டந்த 2023-24 நிதியாண்டில் ஸ்டேட் பேங்கை தவிர்த்து மற்ற 11 பொதுத்துறை வங்கிகள் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.2,331 கோடி ரூபாயை மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லை என்ற காரணத்தால் மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து களவாடியுள்ளது.

இந்த பகல் கொள்ளை கடந்த நிதியாண்டை விட 25.63% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த 3 ஆண்டுகளில் 5,614 கோடி வசூல் செய்துள்ளது. இவர்கள் கொள்ளையிட்ட பணம் பெரும்பாலும் உழைக்கும் மக்களின் பணம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மினிமம் பேலன்ஸ் 500 கூட வைக்க முடியாத நிலையில் இந்தியாவில் வாழ்கிறார்கள்.

இது குறித்து பேசிய இணை (நிதி) அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் 8500 கோடி மினிமம் பேலன்ஸ் இருப்பு வைக்காத மக்களிடம் வசூல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வழிப்பறி!

ஒன்றிய பாஜக அரசு ஆட்சி அமைத்த சில மாதங்களில் கார்ப்பரேட்டுகளுக்கு கடனாக வாரிக் கொடுக்க மக்களின் சேமிப்பு பணத்தை வங்கிக்கு கொண்டு வர அனைவரும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்றது. மக்களும் 100 நாள் வேலை உள்ளிட்ட பணத்தை வங்கிக் கணக்கில் போடப்படும் என அரசு அறிவித்த காரணத்தால் வேறு வழியின்றி நம்பி வங்கிக் கணக்கை தொடங்கினர்.

நூறு நாள் வேலை, சிலிண்டர் மானியம், உர மானியம் உள்ளிட்ட மானியங்களை வங்கிக் கணக்கில் செலுத்த ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வந்த கேஸ் மானியம் 450 ரூபாய் சுருங்கி இன்று 25 ரூபாய்க்கு குறைந்து போனதை அனைவரும் அறிவர். பல மாநிலங்களில் சரியான தேதியில் நூறு நாள் வேலைக்கான சம்பளம் வரவு வைக்கப்படவில்லை. இதனால் பல நேரங்களில் மக்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாத நிலையே இருந்தது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்த ஒன்றிய அரசு மினிம்ம் பேலன்ஸ் மெயிண்டைன் பண்ணாத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என நவம்பர் 2014 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த ஏப்ரல் 2024 வரை 21,000 கோடி ரூபாய் ஏழை மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

11 பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆஃப்  இந்தியா, பஞ்சாப்&சிந்து வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூகோ வங்கி ஆகியவை குறைந்த பட்ச காலாண்டு இருப்பை பராமரிக்காததற்காக அபராதம் வசூலிக்கின்றன.

இதில் இந்தியன் வங்கி, கனரா வங்கி, மகாராஷ்டிரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்காததற்காக அபராதம் விதிக்கின்றன. இவைகள் முறையே நகர்புறம், அரை நகர்புறம், கிராமப்புறம் பிரித்து 2000, 1000, 500 என அபராத தொகையை வசூல் செய்கின்றன.

இந்த ‘நல்வாய்ப்பை’ பயன்படுத்தி தனியார் வங்கிகளும் மினிமம் பேலன்ஸ் அபராதம் விதித்து மக்களின் பொருளாதாரத்தை கொள்ளையிடுகிறது.

மக்களுக்கு அபராதம் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி

கல்விக் கடன், விவசாயக் கடன் செலுத்த முடியாத மக்களின் வீடு தேடிச் சென்று கூலிப்படையைக் கொண்டு கடன் வசூல் செய்யும் வங்கிகள் (பல நேரங்களில் இவர்களின் வசவுகளை பொறுத்துக் கொள்ளாமல் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர்களும் விவசாயிகளும் உண்டு) கடன் வாங்கிய முதலாளிகளிடம் வளர்ப்பு நாயைப் போல் வாலாட்டும்.

படிக்க: அனில் அம்பானியின் 1400 கோடி வரி பாக்கியை தள்ளுபடி செய்த பிரான்ஸ் அரசு  பின்னணியில் மோடி!

அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாசிச பாஜக கார்ப்பரேட்டுகளுக்கு எண்ணற்ற சலுகைகளை அளித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 35 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரியானது பாசிச மோடியின் ஆட்சியில் 26 சதவீதமாக குறைக்கப்பட்டது. மக்களை பாதிக்கும் தனிநபர் வருமான வரியின் பங்கு 21 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

மக்களிடம் நேர்முக வரி, மறைமுக வரியின் மூலம் கொள்ளையிடும் பாசிச பாஜக அதோடு நிறுத்திக் கொள்ளாமல் மினிம்ம் பேலன்ஸ் இல்லையென்று பல ஆயிரம் கோடிகளை வசூல் செய்து கார்ப்பரேட் முதலாளிகளிடம் தாரை வார்க்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி 14.56 லட்சம் கோடி வாராக்கடனில் 90 சதவீதம் பெருநிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் வழங்கப்பட்டதாக கூறுகிறது. வாராக்கடன் என்றால் கடனை வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாத கடன். வங்கிகள் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்ததில் மக்களின் சேமிப்பு பணமும் அடக்கம்.

இந்த லிஸ்டில் தான் கடன் வாங்கி விட்டு ஓடிப்போன கிங்பிஸ்ஸர் முதலாளி விஜய் மல்லையா, வைர வியாபாரி நீரவ் மோடி உள்ளிட்ட பல முதலாளிகள் அடங்குவர். இவர்களிடம் கறாராக வசூல் செய்யாத பாசிஸ்டுகள் தான் விவசாயிகளிடமும், மாணவர்களிடம் கூலிப்படையை கொண்டு மிரட்டுகிறார்கள்.

வங்கியில் சேமிப்பு வைக்கும் அளவுக்கு மக்களின் நிலை உயர்ந்துள்ளதா?

அப்படியான நிலை இந்தியாவில் இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். இளைஞர்களை வேலையின்மை துரத்துகிறது. கிராமத்தில் வாழும் உழைக்கும் மக்களை வறுமை துரத்துகிறது. தொழிலாளர்களை சுரண்டலும், அடிமைத்தனமும் துரத்துகிறது. இந்த நிலைமையை உருவாக்கி வங்கியில் பணம் சேமிப்பதற்கான வாய்ப்பை கார்ப்பரேட் காவி பாசிச கும்பல் வழங்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தொழிலாளர்களுக்கு சம்பளம் வரும் அன்று காத்திருந்து அன்றே மொத்தமாக எடுத்து வீட்டு செலவு, கடன், என்று அதிகபட்சம் 10 நாட்களில் காலியாகி விடுகிறது. மாத கடைசியில் பணம் இல்லை என்ற நிலை மாறி 15 நாட்களிலேயே கையை பிசையும் நிலையில் உள்ளார்கள் தொழிலாளர்கள். விவசாயிகள், உழைக்கும் மக்களுக்கு இதை விட மோசமான நிலை.

ஆனால் இதை அனைத்தையும் அறிந்திருந்தும் விபத்தில் சிக்கியுள்ளவனை மீட்காமல் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை திருடும் இரக்கமற்ற கொடூர கும்பலாக பாசிச பாஜக செயல்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு அரசு நமக்கு தேவையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். வரிக்கு மேல் வரியை போட்டு மக்களை சுரண்டுவதோடு, மினிமம் பேலன்சுக்கு அபராதம் விதித்து மக்களை ஒட்டச்சுரண்டும் கார்ப்பரேட் காவி பாசிச கும்பலுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

  • நலன்

3 COMMENTS

  1. கார்ப்பரேட் பகல் கொள்ளை பெரு முதலாளிகளுக்காகவே அனைத்து வங்கிகளும் பாசிச பாஜக மோடி அரசின் ஆணைகளுக்கிணங்க ஏழை-எளிய-நடுத்தர
    மக்களின் வங்கி சேமிப்புப் பணத்தை வாரி இறைத்து மக்களைத் திண்டாட்டத்தில் அல்லாட விடுகின்றன பாசிச மத வெறிக் கும்பல். கட்டுரையாக இது தொடர்பாக விரைவாகவே விளக்கிச் கூறியுள்ளது.
    பாராட்டுக்கள்!

  2. மேற்கண்ட பின்னூட்டத்தில் சில எழுத்துப் பிழைகள் உள்ளன. அன்புகூர்ந்து சரி செய்து படிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here