உலகின் மூன்றாவது பணக்காரராக திடீரென்று பல ஆயிரம் கோடிகளை குவித்து முன்னணிக்கு வந்த கார்ப்பரேட் முதலாளியும், ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலின் புரவலருமான, திருவாளர் அதானியின் சொத்து ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி அடைந்தது.
பங்கு சந்தைகளின் மூலமாக ஊக வணிகத்தில் ஈடுபட்டு வந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2500 சதவீதம் சொத்துக்களை குவித்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அடுத்தடுத்து முன்னேறி வந்த கௌதம் அதானி பங்கு சந்தை நிலவரங்களை பட்டியலிடுவதிலும், கணக்குகளை காட்டுவதிலும் மிகப்பெரும் மோசடி செய்துள்ளதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த “ஹிட்டன் பார்க்” என்ற ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையை வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் வீழ்ச்சி அடையத் துவங்கின.
குறிப்பாக அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி துறைமுகம், அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ், என் டி டி வி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகள் சுமார் 5% முதல் 9 சதவீதம் வரை வீழ்ச்சியை கண்டது. இந்த வீழ்ச்சியினால் நிலைகுலைந்து போய் உள்ள அதானி குழுமம் ஹிண்டன் பர்க் மீது குற்றவியல் வழக்குகளை கொடுப்பதற்கு, லண்டன் மற்றும் இந்திய வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதானியின் திடீர் வளர்ச்சிக்கு பின்னால் இது போன்ற மோசடிகளும், கார்ப்பரேட்டுகளுக்கு துணை போகின்ற ஆர்எஸ்எஸ்-மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கையும் காரணம் என்பதை இந்தியாவில் உள்ள மார்க்சிய லெனினிய புரட்சியாளர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு தொழில் துறையின் தரவரிசை பட்டியலில் கீழே கிடந்த அதானி 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, மோடி அரசுடன் தனது கூட்டணி மற்றும் கள்ளத்தனமான கூட்டணிகள் மூலம் பல்வேறு துறைகளிலும் கால் பதிக்க துவங்கினார்.
அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக சொல்லி அடிப்பது போல கார்ப்பரேட் சூறையாடலுக்கு மோடியின் அரசாங்கத்தை திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டது,அதானி குழுமம். கடைசியாக ஊடகத்துறையில் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்தி வந்த என் டி டி வி குழுமத்தையும் விழுங்கி, தனக்கு எதிரில் யாரும் இல்லை என்கிற அளவுக்கு, பகாசுர வளர்ச்சியை கண்டது.
இந்தியாவில் உள்ள மெத்த படித்த அறிவாளிகள், பார்ப்பன மேட்டுக்குடிகள், உழைக்காமல் பங்கு சந்தையில் அமர்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்க வேண்டும் என்று துடிக்கின்ற கேடுகெட்ட சூதாட்ட பேர்வழிகள் ஆகியோர் அனைவரும் இணைந்து அதானி குழுமத்தை உயர்த்திப் பிடித்தனர்.
தற்போது அதன் பங்கு சந்தை மோசடிகள் வெளிவரத் துவங்கியவுடன் அந்தக் குழுமத்தைச் சார்ந்த உயர் அதிகாரிகள் நமது குழுமத்தை நம்பியுள்ள அல்லது இதில் முதலீடு போட்டுள்ள பங்குதாரர் அனைவரும் அறிவாளிகள் நிதானமானவர்கள் என்பதால் இது போன்ற அறிக்கைகளை நம்ப மாட்டார்கள் என்று ஊளையிடத் துவங்கினர்.
ஹிண்டன்பர்க் என்ற அந்த நிறுவனம் வழங்கிய 106 பக்க அறிக்கையில் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து 88 கேள்விகளை எழுப்பியுள்ளனர். அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காத அதானி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அறிக்கை வெளியிட்ட நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப் போவதாக மிரட்டிப் பார்க்கிறது.
அதற்கு அஞ்சாத ஹிண்டன்பர்க் நிறுவனம் வழக்கை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பதிலளித்துள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை வெளியானதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
உடனே திரவுபதிக்கு சேலை தரும் கண்ணனாக தோன்றியுள்ள மோடி அரசு அதானி குழுமத்துக்கு ஏற்பட்ட சரிவை சரிகட்ட LIC உள்ள பொதுத்துறை நிறுவனங்களை அதானியின் பங்குகளை கணிசமாக வாங்கியுள்ளது. அதானி நிறுவனத்தை காப்பாற்ற மக்கள் பணத்தை வாரி இறைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: விவசாயிகளின் வருமானம் அழிகிறது! அதானிக்கு செல்வம் கொழிக்கிறது! இதுவே கார்ப்பரேட் பாசிசம்1
அடிபட்டும் திருந்தாத நடுத்தர வர்க்க முதலீட்டாளர்கள் மக்கள் பணத்தை பணயம் வைத்து மோடி அரசு தங்களை காப்பாற்றுவதாக கருதிக் கொண்டுள்ளனர்.
கௌதம் அதானி இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் எப்படி கொள்ளையடிப்பது என திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
இடையில் பொருளாதாரப் புலிகள் என்று கருதப்படும் பிசினஸ் ஸ்டாண்டர்ட், எக்கனாமிக் டைம்ஸ், தி மென்ட், துவங்கி இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகள் அதானியின் சொத்து வீழ்ச்சி அடைந்து விட்டது என்று பதறிக் கொண்டுள்ளார்கள்.
அதானி குழுமத்தின் சொத்துக்களை பாதுகாக்க மக்களின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுவதைக் கண்டு நாம் எப்போது ஆத்திரம் கொள்ளப் போகிறோம்?
- இரா.கபிலன்