பீகார் தேர்தல்: போலி ஜனநாயகத்தை கைவிட்டு பாசிச வழிமுறைக்கு மாறியுள்ள ’இந்திய ஜனநாயகம்’.

பீகார் தேர்தல்கள்: போலி ஜனநாயகத்தை கைவிட்டு பாசிச வழிமுறைக்கு மாறியுள்ள ’இந்திய ஜனநாயகம்’.
பீகார், நாட்டில் அதிக உழைக்கும் மக்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். இவர்களில் பலர் போதிய ஆவணங்கள் இல்லாமல் வாழ்கின்றனர்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் வீடுகளுக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ்குமார் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்தாண்டு இறுதியில் முடிவடைகிறது. இதனால், அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தேர்தலை குறி வைத்து இலவசங்களை அள்ளி வீசுகின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அதாவது பாசிச பாஜக மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி அடங்கிய கூட்டணி மக்களின் தலையில், மிளகாய் அரைக்கின்ற வேலையை இலவசங்களின் மூலம் தொடுக்கத் துவங்கி விட்டது.

தேர்தல் மூலம் வெற்றியை சுவைக்க துடித்துக் கொண்டிருக்கும் பாசிச பாஜக- ஐஜத கூட்டணி வழக்கமான பாணியில் இலவசங்களை மட்டும் நம்பி இந்த தேர்தலை எதிர்க் கொள்ளவில்லை. மாறியுள்ள பாசிச உள்ளடக்கம் கொண்ட சட்டமன்ற – நாடாளுமன்ற அமைப்புகளுக்கு உரிய வகையில் தேர்தல் மோசடிகளை செய்யத் துவங்கி விட்டன.

இதன் உச்சகட்டமாக தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் கொத்துக் கொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது அதுவும் குறிப்பாக தேர்தல் ஆணையம் முன்வைக்கின்ற விதிமுறைகளை காட்டி ஏழை மக்களின் வாக்குரிமையை பறிப்பது என்பது ஏற்கனவே மகாராஷ்டிராவில் நடந்ததை போல பீகாரிலும் நடக்க துவங்கி விட்டது. சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்காளர் பட்டியல் மோசடியின் மகாராஷ்டிரா மாதிரியின் நீட்டிப்பு ஆகும்.

இந்தியாவில் இன்னமும் போலி ஜனநாயக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் பாஜகவை தவிர பிற அரசியல் கட்சிகள் நம்பி கொண்டிருக்கின்றனர். இந்த போலி ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை, அதற்கு பதிலாக அதிகார வர்க்கத்தின் ஆட்சிதான் நடந்து கொண்டுள்ளது என்ற வகையில் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை நீடிக்கிறது என்பதுதான் மா.லெ இயக்கங்களின் நிலைப்பாடாக உள்ளது.

படிக்கபாஜக வெற்றிக்காக உழைக்கும் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம்! தடுக்காத உச்சநீதிமன்றம்!

இவையெல்லாம் 2014 தேர்தலுக்கு முன்னர் இருந்த நிலைமையாகும். 2014 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் பாஜக மோடியின் தலைமையில் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு படிப்படியாக பாசிச சர்வாதிகாரம் அனைத்து துறைகளிலும் தலைவிரித்தாடுவதைப் போலவே தேர்தல் அரசியலிலும் தலைவிரித்தாடத் துவங்கி விட்டது. நாடாளுமன்ற சட்டமன்றங்களில் உள்ளடக்கம் போலி ஜனநாயகம் என்பதிலிருந்து மாறி அப்பட்டமான, அம்மணமான பாசிச சர்வாதிகார உள்ளடக்கம் கொண்டதாக மாறியுள்ளது.

இதனால் தான் தேர்தல் காலகட்டங்களில் வாக்காளர்களை கவர்வதற்கு இலவசங்களை வாரி வழங்குவது; வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது; கள்ள ஓட்டு போடுவது; வேட்பாளர்களை கடத்துவது; பூத்துகளை கைப்பற்றுவது; ஈவிஎம் மெஷின் மூலம் மோசடிகளை செய்வது; இறுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்று ஆளுகின்ற கட்சி கைகாட்டுகின்ற வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் வெற்றி வேட்பாளராக அறிவிப்பது என்ற புளித்துப்போன பழைய பாணியை பாசிச பாஜக கடைபிடிக்கவில்லை.

