பீகாரில் விரைவில் தேர்தல் நடக்க இருக்கும்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்த படுகொலைகள் நடந்து வருகிறது. இது ஆளும் நிதீஷ் குமார் தலைமையிலான ஜேடியு-பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், நேற்று காலை மீண்டும் ஒரு படுகொலை சம்பவம் அரங்கேறி பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த ஒன்றரை மாதங்களில் 78 படுகொலைகள் நிகழ்ந்துள்ளது. இந்த படுகொலைகள் பற்றிய செய்திகள் மைய நீரோட்ட ஊடகங்களில் முதன்மை செய்திகளாக வருவதில்லை. கோடி மீடியாக்கள் பீகாரில் நடந்து வரும்  சட்டவிரோத, பயங்கரவாத ஆட்சியைப் பற்றி வாயைத் திறப்பதில்லை.

பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் மிஸ்ரா. இவர் மீது 12க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும் 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் உள்ளன. இவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, கிரிமினல் சிறையில் இருந்து பரோலில் வந்தநிலையில், பாட்னா பராஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை திடீரென 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடுத்தடுத்து மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளது. ஒவ்வொரு அறையின் கதவையும் திறந்து பார்த்த அந்த கும்பல், சிகிச்சைப்பெற்று வந்த சந்தன் மிஸ்ராவின் அறைக்குள் நுழைந்தவுடன் சந்தன் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில் சந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படங்களில் வருகின்ற சம்பவத்தை போல எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ஒரு கிரிமினல் கும்பல் இந்த கொலையை நிகழ்த்திவிட்டு சர்வ சாதாரணமாக வெளியேறி செல்கிறது. சட்டம் ஒழுங்கு பற்றி பதில் கூற வேண்டிய போலீசு துறை தலைவர் மக்களின் மீது குற்றத்தை சுமத்தி தனது கையாலாக தனத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

“பீகாரில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான மாதங்களில் விவசாயிகளுக்கு வேலையில்லாததால் அதிக கொலைகள் நடக்கும்” என பீகார் மாநில காவல்துறை ஏடிஜியின் கூறியிருப்பது அவரது கையாலாக தனத்தை பறைசாற்றியுள்ளது.. பிஹார் மாநில காவல்துறையின் ஏடிஜியாக இருக்கும் குந்தன் கிருஷ்ணா, அண்மைக்காலமாக பீகாரில் அதிக கொலைகள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். இளைஞர்கள் பணத்திற்காக இதுபோன்ற கொலைகளை செய்து வருவது அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த விவாதத்திற்கு மத்தியில்,இது குறித்து பீகார் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) வினய் குமார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ” குற்றங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2004 ஆம் ஆண்டு ஆண்டு குற்ற விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தினமும் தோராயமாக நான்கு படுகொலைகள் நடந்தன. அதன் பின்னர், கொலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, சுமார் 2,700 கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2004 உடன் ஒப்பிடும்போது சுமார் 1,300 குறைவு” என்று தெரிவித்துள்ளார்.

படிக்க: பீகார் தேர்தல்: போலி ஜனநாயகத்தை கைவிட்டு பாசிச வழிமுறைக்கு மாறியுள்ள ’இந்திய ஜனநாயகம்’.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில், ” பிஹாரில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. அரசு ஆதரவுடன் செயல்படும் குற்றவாளிகள், மருத்துவமனையின் ஐசியு வார்டுக்குள் புகுந்து சிகிச்சை பெற்ற நபரை சுட்டுக் கொன்றுள்ளனர். 2005-ம் ஆண்டுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் பிகாரில் நடைபெறவில்லை” என்றார்.

பீகார் மட்டுமல்ல! நாடு முழுவதும் போலீசு, அதிகார வர்க்கம், கிரிமினல் மாஃபியாக்கள் கொண்ட முக்கூட்டு ஒவ்வொரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தீர்மானிக்கின்ற சக்தி படைத்ததாக மாறியுள்ளது.

