சீமான் உள்ளிட்ட தமிழ் பாசிச கும்பல் தந்தை பெரியாரை பற்றி இழிவு படுத்தி பேசுவது; பெரியாரின் சாதிய பின்னணியை வைத்து தெலுங்கன் என்று முத்திரை குத்துவது; தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று தமிழ் இனத்தின் மீது மிகவும் பற்று கொண்டவர்களைப் போல நடிப்பது ஆகியவை அனைத்தும் கடந்த ஒரு மாத காலமாக அம்பலமாகி நாறிக் கொண்டுள்ளது.
சீமானின் கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி கொண்டுள்ளனர் என்ற செய்தியும் வெளியாகிக் கொண்டுள்ளது.
இத்தகைய சூழலில் சீமானின் நடவடிக்கைகளை பற்றி அம்பலப்படுத்துவது போதுமானது என்றே கருதுகிறோம். அதே சமயத்தில் தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழகத்தில் குப்பை கொட்டுகின்ற தமிழின பிழைப்புவாதிகளில் முக்கியமானவர்களான ஒரு சிலரை பற்றி புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
அதற்கும் முன்பாக தேசிய இன பிரச்சனை குறித்து மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தை ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தோம் என்றாலும் தேசிய இன விடுதலை போராட்டம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தி நடத்தப்படுகின்றவை மட்டுமே உண்மையான தேசிய இன விடுதலைக்கான போராட்டம் ஆகும்.

பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கும் போது; தேசிய இன அடிப்படையில் பிரிவினையை கோருவது என்ற சூழல் உருவாகும்போது எவ்வாறு கையாள வேண்டும் என்பதை குறித்து கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கீழ்க்கண்ட நிலைப்பாட்டை முன்வைத்து செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் செயல்படுகின்ற பல தேசிய விடுதலை இயக்கங்கள் சந்தேகமின்றி புரட்சிகரமாகவே உள்ளன எனினும் ஒரு சில இயக்கங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதும் இல்லை அவற்றை பலவீனப்படுத்துவதும் இல்லை பாட்டாளி வருக நலன்களுக்கு எதிராக முரண்பட்ட அத்தகைய இயக்கங்களை நாம் அங்கீகரிக்க இயலாது.
முற்போக்கான தேசிய விடுதலை இயக்கங்கள் அவை பாட்டாளி வர்க்கத்தில் ஆதரிக்கப்பட்டாலோ அல்லது தலைமை தாங்கப்பட்டாலோ அவற்றின் நோக்கங்கள், கொள்கைகள், திட்டங்கள் வேறு தான்; தேசிய முதலாளிகளுடையவை வேறு தான். பாட்டாளி வர்க்கம் தேசிய முதலாளிகளின் எல்லா விருப்பங்கள் கோரிக்கைகளோடு ஒத்துப் போய் விட முடியாது. பிரிந்து போகும் உரிமையை உயர்த்தி பிடிக்கும் போதே ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து போகின்ற பிரச்சனையை பாட்டாளி வர்க்கம் எதிர்மறையில் தான் அணுகுகிறது.
படிக்க:
🔰 சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா?
🔰 சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா? பாகம்-2
இந்தியாவில் அசாமில் இருந்து தனி மாநில உரிமையான போடோலாந்து கேட்டு போராடிய சில குழுக்களின் போராட்டம்; லடாக் பகுதியில் நடந்து வருகின்ற புத்த மதத்தினர் நடத்துகின்ற போராட்டம்; ஆந்திராவில் தெலுங்கானாவை தனி மாநிலமாக கேட்டுப் போராடிய போராட்டம்; பஞ்சாபில் சீக்கியர்களின் காலிஸ்தான் போராட்டம் போன்ற ஒரு சில மாநிலங்களில் நடக்கின்ற போராட்டங்களையே தேசிய இனப் பிரச்சனையாக முன்னிறுத்தி ஆதரிக்கின்ற மார்க்சிய லெனினிய குழுக்களும் உள்ளன.
