இந்தியா 4 வது இடம்: பொருளாதாரப் போலி விவரங்களை கூறி மக்களை மடையர்கள் ஆக்கும் சங்கிகள்!

பெரும் கார்ப்பரேட்டுகளால் இந்திய மக்களின் உழைப்பு கொள்ளை அடிக்கப்படுவதால் தான் மக்கள் சோற்றுக்கு வழி இன்றி பசியால் வாடுகிறார்கள். அதனால் தான் ஒன்றிய அரசு  ரேசன் கடைகளில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை கொடுக்க வேண்டி இருக்கிறது.

0
இந்தியா 4 வது இடம்: பொருளாதாரப் போலி விவரங்களை கூறி மக்களை மடையர்கள் ஆக்கும் சங்கிகள்!
ஒரு இந்தியரின் ஆண்டு வருமானத்தை விட  ஒரு ஜப்பானியரின் ஆண்டு வருமானம் சுமார் 12 மடங்கு அதிகமாக உள்ளது.

க்களை ஏமாற்றுவதில் பல ரகங்கள் உள்ளன. பழம் பெருமைகளைச் சொல்லி, அல்லது பொய்யான பழங்காலக் கதைகளை சொல்லி மக்களை உசுப்பி விட்டு ஏமாற்றுவது ஒரு ரகம். நிகழ்கால புள்ளி விவரங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்து அல்லது பொய்யான புள்ளி விவரங்களை காட்டி அதனூடாக மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி ஏமாற்றுவது மற்றும் ஒரு ரகம். எதிர்காலத்தில் அதைச் செய்யப் போகிறோம் இதைச் செய்யப் போகிறோம் என்று சொல்லி ஏமாற்றுவது இன்னொரு ரகம் இப்படி எல்லா வழிவகைகளிலும் மக்களை ஏமாற்றுவதில் சங்கிகள் வல்லவர்கள்.

பண்டைய காலத்தில் (வேதகாலத்தில்,ராம ராஜ்ஜியத்தில்) பாலாறும் தேனாறும் ஓடியது என்றும் மோடியின் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மிகமிக வலுவாக – சிறப்பாக வளர்ந்துள்ளது என்றும் மோடியின் பொற்கால ஆட்சியின் காரணமாக இந்திய பொருளாதாரம்  வளர்ந்து, இந்தியா வல்லரசாக போகிறது என்றும் பொய்யை பரப்பி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து  ஜப்பான் நாட்டின் பொருளாதாரத்தையே முந்தப் போகிறது என்று சங்கிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர். அதேசமயம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 3.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலராகஉள்ளது.

மோடியின் அயராத உழைப்பின் காரணமாக அடுத்த ஆண்டு ஜப்பான் நாட்டின் பொருளாதரத்தை விட இந்தியாவின் பொருளாதாரம் பெரிதாக வளர்ந்து விடப் போகிறது என்று பாஜகவினர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

ஜப்பான் மற்றும் இந்திய நாட்டுகளின் மொத்த பொருளாதாரத்தின் அளவைப் பற்றி பேசும் இவர்கள் இந்திய மக்களின் சராசரி வருமானத்தை ஜப்பானியரின் சராசரி வருமானத்துடன் ஒப்பிட்டுப் பேசாமல் கவனமாக தவிர்த்து விடுகின்றனர். மக்கள் இந்த இடத்தில் தான் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு இரண்டு குடும்பங்களை எடுத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்தில் இரண்டு பேரும் இன்னொரு குடும்பத்தில் 20 பேரும் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இரண்டு குடும்பங்களும் ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த நிலையில், இரண்டு குடும்பங்களும் அதாவது இரண்டு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் வளமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று கூறி விட முடியாது.

