மோடி ஆட்சியை அவ்வப்போது விமர்சித்துக்கொண்டே வரும்  என்டிடிவியை ( NDTV ) விலைகொடுத்து வாங்கிவிட்டால் தொல்லை ஓய்ந்துவிடும் – அதானி இப்படிச் சிந்திக்கிறார். NDTVதாக்குப்பிடிக்குமா ? அல்லது இரையாகிவிடுமா ?

இப்போது இதுதான் பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் உணர்வாளர்களிடையே விவாதிக்கப்பட்டு வரும் பொருள்.

“NDTV–யை அதானி விலைக்கு வாங்கிவிட்டார்.” இது இன்று எரிகிற வரலாறு !

வழமையாக ஒரு ஊடகக் கம்பெனியை விலைக்கு வாங்க அதன் சொந்தக்காரர்களிடம் பேச ஏற்பாடு நடக்கும். அதானி NDTV ஊடக விசயத்தில்  எந்தத் தகவலும் சொல்லவில்லை. நேரே போனார், தட்டினார், தூக்கினார். கோடாலி எடுத்து  பங்குக்கேக்கை வெட்டிவிட்டார். அதானி தந்திரம் புகுந்து விளையாடியிருக்கிறது.  NDTVயை இயக்கும் ராதிகா, பிரணாய் ராய் இருவரும் வண்டிவண்டியாய்ச் சொல்வார்கள்.

பின்னணி என்ன ?

மார்ச்1, 2022–லேயே குவின்ட்டில்லியன் பிசினஸ் மீடியா லிட்டை( QBML ) விலைகொடுத்து வாங்கி அதானி ஊடக வணிகத்தில் புதிதாக இறங்கினார். ஆக இப்போது NDTV–யில் இறங்கியிருப்பது வணிக விரிவாக்கமா, வேறு ஏதாவதா ? அதுவும்தான், மற்றதும்தான்.

அரசியல் கூட்டாளி குஜராத் மோடியின் தேவைக்காகச் சிறு உதவி, ஒருவருக்கொருவர் உதவி என்றும் சொல்லலாம். 2002–ல் முசுலீம் இன அழிப்புப் படுகொலை தொடங்கி கெட்டியாகப்  பிணைந்துள்ளார்கள் இந்த தோஸ்த்துக்கள்.

” NDTV காங்கிரஸ் சார்பாகச் செயல்படுகிறது, பாஜகவை காரமாக விமர்சிக்கிறது ” என்பதற்காக NDTV–யை அதானி வெட்டியிருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, கடந்த ஆகஸ்டு 16-ல் கூட ஒரு விமர்சன அறிக்கையை  வெளியிட்டது NDTV. அந்த விமர்சனத்தில் முக்கியமாக இரண்டு அம்சங்கள் இருந்தன. ஒன்று :  முன்பு கால்வைக்காத புதிய வணிகத்தில் அதானி இறங்குகிறார் என்பது; மற்றொன்று : போட்டிக்காரர்  அம்பானி ஆதிக்கம் செலுத்தும் துறைகளில்  அதானி கால்பதிப்பதோடு , இந்த வணிகப்பெருக்கம் பெரிய கடன்கள் மூலம் நடக்கிறது என்றும் மோடிக்கு நெருக்கமாக இருப்பதுதான் காரணம் என்றும் புட்டுப்புட்டு வைத்துள்ளது.

“கவுதம் அதானியின் சாம்ராச்சியம் நெம்புகோல் போல வெளியிலிருந்து கடன் பெறுவது,  அரசின் மூலம் கடன் தள்ளுபடி முழுமையாகப் பெறுவது  போன்ற எல்லா உதவிகளையும் பெறுகிறது “ என்று ‘ கிரெடிட் சைட்ஸ் ‘ (Credit Sights) வெளிச்சமாக்கியிருக்கிறது.  (அமெரிக்க தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ்  என்ற நிறுவனத்தின்  குழந்தையே  இந்த  ‘ C S ‘.)

மே 2022-ல்  ஸ்விஸ்ஸை மையம் கொண்டு 70 உலக நாடுகளில் வணிகம் செய்யும் இந்தியா-ஹோல்சிம் சிமெண்ட் அலகுகள் ஆகிய 36 சிறிய-பெரிய கம்பெனிகளின் மூலம்  வேகமாக வளர்கிறார் அதானி ; பசுமை ஆற்றல் லிமிடெட்டில் 1300% வளர்ச்சி, எரிவாயுவில் 1900%, எரிவாயு வினியோகத்தில் 900% என்று வேகமாகப் பறக்கிறார் என்கிறது ‘ C S ‘ .

இவ்வாறு NDTV ஒன்றிய அரசுக்கு எதிர்வழக்காடுவதை ஒரேயடியாக இழுத்துமூடி ஆப்பு வைக்கவேண்டும் என்பதே அதானி-மோடி ஜோடியின் இப்போதைய சதுரங்க ஆட்டத்தின் நோக்கம்.  NDTV யில்  அதானி இறங்கியுள்ள  பின்னணி இதுதான்.

அதானி தில்லுமுல்லுகள்  வேறு என்னென்ன ?

