ஆந்திர மாநிலம் கூடுரை சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள் என்பவர் சத்தியவேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது கணவர் மற்றும் குழந்தைகள் சத்தியவேடு கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரின் பண்ணையில் வேலை செய்து வந்தோம். ஒரு வருடத்திற்கு முன்பு நெலட்டூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் எனது கணவருக்கு கொடுத்த கடன் தொகையை கேட்டார். இதையறிந்து எனக்கு 15000 ரூபாய் கொடுத்து முத்து உதவி செய்தார். இந்த பணத்திற்கு ஈடாக தனது வாத்து பண்ணையில் எங்களை குடும்பத்துடன் வேலை பார்க்க வைத்தார் என மனுவில் தெரிவித்துள்ளார்.
காலை முதல் இரவு வரை அதிக வேலைகள் கொடுத்ததாகவும் புகார் மனுவில் கூறியுள்ள அங்கம்மாள் எனக்கும் என் குழந்தைகளுக்கும் அதிக வேலை கொடுத்தனர். ஆனால் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கவில்லை இதற்கிடையில் அவர் கணவர் இறந்து விடவே அதற்கான சடங்குகளை முடித்துவிட்டு பணத்தை அனுப்புவதாக முத்துவிடம் அங்கம்மாள் கூறியுள்ளார்.
ஆனால் கொடுத்த 15000 பணத்திற்கு 42 ஆயிரம் வரை பணம் தர வேண்டும் என்றும் இல்லை என்றால் அதற்கு ஈடாக, 9 வயது மகனை பணத்திற்கு உத்தரவாதமாக வாத்து பண்ணையில் விட்டுச் செல்ல வேண்டும் என்று முத்து கூறியுள்ளார். இதனால் தனது கடைசி மகனை அங்கேயே விட்டுவிட்டு வந்ததாக அங்கம்மாள் கூறியுள்ளார்.
பத்து மாதங்களுக்குப் பிறகு பணத்தை திரட்டி கொண்டு மகனை மீட்கச் சென்ற (மே 15) அங்கம்மாளை முத்துவும் அவரது மனைவியும் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி 70 ஆயிரம் பணம் தர வேண்டும், அப்படியே தந்தாலும் மகனை அனுப்ப மாட்டேன் என்று மிரட்டி அனுப்பி உள்ளனர். அங்கம்மாள் குடும்பத்தினை முத்துவும் அவரது மனைவியும் கொத்தடிமைகளாக நடத்தி உள்ளனர். சம்பளம் கிடையாது. அருகில் உள்ள மளிகை கடையில் குறைந்த அளவிலான பொருட்களை மட்டும் கொடுப்பார்கள். கொடுமை தாங்காமல் வெளியில் சென்று வேலை பார்த்து பணம் தருவதாக கூறியும் அவர்கள் விடுவதாயில்லை. வாத்து பண்ணையில் மகன்கள் கடுமையான பணிசுமைக்கு உள்ளானதாகவும் சேற்று வயல்களில் வெறும் கால்களில் நடப்பதினால் கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அடிமை முறைக்கு எதிராக சத்தியவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கண்டு கொள்வதாய் இல்லை என்கிறார் அங்கம்மாள். தற்போது கூடூர் எம்.எல்.ஏ உதவியால் காவல்துறையினர் முத்துவிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தோம் சிறுவன் இறந்து விட்டான். இதனை பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே பாலாற்று படுகையில் புதைத்து விட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
படிக்க:
🔰 தமிழகத்தில் சோழர் ஆட்சியிலும் அடிமைகளா ? பொ வேல்சாமி
ஆனால் உண்மை பின்பு தான் வெளிப்பட்டது. சிறுவனின் உடலை தோண்டி எடுத்து செய்யப்பட்ட விசாரணையில், தலையில் கம்பியால் பலமாக தாக்கப்பட்டு சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து முத்து அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகியோர் மீது கொலை குற்றம் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம், சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், யாருக்கும் தெரியாமல் புதைத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இது ஒரு சம்பவம் தானா? இல்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் செங்கல் சூளை, ஆடு மாடு மேய்க்க, பண்ணைகளில், ஆலைகளில் வேலை செய்ய என ஆந்திரா ஒரிசா பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏழ்மையான மக்கள் சில தரகர்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு நிரந்தர கொத்தடிமைகளாக ஒப்பந்த மூலம் பணியமர்த்தப்படுகின்றனர். கடுமையான வறுமையில் உழல்வதால் இவர்கள் குடும்பத்துடன் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு அற்ப கூலியும் சில இடங்களில் கூலிக்கு பதிலாக உணவு மட்டுமே கொடுக்கப்படும் அவல நிலையும் உள்ளது.
இந்தியாவில் பண்ணையடிமை முறை, கூலி அடிமை முறை ஒழிக்கப்பட்டுள்ளதாக பலர் கருதுகின்றனர். அவர்களுக்கு நவீன வடிவிலான அடிமை முறை இந்தியாவில் உருவாகியுள்ளது என்பதை உணர்த்துகிறது. அடித்தட்டு மக்களை அடிமைகளாக உற்பத்தி செய்பவர்கள் நாட்டை ஆளும் கார்ப்பரேட் காவி கும்பல் தான். இந்தியாவின் நிலவும் கடுமையான ஏற்றத்தாழ்வு உழைக்கும் மக்களை பஞ்ச பராரிகளாக மாற்றுகிறது. ஒரு வேலை உணவிற்காக கூலி அடிமைகளாவதும் பெற்ற மகன்களையே அடகு வைக்கும் சூழலையும் இந்த அரசு உருவாக்குகிறது.
இந்தியாவில் நிலவும் கடுமையான வறுமையின் காரணமாக குழந்தைகளையும் உற்பத்தியில் ஈடுபடுத்தும் அவலநிலை அதிகரித்து வருகிறது. குழந்தை தொழிலாளர் சட்டம் எல்லாம் ஏட்டளவிலேயே உள்ளது. அதிகார வர்க்கத்திற்கு தெரிந்தே குழந்தை தொழிலாளர் மீது உழைப்புச் சுரண்டல் நிகழ்த்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் இலக்காக நிர்ணயிப்பதும், இந்தியாவில் 5 ட்ரில்லியன் பொருளாதாரம் இலக்காக நிர்ணயிப்பதும் நாம் நினைப்பது போல் நம் மக்களின் வளர்ச்சிக்காக அல்ல. சில நூறு முதலாளிகள் லட்சம் கோடிகளில் சம்பாதிப்பதற்கும் உற்பத்தியை பன்மடங்கு பெருக்குவதற்கும் தான் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்தியா, பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக பாசிஸ்ட் மோடி பெருமை கொள்கிறார். இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறினால் கூட அதனால் உழைக்கும் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.
தகவல்: பிபிசி தமிழ்
- நலன்