தில்லை உள்ளிட்டு
காவி பாசிச – அதிகார மையமாகும் கோவில்கள் !
தமிழகமே தடுத்து நிறுத்து !
மக்கள் அதிகாரம் – முதல் மாநில மாநாடு.

நாள் : 26-03-2022 சனி, மாலை 5-30 மணி

இடம் : இப்ராகிம் பூங்கா (கல்யாணி கவரிங் பஸ் நிறுத்தம்) திருச்சி.

அன்பார்ந்த தமிழக மக்களே !
சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் நின்று காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வந்ததையும், நாம் 2008-ல் போராடிப் பெற்ற அரசாணைப்படி தமிழ் பாடுவதற்கான உரிமையையும் தீட்சிதர்கள் தடுத்து விட்டார்கள். தங்கள் அப்பன் வீட்டு சொத்துபோல கருதி தீட்சிதர்கள் தறிகெட்டு செயல்படுகிறார்கள். எண்ணற்ற சட்டவிரோத கட்டுமானங்களை எழுப்பி வருகிறார்கள். கோவிலை வைத்து வசூலிக்கும் பல கோடி வருமானத்திற்கு எந்த வரவு செலவு கணக்கையும் காட்ட மறுக்கிறார்கள். கோவில் சொத்தை விற்கிறார்கள். கோவிலில் கேள்வி கேட்கும் பக்தர்களை கும்பலாக சூழ்ந்து கொண்டு தாக்குகிறார்கள். தீட்சிதர்களின் இத்தகைய அராஜகத்தை கண்டித்து போராடுபவர்களை கம்யூனிஸ்டுகள்,கடவுள் மறுப்பாளர்கள், நக்சலைட்டுகள், இஸ்லாமிய கைக்கூலிகள் என ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க சங்பரிவார் அமைப்புகள் மடை மாற்றுகிறது. இந்து பக்தர்களின் வழிபாட்டுரிமை பற்றி வாய் திறப்பதில்லை. பார்ப்பனர்களின் சர்வாதிகாரமே இந்து ஒற்றுமை என நைச்சியமாக பக்தர்களை அடிமைதனத்தில் மூழ்கடித்து நம்ப வைக்க முயலுகிறது. சிதம்பரம் கோவிலை இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி மீட்க வேண்டும். வன்கொடுமை வழக்கு பதிவான தீட்சிதர்களை உடனே கைது செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகள் இந்து கோவில்களில் இருந்து இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் இதை ஆதரிக்கின்றனர். நிதியமைச்சர் பி.டி.ஆர். அவர்கள் கோவில் நிர்வாகத்தை எந்த இந்துவிடம் கொடுப்பது என ஜக்கிக்கு எதிராக கேள்வி எழுப்பினார். சிதம்பரம் கோவில் நிர்வாகம் தமிழக அரசிடம் போகக்கூடாது என்பதற்கான சதி திட்டம் தில்லை முதல் டெல்லி வரை விரிவாக நடக்கிறது. இந்து அறநிலையத்துறை சட்டப்பிரிவு 45 படி கோவில்களில் செயல் அதிகாரி நியமனம் செய்வதற்கு எதிராக அந்த சட்டப்பிரிவையே செல்லாது என கோரி உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்பு சிதம்பரம் கோவில் போன்று ஒரு தலைபட்சமாக வந்தால் தமிழக கோவில்களில் செயல் அலுவலர் வெளியேற வேண்டும். மேலும் இந்து அறநிலையத்துறை சட்டமே தவறு என அதிலுள்ள பல சட்டபிரிவுகளுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் சங்கிகளால் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது. பொறுத்தமான நீதிபதி வரும்போது, தமிழகத்தில் அரசியல் சூழல் மாறும் போது மொத்தமாக சங்பரிவார் கும்பலிடம் தமிழக கோவில்கள் பறிபோகும் அபாயம் உள்ளது.

அறநிலையத்துறையின் கீழ் கோவில்கள் இருக்கும் நிலையிலேயே கருவறை தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. பெரியார் 1969 –ல் கருவறை தீண்டாமைக்கு எதிராக, கோவில் நுழைவு போராட்டத்தை அறிவித்தார். அதன் விளைவாக அன்றைய திமுக அரசு, பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராகும் பரம்பரை அர்ச்சகர் பணி நியமனத்தை ஒழித்து, அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் இயற்றியது. இச்சட்டத்திற்கு எதிராக பல பார்ப்பனர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு போட்டார்கள். ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தமிழக அரசின் சட்டம் செல்லும் என 1972 -ல் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ஆகமப்படி அர்ச்சகர் நியமனம் என்பதையும் சேர்த்து சொல்லி விட்டது. அனைத்து கோவில்களிலும் இன்று வரை பணி நியமனம் செய்ய முடியவில்லை. பயிற்சி முடித்த 205 மாணவர்களில் 22 பேருக்கு மட்டுமே தமிழக அரசு சிறு கோவில்களில் பணி நியமனம் வழங்கியது. அதற்கு எதிராக 24 ரிட் மனுக்களை பார்ப்பனர்களுக்கு ஆதரவாக சங்கி அமைப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இதனால் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளி துவங்க முடியவில்லை. புதிய அர்ச்சகர் பணி நியமனம் எதையும் செய்ய முடியவில்லை.