இரண்டு பேர் உள்ள குடும்பத்தில் ஒரு நபருக்கு 5 லட்ச ரூபாய் வருமானமாக உள்ள நிலையில் 20 பேர் உள்ள குடும்பத்தில் ஒரு நபருக்கு வெறும்  50 ஆயிரம் ரூபாய் தான் வருட வருமானமாக இருக்கும். அதாவது 20 பேர் உள்ள குடும்பத்தில் ஒரு நபரின் மாத வருமானம் சுமார் 4000 ரூபாய் தான் இருக்கும்.

ஒரு குடும்பத்தில் இரண்டு பேரும் இன்னொரு குடும்பத்தில் 20 பேரும் இருக்கும்போது இரண்டு குடும்பங்களும் ஒரே மாதிரியான வசதியான வாழ்க்கையை வாழ முடியாது என்பதை மேற்கண்ட உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடி. அதே சமயம் ஜப்பானின் மக்கள் தொகையோ 12 கோடியே 30 லட்சம். அதாவது இந்தியாவின் மக்கள் தொகையில் 10% அளவிற்கு கூட ஜப்பானின் மக்கள் தொகை இல்லை.

இந்த நிலையில் ஜப்பானியரின் தனிநபர் ஆண்டு வருமானம்    33,900 அமெரிக்க டாலராக உள்ள நிலையில், இந்தியர்களின் தனிநபர் ஆண்டு வருமானமோ 2,880 அமெரிக்க டாலராக உள்ளது. ஒரு இந்தியரின் ஆண்டு வருமானத்தை விட  ஒரு ஜப்பானியரின் ஆண்டு வருமானம் சுமார் 12 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த விபரத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்திய மக்களின் பொருளாதாரமனது ஜப்பான் மக்களின் பொருளாதாரத்தை விட அதள பாதாளத்தில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஜப்பானியரின் சராசரி ஆண்டு வருமானத்தை  இந்தியரின் சராசரி ஆண்டு வருமானம் இப்பொழுது எட்டிப் பிடிப்பது குறித்து மாபெரும் கற்பனைவாதியான மோடியால் கூட கனவு காண முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை.

படிக்க:

🔰 இறுதி தேதி முடிந்ததால், தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய இனி குறைந்தபட்சம் ரூ. 1000மும், அதிகபட்சம் ரூ. 5000யும் தண்டமாக செலுத்தவேண்டும்.

🔰 நாட்டை உலுக்கும் பொருளாதார பயங்கரவாதமும் பின்னணியில் நிற்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவும்.

இந்த உண்மைகள் நன்கு தெரிந்திருந்தும் கூட பாஜகவினர் ஜப்பானின் பொருளாதரத்தையே இந்தியா அமுக்க போகிறது என்று கதை அளந்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

நாட்டு மக்களின் சராசரி ஆண்டு வருமானம் என்ற ஒரு புள்ளிவிவரத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை யாராலும் அளவிட முடியாது.

அதற்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம். ஒரு தொழிற்சாலையில் அதன் முதலாளியையும் சேர்த்து 100 பேர் வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம். அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு மொத்தம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்த 99 தொழிலாளிகளின் மொத்த ஆண்டு வருமானம் 99 லட்சம் ரூபாய்.

அதேசமயம் அந்த முதலாளியின் ஆண்டுவருமானமோ 100 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் உள்ள 100 பேரின் ஆண்டு சராசரி வருமானம் என்பது ஒரு கோடியே 99 ஆயிரம் ரூபாய் (ரூ.1,00,99,000) என்று கணக்கிட்டு கூறுவார்கள்.

அதாவது மொத்த தொழிலாளிகளின் ஆண்டு வருமானமாக 99 லட்சத்தையும் முதலாளியின் ஆண்டு வருமானமான 100 கோடி ரூபாயையும் கூட்டினால் 100 கோடியே 99 லட்ச ரூபாய் வருகிறது.

இந்தத் தொகையை தொழிற்சாலையின் முதலாளி உட்பட அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் மொத்த நபர்களின் எண்ணிக்கையான 100 ஆல் வகுத்தால் ஒரு கோடியே 99 ஆயிரம் ரூபாய் (ரூ.1,00,99,000) என்று வரும்.

இதைத்தான் அந்த ஒரு தொழிலாளியின் சராசரி ஆண்டு வருமானம் என்று கூறுவார்கள். ஆனால் அந்த தொழிலாளியின் உண்மையான ஆண்டு வருமானமும் வெறும் ஒரு லட்சம் ரூபாய் தான்.

இது எந்த அளவிற்கு எதார்த்தத்திற்கு பொருந்தாததாக இருக்கிறதோ அதேபோலத்தான் ஒரு நாட்டு மக்களின் சராசரி ஆண்டு வருமானம் என்பதும் யதார்த்தத்திற்கு துளி கூட பொருந்தாததாக இருக்கிறது.

இப்பொழுது இந்திய அரசு கூறும் புள்ளி விவரங்களின் படி பார்த்தால் ஒரு இந்தியரின் சராசரி ஆண்டு வருமானம் சுமார் 2,44,000 ரூபாய். இதன் படி பார்க்க போனால் இந்தியாவில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 81,000 ரூபாயாக இருக்க வேண்டும். இந்தத் தொகையையும் இந்திய நாட்டு மக்களின் குடும்ப வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் எவராலும் சிரிப்பை அடக்க முடியாது. இந்தக் கணக்கீடு எவ்வளவு அபத்தமானது என்பது இதிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

நாட்டு மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்பிற்கு உரிய உரிய ஊதியத்தை கொடுக்காமல் கொள்ளையடித்து அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் பல வழிகளில் சொத்து சேர்ப்பதற்காக பாசிச பாஜகவும் மோடியும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பாசிஸ்டுகளின் இந்த சேவை காரணமாகத்தான் இந்தியாவில் மேல் மட்டத்தில் உள்ள 1% பணக்காரர்கள் இந்தியாவில் உள்ள மொத்த சொத்துக்களில் 40% ஐ கைப்பற்றி வைத்துக் கொண்டிருக்க முடிகிறது. அதேசமயம் அடித்தத்தில் உள்ள 50% மக்கள் நாட்டின் சொத்தில் வெறும் 3%  மட்டுமே தங்களுக்கு உரிமையாக கொண்டிருக்கிறார்கள்.

இதை இன்னொரு கோணத்தில் இருந்தும் புரிந்து கொள்ள முடியும். மேல்மட்டத்தில் உள்ள 5% பணக்காரர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் 62% ஐ கொள்ளையடித்துக் கொண்டு விடுகிறார்கள். மீதி உள்ளதை 95% மக்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொள்வதாக  கூறலாம்.

இப்படி, பெரும் கார்ப்பரேட்டுகளால் இந்திய மக்களின் உழைப்பு கொள்ளை அடிக்கப்படுவதால் தான் மக்கள் சோற்றுக்கு வழி இன்றி பசியால் வாடுகிறார்கள். அதனால் தான் ஒன்றிய அரசு  ரேசன் கடைகளில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை கொடுக்க வேண்டி இருக்கிறது.

இப்படிப்பட்ட கொடிய வறுமையில் நாட்டு மக்களை வைத்துக் கொண்டிருக்கும் மோடியும்  பாஜகவினரும் நாடு வல்லரசாக போவதாக கதை அளந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் சங்கிகளின் வார்த்தைகளில் மயங்கியுள அப்பாவி மக்கள் கேள்வி கேட்காமல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பாசிச மோடியையும் பாசிச பாஜகவையும் வீழ்த்த வேண்டும் எனில் அதாவது கார்ப்பரேட் –  காவி பாசிசத்தை வீழ்த்த வேண்டும் எனில் மக்களை இது போன்ற மயக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அதற்கான வேலையை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டும்.

  • தங்கசாமி

செய்தி ஆதாரம்: Thewire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here