மாறாக பாசிச சர்வாதிகாரம் தலைவிரித்தாடத் துவங்கியது முதல் ஜனநாயகத்தின் பெயரில் நடந்த அனைத்து விதமான மோசடிகளையும் கைவிட்டு விட்டு பாசிச முறையில் அனைத்தையும் தீர்மானிப்பது மட்டுமின்றி, நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதன் ஒரு துலக்கமான அடையாளம் தான் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையை சட்டபூர்வமாகவே பறித்து எடுப்பது.

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பீகாரில் வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்கான ஒரு சிறப்பு தீவிரத் திருத்தத்தை (SIR) தொடங்கியுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர் தரவைப் புதுப்பிப்பதற்கான ஒரு முறையான நிர்வாக முயற்சியாக இது முன்வைக்கப்பட்டாலும், இந்த நடவடிக்கை விமர்சனங்களையும் சட்ட சவால்களையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக 2003-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, தனிப்பட்ட மற்றும் பெற்றோரின் வயது மற்றும் இருப்பிடச் சான்று உள்ளிட்ட பல ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கோரி, மாநிலம் முழுவதும் வாக்காளர் பதிவுகளின் வீடு வீடாகச் சரிபார்ப்பை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன் நோக்கம் பிழைகளை நீக்குவதும் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதும் என்றாலும், இந்தச் செயல்முறையின் நேரம் மற்றும் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் கேள்விக்குறியாகியுள்ளன.

“பீகார், நாட்டில் அதிக உழைக்கும் மக்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். இவர்களில் பலர் போதிய ஆவணங்கள் இல்லாமல் வாழ்கின்றனர். மேலும், சீரான ஆவணங்களை பராமரிப்பது அவர்களுக்கு சாத்தியமில்லை. புலம்பெயர் தொழிலாளர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் கிராமப்புற ஏழைகள், தங்கள் தகுதியை மட்டுமல்லாமல், தங்கள் பெற்றோரின் தகுதியையும் ஒரு மாத அறிவிப்புக்குள் நிரூபிக்கும் ஆவணங்களை வழங்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்ற சவாலாகும். இந்த குழுக்கள் இப்போது உரிமை பறிபோகும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. இது மோசடி அல்லது கையாளுதல் காரணமாக அல்ல, மாறாக முறையான சமத்துவமின்மை மற்றும் நிர்வாக உணர்வின்மை காரணமாகும். என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி ராஜா.

இவைதான் புதிய நிலைமைகள். இந்தியாவின் உயர்ந்த பட்ச அதிகாரம் கொண்டது என்று கருதப்படும் உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் இத்தகைய மோசடிகளுக்கு துணை போகின்றது. தேர்தல் ஆணையம் அவர்களே முன்வைத்த வழிமுறைகளை தூக்கி எறிந்து விட்டு அதாவது வாக்காளர் அடையாள அட்டைகள் என்ற ஆதாரங்களை தூக்கி எறிந்து விட்டு புதியதாக ஆதாரங்களைக் கேட்டு சுமார் 35 லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்கின்றனர்.

தேர்தல்களை நடத்தி அதில் அனைவரையும் வாக்கு போட வைத்துவிட்டு, அதன் பிறகு வெற்றி தோல்வி என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பது, பழைய பாணியிலான போலி ஜனநாயக வழிமுறை. ஆனால் தேர்தலுக்கு முன்னமேயே வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்து தேர்தல் வெற்றியை சாத்தியமாக்குவது; உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்டுவதாக ஊடகங்களின் மூலம் செய்திகளை பரப்புவது ஆகியவை தான் பாசிசத்தின் இன்றைய வழிமுறைகள்.

இத்தகைய புதிய சூழலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஏற்கனவே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலவி வருகின்ற பாராளுமன்ற, சட்டமன்ற அமைப்பு முறைகளை புரிந்து வைத்துக்கொண்டு அதற்கு எதிராக தேர்தலில் பங்கெடுப்பது என்ற நிலையினை தேர்தல் அரசியல் கட்சிகளும் அல்லது புறக்கணிப்பது என்ற நடைமுறையை ஒரு சில மா.லெ இயக்கங்களும் கையாளுகின்றனர்.

படிக்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல்:  தேர்தல் ஆணையத்தின் அயோக்கியத்தனம்!  எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்தின் எதிர்வினை என்ன?

இத்தகைய நடைமுறைகள் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து ஒரு கட்சி சர்வாதிகாரம் மற்றும் ஒரு கும்பல் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு தான் பயன்படும் என்பதை இத்தகைய கட்சிகள் புரிந்து கொள்வதில்லை.

தேர்தல் ஆணையத்தின் மோசடிகள் குறித்து ஊடகங்களில் அம்பலப்படுத்துவது; முகநூல் பக்கங்களில் எழுதுவது அல்லது youtube-களில் பிரச்சாரம் செய்வது; அதற்கு மேலே சென்று நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது என்ற வழிமுறைகளை தாண்டி தேர்தல் அரசியல் கட்சிகளிடம் எந்த விதமான மாற்று தீர்வும் இல்லை.

இவ்வாறு நாம் சொல்லும் போது, ”மார்க்சியத்தின் பெயரால் குழம்பித் திரிகின்ற சில குழப்பவாத பேர்வழிகள், ஆமாம்! இதைத்தான் நாங்களும் சொல்கின்றோம்! தேர்தல் அரசியல் கட்சியிடம் எந்த தீர்வும் இல்லை! மாறாக புரட்சி ஒன்றே தீர்வு” என்று வழக்கமாக ஒரே விதமாக பேசிக் கொண்டுள்ளனர்.

புறநிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களை பற்றி எந்தவிதமான அவதானிப்பும், கண்காணிப்பும் இன்றி பல ஆண்டுகளாக ஒரே மாதிரியான முழக்கங்களை முன்வைத்து, ஒரு வரம்புக்கு உட்பட்ட அளவில் பிரச்சாரம் செய்து, அதன் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் பெரிய அளவில் சாதித்து விட்டது போல சுய திருப்தி கொண்டு ஒரு வட்டப்பாதையில் சுற்றி வருகின்றனர்.

போலி ஜனநாயகம் படிப்படியாக கைவிடப்பட்டு பாசிச சர்வாதிகாரம் என்ற உள்ளடக்கம் நாடாளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தின் மூலம் கடைபிடிக்கப்படுகின்ற இந்த காலகட்டத்தில் அதற்கு பொருத்தமான போராட்ட வழிமுறைகளை கையாள்வதும், அரசியல் கட்சிகளுக்குள்ளேயே பாசிச ஆதரவு, பாசிச எதிர்ப்பு என்று பிளவுபடுத்தி மக்களுக்கு பாடுபடுகின்ற வகையில் மாற்றுவதும் இத்தகைய கடமைகளை நிறைவேற்றுகின்ற வகையில் குறைந்த பட்ச செயல்திட்டத்தை முன் வைத்து ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதும் தான் இந்த காலகட்டத்தில் முன்னணிப் பணியாக உள்ளது.

இவை அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் புரிந்துக் கொண்டு எதிர்தாக்குதல் தொடுப்பதற்கு பாட்டாளி வர்க்கத்தை தயார் செய்ய வேண்டியுள்ளது என்பது தான் இன்றைய காலகட்டத்தில் முக்கியமான அவசர அவசியப் பணியாக மாறியுள்ளது.

மருது பாண்டியன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

2 COMMENTS

  1. பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு பணி என்ற பெயரில் பெரும்பகுதி பாஜக எதிர்ப்பு வாக்குகளை இல்லாதொழிக்கும் பணியை பாசிச பாஜக மோடி அரசும் அதன் அடிவருடியான தேர்தல் ஆணையமும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வதும், மகாராஷ்டிரா பாணியில் பீகாரிலும் NDA கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் கடுமையான போராட்டங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதை கட்டுரையாளர் மருது பாண்டியன் சிறப்பாக விளக்கியுள்ளார். குறிப்பாக இந்த அவலத்தை முறியடிக்க எதிர்க்கட்சியினரின் கையாலாகாதத்தனமான எதிர்வினைகள், பாராளுமன்றம் மூலம் உழைக்கும் மக்களுக்கான விடியலை கொண்டுவர முடியாது என்றாலும், இருக்கக்கூடிய ஜனநாயக குடியரசில் அனுபவிக்கும் குறைந்தபட்ச உரிமைகளையும் பறித்து ஒற்றை சர்வதாரத்தின் கீழ் பாராளுமன்றத்தை பயன்படுத்தியே நிலைநாட்டம் முடிந்து நிற்கக்கூடிய காவி கூட்டத்தின் சதியை புரிந்து கொள்ளாமல், மார்க்சிய லெனினியம் பேசும் குழுக்கள் எப்படி சரியான பார்வையற்றோராய் உள்ளனர் என்பது குறித்தும், இந்த பேராபத்தை தடுத்து நிறுத்திட குறைந்தபட்ச ஜனநாயக கூட்ட அரசை நிறுவிட புரட்சிகர இயக்கங்கள், பிற்போக்கு இயக்கங்களையுங் கூட அரவணைத்து கூட்டணி அமைத்து எதிர்கொள்ளவிற்கும் பாசிச அபாயத்தை – ஒற்றை சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்திட களம் காண வேண்டும் என்ற புரிதலை இக்கட்டுரை சிறப்பாகவே விலக்கியுள்ளது.

    RSS மயமாகிவிட்ட நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட இன்ன பிற துறைகள் யாவும், அருதிப்பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே காரியம் ஆற்றுகின்றன. தேர்தல் ஆணையர்கள் நியமனங்களை கூட 2014 க்கு முன்னர் இருந்தது போன்று குழுவில் இடம் பெற்று இருந்த பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
    என்ற முறைமையையும் பாஜக அரசு சட்டரீதியாக பறிமுதல் செய்து, உச்ச நீதிமன்ற நீதிபதியை இக்குழுவில் இருந்து நீக்கிவிட்டு உள்துறை அமைச்சரைக் கொண்டு நிரப்பிக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த காவி கூட்டத்திடம் ஜனநாயக மாண்பை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆக கட்டுரை வடிவத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் சரியே என்றாலும் இன்னும் சற்று விரிவான கண்ணோட்டத்தில் விடயங்களை உட்கிரகித்து நமது உக்கிரமான போராட்டப் பாதையை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும். கட்டுரையாளர் தோழர் மருதுபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  2. பீகார் தேர்தல்

    போலி ஜனநாயகத்தை கைவிட்டு பாசிச அதிகாரத்தை கையில் எடுத்திருக்கும் இந்திய ஜனநாயகம்!

    பாசிஸ்டர் பிஜேபி அரசு மகாராஷ்டிரா தேர்தல் அனுபவத்தை எடுத்துக்கொண்டு பீகாரிலும் வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசு கூட்டு சேர்ந்து இஸ்லாமிய கிறிஸ்துவ பழங்குடியின தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்க பாசிச மோடி அரசு சதி திட்டத்தை தீட்டி மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின இஸ்லாமிய மக்களிடம் தங்கள் குடியிருக்கும் இருப்பிட சான்று ஆதார் கார்டு ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களைக் கேட்டு அவர்கள் அவர்களை பீகாரில் இருந்து வெளியேற்றிவிட்டு அங்கு இருக்கக்கூடிய இந்துக்கள் ஓட்டுகளை மட்டுமே அறுவடை செய்யும் நோக்கில் பாசிசமயமாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் மத்திய அரசு கூட்டு சேர்ந்து குறைந்தபட்சம் இருந்த போலி ஜனநாயக உரிமையும் பறித்து பாசிச சர்வாதிகாரத்தை தேர்தல் மூலம் நிலைநாட்டி ஆட்சியைப் பிடித்து பீகாரில் வளங்களையும் மக்களுடைய உழைப்பையும் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு தேர்தல் தில்லுமுல்லு செய்து கொண்டு உள்ளது என்பதை பத்திரிக்கையாளர் ஆசிரியர் விரிவாக குறிப்பிட்டார் வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here