மக்களின் பக்தியை இந்து மதவெறியாக மாற்றுவதை தடுக்க வேண்டும். தமிழக மக்களை மீட்பதுடன், கோவில் தீண்டாமைகளை ஒழிக்க முடியும். காவி பாசிச சக்திகளின் கூடாரமாக, தமிழக கோவில்கள் மாறுவதை தடுக்க வேண்டும். பெரியார், வள்ளலார், அய்ய வைகுந்தர், பிறந்த மண் என்பதை காக்க முடியும். வட இந்திய மக்கள் பாசிச பா.ஜ.கவுக்கு எதிராக ஆத்திரம் பொங்க போராடுகிறார்கள். ஆனால் வாக்களிக்கும் போது பா.ஜ.கவுக்குதான் அளிக்கிறார்கள். அதே நிலை தமிழகத்தில் கோவில்கள் வழியாக ஆன்மீக அரசியலை உருவாக்க நீண்ட கால திட்டத்துடன் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகிறது

தமிழகம் முழுவதும் கோவில்களில் அதன் பல நூறு கோடி ரூபாய் காணிக்கை வருமானம், பலஆயிரம் கோடி அசையும், அசையா சொத்துக்கள் அரசு நிர்வாகத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகளின் கட்டுப்பாட்டில் போய்விடும். இது மிகை மதிப்பீடு அல்ல. பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்து, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இந்துமத வெறியூட்டி, கலவரம் நடத்தி, இடிக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற தடையை மீறி ரத்த வெள்ளத்தில் இடித்து, இறுதியில் அவர்களுக்கே சொந்தம் என தீர்ப்பும் பெற்று விட்டார்கள்.

மக்களின் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை பிரச்சினை போன்றவற்றில் இந்து ஒற்றுமை, இந்து நலன் பேசுவதில்லை. விவசாயிகளின் விளைபொருளுக்கு ஆதார விலை கேட்டு பல ஆயிரம் பேர் போராடி மடிந்தார்கள். அதற்குகூட பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் இந்து ஒற்றுமை இந்துக்கள் நலன் என பேசவில்லை. மக்களை சாதி ரீதியாக பிளவு படுத்தி தனது வாக்கு வங்கியினை தக்க வைக்கவும், இஸ்லாமிய வெறுப்பு அரசியல் மூலம் தனது இந்து ராஷ்டிரா திட்டத்தை விரைவாக அமல்படுத்தவே இந்துக்கள் நலன் பிரச்சாரம். நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இந்த அடிப்படையில்தான் நடந்துள்ளது.

மக்களை இந்துத்தவா கருத்துக்களால் இஸ்லாமிய வெறுப்பு அரசியலால், அடிமைத்தனத்தால் மூழ்கடித்து உ.பி போல் நிரந்தர வாக்கு வங்கி மூலம் நிரந்தர அதிகாரத்தை, மன்னராட்சி போல் நாடு முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் அமல்படுத்த முயலுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்துக்களுக்கு எதிரானவன் என சங்பரிவார் சொல்லிவிட்டால் வாக்கு வங்கி, பலத்த சேதமாகி விடும் என்ற அச்சத்தை அனைத்து தேர்தல் கட்சிகளுக்கும் ஏற்படுத்தி விட்டார்கள். சமத்துவத்திற்கு, சமூக நீதிக்கு எதிரான இந்து ராஷ்டிரம், பார்ப்பனீய சித்தாந்தத்தை அடித்து நொறுக்காமல் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க சங்பரிவார் அமைப்புகளை வீழ்த்த முடியாது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் முதல் மாநில மாநாடு நடத்துகிறோம். கடந்து வந்த காலத்தை தங்களுடன் சேர்ந்து திரும்பி பார்க்கையில் வியப்பாக உள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பு 2015 –ல் துவங்கப்பட்டு, “மூடு டாஸ்மாக்கை“ என்ற முழக்கத்துடன் போராட்டம், மாநாடு என நடத்தி தமிழக மக்களின் பங்கேற்புடன் பரவலான அறிமுகத்துடன் நம்பிக்கையை பெற்ற அமைப்பாக மாறியது. ஊருக்கு ஊரு சாராயம், தள்ளாடுது தமிழகம் என்ற பாடலுக்காக எமது தோழர்கள் தேச துரோக வழக்கை கடுமையாக எதிர் கொண்டனர்.

