இயற்கையின் பேரழகு நிறைந்த கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகில் உள்ள முண்டகை எனுமிடத்தில் 30 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் மீட்புப்பணி நடைப்பெற்று வந்த வேலையில் அதிகாலை 4 மணியளவில் சூரல்மலா பகுதில் ஏற்பட்ட நிலச்சரிவால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள்.
அதிகாலை நேரமென்பதால் ஏலக்காய் மற்றும் தேயிலை தோட்டத்தில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டோடு மண்ணில் புதைந்துள்ளார்கள் மக்கள்.
இராணுவமும், பேரிடர் பாதுகாப்பு படையும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து கனமழைப் பெய்து வருவதால் மீட்புப்பணி தாமதமாகிறது. கிட்டத்தட்ட 400 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் கூறுகிறது.
மண் மற்றும் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள பலரை காணவில்லை என்று கேரள அரசு கூறுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. கேரளாவின் முதல்வர் பிணராயி விஜயன் “இதுபோன்ற பேரழிவு இதுவரை நிகழ்ந்ததில்லை” என்று கூறுகிறார்.
மேப்பாடியில் இருந்து முண்டகை, சூரல் மலை செல்லும் சாலைகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீட்கப்பட்டவர்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் தற்காலிக பாலம் அமைத்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளனர். மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஹெலிகாப்டர் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
தற்காலிக முகாம்கள்!
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 3069 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளதாக முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மேப்பாடியில் உள்ள மதரஸா, சர்ச்சுகள் தற்காலிக மருத்துவ முகாம்களாக மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
(Land slide) மண் சரிவுக்கு காரணம் என்ன?
கேரள மாநிலம் அதிகமான மலைத்தொடர்களையும், குன்றுகளையும் கொண்டது. இதன் காரணமாகவே சுற்றுலா தளங்களுக்கு பெயர் போன மாநிலமாக கேரளா உள்ளது. இயற்கையை விரும்புவோர் அதிகம் வந்து செல்லும் பகுதியாகவும் கேரளாவின் வயநாடு உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழையானது மே ஜூனில் தொடங்குகிறது. வயநாட்டில் ஆறு வகையான மழைப்பொழிவுகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகஸ்டில் பெய்யும் அதிக மழையை மிதுன மழை என்று அழைக்கிறார்கள்.
ஆனால் காலநிலை மாற்ற காரணத்தினால் இவர்கள் குறிப்பிடும் சரியான காலத்தில் மழை பொழிவதில்லை. பருவம் மாரி பொழிவதோடு மட்டுமல்லாமல் அதிக கனமழையாகவும் பெய்வதால் இயற்கை பேரிடர்களை நிகழ்த்தி விட்டு செல்கிறது.
மலைப்பகுதிகளில் இயற்கையாக வளரக்கூடிய மரங்கள் பெரும்பாலும் ஆழமாக வேரூன்றி செல்லும். இதனால் மலைப்பகுதிகளில் அதிக கனமழை பெய்தாலும் மண்ணரிப்போ, நிலச்சரிவோ ஏற்படுவதை இந்த மரங்கள் தடுக்கின்றன. சமீப காலங்களில் வணிக நோக்கத்திற்காக மலைப்பகுதிகளில் வளரக்கூடிய பழமையான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு லாப நோக்கத்திற்காக ரப்பர் மரங்கள் நடப்படுகின்றன. இந்த ரப்பர் மரங்களின் வேர்கள் அதிக ஆழம் செல்லாத காரணத்தால் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மண்ணை இறுகப் பிடிக்கும் வேர்கள் இல்லாததால் நிலச்சரிவை தாங்கும் திறனை மண் இழந்திருக்கிறது. இதன் காரணமாக அதிக மழை காலங்களில் மண் இலகுவாகி நிலச்சரிவு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
படிக்க: உத்தரகாசி சுரங்க விபத்து: இமயமலையில் தொடரும் துயரம்!
வயநாடு சுற்றுலாதலம் என்பதால் மலைகளின் அடிவாரத்திலும் குன்றுகளிலும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக மலைமுகடுகள் தோண்டி எடுக்கப்பட்டு பெரிய ரிசார்ட்டுகளும், கட்டிடங்களும் அமைக்கப்படுகின்றன. இது நிலப்பகுதியின் அமைப்பிலேயே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையான அரண்கள் அகற்றப்படுவதும் நிலச்சரிவுக்கு காரணமாய் உள்ளது.
தற்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர், நிலச்சரிவு மட்டுமல்ல வெள்ளத்துடன் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு. ஆகவே இதனை மிகப்பெரிய பேரழிவாக தான் பார்க்க வேண்டும்.
ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்!
மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகமான அளவு நிலச்சரிவுகள் நடந்துள்ளன இதில் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வயநாடு அதிகமான நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதி தான்.
குறிப்பாக 1984 மற்றும் 2012 ஆகிய காலகட்டங்களில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். 2011 க்கு பிறகு தான் அதிக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. விதிமுறை மீறிய கட்டிடங்களும் அதிகமான மரங்களை வெட்டியதும் இதற்கு காரணமாக சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் நிலச்சரிவு அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை உணர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் விதிமுறைகளை மீறி வணிக, லாப நோக்கத்திற்காக கட்டப்பட்ட ரிசார்ட்டுகளையும் மலைகளில் மண்ணரிப்பை ஏற்படுத்தக்கூடிய ரப்பர் மரங்களையும் அகற்றாவிட்டால் மேலும் பல உயிர்களை நாம் இழக்க நேரிடலாம்.
வயநாடு போன்று கனமழை வெள்ளத்துடன் உண்டாகும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பது கடினமான பணி. இதை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். ஒரே நாளில் சில மணி நேரங்களில் மழை கொட்டித் தீர்ப்பது புதிய இயல்பாக மாறிவிட்டது. அது சென்னையோ, தூத்துக்குடியோ, வயநாடோ அதற்கு பொருத்தமாக நாம் தயார்நிலையில் இருப்பது அவசியம் ஆகிறது.
ஒருபுறம் இயற்கையை சூறையாடி காலநிலை மாற்றத்தின் மூலம் மக்களை கொன்றொழிக்கும் ஏகாதிபத்திய கும்பல் என்றால் மறுபுறம் மலைகளையும் காடுகளையும் சிதைத்து ரிசார்ட்களையும் தோட்டங்களையும் அமைத்து நிலச்சரிவுக்கு வழிவகுக்கிறார்கள் பணம் படைத்த உள்ளூர் முதலாளிகள். இரண்டுமே ஆபத்து தான் என்பதை மக்கள் உணர வேண்டும்.
நந்தன்
@ எழில்மாறன்.
மிகச் சிறப்பான கட்டுரை. பல்வேறு கோணத்திலும் அலசி ஆய்ந்து, அம்பலப் படுத்தப்படுத்தலுடன் தீட்டப் பட்டுள்ளது இக்கட்டுரை. வாழ்த்துக்கள்!