இந்தியாவில் ஆப்பிள் சாகுபடி நாட்டின் தோட்டக்கலை நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2.8 மில்லியன் மெட்ரிக் டன் ஆப்பிள் உற்பத்தியுடன், உலகின் 7வது பெரிய ஆப்பிள் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஆப்பிள் வளரும் முதன்மை மாநிலங்கள் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் ஆகும், இவை நாட்டின் மொத்த ஆப்பிள் உற்பத்தியில் 90% க்கும் அதிகமாக பங்களிக்கின்றன.
காஷ்மீரின் பொருளாதாரத்திற்கு சுற்றுலா வருமானத்திற்கு அடுத்தபடியாக வருவாய் ஈட்டி தருகின்ற தொழிலாக இந்த பழ உற்பத்தி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக உள்ளது.
சொல்லிக் கொள்ளப்படும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 370 வது பிரிவின்படி காஷ்மீரின் பிரச்சனைகளை காஷ்மீர் அரசாங்கமே தீர்த்துக் கொள்ளும் காஷ்மீருக்கு என்று தனி உரிமைகள் கொண்ட மாநிலமாக இருந்த போது அவர்களது சாலைப்போக்குவரத்து வசதி முதல் ஏற்றுமதி தொழிலுக்கான வசதி வரை அனைத்தும் காஷ்மீர் அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.
ஆனால் இந்தியாவின் பகுதியாக காஷ்மீரை ஒன்றிணைத்த பாசிச பாஜக தனது ஆட்சியின் கீழ் காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அதற்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை பறித்துக் கொண்டது அது முதல் அந்த மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் குறிப்பாக சாலை போக்குவரத்து முதல் பாதுகாப்பு வரையிலான அனைத்தும் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் சென்றது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடந்த, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்குப் பின் பேசிய இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் “இந்தியாவின் நடவடிக்கை எதுவும் இந்தியாவுக்கு வெளியே பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இந்திய அரசு மற்றும் இந்தியாவின் சட்டமியற்றும் அமைப்புகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக நல்ல ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தவும், சமூக பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கவுமே” என்று குறிப்பிட்டார். ஆனால் இத்தகைய வாக்குறுதிகள் எதுவும் பெருமளவில் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த பத்தாண்டுகளாக காஷ்மீரில் உள்கட்டமைப்பு வசதிகள் சரிபார்க்கப்படுவதில்லை. மேலும் மாநிலத்தின் சுயசார்பு பொருளாதாரத்தை படிப்படியாக அழித்து இந்திய ஒன்றியத்தை எதிர்பார்த்து கையேந்தி நிற்கும்படி பொருளாதாரத்தை ஆர்எஸ்எஸ் பாஜகவினர் கட்டமைத்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால், பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜம்முவில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி 19 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரு நூற்றாண்டில் 2-வது அதிகபட்ச மழை இதுவாகும்.

1926-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு 23 செ.மீ. ஆகும். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி 2-வது அதிகபட்ச மழைப்பொழிவு 18.9 செ.மீ ஆகும். ஜம்மு பிராந்தியத்தில், உதம்பூரில் 2-வது அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை முகாமான கத்ராவில் 11½ செ.மீ. மழை பதிவானது.
ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் கிஷ்த்வார் – தோடா தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜம்முவுக்குச் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கிஷ்த்வார், ரியாசி, ரஜோரி, ராம்பன் மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக 2025 ஆகஸ்ட் மாதத்தின் போதே காஷ்மீர் மாநிலத்தின் உள்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
ஒரு நூற்றாண்டு காணாத மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வரான ஓமர் அப்துல்லா, “உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை சரியான நேரத்தில் வழங்கவும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றவும் ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஆனால் நிலச்சரிவின் காரணமாக உருவான பாதிப்புகள் உடனடியாக சரி செய்யப்படவில்லை. இதனால் காஷ்மீரின் விவசாயம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஆகஸ்ட் 26 முதல் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் 6 பில்லியன் ரூபாய் முதல் 7 பில்லியன் ரூபாய் வரை ($68 மில்லியன் முதல் $79 மில்லியன் வரை) இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது பிராந்தியத்திலிருந்து ஆப்பிள்களை எடுத்துச் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
“இது தொடர்ந்தால், முழு பருவமும் பாதிக்கப்படும், மேலும் எங்கள் துறை சரிந்துவிடும்” என்று காஷ்மீர் பள்ளத்தாக்கு பழ உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் பஷீர் அகமது கூறினார், போக்குவரத்து இடையூறுகள் செலவுகளை அதிகரித்தன, நெருக்கடியை மோசமாக்கியது.
உதாரணமாக, ஒரு அட்டைப்பெட்டி ஆப்பிள் பேக்கேஜிங் செலவு, முன்பு 40 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் காஷ்மீரில் விளைந்த ஆப்பிள்கள் அனைத்தும் டன் கணக்கில் கண்டெய்னர்களில் அழுகிக் கொண்டுள்ளது.
காஷ்மீர் விவசாயத்தில் முக்கிய பங்களிப்பை செலுத்துகின்ற ஆப்பிள் உற்பத்தி இதுபோன்று பாதிப்படைந்துள்ள காரணத்தினால் காஷ்மீர் மக்களின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடையவே வாய்ப்புள்ளது.
படிக்க:
♦ இமாச்சலப் பிரதேசம் : ஆப்பிள்கொள்ளையன் அதானியைத்தெரியுமா ?
♦ கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம்! தொடரும் மக்கள் திரள் போராட்டம்!
கேதார்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் சுற்றுலா பயணமாகவும், ஆன்மீக பக்தி பயணமாகவும் செல்கின்ற பக்தர்களுக்கு இது போன்ற இயற்கை பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக ராணுவத்தை அனுப்பி அவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுகிறது இந்திய ஒன்றிய அரசு.
ஆனால் ஒரு மாநிலத்தின் விவசாயமே முக்கியமாக அழிந்து கொண்டுள்ள சூழலில், சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆமை வேகத்தில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பது மட்டுமின்றி உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி அங்கு விளைந்த உயர்தர காஷ்மீர் ஆப்பிள்களை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை.
கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு சேவை செய்கின்ற அரசியல், பொருளாதார கொள்கைகளை முன் வைத்து செயல்படும் ஆர்எஸ்எஸ் பாஜக, இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை நாசமாக்குவதற்கே திட்டமிடும்போது இது போன்ற இயற்கை பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற ஒருபோதும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளாது. அதுவே காஷ்மீர் எனும் போது மேலும் மெத்தனமாகவே செயல்படும் என்பது நாடறிந்த உண்மை.
தற்போதுள்ள கார்ப்பரேட் சார்பு ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு விவசாயத்திற்கு முன்னுரிமை, லேசு ரக எந்திரங்களுக்கு இரண்டாம் பட்ச உரிமை, கனரக எந்திரங்களுக்கு மூன்றாம் பட்ச முக்கியத்துவம் என்ற வகையிலான அடிப்படையில் பொருளாதாரக் கொள்கையை மாற்றி சுயசார்பு பொருளாதாரத்தை கட்டமைக்கின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றை உடனடியாக நிறுவ வேண்டிய அவசியம் அனைத்து அம்சங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
இவ்வாறு விவசாயத்திற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில் மாற்றப்பட்டால் மட்டும்தான் விவசாயத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகளை அக்கறையுடன் கவனிக்கின்ற பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும். அதுவே காஷ்மீர் மக்களின் விவசாயத்தை பாதுகாக்கும். அவர்களிலிருந்து துன்பங்களிலிருந்து நிரந்தரமான தீர்வை உருவாக்கும்.
◾மாசாணம்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






