நாராயணகுரு,வேலுநாச்சியார்,பிர்சாமுண்டாவை நிராகரித்த மோடி அரசு!

முதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். எனக்கு தேசபக்தி என்பது கடுகளவு கூட கிடையாது. நாளை தமிழ் தேசமோ, திராவிட தேசமோ அமைந்தால் கூட எனக்கெல்லாம் தேச பக்தி சுட்டுப் போட்டால் கூட வராது. ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை எவ்வளவு மோசமாக கையாள்கிறது என்பதற்கு இது நேரடியான வெளிப்படையான சான்றாக இருக்கிறது.
மூன்று மாநில முதல்வர்களும் வெளிப்படையாக கடிதம் எழுதியமையால் உள்துறை அமைச்சகத்தின் ஆர்.எஸ்.எஸ் மனோபாவம் வெளிப்பட்டிருக்கிறது.

கேரளா

கேரள மாநிலம் குடியரசு தின அணிவகுப்பிற்காக ஸ்ரீநாராயண குரு மற்றும் ஜடாயு பார்க் மையங்களையும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள தயாரித்து அனுப்பியது. ஸ்ரீநாராயணகுரு சமூக சீர்திருத்த வாதி, சமத்துவம் போதித்தனர். ஜடாயு பார்க் கொல்லத்தின் அருகில் உள்ள சடயமங்களத்தில் உள்ளது. சுற்றுலாவையும், சமூக சீர்திருத்தம் சமத்துவத்தையும் கேரள மாநிலத்தின் நிலைவாக முதல்வர் பினராயி விஜயன் முன்னிறுத்த முனைந்த போது உள்துறை அமைச்சகமோ, எர்ணாகுளத்தில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாரின் நினைவை போற்றும் வகையில் அவரை முன்னிறுத்துமாறு கேட்க அதனை கேரள அரசு நிராகரித்து விட்டது. எனவே கேரளாவுக்கு தடை.

தமிழ்நாடு

குடியரசு தின அணிவகுப்பில் இருந்து தமிழகத்தின் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், ராணி வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்களை சித்திரிக்கும் முன்மொழிவு இருந்தபோதும், அதை பாதுகாப்புத்துறை கவனத்தில் கொள்ளவில்லை. பதிலேதும் அனுப்பாமல் நிராகரித்து விட்டது.

மேற்குவங்கம்

மேற்கு வங்கத்தின் சுதந்திர போராட்ட தியாகிகள் கருப்பொருளின்கீழ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆம் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுபடுத்தும் வகையில் அவரது அலங்கார ஊர்தி மற்றும் அம்மாநிலத்தில் பிறந்தவர்களான ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், சித்தரஞ்சன் தாஸ், ஸ்ரீ அரவிந்தோ மாதங்கினி ஹஸ்ரா, பிர்சா முண்டா, நஸ்ருல் இஸ்லாம் ஆகியோரின் பெயர்களையும் அம்மாநில அரசு குறிப்பிட்டிருந்தது. இது அனைத்து மதங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான பிரதிநிதித்துவமாக இருந்தது. நேதாஜியை மட்டும் ஏற்றுக் கொண்ட உள்துறை அமைச்சகம் பிறரை ஏற்கவில்லை. அதனால் மேற்கு வங்கமும் நிராகரிக்கப்பட்டது.

 

இதில்,நாம்கவனிக்க வேண்டிய விஷயம் தமிழ்நாடு, கேரளம்,மேற்குவங்க மாநிலங்கள் சமத்துவம், பன்மைத்துவம், சமூக நீதி இதன் அடிப்படையில் தெரிவு செய்த போது உள்துறை அமைச்சகம் இந்து மதம், சங்கரர்களை முன்னிறுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் செய்யும் வேலையை தாங்கள் ஆட்சி செய்யாத மற்ற மாநிலங்களும் செய்ய வேண்டும் என நினைக்கிறது. அதில் சீர்திருத்தவாதிகளுக்கோ வேறு எவருக்குமோ இடமில்லை என்கிறார்கள்!

நன்றி
அருள் எழிலன்.
ஊடகவியலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here