இந்த முக்கூட்டுடன் மக்கள் வரிப்பணத்தில் இயங்குகின்ற இந்திய ராணுவமும் இணைந்து காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு பயங்கரவாத ஒடுக்கு முறையை மிகக் கொடூரமான முறையில் நடத்தி வருகின்றனர்.

பீகாரில் ரெட்டை எஞ்சின் சர்க்கார் என்று அழைக்கப்படுகின்ற மோடி நிதிஷ்குமார் கூட்டணியானது மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தனக்கு சாதகமாக கிரிமினல் தனமாக பயன்படுத்துகின்ற பாசிச வழிமுறைகளில் இறங்கியுள்ளது.

இந்த லட்சணத்தில் பீகாரில் சுதந்திரமான முறையில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கப் போவதாக யாராவது நம்பிக்கொண்டிருந்தால் அவர்களை விட அப்பாவிகள், ஏமாந்த சோனகிரிகள் யாரும் இல்லை. ஆனால் படித்த மேதாவி கூட்டமும் தேர்தல்கள் எதோ ஜனநாயக முறையில் நடக்கப் போவதை போலவும் அதில் கூட்டணி அமைத்துக் கொள்வதில் ஏற்படுகின்ற சிக்கல்கள் பாஜக கையாளுகின்ற வாக்காளர் சீர்திருத்தங்கள் போன்றவை பற்றி மட்டுமே பேசுகின்றனர்.

பாசிச பாஜகவின் பயங்கரவாத ஆட்சியை தேர்தலில் முறியடிப்பதற்கு கூட பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்கின்ற கட்சிகளுடன் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

“அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்” என்ற வழக்கமான தேய்ந்து போன ரெக்கார்டுகளை மீண்டும் மீண்டும் எழுப்புவதன் மூலம் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை மிகவும் குறை மதிப்பீடு செய்வதுடன் பாசிச எதிர்ப்பு சக்திகளை பலவீனமடைய செய்வது, சோர்வடைய செய்வது என்பது தான் நடைபெறும்.

பீகாரில் உள்ள சட்டவிரோத கொலைகார குழுக்கள், கிரிமினல் மாஃபியா கும்பல்கள், இவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள காவி பாசிச குண்டர் படையினர் இவர்கள் அனைவரையும் வீழ்த்துவதற்கு எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு துணிவு கொண்ட மாற்று ஒன்றை யோசிப்பது தான் பீகாரில் நடைபெறும் கிரிமினல், பயங்கரவாத ஆட்சிக்கு முடிவு கட்டும்.

  • கணேசன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. பீகார் கொடுஞ்செயல்கள் குறித்து மற்றும் ஜனநாயகத் தேர்தல் குறித்து தோழர் கணேசன் சிறப்பாக விளக்கியுள்ளார். கட்டுரையின் இறுதி பத்தியில் கூறி இருப்பது போல இந்த பாசிச பாஜக கூட்டணியை பீகாரில் மட்டும் அல்ல; அகில இந்திய அளவில் வீழ்த்த வேண்டிய பொறுப்பும், கடமையும் பாஜக எதிர்நிலை
    சக்திகள், ஜனநாயக சக்திகளுக்கு நிரம்பவே உள்ளது. இவர்கள் மேலோட்டமாக வார்த்தை ஜாலங்கள் மூலமாக மட்டும் எதிர்வாதம் செய்வதை விடுத்து, மக்களைத் திரட்டி வீதிகளில் இறங்கி போராடுவதன் மூலமே குறிப்பாக எதிரிகள் எந்தவிதமான போராட்ட யுக்திகளை கையாளுகின்றார்களோ அதே ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, பாராளுமன்ற ரீதியிலும் மற்ற ஆளுமை
    ரீதியிலும் வீழ்த்தி வெற்றினை ஈட்ட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here