பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பாசிச மோடி கும்பல் பல்வேறு தகிடுதங்களை செய்து வருகிறது என்பதை பற்றி இரண்டு கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.
வறுமை ஒழிப்பு, தலித்துகளின் முன்னேற்றம், பழங்குடி மக்களின் வாழ்க்கை மேம்பாடு, பின்தங்கிய பீகார் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது என்ற கொள்கைகளை முன்வைத்து மக்களின் ஏழ்மையுடன் விளையாடுகின்ற அயோக்கியத்தனத்தை மேற்கொண்டு வருகிறது மோடி கும்பல்.
நிதீஷ் குமாருடன் கூட்டணி அமைத்த பிறகு மீண்டும் பீகாரில் பாஜகவின் கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் பீகாருக்கு பலமுறை மோடி படையெடுத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களுக்கு பொறுப்பாக பதில் கூற வேண்டும் என்பதையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வாரிசுரிமையின் அடிப்படையில் மன்னர்கள் ஆட்சியை கைப்பற்றியதை போல மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள பாசிச பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பதற்கு அனைத்து வகையான தகிடுதத்தங்களையும், கிரிமினல் தனமான வழிமுறைகளையும் கையாண்டு வருகிறது.
கடந்த 2024 நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜமுய் மாவட்டத்தில் நடைபெற்ற ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பிர்சா முண்டாவின் நினைவாக ஒரு நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) கீழ் பழங்குடியின குடும்பங்களுக்காக கட்டப்பட்ட 11,000 வீடுகளின் ‘கிரிஹ் பிரவேஷ்’ நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். அதோடு, பீகாரில் ரூ.6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
2025 ஜூலையில் சில தினங்களுக்கு முன்பு ரூ.7,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ரூபாய் 7000 கோடிக்கு திட்டங்களை முன்வைத்து அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை துவங்கி வைத்து மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில் கீழ்கண்டவாறு வாய்மொழிந்துள்ளார்.
படிக்க:
♦ பீகார் தேர்தல்: போலி ஜனநாயகத்தை கைவிட்டு பாசிச வழிமுறைக்கு மாறியுள்ள ’இந்திய ஜனநாயகம்’.
♦ பீகாரில் நடக்கும் கிரிமினல் குற்ற கும்பலின் பயங்கரவாத ஆட்சி!
“இந்த வளர்ச்சி முயற்சிகளுக்காக உங்கள் அனைவருக்கும், பீகார் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
21 ஆம் நூற்றாண்டில், உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில், மேற்கத்திய நாடுகளின் கைகளில் அதிகாரம் குவிந்திருந்தது, ஆனால் இப்போது, கிழக்கு நாடுகளின் செல்வாக்கும் பங்கேற்பும் வளர்ந்து வருகிறது. கிழக்கு நாடுகள் வளர்ச்சியின் புதிய உத்வேகத்தை ஏற்றுக்கொள்கின்றன. கிழக்கு நாடுகள் உலகளவில் முன்னேறி வருவது போல, பாரதத்தின் இந்த சகாப்தம் நமது கிழக்கு மாநிலங்களுக்கு சொந்தமானது. வரும் காலங்களில், மும்பை மேற்கு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போல, மோதிஹாரி கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்பது நமது உறுதியான தீர்மானமாகும்.” என்கிறார் மோடி.
அமெரிக்க மேல்நிலை வல்லரசிடமும், அதனுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள சீன, ரஷ்ய கூட்டணியுடன் பிரிக்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு அடிமை சாசனங்களை போட்டுக் கொண்டுள்ள மோடி துணிச்சலாக கிழக்கை மேம்படுத்துவதாக வாய் கூசாமல் புளுகியுள்ளார்.