அதுபோல தான் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் மாநில சுயாட்சி அல்லது மாநிலத்துக்கு அதிக அதிகாரம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடுகிறார்கள். இவை தேசிய இனப் பிரச்சனைக்கான போராட்டங்கள் என்று சித்தரிக்கப்படுவதும், அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதும் தவறானதாகும்.
தேசிய இன பிரச்சனை என்பதும் தேசிய விடுதலை என்பது குறித்த வாதங்கள் அனைத்தும் எந்த போர்வையில் போர்த்திக் கொண்டு வந்தாலும் அவை எங்கும் எப்போதும் முதலாளித்துவ தேசியமே அன்றி பாட்டாளி வர்க்க தேசியமாகாது.
அதே சமயத்தில் தேசிய இனப் பிரச்சனை என்ற கண்ணோட்டத்தில் இயங்கும் எல்லா அமைப்புகள் மீதும் எப்படிப்பட்ட வகையிலான அடக்குமுறை நடத்தப்பட்டாலும் அவற்றை எதிர்த்துப் போராடுவது பாட்டாளிகளின் கடமையாகும். இந்த வகையில் தான் காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் இந்திய ஒன்றிய அரசினால் நடத்தப்படும் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டும்.
தமிழகத்தில் தமிழ் தேசியம் பேசுகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் தேசிய இன பிரச்சனை குறித்த ஆழமான பார்வையின்றி நாம் தமிழர், தமிழர்கள் ஒற்றுமை, தமிழா ஒன்றுபடு, தமிழகத்திற்கு தன்னுரிமை, தனித்தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை முன்வைத்து தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பார்ப்பன எதிர்ப்பு மரபு மற்றும் தமிழ் மொழி மற்றும் இனத்தின் மீதான பற்று ஆகியவற்றை அறுவடை செய்து கொள்ள துடித்துக் கொண்டுள்ளனர்.
இதனைத் தாண்டி இத்தகைய முழக்கங்கள் அகில இந்திய தேசியம் என்ற பெயரில் இந்தியாவை ஒன்றுபடுத்த துடிக்கின்ற உடனடி எதிர்காலத்தில் ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவத் துடிக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக அவர்களின் அரசியல், பொருளாதார பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராக மாற்று திட்டத்தை வைத்து இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களில் ஒற்றுமையை கட்டமைப்பதற்கு உதவுவதில்லை.
இதிலேயே தேசிய இன பிரச்சனை என்று பேசிக்கொண்டே பார்ப்பன பாசிஸ்டுகளின் கொள்கைக்கு உதவுகின்ற வகையில் தமிழ் பாசிச கருத்துகளை முன்வைக்கின்ற மணியரசன், சீமான் போன்றவர்களின் நடவடிக்கைகள், பாஜகவுக்கு எதிரான கட்சிகள், இயக்கங்களை ஒன்று படுத்துவதை எதிர்க்கும் வாய்ச்சவடால் பேசும் திருமுருகன் காந்தி போன்றவர்களை அம்பலப்படுத்தி முறியடிக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.
“இந்திய தேசியத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவிய போதெல்லாம் அதற்கான எதிர்ப்பு தமிழ்நாட்டில் இருந்துதான் வந்தது. அயோத்திதாச பண்டிதர், மறைமலை அடிகள், திராவிட இயக்கத்தின் மூலவர்கள், பெரியார் ஈவெரா என்று இந்திய தேசியத்திற்கு மாற்றாக ஒரு கருத்தியலை முன் வைத்ததில் தமிழ்நாட்டிற்கு பெரும் பங்கு உண்டு” என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் தொ.பரமசிவம். இதிலுள்ள முற்போக்கு அம்சங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை என்பதை தெளிவுபடுத்துவதும், ஒடுக்கு முறையை எதிர்த்துப் போராடுகின்ற தேசிய இனங்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டு ஒடுக்குமுறையை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்பதையும் முன்வைத்து தேசிய இனப் பிரச்சனையை அணுக வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் தேசிய இனப்பிரச்சினை குறித்து குட்டி முதலாளித்துவ பிரிவினரின் கண்ணோட்டமும் பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டமும் வெவ்வேறானது என்பதுதான் இதற்கான அடிப்படையாகும்.
இந்த வகையில் திருவாளர் சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல!
- மருது பாண்டியன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி