ஜனவரி 15, 2019 அன்று டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு வெளியே மாணவர்களும் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஒன்று கூடி சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற போது போலீஸ் தடுத்து தாக்கியதால் வன்முறை வெடித்தது.
டெல்லி போலீசார் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்து மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதிலும், தடியடி நடத்தியதிலும் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். ஒரு மாணவருக்கு இடது கண் பார்வை இழப்பும், மேலும் இரு மாணவர்களுக்கு கடுமையான எலும்பு முறிவும் ஏற்பட்டது. காவல்துறையின் கண்மூடித்தனமான இந்தத் தாக்குதலில் 200 முதல் 400 மாணவர்கள் வரை காயம்பட்டதாக பல்வேறு செய்தித்தாள்களில் செய்தி வெளியானது.
இச்சம்பவம் நடந்த பிறகு டெல்லி உயர் நீதிமன்றத்தில் உண்மை கண்டறியும் குழுவை அமைக்கக் கோரியும், மாணவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) தொடர்பாக குழுவின் அறிக்கை வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மாணவர்களுக்கு இழப்பீட்டுடன் மருத்துவ உதவி வழங்கவும், உரிய அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் காவல்துறை நுழையக் கூடாது என உத்தரவிடக் கோரியும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கூட்டுக் களவாணிகளாக காவல்துறையும், நீதித்துறையும்!
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் ஹரிசங்கர் அமர்வு இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் நிராகரித்தது. டெல்லி காவல்துறையை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. காவல்துறை தாங்கள் வளாகத்தில் சிக்கிக்கொண்ட அப்பாவி மாணவர்களை மீட்கவே உள்ளே சென்றதாகவும் தேவையான குறைந்தபட்ச பலத்தை மட்டுமே உபயோகித்ததாகவும் பச்சையாகப் புளுகியது.
கால் மற்றும் கைகளில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்ட மற்றும் கண் பார்வை இழந்த 9 மாணவர்கள் நட்ட ஈடு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள் 15 வெவ்வேறு நீதித்துறை அமர்வுகள் முன்பாக விசாரிக்கப்பட்டது. 45 முறை வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. பிபிஏ மூன்றாம் ஆண்டு மாணவரான முஜீப், செமஸ்டர் தேர்வுக்காக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது குண்டாந்தடியுடன் உள்ளே நுழைந்த போலீஸ் தாறுமாறாகத் தாக்கி அனைவரையும் இழுத்துச் சென்றதாக தெரிவித்தார்.
இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆறு மாதங்கள் படுக்கையில் இருந்ததாகவும், இந்த அநீதிக்கு எப்படியும் நீதியும், நட்ட ஈடும் கிடைக்கும் என இரண்டு ஆண்டுகள் வரை நம்பியதாகவும் கூறும் அவர், “இப்போது நம்பிக்கை போய்விட்டது. ஏனெனில் நீதிமன்றமும், ஜாமியா நிர்வாகமும் அரசுக்கு அஞ்சுவது நன்றாகத் தெரிகிறது” என்கிறார்.
இதே போல முஸ்தபா எம்ஏ இரண்டாம் ஆண்டு மாணவர், “நூலகத்தில் போலீஸ் புகுந்து தாக்கும் போது “தேச விரோதிகள்” என்று எங்களை கடுமையாக வசைபாடி தாக்கியதில் இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. எங்களை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர்” என்றார். மேலும் “மாணவர்களும், பொதுமக்களும் காவல் நிலையத்திற்கு வெளியே போராடிய பிறகுதான் எங்களை மருத்துவமனைக்கே அழைத்துச் சென்றனர். போலீசு தாக்கியதாக நான் கூறிய போதும் அங்கிருந்த மருத்துவர்கள் ‘யாரோ தாக்கியதாக’ சான்றிதழில் குறிப்பிட்டனர்” என்கிறார் கோபத்தோடு.
ஜாமியா பல்கலைக் கழகத்தின் தயக்கம்!
கண் பார்வையை இழந்த மின் ஹாஜுதீன், “நீதிமன்றத்தின் காலதாமதம் அதன் மீது நம்பிக்கை இழக்க வைக்கிறது. நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருப்பது?” எனக் கேள்வி எழுப்புகிறார். “எல்லாவற்றையும் விட எனது துன்பங்களுக்கு ஜாமியா பல்கலைக்கழகத்தை நான் குற்றம் சாட்டுகிறேன். நிர்வாகம் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க தயக்கம் காட்டியது. மேலும் எங்களுக்கு சட்டரீதியாகவோ, நிதி அளித்தோ உதவவில்லை” என்றார்.