“விவசாயியை வாழவிடு” என தஞ்சை மாநாடு, கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில்! சி.ஐ.ஏ. என்.ஆர்.சி. வேண்டாம், கல்வி வேலை ஜனநாயகம் வேண்டும் என்ற முழக்கத்தில் பல ஆயிரம் மக்கள் பங்கேற்க திருச்சியில் மாநாடு நடத்தினோம். அணுக்கழிவு, எட்டுவழிச்சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக “தமிழகத்தை நாசமாக்காதே”என்ற முழக்கத்தில் பல மாவட்டங்களில் அரங்கு கூட்டம்,பொதுக்கூட்டம் நடத்தினோம். ஜல்லிகட்டு போராட்டம், காவிரி உரிமை, என்பவற்றில் முழுமையாக பங்களிப்பு செலுத்தினோம். ஸ்டெர்லைட் போராட்டத்தில் எமது தோழர் ஜெயராமன் துப்பாக்கி குண்டில் உயிர் நீத்தார். எமது அமைப்பு தோழர்கள் மீது என்.எஸ்.ஏ, குண்டாஸ் உட்பட பல நூறு வழக்குகள் போடப்பட்டன. மக்களின் முழு ஆதரவோடு அவற்றை கடந்தோம்.

அரசியலமைப்புச் சட்டப்படியான இந்தியா இன்று உருக்குலைக்கப்பட்டு, அம்பானி – அதானி, மோடி – அமித்ஷா கூட்டணியின் கீழ், கார்ப்பரேட் – காவி பாசிஸ்டுகளின் பிடியில் இந்தியா இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே மொழி ஒரே வரி, ஒரே கல்வி, ஒரே உணவு, ஒரே கட்சி, ஒரே அதிபர், என்று ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஒற்றை ஆதிக்கத்தின் கீழே இந்திய அரசியல், பொருளாதாரம், பண்பாடு அனைத்தும் சென்று கொண்டிருக்கிறது. மக்களின் நிலை இரை தேடி அலையும் விலங்கினும் கீழாக மாற்றப்பட்டு வருகிறது.
தேசிய ஊடகங்கள், நீதித்துறை, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பாராளுமன்றம், சட்டமன்றம் என அரசு கட்டமைப்பின் அனைத்து நிறுவனங்களும் கார்ப்பரேட் காவி பாசிச அரசியலுக்கு ஏற்றபடி மாற்றப்பட்டு வருகிறது. மாநில உரிமைகள், அதிகாரங்கள், அனைத்தையும் பறித்து, தேசிய இன பண்பாட்டு அடையாளங்களை அழித்து, இந்துத்துவா என்ற ஒற்றை அதிகாரத்தின் கீழ், மொத்த நாட்டையும் கொண்டுவந்து பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவ வேகமாக செயல்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இந்து சாமியார்கள் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பகிரங்கமாக அறிவித்தனர். உலகம் முழுவதும் கண்டனம் எழுந்த பின்னரும் மோடி-அமித்ஷா கும்பல் மௌனமாக ஆதரித்தது. தான் முன் வைக்கும் ராம ராஜ்ஜியம், ஆரிய சாம்ராஜ்ஜியம் இதுதான் என்பதை தெளிவுபடுத்தி விட்டனர்.

ஜல்லிகட்டு போராட்டத்தால்தான் சட்டம் வந்தது. ஸ்டெர்லைட் போராட்டத்தால்தான் மூடப்பட்டது. எட்டுவழிச்சாலை, மீத்தேன் என அனைத்தும் மக்கள் போராட்டத்தால்தான் நிறுத்தப்பட்டது. தமிழக கோவில்களை காக்க, தில்லை கோவிலை மீட்பது முக்கியம். தமிழர்கள் கட்டிய கோவிலின் உரிமையை உத்திரவாதம் செய்ய, தமிழ் வழிபாடு கட்டாயம் நடக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் செய்தே தீர வேண்டும். கோவில்களின் வரவு செலவு வெளிப்படையாக நடக்க வேண்டும். இதற்கு அறநிலையத்துறையில்தான் அனைத்து கோவில்களும் இருக்க வேண்டும். தமிழக கோவில்களை காவி பாசிச அதிகார மையமாக மாற்றுவதை தமிழகம் போராடி தடுத்து நிறுத்த வேண்டும் என திருச்சி மாநாட்டு அறைகூவலாக தமிழக மக்களை கேட்டு கொள்கிறோம்.

அணி திரண்டு வாரீர்! ஆதரவு தாரீர்! நிதி உதவி தாரீர்!
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு ! ஆலயத்தீண்டாமைக்கு முடிவு கட்டு !
தில்லைக்கோவிலை கைப்பற்று ! தமிழ் உரிமையை நிலைநாட்டு !

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு – 95971 38959

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here