அரசுக்கு மாற்றான சோசலிசக் கட்டமைப்பை நிறுவும் போது மட்டுமே புவி வெப்பமயமாதலைத் தடுக்கவும், இயற்கையையும், மனித குலத்தையும் காப்பாற்றவும் முடியும்.

தற்போதைய அரசு கட்டமைப்பின் லாபவெறி பிடித்த பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் இயற்கையை அழிக்கும் கொடூரமான செயலை கண்டித்து போராடுவதுடன் நிரந்தர தீர்வு காண ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக மக்கள் அனைவரையும் இணைத்து செயல்படுவோம்.

தயாளன்.

 புதிய ஜனநாயகம்.
 ஆகஸ்ட் மாத இதழ்.

படியுங்கள்!
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here