காவல்துறையின் தாக்குதல் நடந்து ஒரு வருடம் கழித்து, ஜனவரி 22, 2020 அன்று டெல்லி காவல்துறைக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக்கோரி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமியா பல்கலைக்கழகம் மனுதாக்கல் செய்தது. அதன் பிறகு ஓராண்டு கழித்து அந்த நீதிமன்றம், “காவல்துறை தங்களது கடமையை செய்வதற்கு எதிராக வழக்கு தொடரப்படுவதில் இருந்து சட்டப்பிரிவு 197 பாதுகாப்பு அளிக்கிறது” எனக் குறிப்பிட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பல்கலைக்கழகத் தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை.
விசாரணைக்குப் பஞ்சமில்லை. ஆனால் நீதிதான் கிடைத்த பாடில்லை!
இந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று மாணவர்கள் தரப்பிலும், ஜமா மஸ்ஜித் இமாம் மற்றும் டெல்லியின் ஓக்லா பகுதியில் வசிப்பவர்கள் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தற்போது நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கவுர் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 2019 முதல் நவம்பர் 2024 வரை 15 அமர்வுகள் மற்றும் 20 நீதிபதிகளைக் கடந்து இப்போது இவர்கள் விசாரிக்கின்றனர்.
மூத்த வழக்கறிஞர் கான்சல்வேஸ், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் முடிவெடுக்காதது வெட்கக்கேடானது என்கிறார். மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். மாணவர்களுக்கு எதிராக பயங்கரமான வன்முறை நிகழ்த்தப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றத்திற்கோ, உச்சநீதிமன்றத்துக்கோ இந்த வழக்கை கையாள நேரமில்லை. ஏனெனில் இது மத்திய அரசுக்கும் டெல்லி காவல்துறைக்கும் நேரடியாக தொடர்புடையது என்பதை அம்பலப் படுத்துகிறார்.
படிக்க:
♦ JNU இடதுசாரி மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!
♦ சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் அநீதி இழைக்கும் நீதிமன்றங்கள்!
மேலும் வளாகத்தினுள் புகுந்து லத்தி சார்ஜ் செய்வதற்கான உத்தரவுகள் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து, குறிப்பாக உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்தது என்று குற்றம் சாட்டும் அவர், குற்றவாளிகள் அரசாங்கத்திலோ அல்லது காவல் துறையிலோ இருக்கும்போது நீதித்துறை உயிரற்றதாகிவிடும் என்பது இளைஞர்களுக்கான பாடம். காவலர்கள் சட்டத்திலிருந்து விடுபட்டவர்கள். நமது அமைச்சர்கள் நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இங்கு லத்தியின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்கிறார்.
கன்சல்வேஸுடன் இணைந்து பணியாற்றிய வழக்கறிஞரான சினேகா முகர்ஜி கூறுகையில், கடந்த 15 மாதங்களில் கிட்டத்தட்ட 20 நாட்கள் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரதீப் ஜலான் மார்ச் 2021- ல் மீண்டும் முதலில் இருந்து வாதங்களை வைக்க உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினார். ஆக எளியவர்களுக்கான நீதி பரிபாலனம் எப்படியெல்லாம் கேலிக் கூத்தாகிறது என்பதைப் பாருங்கள்.
இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் ‘நீதி’மான்களே!
ஜாமியா வழக்கை கையாண்ட தலைமை நீதிபதி பி.என். பட்டேல் மார்ச் 2022 – ல் ஓய்வு பெற்றவுடன், தொலைத் தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டார். அவர் தனது பணி ஓய்வு நிகழ்வு உரையில், சில நீதிபதிகள் அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும், அப்படி இருப்பதில் ஒன்றும் தவறில்லை என்றும் பேசினார்.
டிசம்பர் 2019 ஜாமியா வழக்கில் மாணவர்களுக்கு போலீஸ் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரியபோது இவரது தலைமையிலான அமர்வுதான் அதை மறுத்தது. அப்போது நீதிமன்ற அறைக்குள் இருந்த வழக்கறிஞர்கள் இவரது செயலைப் பார்த்து “அவமானம்” “வெட்கம்” எனக் கூச்சலிட்டது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு நீதிபதியான தல்வந்த் சிங் மார்ச் 2020 முதல் மார்ச் 2023 வரை இது தொடர்பான மனுக்களை விசாரித்து நீதி வழங்காமலே ஜூன்’ 23 – ல் ஓய்வு பெற்றார். கார்ப்பரேட் விவகார அமைச்சகம் அவரை தொழில்துறை நிறுவனங்களின் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலைவராக நியமித்தது. இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி சித்தார்த் மிருதுள் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
ஒன்றிய பாசிச பாஜக அரசு விரும்பியபடி, அவர்களது மனம் கோணாமல் நடந்து கொண்டதன் மூலமாக தங்களுக்கான ஆதாயங்களை உறுதி செய்கின்றனர் இன்றைய நீதிபதிகள். ஐந்து ஆண்டுகள் ஆகிய நிலையிலும் மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடோ, நீதியோ இதுவரை கிடைக்கவில்லை. இதற்கு மேலுமா இந்த நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் நம்ப முடியும்?
- குரு