பின் தங்கிய பீகாரை முன்னேற்றுவதாக நாட்டின் தொழில்துறை கூடங்களாக திகழ்கின்ற பல்வேறு மாநிலங்களை ஒப்பீடு செய்து பீகார் மக்களுக்கு உசுப்பேற்றியுள்ளார்..”குருகிராம் வாய்ப்புகளை வழங்குவது போல, கயாவும் இருக்கும். புனேவைப் போலவே, பாட்னாவும் தொழில்துறை வளர்ச்சியைக் காணும். சூரத் வளர்ச்சியைக் கண்டது போல, சந்தால் பர்கானாவும் வளர்ச்சியைக் காணும். ஜல்பைகுரி மற்றும் ஜாஜ்பூரில் சுற்றுலா ஜெய்ப்பூர் போல புதிய உயரங்களை எட்டட்டும். பெங்களூருவைப் போல பிர்பும் மக்களும் முன்னேறட்டும்”.
இந்தியாவில் 70களில் தொடங்கிய நக்சல்பாரி எழுச்சிக்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு தன்மைகளில் வேர் பிடித்துள்ள நக்சல்பாரி அமைப்புகளை கண்டு நடுங்கி கொண்டுள்ள ஆளும் வர்க்கங்கள் பாசிச மோடியின் ஆட்சியை பயன்படுத்தி 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சல்பாரி அரசியலை முழுக்க ஒழித்து விட போவதாக அவ்வப்போது தம்பட்டம் அடித்து வருகிறது..
இதன் ஒரு பகுதியாக பீகாரருக்குச் சென்ற மோடி தனது ஆசையையும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு ஏற்ப நக்சல்பாரி அரசியலை ஒழிக்கப் போவதாக கீழ்கண்டவாறு முன் வைத்துள்ளார்.
“சமீபத்திய ஆண்டுகளில், பீகாரில் நக்சலைட்டுக்கு எதிரான உறுதியான ஒடுக்குமுறை மாநில இளைஞர்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு வழி வகுத்துள்ளது. சம்பாரண், ஔரங்காபாத், கயா ஜி மற்றும் ஜமுய் போன்ற மாவட்டங்களை பல ஆண்டுகளாகத் தடுத்து வைத்திருந்த மாவோயிசம் இப்போது அதன் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் இந்தப் பகுதிகளில் பரவியிருந்த மாவோயிசத்தின் இருண்ட நிழல் நீங்கிவிட்டது, இன்று, இந்தப் பகுதிகளின் இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காண்கிறார்கள். பாரதத்தை நக்சலைட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றுவது நமது உறுதியான தீர்மானமாகும்.”என்று மீண்டும் ஒருமுறை மக்களுக்காக போராடுகின்ற புரட்சிகர இயக்கங்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் கிரிமினல் குற்ற கும்பலின் எண்ணிக்கை மாபியாக்கள் சட்டவிரோதமான வழிமுறைகளை பயன்படுத்தி கூலிக்கு கொலை செய்வது சொல்லிக் கொள்ளக்கூடிய சட்டங்களை காலில் போட்டு மிதித்து போலீசு அதிகார வர்க்கம் கிரிமினல்கள் கொண்ட முக்கூட்டு மூலம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்துவது ஆகியவை அதிகரித்துக் கொண்டே போகிறது.
பாசிச பாஜக தேர்தலில் போட்டியிடுகின்ற பல்வேறு கட்சிகளை போல ஒரு கட்சி அல்ல என்பதை மாற்றி அமைப்புகள் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன அது மேலிருந்து கீழ் வரை இந்து இந்தி இந்தியா என்ற கொடூரமான சித்தாந்தத்தை ஆர் எஸ் எஸ் மூலம் பயிற்சி கொடுத்து ராணுவத்தை கையாளும் வல்லமை கொண்ட ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது உண்மையாகும்.
இத்தகைய பாசிச பயங்கரவாத கும்பலை எதிர்த்து போராடுவதற்கு அனைத்து தயாரிப்புகளையும் முன்வைத்து பாசிசத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டிய காலகட்டத்தில் பீகார் அதற்கு ஒரு நல்வாய்ப்பாக நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கும் பீகாரில் உள்ள பாட்டாளி வர்க்கத்துக்கும் கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த பாட்டாளி வர்க்கத்திற்கு அறைகூவல் விடுப்போம்.
- மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






