“நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் அரசுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேர்தலில் போட்டியிடுவது போன்ற செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது. நான் ஓய்வுபெற்ற பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
தான் பதவி வகிக்கின்ற காலத்திற்குள் அரசாங்கத்தின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு சொத்துக் குவிப்பது மட்டுமின்றி, எதிர்காலத்தில் நிரந்தர வருமானம் தரக்கூடிய வகையில் பள்ளி, கல்லூரிகள் கட்டுவது பைனான்ஸ் நிறுவனங்களை நடத்துவது, ஏக்கர் கணக்கிலான விவசாய பண்ணைகளை நடத்துவது, நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள மலைக்காடுகளில் செல்வ செழிப்பான பகுதிகளை விலைக்கு வாங்கிப் போட்டு எஸ்டேட்டுகளை நடத்துவது, விடுதிகள், திரையரங்குகள் கட்டி லாபம் பார்ப்பது போன்ற வழிகளில் இறங்கி ‘சமூக சேவை’ செய்கின்ற எண்ணற்ற அதிகார வர்க்கத்தினர் மத்தியில் நீதிபதி பி.ஆர் கவாய் விதிவிலக்காக உள்ளார் என்றே அறிய முடிகிறது.
அதிகாரிகள் பொறுக்கி தின்ன அலுவலகம் என்று சுருக்கமாக நெஞ்சில் தைக்கும் வகையில் முன் வைத்தார் தந்தை பெரியார். பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்கள் துவங்கி மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்றுகிறவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்ற அதிகாரிகள், ராணுவத்தில் பணிபுரிகின்ற உயர் அதிகாரிகள் போன்ற அனைவரும் ஓய்வுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் பாஜகவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு பொருத்தமான வகையில் செயல்படுகிறார்கள்.
இந்தியாவில் நிலவி வருகின்ற அரசு கட்டமைப்பானது முழுக்க பாசிசமயமாகி வருகிறது என்று மார்க்சிய லெனினிய அமைப்புகள் முன்வைக்கின்றன. இதன் பொருள் அனைத்து மட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முதல் ஆர்எஸ்எஸ் பணியாளர்களாக பணிபுரிகின்ற நபர்கள் வரை பொருத்தமான முறையில் பதவியில் அமர்த்தப்படுகின்றனர்.
படிக்க:
🔰 மராட்டியத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு நிகழ்ந்த கொடுமை வேடிக்கை பார்க்கும் அரசியலமைப்புச் சட்டம்!
🔰 வி.எச்.பி கூட்டத்தில் மதவெறியைக் கக்கிய உயர்நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடு!
சமீபத்தில் மக்கள் அதிகாரம் நடத்திய மாநாட்டில் மாநில தன்னாட்சி உரிமை பற்றி பேசிய ஓய்வு பெற்ற நீதியரசர், அரிபரந்தாமன் பற்றி ஆர்எஸ்எஸ் கும்பல் நடத்துகின்ற ஶ்ரீ என்ற பெயரில் இயங்குகின்ற தொலைக்காட்சி ஒன்றில், “அவர் பணியாற்றிய காலத்தில் இதே கருத்தில்தான் அவர் பல்வேறு தீர்ப்புகளை சொல்லியிருப்பார் என்பதால் அவற்றையெல்லாம் ரத்து செய்துவிட்டு புதிதாக விசாரணை நடத்த வேண்டும்” என்ற அளவிற்கு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர்.
தற்போது இந்திய அரசு கட்டமைப்பில் பணிபுரிகின்ற அதிகார வர்க்கம் பச்சையாகவே தாங்கள் ஆர்எஸ்எஸ் இன் கைக்கூலிகள் தான் என்பதை வெளிப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது மறைமுகமாக யாருடைய பார்வைக்கு செல்ல வேண்டுமோ அந்த அளவிற்கு வெளிப்படுத்துகின்றனர் அல்லது செயல்படுகின்றனர்.
