மோடியின் 10 லட்சம் அரசு வேலை அறிவிப்பு:
மேலும் ஒரு ஜும்லா!


“அனைத்து அரசு துறைகளிலும் மனித வளத்தை ஆராய்ந்ததில் வெவ்வேறு துறைகளில் உள்ள 10 லட்சம் காலிப் பணியிடங்களை அடுத்த 18 மாத காலத்தில் போர்க்கால அடிப்படையில் நிரப்ப உத்தரவிட்டுள்ளதாக” ட்வீட் செய்துள்ளார் பிரதமர் மோடி.

மோடியின் இந்த அறிவிப்பு ஏதோ புதிய வேலைகளை மோடி அரசு உருவாக்கியதைப் போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது பாஜகவும் அதன் அடிவருடி கார்ப்பரேட் ஊடகங்களும். ஒன்றிய அமைச்சர்கள் “இது மாபெரும் சாதனை” என சங்கிகளின் வாட்சாப் யுனிவர்சிட்டிக்கு தீனிபோட ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால், உண்மை என்ன? இந்த 10 லட்சம் வேலைகள் என்பது ஒன்றிய அரசின் வெவ்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவது மட்டுமே. ஒன்றிய அரசில் இவ்வளவு காலிப்பணியிடங்கள் உருவானதற்கே தொடர்ச்சியாக மோடி ஆட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப் படவில்லை என்பதே காரணம். இப்போதும்கூட அறிவித்துள்ளபடி 10 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா என்பது சந்தேகம்தான். இந்த சந்தேகம் மோடியின் முந்தைய ஜும்லாக்களால் உருவானது. 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவதாக அறிவித்த மோடி படித்த இளைஞர்களை பகோடா போட சொன்னது வரை பார்த்து விட்டோம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடுவதற்கு புதிதாக வருபவர்கள் எண்ணிக்கை மட்டுமே 1.2 கோடி. CMIE ஆய்வுபடி கிட்டத்தட்ட நாட்டின் மக்கள் தொகையில் 40% பேர்தான் வேலையில் உள்ளனர் அல்லது வேலை தேடுகின்றனர். அதாவது, வேலை செய்யும் தகுதியுள்ள வயதில் நாட்டில் உள்ள 90 கோடி பேரில் 40 கோடி பேர் மட்டுமே வேலையில் உள்ளனர் அல்லது தேடுகின்றனர். 2017யில் இது 47% சதவிதமாக இருந்தது. தற்போதைய 40 சதவீதம் என்பது உலக சராசரி 60 சதவீதம் என்பதைவிட மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கு மேல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் மேலே உள்ள தரவை ஒப்பிட்டுப் பார்த்தால் நிலைமையின் அபாயம் புரியும்.கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடுவதையே நிறுத்தி விட்டு அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கும் உதிரி வேலைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பே தேக்கமடைய தொடங்கிய இந்தியப் பொருளாதாரம், கொரோனா காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பிருந்த நிலைக்கு வரவே தடுமாறி வருகிறது.

உலக பொருளாதாரமும் இந்திய பொருளாதாரமும் வளர்ச்சியின்றி இருந்த காலத்தில் பணமதிப்பு நீக்கம், GST என அடுத்தடுத்து துல்லியத் தாக்குதல் நடத்தி இந்திய பொருளாதாரத்தை முழுவதுமாக வீழச் செய்தவர் மோடி. இந்த இரண்டு நடவடிக்கைகளாலும் மூடப்பட்ட லட்சக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் மீளவே இல்லை. இவைதான் விவசாயத்திற்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பை உருவாக்குபவை. அதனை கோமாவிற்கு கொண்டு போனதே மோடியின் சாதனை!

சிறுதொழிலை மீட்பதற்காக கொரோனா ஊரடங்கு காலத்தில் மோடி அறிவித்த Stimulus package முன்னேற்றம் எதையும் கொண்டு வரவில்லை. சிறுதொழில் துறையை மீட்காமல் நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை. ஆனால், சிறுதொழிலை ஒழிக்கும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தவே கார்ப்பரேட்டுகளால் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டவர் மோடி.

பாசிச பாஜகவின் ஆட்சியை வீழ்த்தாமல், மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு மாற்றை உருவாக்காமல்  கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிராதாரமான வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது.

  • திருமுருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here