மேலே சொன்னது தவிர, அதானி தந்திரங்களில் ஒன்று வணிகப் புரட்டு. பிரணாய் ராய், ராதிகா ராய்   இருவரும் ( அதாவது, அவர்களின் RRPR கம்பெனி ) 2009-2010-ல்  முகேஷ் அம்பானி இணைப்பு கொண்ட VCPL  என்ற கம்பெனியிடம்  வட்டியில்லாக்கடனாக ரூ.403.85 கோடி வாங்கி NDTV-யைத் தொடங்கினார்கள்.  VCPL முதலில் ரிலையன்ஸ், அடுத்து மகேந்திர நகாதா, அதையும் அடுத்து இன்ஃபோடெல் குரூப்பின் சுரேந்திர லூனியாவின் கைகளுக்கு மாறியிருந்தது. பிறகு  RRPR இன்ஃபோடெல்லிடம் NDTVபங்குகளையே அதிகபட்சம்  மாற்றிக்கொள்ளக் கோரியது. அது மாற்றவில்லை. ஆனால் இப்போது இன்ஃபோடெல்லின் நிர்வாக இயக்குனர்  சுரேந்திர லூனியாவிடமிருந்து VCPL–ஐ எந்த ஒரு முன் அனுமதி, விவாதம், ஒப்பந்தம் கூட  இல்லாமல்  அதானி குழுமம்  பயங்கர அழுத்தம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டது. கடன் வாங்கி திருப்பிக் கட்டாமலிருந்த  RRPR -க்கே தெரியாமல் திருட்டுத்தனமாக அதன் பங்குதாரர்களைத் தனக்கு மாற்றிக்கொண்டுவிட்டது அதானி  குழுமம்.

இதையும் படியுங்கள்: மோடியின் ஆசியால் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அதானி!

தற்போது உள்ள பங்குதாரர்களிடமிருந்து 26% அளவு வளைத்துக் கைப்பற்றும் மோசடி இது;  இதுபோக,  அதானி பணம்போட்டு வாங்கியிருப்பது 29.18%; மேலே சொன்ன 26% வெளிப்படையான சலுகையாம் — அதாவது, பங்குதாரராக நீடிப்பது அல்லது விலகுவது அவரவர் உரிமை என்பது சலுகையாம்.  சந்தை விவரப்படி ஆகமொத்தம் 55% அதானிவசம் வந்துவிட்டதாம்!  மீதம் உள்ளதில் 32% RRPR வசம் இருக்குமாம். அனைத்தும் ‘ சட்டப்படியே ‘நடப்பதாக நம்பச் சொல்கிறார் அதானி!

பணமூட்டைகளிடம் வேலைபார்த்தால் காசு பார்க்கலாம் சுதந்திரம் எதிர்பார்க்க முடியுமா ?

இந்திய ஊடக ஊழியர்கள் பல தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளில் சுதந்திரம் இல்லாமல் சிக்கிக் கிடக்கிறார்கள். ஏற்கெனவே ஆளும் கார்ப்பரேட் தரகுஅதிகாரவர்க்கம் வசம் நிறைய சானல்கள்  இருப்பதால் வடிகட்டித்தான் செய்திகள் வெளியிடுகிறார்கள்.  மக்களிடம் எதை விவாதம் செய்யவேண்டுமோ அப்படிச் செய்யாமல் சம்பந்தமில்லாமல் விவாதங்களை நடத்திவருகிறார்கள். இப்பொழுது எதிர்ப்பு சானல்களை வாங்கிப்போடுவதன் மூலம் நான்காவது தூண் ( ? ) மொத்தத்தையும் வளைத்து  தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க தனிக் கூட்டமைப்பைத்தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும்; அப்போதுதான் அதானி, மோடிகளின் கொட்டங்களை பாசிச நகர்வுகளை மக்கள்மத்தியில்  அம்பலப்படுத்தி அதற்கெதிராகத்  தொடர்ந்து போராட முடியும். RRPR -க்கு ஒருவிதச் சோதனையே இது.

RRPR, NDTV பத்திரிக்கையாளர்களோடு சேர்ந்துகொண்டு சுதந்திர ஊடகக்காரர்களைச் சார்ந்திருப்பாரா ? அல்லது  பின்னணியில் வேறொரு தரகுமுதலாளி ‘ஒளிந்திருக்க’, ஏன் அம்பானியேகூட   அந்த நபராகச் செயல்பட்டு திரைமறைவில் உந்தித்தள்ள வேறொரு புது ஊடகக் கம்பெனியாக  பிரணாய் ராய் வலம்வரத் தொடங்கிவிடுவாரா,  தெரியாது. விவகாரம் இதோடு முடிந்துவிடுமா, தெரியாது.  இதையெல்லாம் தாண்டி பாசிசக் கும்பலோடு  பிரணாய் ராய் என்னவகை உறவைத் தொடருவார்? எந்த அளவு நீக்குப்போக்காக, பட்டும்படாமல் செயல்படுவார்? அப்படிச் செயல்பட்டுவிடத்தான்  முடியுமா?

இதையும் படியுங்கள்: மோடியின் புதிய (அதானி) இந்தியா!

NDTV காசுபணச் சூதாட்டத்தில் ஒரு பகடைக் காய்தான். ஒரு கருவி மட்டும்தான். பாசிச முரட்டுவலுவுக்கு எதிராக சில ஊடக ஊழியர்கள்  போராடலாம். NDTV இரையாகலாம். அதானி–மோடி வகையறா தற்காலிக வெற்றிகள் பெறலாம். நாம் போராடுபவர்களோடு இணைந்து  நடந்துவந்த, நடந்துவரும்  ஊடகப் புரட்டுகளைத் தொடர்ந்து  அம்பலப்படுத்துவோம் !  மக்களோடு சேர்ந்து சுதந்திர ஊடகங்களுக்காக முன்நின்று போராடுவோம் !

ஆதாரம் : டெல்லி பத்திரிக்கையாளர் சங்கம் அறிக்கை ; பிசினஸ் ஸ்டாண்டர்டு.காம் கட்டுரை;  NDTV  ஆகஸ்டு கட்டுரைகள், மற்றும் அதன் அறிவிப்புக்கள்.

ஆக்கம்  :  இராசவேல்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here