ஏனென்றால் பணி ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் மக்களின் சொத்துக்களை வேறு கோணத்தில், வேறு வகையில் கொள்ளையடிப்பதற்கு கவர்னராகவோ அல்லது அரசாங்கத்தின் ஏதாவது ஒரு உறுப்பில் ஆலோசனை சொல்லக்கூடிய நபராகவோ அல்லது அரசு கட்டமைப்பிற்கு ஆலோசனை தருகின்ற சிந்தனைக்குழாம்களில் பங்கெடுத்து அதன் மூலமாக வருவாய் ஈட்டுகின்ற வகையில் செயல்படுகின்றனர்.
இதன் மூலம், ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதைப் போல வருவாய்க்கு வருவாயும் கிடைக்கிறது. ஆர்எஸ்எஸ் பாஜகவின் கொள்கைகளை பல்வேறு தளங்களில் பரப்புவதற்கு பயன்படுகிறது.
அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை பிரச்சாரம் செய்வதற்கு அரசு உறுப்புகள் மட்டுமின்றி சுதந்திரமானது, நடுநிலையானது என்றெல்லாம் பித்தலாட்டமாக முன் வைக்கப்படுகின்ற ஊடகங்களில் கூட இத்தகைய ஆர்எஸ்எஸ் பாஜகவின் சித்தாந்தவாதிகள், களப்பணியாளர்கள் நேரடியாக இறங்கி கருத்துருவாக்கம் செய்ய தொடங்கி விட்டனர்.
ஒரு எடுத்துக்காட்டாக ஆர்எஸ்எஸ் கும்பலின் குருமூர்த்தி துக்ளக் பத்திரிகையை நடத்துவது போல இன்னொரு ஆர்எஸ்எஸ் காரரான ரங்கராஜ் பாண்டே சாணக்யா என்ற தொலைக்காட்சி ஒன்றையும் சமூக வலைதளத்தையும் நடத்தி வருகிறார்.. குருமூர்த்திக்கு ரிசர்வ் வங்கி ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாண்டே காத்துக் கொண்டிருக்கிறார்.
இதுபோன்ற நபர்களின் உதவியுடன் ஆர்எஸ்எஸ் பாஜகவின் மோசமான கொள்கைகள் பொதுமக்களினால் விமர்சிக்கப்படும் போது அதற்கு எதிரான கருத்தை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் விவாதம் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். தனக்கு எதிரான ஒரு கருத்து நாட்டில் நிலவவே கூடாது என்ற பாசிச பயங்கரவாத கொடூரமான சிந்தனை இவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.
இவற்றுக்கு மத்தியில் தனது நீதிபதி பதவியை பயன்படுத்தி எந்தவிதமான சலுகைகளையும் பெற மாட்டேன் என்றும், ஓய்வு பெற்ற பிறகு எந்த விதமான அரசு பதவிகளையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவிப்பது துணிச்சலான செயல் என்றே கருதுகிறோம்.
ஏனென்றால் தனது வீட்டில் பிடிபட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின் எரித்து அதனையும் முழுமையாக செய்ய முடியாமல் மாட்டிக் கொண்ட நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்பது மட்டுமின்றி, இவ்வாறு சிக்கிக்கொண்ட பிறகாவது தன்னை சுயபரிசீலனை செய்து கொண்டு நீதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு அவர் தயாராக இல்லை.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது (மார்ச் 14) பணம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக கண்டறிந்துள்ளது. ஆனாலும் கூட அவர் பதவி விலகவில்லை. அவர் மீது பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்யக்கூடிய நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று அறிவித்துள்ளது.
நீதிபதிகள் என்றால் எல்லோருமே ஆளும் வர்க்கத்திற்கு சாதகமானவர்கள்; கட்சிகள் என்றால் எப்போதும் முதலாளிகள் நலனில் இருந்து பேசுபவர்கள்; அரசு என்றால் எப்போதும் ஒடுக்குமுறை கருவியாக தான் நீடிக்கும், இவையெல்லாம் தெரியாமல் மார்க்சியம் பேச முடியுமா என்று கம்பு சுத்துபவர்கள் சிலர் இதைப் பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
மக்கள் நலனிலிருந்தும் அல்லது சொந்த வகையில் தான் இதுவரை பெற்ற அனுபவங்களில் இருந்தும் நேர்மையாக கருத்துக்களை வெளியிட துவங்கினால் ஆதரிப்பது நமது பொறுப்பும் கடமையாகும். அதுவும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து கூறுவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
- மாசாணம்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி